Monday, October 29, 2018

புள்ளி - சிறுகதை

தீர்மானமாய் எனக்கு ஒன்று புரிபட்டு விட்டது. இன்னும் சற்று நேரத்தில் நான் ஓர் தாக்குதலை எதிர்கொள்ளப் போகிறேன். அது எவ்வகையிலானதாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த அனுமானமும் இல்லை. எப்படியாக நான் தாக்கப்படப் போகிறேன் என்பதை என் கற்பனைக்குள் கொண்டு செல்வதற்குக் கூட அச்சமாக இருக்கிறது. இதோ இப்போது என் கைகள் நடுங்குவதை நான் உணர்கிறேன். கால்களின் இறுக்கம் தளர்ந்து ரத்த ஓட்டம் எதிர்த்திசையில் பாய்வதைப் போன்றான உணர்வு. தகர ஷீட்டால் வேயப்பட்டிருக்கும் இந்த டாஸ்மாக் பாரில் வெயிலின் உக்கிரம் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது. குறைவான எண்ணிக்கையிலானவர்களே உள்ளே மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். பழங்கதைகள் பல பேசி இன்பத் திரவம் தந்த கிறக்கத்தில் திளைத்துக் கொண்டிருந்தவர்களின் பார்வை இப்போது என் மீது படர்ந்திருக்கிறது.

‘’த்தா பாடு… இருக்குடா உனக்கு… ங்கொம்மால” என்று அவன் என்னை நோக்கிக் கூறி விட்டு அடி விழுந்த இடத்தை மீண்டு தடவிக் கொண்டான். இன்னமும் ரத்தம் உறையாமல் கசிந்து கொண்டிருந்தது. பிசுபிசுப்பை உணர்ந்து கைகளை முன் நீட்டிப் பார்த்தவனுக்குள் மீண்டும் கோபம் பொத்துக் கொண்டது. ‘’தேவடியாப் புண்ட மவன்” என்று அவன் சீற்றத்தை வார்த்தைகளாக உதிர்த்துக் கொண்டே இருந்தான். ஆரம்பத்தில் இருந்த சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கி விட்டது. தத்தம் எல்லோரும் அவர்களது மதுக் குப்பியின் மீது கவனத்தை நகர்த்திச் சென்றார்கள்.

எனது இரண்டாவது பியரின் மீதமிருந்த மில்லிகளை ஒரே மடக்காக எடுத்து அருந்தினேன். வயிற்றுக்குள் அது ஒரு வான வேடிக்கையையே நிகழ்த்தியது. உடனே எனக்கு  சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. சப்ளையரைக் கூப்பிட்டேன். அவன் சிறு தயக்கத்துடனேயே என்னை அணுகினான். அவனிடம் கிங்ஸ் வாங்கிப் பற்ற வைத்தேன். தீக்குச்சியை உரசுகையில் கைகளின் நடுக்கம் அப்பட்டமாய் வெளிப்பட்டதை என் எதிராளி கவனித்திருப்பானா என்று தெரியவில்லை. எனது அச்சம் அவனுக்கான சாதகத் தன்மையை ஏற்படுத்தி விடும். ஆகவே போலியான ஒரு துணிச்சலை வரவழைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமானேன்.

கூன் விழுந்தாற்போல் உட்கார்ந்திருந்தவன் சற்றே நிமிர்ந்தேன். சட்டைக்காலரை உயர்த்தி விட்டேன். எதற்கும் நான் தயார் என்பது போலான தோரணை வெளிப்பட்டது. சிகரெட்டை இழுத்து அவன் முகத்தைக் குறி வைத்து புகை விட்டேன். அவன் மேலும் சினங்கொண்டான். அதை நான் ரசிக்கச் செய்தேன்.

அடி பலமாக விழுந்திருக்குமோ என்கிற கேள்வி என்னுள் அப்போது எழுந்தது. திரட்டி வைத்திருந்த ஆத்திரங்கள் எல்லாம் ஒன்றாகக் குவிந்த புள்ளி அது. உண்மையில் நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அது என்னால் நிகழ்த்தப்பட்டது என்பதை இப்போது சந்தேகத்துடன் அணுகுகிறேன். அருந்தி காலி செய்யப்பட்ட பீர் பாட்டிலால் ஒருவனின் மண்டையைப் பிளப்பது என்பது எனக்குப் புதியதுதான். வன்முறையை எளிதாக கை கொள்பவனல்ல நான். வன்முறையைக் கண்ணுறும்போதே மனம் ஓர் பதட்டத்தை அடைவதை நான் எப்போதும் உணர்வேன். மனித மனத்தின் மிருகத்தனங்கள் வெளிப்படும்போதெல்லாம் அதைப் பார்த்து பதைபதைக்கிற சராசரிகளில் நானும் ஒருவன். ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விடுகிறது. அது ஓர் விளங்கிக்கொள்ளவியலாத கவிதை.

’’தேவடியாப் புண்ட மவன்” என் எதிராளி சொன்ன வார்த்தைகளையே நான் சொல்ல விழைகிறேன். இந்த நாளை வடிவமைத்தவன் எவனோ அவனை நோக்கி. என் இருபத்தைந்து ஆண்டு கால வாழ்வில் இப்படியொரு நாளை நான் கடக்க நேரிட்டதில்லை.

இத்துயர் நாள் காலை 06:35க்குத் தொடங்கியது…

‘’சிருக்கி வாசம் காத்தோட்ட நறுக்கிப் போடும் என் உசுர” கனவின் வீதிகளில் சஞ்சரித்தவனை கைப்பிடித்து இழுத்தது எனது கைப்பேசியின் அழைப்பொலி. சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தேன். சங்கீதா கூப்பிட்டாள்.

‘’சொல்லு தங்கம்”

‘’எனக்கு ஒரு விசயம் புரியலை… நீ நெஜமாலுமேதான் என்னைய லவ் பண்றியா?” என்றாள்.

எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் என்பதால் எவ்வித சலனத்துக்கும் நான் ஆளாகவில்லை. மாறாக அது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நேற்றைக்கு நண்பனோடு படத்துக்குப் போயிருந்தேன்.  ரசிக மனப்பான்மை என்னுள் உருவெடுத்த பிற்பாடு சங்கீதாவின் வாட்ஸாப் உரையாடலை அவசரமாய் துண்டிக்க நேரிட்டது. படம் முடிந்து வந்த போதுதான் பார்த்தேன். என்னை அவள் ப்ளாக் செய்திருந்தாள்.

ஆவேசம் ஏதுமில்லாமல் அடைபட்ட சாக்கடையைப் போன்று சலனமற்ற மனநிலையில் இருந்தேன். மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. உறக்கம் மட்டுமே குறிக்கோளாய் இருக்க அறைக்கு வந்ததும் போர்வைக்குள் புதைந்தவன் இதனை எதிர்பார்த்திராமல் இல்லை.

‘’உன்னைய நான் எவ்ளோ லவ் பண்றேன்னு வார்த்தையிலயெல்லாம் சொல்லத் தெரியாது”

‘’நானா புரிஞ்சுக்கணும்ங்கிறியா… எனக்குதான் அது புரியவே இல்லையே… அதான் கேட்குறேன்”

‘’இப்ப நான் என்ன சொல்லணும்னு நீ நினைக்குற”

‘’நான் நினைக்குறதுக்கு என்ன இருக்கு… நீதான் சொல்லணும். ஏன்னா என்னை விட உனக்கு முக்கியமானது பலது இருக்கே”

‘’சின்னப்புள்ளதனமா இருக்குடி நீ பேசுறது..”

‘’அப்படியே வெச்சுக்கோ”

‘’என்ன அப்படியே வெச்சுக்கிறது… படம் ஓடிக்கிட்டிருக்கு பேச முடியாதுன்னா புரிஞ்சுக்கணும்… அது கூட புரியலைன்னா நான் என்ன சொல்றது… உனக்கு நான் முக்கியமா? படம் முக்கியமான்னு கேட்டா அந்த கேள்வியில என்ன அர்த்தம் இருக்கு”

‘’அய்யோ… அதைப் பத்தி நான் பேசவே இல்லை… நான் அதை நேத்தே விட்டுட்டேன். உண்மைய சொல்லப் போனா வெறுத்துட்டேன். உனக்கு முக்கியமா நெறைய இருக்கு நான் ஏன் மெசேஜ் பண்ணி உன்னை தொந்தரவு பண்ணனும்னுதான் உன்னை ப்ளாக் பண்ணேன்”

‘’லூசாடி நீ… சின்ன விசயத்தை இவ்ளோ பெருசாக்கிக்கிட்டிருக்க”

‘’அது உனக்கு சின்ன விசயம்… எனக்கில்லை”

‘’அப்ப லவ் பண்றவன் எவனும் படத்துக்குப் போறதில்லை அப்டித்தான”

‘’அப்படி நான் சொல்லல ஆனா நீ எதுக்கு ப்ரியாரிட்டி கொடுக்கிறேங்குறது முக்கியம்னு சொல்றேன்”

“ஏய் நான் என்ன இன்னொரு பொண்ணு கூடவா சுத்திக்கிட்டிருக்கேன்… அவளை விட உனக்கு ப்ரியாரிட்டி கொடுக்கணும்னு சொல்றதுக்கு”

“யாரு கண்டா… எவ கூட படத்துக்குப் போனியோ”

“ஆரம்பிச்சுட்டியா… சொன்னா புரிஞ்சுக்கடி நீதான் எனக்கு முக்கியம்”

“அதான் பார்த்தனே நேத்தே”

“என்னையை நீ அவ்ளோதான் புரிஞ்சிருக்கீன்னா நான் ஒன்னுமே பண்ண முடியாது”

“அதான் வேணாங்குறேன்”

“என்ன வேணாம்”

“எதுவுமேதான்”

‘’எதுவுமேண்ணா நான் கூடவா”

“எல்லாத்தையும்தான் சொல்றேன்.. என் நிம்மதியே போச்சு உன்னால”

“எனக்கு ஒரு விசயம் புரியவே இல்லை… லவ் பண்ணிட்டேங்குறதுக்காக எல்லாத்தையும் தூக்கி தூர வீசிட்டு உன் துப்பட்டாவை பிடிச்சுக்கிட்டு பின்னாடியே வந்துக்கிட்டிருக்கணுமா”

“அய்யோ சாமி…. நீங்க அப்படியெல்லாம் ஒன்னும் வரத் தேவையில்லை. என் வாழ்க்கை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்”

“தெரியுதுல்ல அப்புறம் என்ன மயித்துக்குக் கூப்பிட்ட”

‘’கூப்பிட்டது என் தப்புதான் ஸாரி… இனி நான் உனக்கு எப்பயும் கூப்பிட மாட்டேன்” என்றதும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நான் திரும்பத் திரும்பக் கூப்பிட்டும் அவள் எடுக்கவில்லை. அவளாகக் கூப்பிடும் வரை அவளைக் கூப்பிடக் கூடாதென என் அகங்காரம் அப்போது உறுதியெடுத்தது. மட்டுமில்லாமல் இல்லாத பிரச்னையை உருவாக்குவதிலும், தம்மாத்தூண்டு பிரச்னையை இம்மாங்கணக்காக பெரிதாக்குவதையும் அவளிடம் நான் வெறுத்தேன்.

நேரம் நகர நகர எனக்குள் எழுந்த பெருஞ்சினத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றேன். ஆசுவாசத்தைத் தேடும் பொருட்டு எனது அறைவாசியான ப்ரதீப்பிடமிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்றினேன். இழுக்க இழுக்க சிகரெட் மட்டுமே கரைந்தது.

நான்கு சிகரெட்டுகளை இழுத்து வீசியும் மனதின் கொதிப்பு அடங்கவில்லை. ப்ரதீப் குளித்து விட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான். என்னையும் சீக்கிரம் கிளம்பச் சொல்லி அறிவித்து விட்டுப் போனான். மணி அப்போது பத்தைத் தாண்டியிருந்தது.

10:20க்குள் நான் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும் என்பது என் மேலாளரின் கண்டிப்பான உத்தரவு. தாமதத்துக்கான காரணங்களைக் கேட்பதைக் கூட அவர் வீண் வேலை என்றே கருதுவார். ஆகவே முன்பதிவு செய்யப்பட்ட ரயிலை கடைசி நிமிடத்தில் பிடிக்கிறவனின் வேகத்தில் கிளம்பினேன்.

லக்‌ஷ்மண் ஸ்ருதி சி்க்னலைக் கடக்கையில் எனது வண்டியின் இடப்புறத்தில் இடித்துச் சாய்த்து விட்டு நிற்காமல் வேகமெடுத்தது ஓர் ஆட்டோ. சனியின் வாகனம். வண்டியோடு சரிந்த என்னை ட்ராஃபிக் போலீஸ் உட்பட சிலர் தூக்கி நிறுத்தினர். எனக்கு அடி பெரியதாக இல்லைதான். வண்டியை நிமிர்த்தி நிறுத்திய போதுதான் பார்த்தேன் இண்டிகேட்டர் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘’தாயோழி” என்று அவனைத் திட்டினேன். சென்ற வேகத்துக்கு அந்நேரம் கோயம்பேட்டை நெருங்கியிருக்கும் அவனுக்கு அது கேட்டிருக்க வாய்ப்பில்லைதான்.

தீரா மனச்சலனத்தினூடே அலுவலகம் வந்து சேர்ந்த போது மணி 11 ஆகியிருந்தது. மேலாளரின் வசைகள் குறித்த உள்ளுணர்வு ஏதுமின்றி பயோ மெட்ரிக்கில் விரல் பதித்து விட்டு எனது இருக்கைக்குச் சென்றேன். சற்று நேரத்துக்கெல்லாம் இண்டர்காமின் அழைப்பொலி கேட்டது. எதிர்பார்த்த மாதிரியே மேலாளர் தனது அறைக்கு என்னை அழைத்திருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே தாமதத்துக்கான காரண காரியம் குறித்த விளக்கத்தை தான் கேட்டறியப்போவதில்லை என்று கூறினார். மேலும் 10 மணிதான் அலுவலக நேரம் என்றும் 20 நிமிடத்தை க்ரேஸ் டைமாகக் கொடுத்திருப்பதாகவும் வழக்கம் போல சொன்ன அவர் இன்றைக்கு எனக்கு ஆப்செண்ட் போட்டு விட்டதாக நிதானமாகக் கூறினார்.

ஒரு மணி நேரத்தை எனது பெர்மிஷனில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் மன்றாடிப் பார்த்தேன். பெர்மிஷன் என்பது எடுக்கப்படுவதற்கு முன்பு தெரியப்படுத்த வேண்டியது என்றொரு விளக்கம் அவரிடமிருந்து  வந்தது. தவறான பின் நம்பரை அழுத்தினால் ரிஜெக்ட் செய்யும் ஏ.டி.எம் இயந்திரம் போல அவர் எனது விண்ணப்பத்தை நிராகரிப்பதில் உறுதியாக நின்றார்.

ஒரு பணியாளனுக்கான நெருக்கடிகளுக்கேற்ப விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளாத இந்த நிறுவனத்தை ஏதேனுமொரு கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் போலிருந்தது. நான் அவரிடம் ஏதும் பேசாமல் அவ்வறையிலிருந்து வெளியேறினேன்.  

விடுப்பு குறிக்கப்பட்ட நாளில் பணி புரிவதற்கான அவசியம் எனக்கில்லை என்பதை உணர்ந்து அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். எதிர்க்கே நீண்டிருந்த நிழற்சாலையில்தான் மணி டீ ஸ்டால் இருக்கிறது. ராகி மால்ட் ஆர்டர் செய்து விட்டு வண்டியிலேயே உட்கார்ந்திருந்தேன். தொங்கிக் கொண்டிருந்த இண்டிக்கேட்டரை நேர் நிமிர்த்தி வைத்தேன். ஒட்டுதலின்றி அது மீண்டும் தொங்கிப் போனது. இதனை சரி செய்வதற்கான தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தேன். மாதாந்திர செலவீனங்களில் இதற்கு சிறு தொகையை ஒதுக்க வேண்டியதை நினைத்த போது வெறுப்பு கூடிக் கொண்டது. ‘’எவளை ஓக்குறதுக்கு அந்த வேகத்துல போனான் அந்தப் புண்டை மவன்” என்று எனக்குள் திட்டிக் கொண்டேன் அந்த ஆட்டோக்காரனை.

‘‘சிறுக்கி வாசம் காத்தோட…’’ அழைப்பொலி கேட்டதும் சங்கீதாவாகத்தான் இருக்கும் என்று நினைத்து எடுத்துப் பார்த்தேன். அப்பா கூப்பிட்டார். 

‘‘சொல்லுங்ப்பா’’

‘‘எங்க இருக்கப்பா’’

‘‘ஆஃபிஸ்லதான்’’

‘‘அம்மாவுக்கு ஏக்ஸிடெண்ட் ஆகிடுச்சுப்பா... பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை. கால் எழும்பு உடைஞ்சிருக்கு’’

‘‘எப்படியாச்சு’’

‘‘புளியம்பட்டி தாண்டி போறப்ப வளைவுல சரிச்சு விட்டு விழுந்துட்டா... அப்புறம் அந்த வழியா போன ஒருத்தர்தான் ஆம்னில ஏத்திக்கிட்டு அபி ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கார்’’

‘‘ஏப்பா இப்படிப் பண்றீங்க... அம்மாவை எதுக்கு வண்டி ஓட்ட வுட்றீங்க’’

‘‘அட நானா விட்டேன்... அவங்கம்மாளப் பார்க்குறதுக்கு அவளே வண்டியை எடுத்துட்டுப் போயிட்டாடா’’

‘‘சரி... இப்ப என்ன நான் கிளம்பி வர்ட்டா’’

‘‘அதெல்லாம் வேணாம்... நானே பார்த்துக்கிறேன்... இப்ப ஸ்கேன் எடுத்துக்கிட்டிருக்காங்க’’

‘‘சரி’’

‘‘எப்படியும் ஆபரேஷன் பண்ற மாதிரிதான் இருக்குமாம். நான் கொஞ்சம் புரட்டிக்கிட்டிருக்கேன். நீ ஒரு பத்து ரூபா அனுப்பி வை’’

சோர்வு அப்பிய குரலில்

‘‘சரி... நான் அனுப்பிட்டு சொல்றேன்’’ என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தேன். 

மாஸ்டர் கண்ணாடி டம்ளரில் ராகி மால்ட் போட்டு நீட்டினார். சூடாக இருந்ததால் சில நொடிகள் பொறுத்தேன். அம்மாவுக்கு பயப்படும்படி ஒன்றும் ஆகவில்லை என்பது சற்றே தெம்பாக இருந்தது. ஆனால் அவளுக்கு எதற்கு இந்த வீண் வேலை? என்று நினைத்துக் கொண்டேன். இன்றைக்கு தேதி 23 ஆகிறது. பத்தாம் தேதியைத் தாண்டியதும் மாதக்கடைசியின் துயரில் பீடிக்கப்பட்டு விடுவேன். இப்படியிருக்கையில் வெகுசாதாரணமாக பத்தாயிரம் ரூபாயை அனுப்பச் சொல்லி விட்டார் அப்பா. 

வங்கிக் கணக்கில் மூன்றாயிரத்துச் சொச்சமே இருக்கிறது. அதைக் கொண்டுதான் எனது அன்றாடங்களை பூர்த்தி செய்தாக வேண்டியிருக்கிறது. வாழ்வாதாரத்துக்காக சென்னைக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் கை மாற்றலாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவும்படியான ஒரு நண்பன் கூட எனக்கு வாய்த்திருக்கவில்லை என்பதை நினைக்கையில் துயர் கூடியது. 

நாங்கள் சிவசு என்றழைக்கும் நண்பன் சிவசுப்ரமணியத்தை அழைப்பதற்காக மொபைலை எடுத்தேன். அவனிடம் என் பணம் நான்காயிரம் ரூபாய் இருக்கிறது. தன் தங்கை வளைகாப்புக்கெனக் கூறி இரண்டு மாதங்களுக்கு முன் சம்பள நாளன்று வாங்கினான். திரும்பத் தருவது குறித்தான எந்த அறிவிப்பும் அவனிடமிருந்து வரவில்லை. அதற்கான அறிகுறிகள் கூட தட்டுப்படவில்லை. அவனது குடும்ப நெருக்கடிகள் தளர்ந்ததற்குப் பிற்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தேன். மேலும் அப்பணத்தைத் திரும்பப் பெற்றாலும் கூட அது அர்த்தமற்ற வகையில்தான் செலழிக்க நேரிடும் என்கிற உள்ளுணர்வின் காரணமாகவே அவனைத் துரிதப்படுத்தாமல் இருந்தேன். 

சிவசுவிடமிருக்கும் நான்காயிரத்துடன், என்னிடம் இருக்கும் மூன்றாயிரத்தை சேர்த்தால் ஏழாயிரம் வரும். மீதம் மூன்றாயிரத்தை சங்கீதாவிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று தோன்றியது. முதலில் சிவசுவின் கையிருப்பில் நான்காயிரம் இருக்கிறதா? என்பது சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சிவசுவுக்கு அழைத்தேன்.

‘‘அடியே அழகே... என் அழகே அடியே... பேசாம நூறு நூறா கூறு போடாத’’ ம்க்கும்... இங்கே அவனவன் இருக்கிற நிலைக்கு இதொன்றுதான் குறைச்சல் என்று நினைத்துக் கொண்டேன். சிவசு பதிலளிக்கவில்லை. கட்ன்காரன் என்று நினைத்து விட்டான் போலும். திரும்பக் கூப்பிட்டேன் அப்போதும் பதிலில்லை. 

எப்படியும் திரும்பக் கூப்பிடுவான் என்கிற நம்பிக்கை சிறிதளவு ஒட்டியிருந்தது. சங்கீதாவுக்குக் கூப்பிட்டேன். அவளும் அழைப்பை ஏற்கவில்லை. என் மனத்தை எந்நேரமும் கொதிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என அவள் விரும்புகிறாளா தெரியவில்லை. நிலவரம் புரியாமல் வீம்பைக் கட்டுக் கொண்டு அழுகிறாள். ஃபோனை எடுத்துப் பேசினால் என்னவோ பத்து கிலோ குறைந்து மெலிந்து போய் விடுபவள் போலத்தான் செய்கிறாள். 

நான் அவளுக்குத் திரும்பத் திரும்ப அழைத்தேன். அவள் எடுக்கும் வரையிலும் அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற உந்துதல் ஒரு வித வன்மத்துடன் வெளிப்பட்டது. அவள் எடுக்கவேயில்லை. வெயில் உச்சிக்கு வந்திருந்தது. நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை இமைகளைத் தாண்டி கண்ணுக்குள் விழுந்ததும் எரிச்சலை உணர்ந்தேன். வெடி வைத்துத் தகர்க்கப்படவிருக்கும் பெருங்கட்டடத்தின் நடுமத்தில் சிக்குண்டவனைப் போல உணர்ந்தேன். ராகி மால்டை குடித்து முடித்து விட்டு வர்க்கி பாட்டில் மீது டம்ளரையும் பத்து ரூபாய்த் தாளையும் வைத்தேன்.

'Pls pic d cl' என்றுசெய்திஅனுப்பினேன். பதில்வரவில்லை, கொஞ்சநேரத்துக்குவரப்போவதுமில்லை. அவளுக்குஉரித்தானஅகங்காரம்துருத்திக்கொண்டுவெளிப்பட்டுக்கொண்டிருந்தது. நானேதிரும்பஅழைத்தேன்...

"சொல்லு"

"கால்அட்டெண்ட்பண்றதுக்குக்கூடஉங்கிட்டகெஞ்சனும்அப்டித்தான"

"பிரச்னைபண்றதுக்குன்னேஃபோன்பண்ணுவியா"

"இப்பநீதான்பிரச்னைபண்ணிக்கிட்டிருக்க"

"அப்படியேவெச்சிக்க" 

"என்னத்தஅப்படியேவெச்சிக்கிறது"

"உனக்குஎப்படித்தோணுதோஅப்படியேவெச்சுக்க"

"மயிரைவெச்சிக்கிறேன்"

"நீதாண்டாமயிரு... இந்தமாதிரிபேசுறதுக்கெல்லாம்நான்ஆள்இல்லை"

"திரும்பத்திரும்பஒருத்தன்கூப்பிடுறான்னாஎன்னன்னுகூடகேட்கதோணாதுல்ல. உனக்குஉன்ஈகோதான்பெருசு"

"அப்படியேவெச்சிக்க"

"எப்படி"

"நான்ஈகோவுலஆடுறேன்னேவெச்சிக்க"

"வெச்சிக்குறேன்நீமூடிட்டுஃபோனவை"

"செருப்..." இணைப்பைத்துண்டித்தேன். 

ரத்தஓட்டம்தாறுமாறாய்ஓடுவதைப்போல்இருந்தது. உள்ளேகனன்றுகொண்டிருக்கும்சினத்தினைநெருப்பாய்க்கக்கிவிடத்துடித்தேன். எதையாவதுதூக்கிப்போட்டுஉடைக்கவேண்டும்போலிருந்தது. மண்டையைப்பிய்த்துக்கொண்டுஅச்சாலையில்ஓடலாமாஎன்றுகூடத்தோன்றியது. வாகனத்தைக்கிளப்பிக்கொண்டு 110 கிலோமீட்டர்வேகத்தில்பறந்துஎதன்மீதாவதுமோதித்தொலையலாம்போன்றிருந்தது.

அவளுக்குமீண்டும்அழைத்தேன். 

கொதித்தெழும்கோபத்தினுள்என்னையிட்டுவாட்டுவதற்கானநடவடிக்கையாய்அவள்ஃபோனைஎடுக்கவில்லை. மனம்இருப்புகொள்ளவில்லை. கோபம்அணையாநெருப்பாய்என்உளப்பிரதேசத்தைப்பொசுக்கிக்கொண்டிருந்தது. 
வண்டியைக்கிளப்பினேன். செல்லும்இடம்குறித்ததீர்மானம்இல்லாமல்பறந்துகொண்டிருந்தேன்.

ஏ.வி.எம் சிக்னலைக் கடக்கையில் ரஞ்சித் ஒயின்ஸுக்குப் போக வேண்டும் என்கிற திட்டம் என்னையும் மீறி தனித்து உதயமானது. வண்டியை வலப்பக்கம் ஒடித்தேன். பெருங்கூடாரத்தினுள் பேச்சொலிகள் எழும்ப குடிகாரனுக்கான அடையாளம் பொறித்த பலரும் மதுவினுள் கலந்து மிதந்து கொண்டிருந்தார்கள் உள்ளே. மதியப் பொழுது என்பதால் சனத்திரள் குறைவாகவே இருந்தது.தகிக்கும் வெயிலின் உக்கிரம் பியர் குடிக்க வேண்டும் என்கிற ஆசையை இயல்பாகவே எழுப்பியிருந்தது. சப்ளையரிடம் கிங்ஃபிஷர் பியர் மற்றும் கொரிக்க நெத்திலி சொன்னேன். ஆஃப் பிராந்தி பாட்டிலோடு என் எதிரே அமர்ந்திருந்த அவனை அநாசயமான பார்வையில் கடந்தேன்.  சுருள் முடியும் தாடியும் சகிதமாக தினசரிக் குடிகாரனின் சாயலை அப்பியிருந்தான். எனக்கானபியர் டேபிளுக்கு வந்ததும் எனது குவியத்தில் இருந்து மற்றவை எல்லாம் அகன்று விட்டன. பெருந்தாகமென பியரைக் கவிழ்த்த்து ஒரே மடக்கில் பாதி பாட்டிலை காலி செய்து விட்டு வைத்தேன்.அவளைத் திரும்பக் கூப்பிட்டேன்… என்னை வதம் செய்வதென உறுதி பூண்டவள் போல அழைப்புக்கு பதில் தரவில்லை. பியர் பாட்டிலை எடுத்து மீதமிருந்த பாதியையும் குடித்து முடித்தேன். என்னை சன்னஞ்சன்னமாய் நறுக்கிக் கொண்டிருந்தது என்னுள் அடங்கா ஆற்றாமை.

சிவசுவைக் கூப்பிட்டேன். சொல்லி வைத்தாற்போல் அவனும் எடுக்கவில்லை. ‘’எவளை செஞ்சுக்கிட்டிருக்கான்…. கூதி” வாய்விட்டுச் சொன்னேன். எதிரே அமர்ந்திருந்த இந்த சுருள் முடிக்காரன் ‘’நெத்திலி நல்லாருக்கா” என்று கேட்டான். எதனையும் கிரகித்துக் கொள்கிற மன நிலையில் நான் இல்லாத போது அக்கேள்வி எனக்கு சலிப்பையே தந்தது.

‘’நல்லாருக்கும்” என்றேன்.

‘’எங்க” என்றவன் என் தட்டிலிருந்து ஒரு நெத்திலியை எடுத்து தின்று விட்டு அவன் டம்ளரை காலி செய்தான். இறைஞ்சுதலுக்கான எந்த முகாந்திரமும் அவனிடத்தில் இல்லை. மரியாதை நிமித்தமான சிறு புன்னகையைக் கூட வெளிப்படுத்தியிருக்கவில்லை. இருந்தும் அவ்வளவு எளிதாக என்னுடையதை அவன் கைகொண்டான் என்பதை நினைத்துச் சினம் கொண்டேன்.

சிவசு அழைத்தான்…

‘’சொல்றா”

‘’டேய் எனக்கு பணம் பத்தாயிரம் அவசரமா தேவைப்படுது… அதான் நாங்கொடுத்த அமெளண்ட் என்னாச்சுன்னு கேட்கலாம்னுதான் கூப்பிட்டேன்”

‘’அதுவா… இல்ல மச்சி இப்பத்தைக்கு ஆவாதுடா. நான் ரெடியானதும் கண்டிப்பா கொடுத்துடுறேன்”

“உங்கிட்ட இல்லாட்டியும் யார்கிட்டயாச்சும் வாங்கியாவது கொடுடா”

“என்னையத்தான் காணம்னு கையில் கட்டுக் கட்டா காசோட நிக்குறாங்க… நீ ஏண்டா”

“அதான் உன்னையை நம்பி பணம் கொடுத்த ஆள் நான் மட்டுமாத்தான் இருப்பேன்”

“ஓ… சரி”

“என்னத்த சரி… அமெளண்ட் வாங்கினா சட்டுபுட்டுனு திருப்பித் தர்ற வழியத்தான பார்க்கணும். நான் என்ன அம்பானி மச்சானா. நானும் உன்னைய மாதிரிதான்னு உனக்குத் தெரியும்ல”

“ஏண்டா இப்படிப் பேசுற… காசுதானடா எதாச்சும் பண்ணிப் போட்டு விடுறேண்டா… அய்யய்யே”

“கொடுத்த காசைக் கேட்டா அய்யய்யேவா?”

”என்னடா ஆச்சு உனக்கு… சாமி”

“வாங்குன காசைக் கொடுக்க வக்கில்லை… நாயப்புண்டை இவனுக்கு” என்று சொல்லியபடியே இணைப்பைத் துண்டித்தேன்.

அவளைத் திரும்பக் கூப்பிட்டேன்.

“சொல்லு”

“ஃபோனை எடுக்கனும்னா நானெல்லாம் உன் காலை நக்கணும் அப்படித்தானே”

பதிலேதும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்தாள்.

Its over என்று குறுந்தகவல் அவளிடமிருந்த வந்த போது அவன் இன்னொரு நெத்திலியை வெகு சாதாரணமாக எனது தட்டிலிருந்து எடுத்துத் தின்றான்.

“அறிவு கெட்டப் புண்டை” என்றேன்.

அவன் எந்த சலனமும் காட்டாமல் என்னைப் பார்த்தான். கண்கள் சொறுக ‘’போடா லூசுக்கூதி” என்றான்.

நொடிப்பொழுதில் எனது காலி பியர் பாட்டில் அவன் தலையில் பட்டுச் சிதறுவதை ரஞ்சித் ஒயின்ஸே திரும்பிப் பார்த்தது. எந்தப் புள்ளியில் இது நடந்தேறியது என்பதை என்னாலேயே விளங்கிக் கொள்ள இயலவில்லை.

பலமான அடி வாங்கியதும் அவன் டேபிள் மீது மூச்சுக்காட்டாமல் தலை வைத்துப் படுத்துக் கிடந்தான். சப்ளையர்கள் மற்றும் சக குடிகாரர்கள் என்னை அதட்டிக் கொண்டிருந்தார்கள். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வலியிலிருந்து மீண்டவன் தலையை நிமிர்த்தியதும் கண்களில் நீர் வழிய 

“ங்கோத்தாப் புண்டை… இர்றா உன்னைய” என்றபடிஎவனுக்கோ கால் செய்தான்.

“சீக்கிரம் வாடா… இந்த பாடு கெளம்பிடப் போவுது” என்று சொன்னது மட்டும் என் செவிகளை எட்டியது.

“ஓத்தா ஆம்பளையா இருந்தா இங்கயே இர்றா பார்க்கலாம்” என்றான்.

ஆக தீர்மானமாய் எனக்கு ஒன்று புரிபட்டு விட்டது. இன்னும் சற்று நேரத்தில் நான் ஓர் தாக்குதலை எதிர்கொள்ளவிருக்கிறேன்.

சிகரெட்டை பஞ்சு வரை இழுத்து விட்டு கீழே போட்டு அணைத்தேன். அச்சம் துர் வாடையைப் போல் என் உடலை நிரப்பியிருந்தது. இப்போதே எழுந்து சென்று விடலாம் என்று தோன்றியது. ஆனால் இது என் ஆண்மைக்கான சவால். கோழையாகிப் பிழைப்பதில் யாதொன்றும் அர்த்தம் இல்லை என்றுணர்ந்து அச்சத்தை வெளிக்காட்டாமல் உட்கார்ந்திருந்தேன்.

அவனது சகாக்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் உடல் பருத்தவன். நடக்கவிருக்கிற சம்பவத்தின் காட்சிகள் ஸ்டோரிபோர்டை போல் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது. உடல் பருத்தவன் என்னை ஓங்கி மிதித்ததும் அப்படியே பின்னால் சாய்ந்தேன். இன்னொருவன் ஸ்டூலை ஓங்கி என் வயிற்றிலேயே அடித்தான். ஷூ அணிந்திருந்த மூன்றாமவன் என் தலையைக் குறி வைத்து உதைத்துக் கொண்டிருந்தான். மூர்க்கமான ஒரு தாக்குதலுக்கு நான் ஆளாகிக் கொண்டிருந்தேன். ரஞ்சித் ஒயின்ஸே சலனமில்லாமல் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

உடல் பருத்தவன் என் வயிற்றிலேயே மிதித்தான். குடித்த இரண்டு பியரும் வெளியே வருவது போன்ற குமட்டலை உணர்ந்தேன். கடுமையான வலி வேறு. எப்படியும் நான் சாகப்போவதில்லை. இருந்தாலும் கடும் ரணங்களோடு சில காலத்தைக் கடக்க நேரிடுவதை நினைக்கும்போதே மலைப்பாக இருந்தது. முழு வீச்சோடு அவர்களைத் தள்ளி விட்டு எழுந்தேன்.

அங்கிருந்து துரிதமாக வெளியேறும் பொருட்டு வேகமாக நடையிட்டேன். என் பின்னால் யாரோ என்னை நோக்கி வருவது போன்று உணர்ந்தேன். அவனது கையில் எனது இரண்டாவது பியர் பாட்டில் இருக்கலாம் என்பது என் அவதானிப்பு.

- கி.ச.திலீபன், நன்றி: நடுகல் - இரண்டாவது இதழ்


2 comments:

  1. https://www.blogger.com/view-follower.g?followerID=08902095492971075327&blogID=2571019811838356445&startIndex=90

    ReplyDelete
  2. https://www.blogger.com/view-follower.g?followerID=08902095492971075327&blogID=2571019811838356445&startIndex=90

    ReplyDelete