Tuesday, February 21, 2017

இன்னும் மிச்சமிருக்கிறது - சிறுகதை

ஓவியம்: ஷாராஜ்

இதோ நீ என்னைப் பார்க்கிறாய் அது எப்படியாகப்பட்ட பார்வை என்றால் என்னை குற்ற உணர்வில் கூனிக் குறுக வைக்கிற பார்வை. மிகப்பெரும் தவறிழைத்து விட்டதாய் என்னை நானே சபித்துக் கொள்ள வைக்கிற வாஞ்சையான பார்வை. கண்ணை சிமிட்டிக் கொண்டிருக்கிறாய், மூச்சு வாங்கிக் கொண்டே இருக்கிறது உனக்கு. கூர்ந்து கவனித்தால் உனது அனத்தலை கேட்க முடிகிறது. அந்த அனத்தல் என்னை மேலும் மேலும் நோகடிக்கிறது. உனது சிறுமூக்கு உடைந்திருந்ததால் மூக்கின் வழியாக ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது அந்த ரத்தத்தை நீ துடைத்துக் கொள்கிறாய் இருந்தும் அது தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது உன்னை பீதியுறச் செய்திருக்கும். ரத்தமும், எச்சிலும் கலந்த கலவையை உமிழ்கிறாய் அது சில நொடிகளை தின்றுவிட்டு கீழே வழிகிறது. இருந்தும் உதட்டோரத்தில் சிறிது ரத்தம் இருக்கவேதான் செய்தது. சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாலும் கைகளை தாங்கலுக்கு வைத்திருக்கிறாய் அதில் சிறு நடுக்கத்தைப் பார்க்க முடிகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு படுத்தே விட்டாய். உட்கார்வதற்கான திராணி கூட உன்னிடத்தில் இல்லாமற் போயிற்றே. எவ்வித அசைவுகளுமின்றி படுத்துக் கிடக்கிறாய் உனது அனத்தல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது உனது பார்வை என்னை நோக்கியும் திரும்புகின்றன. நான் அதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் உணர்வற்ற நிலையில் உன்னைப் பார்க்கிறேன். நான்கு விரல்களை மடக்கி பெரு விரலை மட்டும் உயர்த்தியபடி சைகை காண்பிக்கிறாய். ஆம் அது தண்ணீர் வேண்டும் என்பதற்கான சைகை. நான் மேத்யூவைப் பார்த்தேன் அவன் எனது பார்வைக்காக காத்திருந்தவன் போல தலையசைத்தான்.
மேத்யூவின் கட்டளைக்கிணங்க நீர் நிரப்பிய டம்ளரோடு ரஞ்சித் உனக்கருகே வந்து அமர்கிறான். நீ முயல்கிறாய் எப்படியாயினும் எழ வேண்டுமென்று. உன்னால் அது முடியவில்லை, எம்பி எம்பி தோற்றுப் போகிறாய். அப்படியே நீ எழுந்தாலும் டம்ளரை வாங்கி தண்ணீரைக் குடிப்பாயா என்பது உறுதியல்ல ஏனென்றால் உனது கை நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ரஞ்சித் உனது வாய்க்கு டம்ளரைக் கொடுக்கிறான் குட்டையில் நீரருந்தும் பிராணி போல அதை நீ குடிக்கிறாய். குடித்து முடித்ததும் கண்களை மூடிக் கொண்டாய். இனி தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என தீர்க்கமாய் முடிவெடுத்து விட்டாய் போலும். சுவற்றில் படிந்திருக்கும் ரத்தக்கறையும், ஒரு மனிதனின் உயிருக்கான ஓலமும் எனக்கு புதிது என்பதை விட இவற்றை நான் சந்தித்திருக்கவே கூடாது எனத் தோன்றுகிறது.

ஏன் இப்படி நடக்க வேண்டும் பீட்டர்? புதிர்களை நிரப்பியது இந்த வாழ்க்கை என அப்பா சொல்வார் அப்படிப்பட்ட புதிர்தானா இது? நீ வலியால் துடிப்பதைப் பார்த்து ரசிக்கும் குரூரம் எனக்கு எப்படி வந்தது? எல்லாம் உன்னால்தான் பீட்டர். அன்று அந்த சாலையில் நீ அப்படி நடந்து கொண்டது உச்சம். பீட்டர் இது இன்றைக்கான கணக்கல்ல நீயும் நானும் சந்தித்துக்கொண்ட காலத்திலிருந்தே துவங்கியிருக்க வேண்டும். சமயம் பார்த்து வெளிப்படுத்தும் கோபத்தின் பெயர்தான் வஞ்சம். அந்த வஞ்சத்தின் விதையை நீதான் எனக்குள் தூவினாய் அது இன்று வேர்பரப்பி மரமாய் வளர்ந்து நிற்கிறது.
ராயபுரத்தின் தெருக்களில் சட்டையின் முதல் பொத்தானை கழட்டி விட்டு உள்ளே கோடாளி டாலர் சங்கிலி மாட்டிக் கொண்டு, பான் பராக் கரையப்பிய வாயில் நாழிகைக்கொரு தரம் ங்கோத்தாஎன்ற வார்த்தையை உச்சரிக்கும் உன் போன்றவர்களிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவன். ராயபுரத்தில் ஹுசைன் மேஸ்திரி தெருவில்தான் என் வீடு இருக்கிறது. பேனர் ஆர்டிஸ்டான அப்பாவுக்கு என் மீதொரு பெருங்கனவு இருந்தது. நான் நன்றாகப் படித்து பெரியாளாக வேண்டும் என்பதுதான் அது. எல்லா அப்பாக்களும் தன் குழந்தைகள் மீது கொள்ளும் வாடிக்கையான கனவுதான். ராயபுரம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பெயரை எழுதுவதற்கான பட்டியல் இருக்கிறது. அதில் அதிக பெயர்களை அப்பாதான் எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் என்னிடம் சொல்வார் உனது பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் காசே வாங்காமல் உன் பெயரை நான் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பார். அப்பா என் மீது கொண்டிருந்த கனவு என்னை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடவில்லை. பள்ளி, வீடு என எல்லாவற்றிலும் பாடப்புத்தகங்களே எனது உலகை நிரப்பியிருந்தது.

நீயும் நானும் எட்டாம் வகுப்பில் ஆ பிரிவில் படித்தோம். முதல் மதிப்பெண் பெறுகிற காரணத்தால் நாந்தான் வகுப்புத் தலைவன். பள்ளிகளைப் பொறுத்த வரையிலும் நன்றாகப் படிக்கிறவர்களே கதாநாயர்களாக சிருஷ்டிக்கப்படுவார்கள் அப்படியாக என் மீது பலருக்கும் கதாநாயக பிம்பம் இருந்தது. எனக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு அவ்வப்போது வெளிப்படும்போது வகுப்பறையே சிரிப்புமயமாய் இருக்கும். இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதல்லவா பீட்டர்? நீ வகுப்பின் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பாய், ஜன்னலோர இருக்கை அது. அந்த வயதிலேயே ஆசிரியர் இல்லாத நேரத்தில் பான்பாராக்கை மென்று துப்பிக் கொண்டிருப்பாய். வீட்டுப்பாடம் எழுதவில்லை, மதிப்பெண் குறைச்சல் என ஆசிரியர்களால் நீ அடிக்கடி வெளியே நிற்க வைக்கப்படுவாய். உனது நண்பர்களும் உன்னைப் போன்ற உதவாக்கரைகள்தான். அவர்களும் படிக்காதது பற்றியோ ஆசிரியரின் வசவுகள் பற்றியோ அலட்டிக்கொண்டதே இல்லை. அந்த கூட்டத்துக்கு நீதான் தலைவன் என்பதற்கு பின்னால் இருந்த உண்மை உன்னுடைய பலமும் ஆளுமையும். விளையாட்டு மைதானத்தில் நீ பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனைப் புரட்டி எடுத்த பிறகு பலரது பேச்சு உன்னைப் பற்றியதாக இருந்தது. நீ என்னை விட மூன்று வயது மூத்தவன் தேர்ச்சி பெறாத காரணத்தால் என்னுடன் படிக்க நேர்ந்தது. உனது கூட்டம் உன்னை அண்ணா என்றழைப்பதுண்டு, மற்றவர்களையும் நீ அண்ணன் எனச் சொல்ல நிர்பந்தித்தாய் ஆனால் நானும் எனது நண்பன் இப்ராகிமும் உன் நிர்பந்தத்தை ஏற்காமல் பீட்டர் என்றே அழைத்து வந்தோம். அதன் காரணமாய் இப்ராகிமை நீ அடித்தாய். அப்போது பிரச்னையை நான் வகுப்பாசிரிடம் கொண்டு சென்றேன் ‘’பெயிலான நாய்க்கு எதுக்குடா மரியாதைஎன்று வகுப்பில் எல்லோர் முன்னும் உன்னைக் கேட்டுவிட்டார். எனக்குத் தெரியும் நீ அந்த அவமானத்தால் எவ்வளவு புண்பட்டிருப்பாய் என. இருந்தும் நீ இப்ராகிமை அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பை அமைதி காக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது. யார் யார் பேசுகிறார்களோ அவர்களது பெயரை கரும்பலகையில் பதிக்க வேண்டும். ஆசிரியர் வந்ததும் அந்தப் பெயர்களைக் கொண்ட புண்ணியவான்களை அடி வெளுப்பார். அறிவியல் ஆசிரியர் கோதண்டம் முரட்டு ஆள். அவரைக் கண்டால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கூட பம்மிக்கொண்டு போவார்கள். அவரது பாடவேளைக்கு முன்னால்தான் நீ உன் கூட்டத்தினருடன் பேசிக்கொண்டிருந்தாய். நான் கரும்பலகையில் பீட்டர் என்கிற உனது பெயரை எழுதி வைத்தேன். பெயரை அழிக்கும்படி மிரட்டினாய். அதன் பிறகு பீட்டர் மோசம் என எழுதினேன், பின்னர் நீ என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டினாய், நான் பீட்டர் மிக மோசம் என எழுதினேன். பெஞ்சின் மீதேறிக் கொண்டு முன்னர் இருந்த மாணவிகளில் சிலரை வேண்டுமென்றே நக்கலடித்தாய். அவர்கள் சனியன் என்று சொல்லிக்கொண்டார்கள். பேர் எழுதி வைத்தால் மட்டும் ஒன்றும் புடுங்க முடியாது என்றாய். எனக்கு சுரீரென்று கோபம் வந்ததும் பீட்டர் மிக மிக மிக மோசம் என எழுதினேன்.

கோதண்டம் ஆசிரியர் வந்தார், அவரது கணக்குப்படி பெயர் மட்டுமிருந்தால் அதற்கு ஒரு அடி, மோசத்தில் எத்தனை மிக இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அடிக்க வேண்டும் என்பதை தனது வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கரும்பலகையைப் பார்த்தார் உனது பெயருக்குப் பின்னால் மூன்று மிகக்கள் இருந்தன. இது போதும் அவருக்கு, மூங்கில் பிரம்பால் அவர் உன்னை வெறிகொண்டு தாக்கியதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை பீட்டர், நீயும் அதை மறந்திருக்க மாட்டாய். அந்த அடிகளுக்கு காரணமானவன் நாந்தான் என்பதில் உனக்கு என் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. பள்ளி முடித்து வீடு திரும்புகையில் என் கன்னத்தில் நீ விட்ட பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அப்புகளில் புரிந்து கொள்ள முடிந்தது அந்த கோபத்தின் உக்கிரத்தை. அறைந்ததோடு மட்டுமல்லாமல் கையைப் பிடித்துத் திருகி முதுகில் வலுவாக இரண்டு குத்து குத்தினாய். என் வாழ்வில் நான் வாங்கியிராத அடி அது என்பதால் மூர்ச்சையாகிப் போனேன். பேசக்கூட முடியாமல் அப்படியே கீழே படுத்து விட்டேன். நாக்கைத் துருத்தி விரலை நீட்டி எச்சரிக்கை செய்துவிட்டு நீ கிளம்பி விட்டாய். என் வீட்டில் நீ அடித்தது குறித்து நான் தெரியப்படுத்தவில்லை அதாவது பள்ளிக்கூட விவகாரத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில் எனக்கு துளியும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. இருந்தும் என் இரவை அந்த நினைவுகள் தின்று தீர்த்தன. புரண்டு புரண்டு படுத்தாலும் உன்னைத் திருப்பியடிக்கவியலாத இயலாமை என்னைத் தூங்க விடுவேனா? என்றது. எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். நிலவொளியால் நிரம்பியிருந்த அந்த வெற்று வெளியில் எதிரே நீ இருப்பதாய் உருவகப்படுத்திக் கொண்டு எனது தாக்குதலைத் தொடங்கினேன். உன் கண்ணம், மூக்கு, வாய், வயிறு என என்று நான் விட்ட குத்துகள் வெட்ட வெளியில் காற்றைக் கிழித்துக் கொண்டு போனது. எதிர் தாக்குதலே இல்லாமல் எனது தாக்குதல் அரங்கேறிக்கொண்டிருந்தது. பல்லை வெறுவியபடி உன்னைக்குத்திக்கொண்டே இருந்தேன். சிறிது நேரத்துக்குப் பிற்பாடு ஏற்பட்ட கைவலியின் காரணமாய் எனது தாக்குதலை நிறுத்தி விட்டாலும் எனது மனப்போராட்டங்கள் யாவும் நான் காற்றில் விட்ட குத்துகள் வழியே முடிவுக்கு வந்து விட்டிருந்தது இதே குத்துகளை நான் நிஜத்தில் கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பவனாய் எண்ணிக் கொண்ட பிறகுதான் தூக்கமே வந்தது.
அடுத்த நாள் வகுப்பை நான் அமைதி காத்துக் கொண்டிருந்த நேரத்தில் உன் குரல் வகுப்பையே நிரைக்கும்படி பேசினாய். உன் பெயரை நான் எழுத மாட்டேன் என்றுதானே பீட்டர் நீ நினைத்திருந்தாய்? நான் பீட்டர் மிக மிக என்று எழுதியதும் உனது பேச்சு நின்றது. நீ என்னை முறைத்தாய் நான் பதிலுக்கு முறைத்தேன். அது உன் கோபத்தை இன்னும் கூட்டியிருக்க வேண்டும். அதனால்தான் நீ டெஸ்கை இழுத்துக் குத்தினாய் நான் பதிலுக்கு கைகளை மடக்கி உயர்த்திக் காட்டினேன். நமக்குள்ளான இந்த சம்பாஷனைகள் புரிந்தும் புரியாமலும் சக மாணவ,மாணவிகள் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவாயினும் மாலை உன்னை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தேன். திரும்பவும் சொல்கிறேன் தோற்றாலும் உன்னை எதிர்த்து விட்டுத் தோற்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே என்னிடமிருந்தது

பள்ளி முடிந்ததும் விளையாட்டு மைதானத்தின் வேப்ப மரத்தின் கீழ் ஆஜரானோம். நமது சண்டையை வேடிக்கை பார்க்க சில மாணவர்கள் குழுமியிருந்தனர். உனது நண்பன் ரஞ்சித் ஒரு ரெஃப்ரீ போல் ஒன் டூ த்ரீ சொல்லி இச்சண்டையைத் துவங்கி வைத்தான். எனக்கு சண்டை குறித்தான எவ்விதத் தெளிவுகளும் இருக்கவில்லை எனது ஒரே நோக்கம் உன்னை அடிக்க வேண்டும் அவ்வளவே. நான் பாய்ந்து உன் மூக்கின் மீது ஒரு குத்து விட்டேன் அடுத்த கணமே உன் நெஞ்சின்மீது பலமான குத்து விட்டேன் இப்படியாக சில நொடிகள் வேகமாக நான் இயங்கிக் கொண்டிருக்கும்போது நீ என் நெஞ்சில் உதைத்துத் தள்ளினாய்... நான் தடுமாறி விழுந்தேன். உடனே தீவிரத்தோடு எழுந்து எனது தாக்குதலைத் தொடர்ந்தேன் அப்போது என் வயிற்றில் இழுத்து ஒரு குத்து விட்டாய் சப்த நாடிகளும் அடங்கிப்போய்விட்டதாக ஓர் உணர்வு, அப்படியே நின்று விட்டேன். உன்னை எதிர்ப்பது என்னால் இயலாத காரியம் என்பதை அந்தக் குத்து எனக்கு உணர்த்தி விட்டது. வலி தாங்க மாட்டாமல் புழுவாய்த் துடித்தேன். அடுத்த கணமே என் கன்னத்தில் நீ பளார்களை வழங்கினாய். அவை என்னை நிலைகுலையச் செய்தது. உனது நண்பர்கள் எல்லோரும் பீட்டர்பீட்டர்பீட்டர் என்று ஆர்ப்பரித்தனர். என் கண் முன்னாலேயே நான் தோற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்ததால் விவரிக்க முடியாத சோகம் என்னைச் சூழ்ந்திருந்தது. நீ முன்னேறிக்கொண்டே இருந்தாய், அறைவைதை நிறுத்தி விட்டு என் கையை முறுக்கினாய். தாங்க முடியாத வலியின் காரணமாய் நான் வெக்கத்தை விட்டு என்னை விட்டு விடச்சொல்லி உன்னிடம் வேண்டினேன் நீயோ தொடர்ந்து என்னை துவம்சம் செய்து கொண்டிருந்தாய். எவ்வித எதிர்தாக்குதல்களும் இல்லாமல் உனது குத்துகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டிருந்த கணத்தில்தான் வஞ்சம் எனும் விருட்சத்தின் விதை எனக்குள் விழுந்திருக்க வேண்டும்.

உன்னிடம் நான் அடிவாங்கியதை இப்பள்ளிக்கே பறைசாற்றும் பணியை உனது நண்பர்கள் செவ்வனவே செய்திருந்தார்கள். பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை, எனது இயலாமையைக் கண்டு உனது பலம் எக்காளமிட்டுச் சிரிப்பது போன்றான மாயையான சிந்தனைகளும் ஓடிக்கொண்டிருந்தது. யாருடைய முகத்தையும் எதிர்கொள்வதில் தயக்கம் இருந்தது. ஒவ்வொரு நொடியும் நான் அவமானத்துக்கு ஆளாகிவிடுவேனோ என்கிற அச்சம் என்னை பீடித்திருந்தது. வகுப்புத் தலைவனாக இருப்பதில் துளியும் நாட்டமில்லை. என் மீதிருந்த கதாநாயக பிம்பம் உடைந்து விட்டதென்பது மிகப்பெரும் ரணமாகியிருந்தது. ஒரு நாள் சம்மந்தமே இல்லாமல் வகுப்பில் அத்தனை மாணவர்கள் முன்னாலும் என்னை நீ அறைந்தாய். எதற்காக என்று உன் நண்பன் ராஜேஷ் கேட்டதற்கு பொழுதுபோக்கு என்றாய். பொத்துக்கொண்டு வந்தது கோபம், ஆனால் உன்னை எதுவும் செய்ய முடியவில்லை என்னால். விளையாட்டு மைதானத்தில் இருந்த கோல் போஸ்ட் கம்பி மீது எனது பலம் மொத்தத்தையும் திரட்டி கற்களை விட்டெறிந்தேன். முழு விசையோடு அது பட்டதும் எழுகிறடொய்ங்…” என்கிற சப்தம் எனது தாக்கின் வெற்றியாய் எதிரொலித்தது. அவை எல்லாம் உன்னைக் குறிவைத்து வீசப்பட்ட கற்கள்தான் பீட்டர்.
இந்த உலகின் விதி எனக்குப் பிடிக்கவில்லை, வழுத்ததுதான் வாழும் என்றால் எளியவர்கள் ஜனனித்திருக்கவே கூடாது. அது இயற்கையின் மிகப்பெரும் பிழை என்று அப்போது எனக்குத் தோன்றியது. உன்னிடம் ஒவ்வொரு முறை அடி வாங்கும்போதும்  “எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்என நான் நினைத்துக் கொண்டதுண்டு. அந்த சந்தர்ப்பம்தான் இப்போது வாய்த்திருக்கிறது பீட்டர்.

எட்டாம் வகுப்பு முடித்ததும் ஒன்பதாம் வகுப்புக்கு பழைய வண்ணாரப்பேட்டை மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதலாகிச் சென்று விட்டேன். அதன் பிறகு உன்னைப் பார்ப்பதென்பதே அரிதாகி விட்டது. எப்போதேனும் ஒரு முறை கல் மண்டபம் பேருந்து நிறுத்தத்தைக் கடக்கையில் உன் முகம் தட்டுப்படும். பன்னிரெண்டாம் வகுப்பு படித்த காலத்திலேயே நீ கல் மண்டபம் நிறுத்தத்துக்கு சற்று தள்ளி இருக்கும் பிஸ்மி டீ ஸ்டாலில் சிகரெட் இழுத்துக் கொண்டிருப்பாய். நீ என்னைப் பார்த்தாலும் பார்க்காதது போல் இருந்து விடுவாய் அதுவும் நல்லதுதான் எனப்பட்டது. பள்ளிக்கூடத்தில் வளர்ந்த பகை பள்ளிக்காலம் முடிந்ததுமே காலாவதியாகிவிடும் என்பதெல்லாம் பொய்தானே பீட்டர்? என்றைக்குமே நாம் எதிரிகள்தான், அது கண்மணி மீது நாம் இருவரும் கொண்டிருக்கும் காதலாலும் கூட.

கண்மணியை நான் ஓராண்டு காலமாக ஒரு தலையாகக், காதலித்து வருகிறேன். கண்மணி என்னும் அவள் பெயருக்காகவே அவளை இன்னுமொரு முறை காதலிக்க வேண்டும் போலிருக்கிறது. தேவதைகள் சுடிதார் அணிந்தபடியும் தரிசனம் தரவல்லது என்பதை அவளைப் பார்த்த அடுத்த கணமே உணர்ந்து கொண்டேன். அவள் ஃபாசிர் தெருவில்தான் வசிக்கிறாள். நார்த்விக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவள்வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நான் கட்டடப்பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அதே படிப்புக்கு முதலாமாண்டு வந்து சேர்ந்தாள். எங்கள் இருவருக்கும் ஒரே கல்லூரிப்பேருந்து ஆக பேருந்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த வாழ்க்கையிலும் அவளுடன் பயணிக்க ஆசைப்படுகிறேன் பீட்டர். இந்த வாழ்க்கையை நிரப்ப கண்மணி போதும் எனக்குஎன்ன இப்படிப்பேசுகிறேன் என்று பார்க்கிறாயா? காதல் வந்து விட்டால் சகலமும் மாறி விடுகிறது.

போன திங்கட்கிழமை எனது காதல் மட்டுமல்ல நானே உடைந்து போனேன் என்றால் அது உன்னால்தான் பீட்டர். கல் மண்டபம் பேருந்து நிறுத்தத்தில்தான் நானும் கண்மணியும் கல்லூரிப்பேருந்துக்காகக் காத்திருப்போம். அன்றைக்கென அவள் வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்ததால் சிறகுகளற்ற தேவதை போல இருந்தாள். ஓராண்டு கால மௌனத்தை தகர்த்து அன்றைக்குத்தான் கண்மணியிடம் வாயெடுத்துப் பேச ஆரம்பித்தேன். அது புதுமையாக இருந்தது என் எதிர்காலத்துடன் நான் பேசுவது போலாக உணர்ந்தேன். பேச்சினூடே என் எதிர்காலம் தெத்துப்பல் தெரிய சிரித்துக் கொண்டிருந்தது. ஆறு மாதங்களாக என்னை சைட் அடித்து வருவதாய் என் கண்மணி சொன்னாள். அவளது யதார்த்தம் இன்னும் என் காதலின் படிநிலையை அதிகப்படுத்தியது. தன்னடக்கத்தோடுநான் அவ்வளவு அழகாவா இருக்கேன்என்றேன். அதற்கு மீண்டும் அவள் சிரிப்பை பதிலாகக் கொடுத்த சமயம்தான் அது நிகழ்ந்தது.

பதுங்கியிருந்து இரையைக் கவ்வும் புலியின் சீற்றத்தோடு பாய்ந்து என் சட்டையை இருகப்பற்றியபடிஎங்க ஏரியாவ பத்தித் தப்பா பேசினியாடாஎப்படிடா பேசலாம்என்று சொல்லிவிட்டு என் கன்னத்தில் நீ வரிசையாக நாலைந்து அறைகள் விட்டாய். திடீரென நடந்த இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்த்திருக்காததால் என்ன செய்வது என்பது பற்றி கூட யோசித்து செயல்பட முடியாதவனாய் எட்டு ஆண்டுகள் கழிந்தும் உன்னிடம் தோற்றுக் கொண்டிருந்தேன். காலை வேளையின் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்த கல்மண்டபம் பேருந்து நிறுத்தமே இதை வேடிக்கை பார்த்தது. நமக்கு நேராதிருக்கும் வரையிலும் எல்லாமே வேடிக்கைதானே. கண்மணி ஒருவிதப் பரிதாபப்பார்வையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாலையில் அடிபட்டுச் செத்துப் போகிற நாயைக் கண்டால் ஒரு பரிதாபம் வருமே அப்படியொரு பரிதாபம்தான் அவளுக்கு இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். என்னை அறைந்து விட்டு நாக்கை வெறுவியபடி விரலை நீட்டி எச்சரித்து விட்டு நீ நகர்ந்து விட்டாய். நான் சுற்றிலும் முற்றிலும் பார்த்தேன் எனது தோல்விக்கான சாட்சியங்கள் மீண்டும் தன் இயல்புக்கு திரும்பி விட்டிருந்தன. இது இன்னும் கொஞ்ச நேரம் நீட்டித்திருக்க வேண்டும் என்று நிச்சயம் யாராவது எதிர்பார்த்திருப்பார்கள். கண்மணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவள் சங்கடப்பட்டிருக்கிறாள் என்பதை அவளது முகத்தின் உணர்ச்சிகள் வழியாக வெளிப்படுத்தியிருந்தாள். அவளைக் கண் கொண்டு பார்ப்பதற்கே கூச்சமாக இருந்தது. இத்தனைக்கும் நீ அறைந்த போது உன்னை இரண்டு அறையாவது நான் அறைந்து பதில் தாக்குதல் நடத்தியிருந்தேனென்றால் அது சண்டை எனப் பொருள் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் அன்று நடந்தது சண்டை அல்ல பீட்டராகிய நீ அதியனாகிய என்னை அடித்த சம்பவம். என்ன பேசுவது கண்மணியிடம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற கொள்கை என்னுடையது என்றா சொல்ல முடியும்?. என் பால்யத்தின் நினைவுகள் எனக்குள் தோன்றி மறைந்தன. அப்போது எங்களது வீட்டில் நாங்கள் வளர்த்து வந்த கிளியை, பூனை ஒன்று கவ்விக் கொண்டு சென்றது. அப்போது கிளியின் சிறகடிப்பும், கீச்சிடல்களும் பூனையின் ஆவேசமான கவ்வலிலிருந்து தப்புவதற்கான போராட்டமும் அன்றைக்கு என்னை ஆழமாய் பாதித்தது. கண்மணியின் கண்ணுக்கெதிரே வலிமை கொண்ட பூனையாய் நீ என்னைக் கவ்விய போது நான் கிளியாய்த் துடித்தேன்

 எட்டாண்டுகள் கழிந்தும் நமது கணக்கு இன்னும் தீரவில்லையோ என்றுதான் நினைத்திருந்தேன் பிற்பாடு இப்ராகிம் சொல்லித்தான் அந்த உண்மைகள் தெரிய வந்தன. நீயும் கண்மணியை ஒரு தலையாகக் காதலிக்கிறாய் அதனுள் நான் தலைப்பட்டு விட்ட காரணத்தால்தான் வேறு காரணம் சொல்லி என்னை அடித்திருக்கிறாய். ஆக நீ கண்மணி முன்னால் உன் ஹீரோயிசத்தைக் காட்ட முற்பட்டு அதே சமயம் என்னை பொக்கையாக்குவதற்காக உன் பலத்தைப் ப்ரயோகப்படுத்தியிருக்கிறாய். நான் பொக்கையல்ல பீட்டர், வன்மமும், வக்கிர எண்ணமும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? அந்த நிமிடம் அந்த நொடி எனக்குள் முடங்கிப்போயிருந்த வன்மம் மெல்லவே தலை தூக்க ஆரம்பித்தது. அது எப்படியாகப்பட்ட செயலையும் நிகழ்த்தி விடத் தயாராய் இருப்பதாய் என்னிடம் அறிவித்தது. நான் என் வன்மத்தை வாரி அணைத்து முத்தமிட்டேன். காரமாய் சமைத்துக் கொடுக்காத அம்மா மீது கொஞ்சம் கோபமும் வந்தது

2

குருட்டாம்போக்கில் உன்னைத் தாக்கி விடலாம் என்கிற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருந்திருக்கவில்லை. திட்டமிட்டு தீர்க்க வேண்டும் நமது கணக்கை, வாழ்க்கையில் என்றைக்குமே மறந்து விட முடியாதபடியான வலியைக் கொடுக்க வேண்டும் உனக்கு. நினைக்கவே கூடாது என்கிறபடியான நினைவுகளை உனக்குள் பதிக்க வேண்டும் என்று தோன்றியது. உன்னை எதிர்க்கும் முன் முதலில் உன் பலம் என்ன என்பதனை தெரிந்து கொள்வது அவசியமாயிற்று. நீ சிறந்த கால்பந்தாட்டக்காரன், ராயபுரம் ராக்கர்ஸ் என்னும் கால்பந்து அணிக்கு நீதான் கேப்டன். மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உன் அணியினருடன் நீ கால்பந்தாடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். பல டோரமெண்டுகளில் கோப்பையத் தட்டிப்பறித்த அணி உன்னுடையது. உனது அணியினர் எல்லோரும் உனது ஏரியாவைச் சேர்ந்தவர்கள். டோரமெண்டில் வெற்றிபெற்றாலோ அல்லது விடுமுறை தினங்களிலோ நீங்கள் கூட்டாகச்சேர்ந்து ராயபுரம் வி.வி ஒயின்ஸில் மது அருந்துவீர்கள். உனக்காக ஒன்று சேர ஒரு கால்பந்து அணியே இருக்கிறது. அதுவும் போக ஏரியாவில் இன்னும் சில பையன்கள் இருக்கிறார்கள். எனக்கு யார் இருக்கிறார்கள்? எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சண்டையை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். பள்ளிக்காலத்திலிருந்தே நீ ஜிம்மிற்கு சென்று கொண்டிருப்பதால் என்னை விட உயரமாகவும் உடல் பெருத்தும் இருந்தாய். இறுக்கமான டி சர்ட் அணிவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாய். உன் கட்டுடலை இவ்வுலவுக்குக் காட்சிப்படுத்துவதற்காகத்தானே அப்படி அணிவாய் பீட்டர்? இப்படியாகப் பார்க்கையில் என்னை விட நீ பல மடங்கு பலம் பொருந்தியவன். உன்னை என்னால் நேருக்கு நேராக எதிர்கொள்ள இயலாது என்பது தெளிவானது. அதற்காக அப்படியேவும் விட்டு விட இயலாது. உன்னை மறைந்திருந்து அடிக்கலாமா? என்று யோசித்தேன். நான் ஒளிந்திருந்து ஒரு கல்லை எடுத்து உன் புடனியில் அடிப்பது, உண்டி வில்லில் குறிவைத்து உன் மர்மப்பகுதியைத் தாக்குவது போலான எண்ணங்கள் காட்சிகளாய் அப்போது விரிந்தன. ஒரே ஒரு நாளைக்கு மட்டும் எனக்கு யானை பலம் வர வேண்டும் அன்றைக்கு ராயபுரத்தின் சாலைகளில் நான் உன்னைத் துரத்தித் துரத்தி அடிக்க வேண்டும் இதற்காக நான் யாரைப்பிரார்த்திப்பது? என்றெல்லாம் யோசித்தேன் என்றால் அது நப்பாசை எனத் தெரியாமலில்லை.

எனக்கு அப்போது யாருடனாவது கலந்தாசிக்க வேண்டும் போலிருந்தது. இப்ராகிம்தான் அதற்கு சரியான ஆள் எனப்பட்டது. என்னளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு உன் மேல் அவனுக்கு வஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்ததை நான் அறிந்திருந்தேன். அவனிடம் இது பற்றிச் சொன்ன பிறகு அவன் மகிழ்ச்சியடைந்தாலும், இது எந்தளவு சாத்தியம்? என்கிற கேள்வி அவனுக்குள்ளும் இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிற்பாடு ஆள் வைத்து அடிக்கலாம் ஆனால் அதில் சிறுசிக்கல் இருப்பதாகச் சொன்னான். ஆள் வைத்து அடித்தால் எனது வஞ்சம் தீர்ந்து விடும் ஆனால் உனக்குள்ளான வஞ்சம் வளர்ந்து விடும். எனது வஞ்சமே இவ்வளவு காத்திரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறதென்றால் உனது வஞ்சம் எப்படி இருக்கும்? அந்த வஞ்சம் என்னை என்னவெல்லாம் செய்யும் என்பதைச் சொல்லி பீதியைக்கூட்டினான். அதற்காகவெல்லாம் நான் பின் வாங்கி விட முடியாதுகண்மணியை நான் விட்டு விலகும் வரையிலும் உனது கோரமான தாக்குதல் முற்றுப் பெறாது என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. கண்மணி எனக்கானவள் ஆக அவளை உன் காரணமாகவெல்லாம் விட்டு விட இயலாது. இரண்டில் ஒன்று பார்த்து விடத் தலைப்படுவதாய் இப்ராகிமிடத்தில் சொன்னேன். அவன் இதில் தான் நேரடியாகத் தலையிடாமல் முடிந்த மட்டிலும் எல்லா உதவிகளையும் செய்வதாகச் சொன்னான். அவன்தான் என்னை மேத்யூவிடம் கூட்டி வந்தது.

மேத்யூ, காசிமேடு, சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவன் எனச் சொல்வதை விட அப்பகுதியின் அடையாளமாக இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். சொந்தமாக இரண்டு படகுகளை வைத்திருக்கும் அவன் அரசியல் கட்சி ஒன்றின் பகுதிச் செயலாளர். அரசியல் விருப்பு வெறுப்புகள் அடிப்படையிலான சில கொலைகள் புரிந்தவன். செம்மரக்கடத்தல் அவனுக்கு சமீப காலமாக லட்சங்களை வாரித்தரும் தொழில். அரசியல் புள்ளிகள், காவல் துறை என சகலத்தையும் தன் கைகளுக்குள் வைத்துத் தொழில் புரிபவன். எப்படிப்பார்த்தாலும் மேத்யூவுக்கு முப்பைத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். அதற்குள் அவன் இந்த இடத்தை எட்டிப்பிடித்ததற்கு அவனது ஆளுமையே காரணம். தனது பதினெட்டாவது வயதிலேயே அன்றைக்கு உச்சத்தில் இருந்த ரவுடியான மாணிக்கத்திடம் அடியாளாய்ச் சேர்ந்திருக்கிறான். தனக்கானவர்களை உருவாக்கிக் கொள்கிற வித்தையில் அவன் கைதேர்ந்தவன். மாணிக்கத்திடம் அடியாளாய்ச் சேர்ந்த காலத்திலிருந்தே தனக்கானவர்களை உருவாக்கிக் கொண்டு தன் இருப்பை பலப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறான். அப்படியாக அவன் நிகழ்த்திய வித்தைகள்தான் சில ஆண்டுகளிலேயே மாணிக்கத்தின் வலது கரமாய் இருந்து செயலாற்றும் அளவு முன்னேற்றத்தை எட்டக் காரணமாயிருந்திருக்கிறது. தொழிற்போட்டியின் காரணமாய் மாணிக்கத்தை, வியாசர்பாடி ரவி போட்டுத் தள்ளியதற்கு பிற்பாடு மாணிக்கத்தின் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். மேத்யூவுக்கு மனிதர்களை மதிப்பிட்டு விடத்தெரியும், ஒருவனது பேச்சிலேயே அவனது உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ளுமளவு அவன் மனிதர்களை உள்வாங்கியிருந்தான். கொலை புரிந்து கல்லைக் கட்டி கடலில் வீசுவது, அடையாளமே தெரியாமல் சிதைத்து விடுவது போன்று இன்னும் அவனைப்பற்றி இப்ராகிம் விளிக்கையில் நான் வெடவெடத்துப் போனேன். ரவுடியிசம் குறித்து எனக்கு இம்மியளவு கூடத் தெரியாது ஏனென்றால் எனது உலகம் வேறானது என்று நான் முன்கூட்டியே உன்னிடம் சொன்னேனல்லவா. இப்படியிருக்கையில் ஒரு அடிதடி சமாச்சாரத்துக்காக கொலையை துச்சமெனப் புரிபவனின் உதவியைத் தேடிப்போவது பல சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் என்று என் புத்திக்கு என் புத்தியே புத்திமதி சொன்னது. வீறுகொண்டு எழுந்த வன்மம் என்னவாயினும் பார்த்துக்கொள்ளலாம் என்று என்னைக் கொம்பு சீவிவிட்டது.

உனக்கு இப்போது 26 வயது இருக்குமல்லவா பீட்டர்? இப்ராகிமிடம் நான் கேட்டது இதைத்தான், மேத்யூ இருக்கும் நிலைக்கு உன்னை அடிப்பதற்காக அவனிடம் கோருவது நன்றாக இருக்குமா? என்றேன். ஏனென்றால் என்னளவில்தான் நீ பலசாலி, மேத்யூவோடு ஒப்பிடுகையில் நீ சும்மாதான். மேத்யூவின் அடியாள் ரஞ்சித், இப்ராகிமுக்கு பழக்கம் என்பதால் ரஞ்சித் மூலம் மேத்யூவை சந்திக்க நேரிட்டது. தயங்கித் தயங்கித்தான் நான் எல்லாவற்றையும் சொன்னேன். நிதானமாகக் கேட்டவன், கொலை செய்ய வேண்டுமா? என்றான். எனக்கு பக்கென்று இருந்தது. (அவன் என் மனநிலையை அறிந்து கொள்ளும் பொருட்டே அப்படியான கேள்வியைக் கேட்டான் என்பது எனக்குப் பிற்பாடுதான் தெரிய வந்தது) அந்தளவுக்கெல்லாம் போக வேண்டாம், என்னை அடித்ததற்காக நீ காலம் முழுமைக்கும் வருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற என் பழிவாங்கலின் சாரத்தைச் சொன்னேன். என்னைப் பார்த்தால் அவனுக்கு வேடிக்கையாக இருப்பதாகச் சொன்னான். இருக்கலாம் தவறில்லை, இருந்தும் காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் கண்ணுக்கெதிராக இன்னொரு ஆணிடம் அடி வாங்குவதென்பது காலம் முழுமைக்கும் முள்ளாய் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருக்கும் வலி என்பதை அவனுக்கு மேற்கோள் காட்டினேன். கிட்டத்தட்ட என் கதையும் அவனது கதை போலாகவே இருப்பதாகச் சொன்னான். அவனும் ஒருவனைப் பழிவாங்கும் பொருட்டுதான் மாணிக்கத்தை அணுகியதாகவும் அந்த பழி வாங்கலுக்குப் பிற்பாடு அவனுக்குக் கிடைத்த ஒரு கெத்துதான் அவனை இத்தொழிலுக்குள் தள்ளியதாகவும் கூறினான். அவன் இவ்வளவு நெருக்கமாகப் பேசுவான் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. பழிவாங்குவது போலான உச்சபட்ச மகிழ்ச்சி உலகில் வேறேதுமில்லை என்று சொன்னான். எனக்கும் அது நூறு சதவிகிதம் 
உண்மை எனப் பட்டதால் அதனை ஆமோதித்தேன்

இருந்தும் எனது கோரிக்கையை அவன் மறுத்தான், சாதாரண பிரச்னைக்கு இவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை என்றும் அந்த வக்கிரம் என் வருங்காலத்தைக் குழைத்து விடும் என்றும் அவன் அறிவுரை சொன்னான். கேட்காமலே கிடைக்கப்பெறுவது இங்கே அடியும், அறிவுரையும்தான். ரஞ்சித்திடம் உன்னைக்கண்டிக்க மட்டும் செய்யும்படி சொல்லி அனுப்பினான். அதன் பிற்பாடுதான் பிஸ்மி டீஸ்டாலுக்கு ரஞ்சித் உன்னைத் தேடி வந்தான். இன்றைக்கு உனக்கான இத்தனை துயரங்களுக்கும் அந்த டீஸ்டால் சந்திப்பே முக்கியக் காரணியாக இருக்கிறது பீட்டர்.

எவ்வளவோ தரவுகள் உன்னைப் பற்றி எடுத்திருந்தும் நீ ராயபுரம் ராக்கிக்கு நெருக்கமானவன் என்பது எனக்குத் தெரியாமற்போயிற்று பீட்டர். பிஸ்மி டீஸ்டாலில் நீ சொல்லியதன் பிற்பாடுதான் எனக்கு தெரிய வந்தது. மேத்யூ உன் மீது இந்தளவுக்கு கொதிப்படைந்தானென்றால் அன்று நீ ரஞ்சித்திடம் என்ன பேசினாய் என்று நினைத்துப்பார். ரஞ்சித் உன்னை அணுகியது ஆகச்சிறந்த நாகரிகமான முறையில். நமது பிரச்னையைப் பற்றி எடுத்துரைத்து இனி இது போன்று நடக்காமல் இருந்தால் நல்லது என்பதை மட்டும்தான் அவன் சொன்னான். அப்படியாக அவன் சமாதானம் பேசியது கூட எனக்குப் பிடிக்கவில்லைதான் இருந்தும் மேத்யூ என்பவனுக்காக நான் உடனிருந்தேன். ரஞ்சித் உன்னிடம் அவ்வளவு நியாயமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நீ எடுத்தவுடனே என்ன சொன்னாய்? உங்களது மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்றாய். அதற்கு அடுத்த அதிரடியாக மேத்யூ ஒன்றும் ராக்கியைவிட பெரிய கொம்பு அல்ல என்றாய். இதோ இந்த இடத்தில்தான் துவங்கியது உனக்கும் மேத்யூவுக்குமான கணக்கு.
மேத்யூவை முழுமையாக உள்வாங்கியவன் ரஞ்சித். ஆகவேதான் அவனது நம்பிக்கைக்குரியவனாய் இருக்கிறான். ரஞ்சித் முடிவுகளை எடுக்கும்போது அவன் தன்னை மேத்யூவாகவே பாவித்துக் கொள்கிறானோ என்னவோ, அவன் எடுக்கும் முடிவுகள் மேத்யூவின் முடிவினை ஒத்தே இருக்கும். அன்றைக்கு ரஞ்சித் மேத்யூவாக தன்னை பாவித்துக் கொண்டு யோசித்திருக்க வேண்டும். ராக்கிக்கும் மேத்யூவுக்கும் தொழிற்போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. என்றைக்குமே மேத்யூ தன்னை எவரையும் தாழ்வாக மதிப்பிட்டு விடுவதை விரும்பவே மாட்டான். சமயம் பார்த்து ராக்கியையே தீர்த்துக் கட்டுவதற்கு முழுமூச்சாக இறங்கியிருக்கும் இச்சூழலில் உன்னைப் போன்ற எறும்புகள் ராக்கியின் ஆள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை மேத்யூ ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அது ரஞ்சித்துக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ரஞ்சித்துக்குள் அப்படி ஒரு மூர்க்கன் இருப்பதை அப்போதுதான் பார்த்தேன். முனி வந்து இறங்கி அவனை ஆட்டுவிப்பது போல உன்னை எட்டி ஒரே உதை, நீ நாற்காலியிலிருந்து அப்படியே மல்லாக்க விழுந்தாய். சப்தம் கேட்டு ஆம்னியில் இருந்த மேத்யூவின் மூன்று ஆட்களும் உள்ளே ஓடிவந்தனர். ரஞ்சித் சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு அண்டாவை மூடியிருந்த தட்டத்தை எடுத்து உன் தலையில் பலமாய் மூன்று அடிகள் கொடுத்தான். நீ அலறிக்கொண்டே அடியைத் தடுக்கும் பொருட்டு தலைமீது உனது இரண்டு கைகளையும் அரணாகத் தடுத்தபடி படுத்து விட்டாய். மூன்று அடியாட்களும் உன்னை அப்படியே தூக்கிக்கொண்டு ஆம்னிக்குச் சென்றனர்.

ரஞ்சித் என்னைப் பார்த்து ‘’நீ எதிர்பார்த்ததுதான் நடக்கப்போகிறதுஎன்றான். காலம் முழுமைக்கும் நீ மறக்கமுடியாதபடியான நினைவுகளை உனக்குள் பதிக்க வேண்டும் என்பதுவே எனது எதிர்பார்ப்பு. அது நிகழ்ந்தேறப்போகிறது என ரஞ்சித் சொன்னதும் எனது வஞ்சம் பலமாக கைதட்டிக்கொண்டது. எனது பள்ளிக்காலக் கெஞ்சல்களை நீ மேத்யூவிடம் கெஞ்ச வேண்டும் அதைக் கேட்க எப்படி இருக்கும் எனக்கு? பழிவாங்கலின் சுவையை ருசிக்கவிருக்கிற ஆவல் பொங்கங்கோத்தா சாவுடாஎன்று உளமாறச் சொல்லிக்கொண்டு நானும் ஆம்னியில் ஏறிக்கொண்டேன். ஆம்னி புறப்பட்டது, யுத்தக்களத்தில் யானை மீதமர்ந்து போர் புரியும் வேந்தனுக்கு இருக்கும் மிடுக்கும் கம்பீரமும் எனக்குள் புகுந்து விட்டதைப் போலாக உணர்ந்தபடி பக்கவாட்டுக் கண்ணாடியில் என் முகம் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். இனி நடந்தேறப்போகும் துகிலுரித்தலும், வதையும் உன்னை ஆட்கொள்ளவிருக்கிற பெருந்துயரையும் ரசித்து விட்டுத்தான் சாவேன் என உறுதி பூண்டது எனது வஞ்சம்.

காசிமேடு மீன் மார்கெட்டில் மேத்யூவுக்கென சொந்தமாக ஒரு குடோன் இருக்கிறது. அங்குதான் ஆம்னி நுழைந்தது, ஆம்னி வந்த பிற்பாடு ஷர்ட்டர் மூடப்பட்ட போது எழுந்த க்ரீச் சப்தம் அப்படியே எனக்கு சினிமாவை நினைவூட்டியது. மேத்யூ ப்ளாஸ்டிக் ஸ்டூலில் முழங்காலின் மீது கைகளை தாங்கலுக்குக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான். உன்னை இழுத்து வெளியே போட்ட போது கூட அதே நிலையில்தான் இருந்தான் என்றால் இப்படி நடக்கும் என அவன் முன்னரே யூகித்திருக்கக் கூடும். இருக்கலாம் அதனால்தானே அவனால் இந்த இடத்துக்கு வர முடிந்திருக்கிறது. நான் ஆம்னியிலிருந்து இறங்கி ஒர் ஓரமாக நின்றேன் ஏனென்றால் மேத்யூவிடம் பேசுவதற்கான வார்த்தைகள் என்னிடம் இருந்திருக்கவில்லை. தட்டித் தூக்கிக் கொண்டுவந்ததற்கான காரணத்தை ரஞ்சித்தான் மேத்யூவிடம் விளக்கினான்.

மேத்யூ என்னைப்பார்த்தான், என்ன என்பது போலான வினாவை எழுப்பும்படியாக நானும் அவனைப்பார்த்தேன். நீ துடிதுடிப்பதை பார்க்க வேண்டுமா? எனக்கேட்டான். அடுத்த கணமே ஆமாம் என வேகமாகத் தலையசைத்தேன், நீ விட்டுவிடச் சொல்லிக்கெஞ்சினாலும் விடாமல் உன்னை இம்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை அணுஅணுவாய் ரசிக்கக் காத்திருக்கிற எனது குரூரத்தை அவனிடத்தே சொன்னேன். அவன் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

குடோனுக்குள் நீ, நான், மேத்யூ தவிர்த்து ஐந்து பேர் இருந்தார்கள். உன்னைத் தின்று ருசி பார்க்க அவர்கள் மேத்யூவின் கட்டளைக்காகக் காத்துக் கிடந்தார்கள். இந்த நிழல் உலகம் தனக்கென சில வரைமுறைகளை வகுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற சாமான்யன்களெல்லாம் அதை மிரட்சியோடு பார்க்க மட்டுமே இயலும். துன்புறுத்தி துடிக்கச் துடிக்கச் சாவடிப்பது, மூர்க்கத்தனமாக பல கத்தி வெட்டுகளில் கொடூரமாகக் கொலை புரிவது, இதற்குச் செத்திருக்கலாம் என யோசிக்கும்படி காலம் முழுமைக்கும் வலியைக் கொடுப்பது என தத்தம் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் அது தீர்மானிக்கப்படுகிறது. உனக்குள் ஒரு தெளிவு இருக்கிறது பீட்டர் அதனால்தான் உன்னை ஆம்னியில் ஏற்றியதிலிருந்து அந்த கணம் வரைக்கும் ஏதும் பேசாமல் அமைதி காத்தாய். என்ன செய்யக்காத்திருக்கிறார்களோ என்கிற பதைபதைப்பு உன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. மேத்யூ ரஞ்சித்தைப் பார்த்தான், இவர்களெல்லாம் பார்வைக்குள்ளாகவே பேசிக்கொள்வார்களோ? ஆளுகைக்குட்பட்டவனின் பார்வையையே கட்டளையாக ஏற்று நடப்பதுவே விசுவாசத்தின் மதிப்பீடாக அளவிடப்படுமோ என்னவோ. எனக்கு இது பற்றியான எவ்வித தெளிவும் இல்லாத காரணத்தால் அமைதியின் வடிவாய் நின்றிருந்தேன்.

ரஞ்சித் உன்னை நோக்கி வந்தான்நீ பின் நகர்ந்து கொண்டே சென்றாய்எவ்வளவு தூரத்துக்குச் சென்று விட இயலும்? சுவர் உன்னைத் தடுத்து நிறுத்தியது. ரஞ்சித்தின் நெருங்கல் உனக்குள் பெருத்த அச்சத்தினை விளைவித்ததால் உன் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டியது. உக்கிரமான ஒரு தாக்குதலை பார்க்கவிருக்கிற ஆர்வம் என்னுள் கூடிக்கொண்டது. உன்னை நெருங்கிய அவன் உனைப்பார்த்தபடியே சில நொடிகள் அப்படியே அமைதி காத்து நின்றிருந்தான். உன்னை அவன் அவதானிப்பதற்காக அந்த நொடிகள் செலவிடப்பட்டிருக்கலாம். நீ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாய்ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று தீர்மானிக்கப்பட்ட கடைசிப் பந்து வீச்சை பார்க்கிற அதே ஆவலில் நானிருக்க  மின்னற்பொழுதில் உன் சட்டைக்காலரைப் பிடித்து அப்படியே உன்னைத்தூக்கியவன் சுவரில் சாய்த்து நிறுத்தி உன் முகத்தில் பலமாக குத்துக்களை விட்டான். தொடர் தாக்காக இருந்ததால் தடுப்பதற்குக் கூட உன்னால் இயலவில்லை. இறுதியாக அவன் விட்ட பலமான குத்துதான் உன் சிறுமூக்கை நொறுக்கியிருக்க வேண்டும். மூக்கிலிருந்து அப்போதுதான் ரத்தம் வழியத்துவங்கியது. இவ்வளவு குத்துகளை உனக்குள் வாங்கிக்கொண்ட நிலையிலும் கூட நீ அலறவில்லை என்பது என்னுள் பெருத்த ஆச்சர்யத்தை விளைவித்தது. ராக்கியின் ஆள் என்று அடவாடி செய்த நீ அந்த கெத்தை முடிந்த மட்டிலும் காப்பாற்றிக்கொள்ளவே முனைந்தாய்.

குத்துகளை வாங்கிக் கொண்டு நீ சலனமற்று நின்றிருப்பது ரஞ்சித்தை இன்னமும் காத்திரமுறச் செய்திருக்கலாம். சுவற்றோடு சாய்த்து கழுத்தை நெறித்தபடி உன்னைத்தூக்கிப்பிடித்தான். நீ அவனது கைகளை விடுவிக்கப் போராடினாயே அது உனது உயிருக்கான போராட்டம். சில நொடிகளில் அவனது பிடியைத் தளர்த்தியதன் பிற்பாடு கழுத்தைப் பிடித்தபடி இருமத்தொடங்கினாய். நான் ரஞ்சித்திடம் உனது கையை முறுக்கும்படி சைகை காட்டினேன். மேத்யூ அதனைப் பார்த்திருந்தும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். நீ இருமி முடித்ததும் உனது இடது கையை முறுக்கியபடி அப்படியே உன்னைக்குனிய வைத்தான். நீ கண்களை மூடிக்கொண்டு பல்லை வெறுவினாய். உனது முக்கச்சுறுக்கல்கள் நீ அனுபவிக்கும் வலியை எனக்கு அப்பட்டமாய்க் காட்டிக் கொடுத்தது. அதைப்பார்த்து பார்த்து என் குரூரம் கொண்டாடித் தீர்த்தது. முதுகில் நங்கென குத்த வேண்டும் என நினைத்தேன். ரஞ்சித் குத்தத் துவங்கினான். தொடர்ந்து வலுவாக நான்கைந்து குத்துகள் விட்ட பின் உனை விடுவித்தான். நீ முதுகைப் பிடித்தபடி அப்படியே உட்கார்ந்து விட்டாய்.
மேத்யூவின் அடியாள் தியாகுவும், ரஞ்சித்தும் உனது நீல நிற கோடுபோட்ட சட்டையையும், ஜீன்ஸ் பேண்டையும் உருவி வீசினர். நீ ஜாக்கி ஜட்டியுடன் அப்படியே கிடந்தாய். தியாகு ஒரு வாளி நிறைய தண்ணீர் கொண்டு வந்து உன் மேல் ஊற்றினான். உன் உடலை முழுவதுமாய் நனைத்து விட்டு அது தரையில் வழிந்தோடியது. தண்ணீர் படும்போது தோல் இலகுவாகும், அப்போது அடித்தால் வலி நன்கு பிடிக்கும் என ரஞ்சித் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தான். தியாகு மூங்கில் பிரம்பு முழுமைக்கும் துணியைச் சுற்றி விட்டு தண்ணீருக்குள் ஊறவைத்தான். இனி நீ துடிதுடிக்கப் போகிறாய் என மேத்யூ சொன்னான். இன்னும் நீ வதைபடப்போகிற தருணம் என் வாழ்வின் மகிழ்ச்சி நிறைந்த தருணமாக இருக்கப்போகிறது எனத் தோன்றியது.

தியாகு இன்னொரு வாளியைக் கொண்டு வந்து வைத்தான். அதனுள் போர்வை ஒன்று ஊறிக்கொண்டிருந்தது வெளியே எடுத்து மடக்கிப் பிழிந்தான். எவ்வளவு இயலுமோ அவ்வளவு பிழிந்ததன் பிற்பாடு ஈரப்பதத்துடன் அந்தப் போர்வை கட்டை மாதிரியாகிருந்தது. அது தியாகுவின் சுற்று, அவன் போர்வையை கையிலேந்தியபடி உன்னை நோக்கி வந்தான். ஈரப்போர்வையில் அடிக்கும்போது காயம் வெளியே தெரியவே தெரியாது எல்லாமே உள்காயம்தான். நாளடைவில் அந்தக் காயம் கந்திப் போய் உன்னை பாடாவதியாக்கி விடும் என்று ரஞ்சித்திடமிருந்து விளக்கம் வந்தது. ரஞ்சித் இந்த விளக்கங்களை எனக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்கிற கேள்வி கூட எனக்கு அப்போது இருந்தது.

தியாகு திறமைசாலிதான், உன்னை சில அடிகளிலேயே கதற வைத்து விட்டான். நீ வேண்டாம் வேண்டாம் என கையெடுத்து வேண்டியதன் பிறகே அவன் அடியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். உனது கண்களில் நீர் கோர்த்து நின்றது. நீ எப்போது வெடித்து அழப்போகிறாய் என்றபடி உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். தியாகுவின் மூர்க்கத்தனமான தாக்குதல் உன்னை அழவைத்து விட்டது. திரண்டிருந்த கண்ணீர் கொட்டியே விட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல அதற்கு மேல் அடிக்காமல் தியாகு வந்து விட்டான்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் அழுது தீர்த்து விட்டிருந்தாலும் விசும்பல் உன்னுள் எழுந்து கொண்டே இருந்தது. அது அடங்குவதற்கு நேரமானது. உனது அழுகையையும் விசும்பலையும் எனது வஞ்சம் பார்த்துப் பார்த்துச் சிரித்தது. மேத்யூ உன்னிடம் ஏதாவது பேசுவான் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அவன் ஏதும் பேசாதது இன்றைய வியப்புகளில் ஒன்றுதான்.

அடுத்த சுற்று சுந்தரத்துடையது என்பதால் தலையைச் சிலுப்பி, மார்புகளை எம்பி, புஜங்களை அசைத்து தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். ஊறிக்கொண்டிருந்த பிரம்பை எடுத்தவன் உன்னை நோக்கி வந்தான். நீ அவனை மிரட்சியோடு பார்த்தாய், அந்தப் பிரம்பு உன்னை பீதியுறச்செய்திருக்கும். உன் நினைவலைகளில் அது தருகிற வலியும் உனது துடிப்பும் வந்து போயிருக்கும். நீ கைகளை முன் நீட்டி வேண்டாம் என பாவனை செய்தாய். வேண்டாததைத்தான் வேண்டுமென்றே கொடுக்கிற கூட்டம் இதுவல்லாவா? உனது கெஞ்சல்கள் சுந்தரத்துக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்க வேண்டும். சப்பணமிட்டு அமர்ந்து கொண்டிருந்த. உனது இடது கையில் வரிசையாக பிரம்படிகள் விழுந்தது. நீ வலி தாங்க மாட்டாது துடித்தாய். நீ எதிர்பாரத இடத்திலெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டாய். அவனது தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் பொருட்டு கதறிக்கொண்டே கைகளை நீட்டித் தடுக்க முற்பட்டுக் கொண்டிருந்தாய். வெறிகொண்ட மிருகம் போல அவன் தொடர்ந்து உன்னை அடித்துக் கொண்டிருப்பதும் நீ தடுக்க முற்படுவதையும் பார்த்த போது நீ அந்தக் கிளியாக மாறிவிட்டிருப்பதாய் தோன்றியது. கைகளைக் கொண்டு அடிகளை தடுக்க நீ முற்படுவது கவ்வலிலிருந்து தப்பிக்க எத்தனித்த கிளியின் சிறகடிப்பைப் போலவே இருந்தது எனக்கு. கிளியைப் பூனையாக்கவும், பூனையைக் கிளியாக்கவும் சூழ்நிலையால் முடிகிறது. பூனை முன்னால் நீ கிளியாகி விட்டாய், கிளியைக் கண்டால் நீ பூனையாகி விடுவாய். வலிமையே இந்த மாற்றத்தின் காரண சக்தியாய் விளங்குகிறது பீட்டர்.
மேத்யூவின் பூனைக்கூட்டத்திடம் அகப்பட்டுக்கொண்ட கிளி நீயாகயிருக்கையில் நான் எதுவாகவுமன்றி நானாகவே இருந்தேன். அவனது ஒவ்வொரு பிரம்பு விளாசல்களின் போதும் நான் பதைபதைத்தேன். பூனையின் கூர்பற்கள் கிளியின் கழுத்தை அழுத்திக் கவ்வியதை காண நேர்ந்த வலி மீண்டும் எனக்குள். சுந்தரம் வலது கையில் பிரம்பை வைத்திருந்தான் ஆகவே உனது இடப்புறம் அவனுக்கு ஏதுவாக இருக்கப்போக அவனது அடிகள் எல்லாம் இடப்புறமே விழுந்தன. அவனது வெறிகொண்ட பிரம்பு விளாசலில் உனது இடது கையிலும் தொடைகளிலும் தோல் கிழிந்து ரத்தம் வரத்துவங்கியது. அதுகாறும் இருந்த வன்மமும் குரூரமும் இதைப் பார்த்தனவா? ரசித்தனவா? இல்லை அது என்னுள் இருக்கிறதா? என்கிற கேள்வியும் வந்தது. நான் மேத்யூவைப் பார்த்தேன். அவன் ஆரம்பத்திலிருந்து ஒரே நிலையில்தான் இருந்தான். எப்படி இவர்களால் மட்டும் இந்த வதையை ரசிக்க முடிகிறது? என்பது எனக்கு புரிபடாத கேள்வியாக இருந்தது.
உனது அலறல்கள் என்னை சலனப்படுத்தியது. அதைக் கேட்கக் கூட திராணியற்றவனாய் இருந்தேன். காதுகள் இரண்டையும் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது. எங்கேயடா போயிற்று எனது வஞ்சமும், குரூரமும்? ஓர் உயிர் வதைக்கப்படுவதை கண்டு ரசிக்கிற ஈனத்தனமான எண்ணத்தை எந்த விதத்தில் நியாயப்படுத்திக் கொள்வது? உன்னைக் கண் கொண்டு பார்க்கக் கூட முடியவில்லை. பெருமழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது, சுந்தரம் உன்னை அடித்து முடித்ததும். நான் உன் பக்கம் பார்வையைத் திருப்பினேன். பிரம்படி உடலின் பெரும்பகுதியில் சிவப்பு வரிகளாகியிருந்தது. தோல் கிழிந்த இடங்களிலெல்லாம் உன் குருதி வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. நீ எதுவும் இயலாதவனாய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாய். உனது வலிகளத்தனையும் அனத்தலினூடே வெளிப்பட்டது. ஏன் இப்படி நடக்க வேண்டும் பீட்டர்?

கத்தி தயாராக இருக்கிறதா? என்று ரஞ்சித், தியாகுவிடம் வினவுகிறான். அவனும் தயாராக இருப்பதாக பதிலளிக்கிறான். சுந்தரம் என்னை நோக்கி வருகிறான். இதோ பிரம்பை என்னிடம் நீட்டி எனது பழியைத் தீர்த்துக் கொள்ளச் சொல்கிறான். நான் பிரம்பை எனது வலது கையில் வாங்கி விட்டேன். இப்போது நான் என்ன செய்யட்டும் பீட்டர்?
நீ கசக்கி வீசப்பட்ட காகிதமாய் இருக்கிறாய் உன்னை மேலும் எப்படிக் கசக்குவது? வன்மத்துக்கு வன்மம் பதில் சொல்லிக் கணக்கை நேர் செய்து கொண்டாயிற்று. இனி என்ன இருக்கிறது உனக்கும் எனக்கும்? உன்னை ஒரு அடியேனும் அடித்து விட வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு உந்துதல் வரவே எழுந்து விட்டேன். இதோ உன்னை நோக்கி வருகிறேன். நான் அடிக்கவிருக்கிற இந்த ஒரு அடியும் கூட என் பகையுணர்ச்சியை முடிவுக்குள் இட்டுச் செல்வதற்கான வழியாகத்தான் பார்க்கிறேன். உன்னை நெருங்கி விட்டேன். கண்களைத் திறந்து என்னைப் பார்க்கிறாய். எழ முற்படுகிறாய் உன்னால் இயலவில்லையெனினும் திரும்பத் திரும்ப முயற்சித்து எழுந்து அமர்ந்து விட்டாய். உன் உடலெங்கிலும் நடுக்கத்தை கிட்டத்தில் பார்க்க முடிகிறது. உடைந்து போன உனது குரலில் ஏதோ என்னிடம் பேச முற்படுகிறாய். நான் செவிகூர்ந்து அதைக் கேட்க விளைகிறேன். பிரம்பு விளாசல்களினால் கந்திப்போயிருக்கும் இடது கையினைக் காண்பிக்கிறாய். மரணவலி வலிவலிப்பதாகவும் கையை அசைக்கவே முடியவில்லை என்றும் சொல்கிறாய். அந்தக் கையில் அடிபடாதவாறு எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொள் என்கிறாய். நான் பிரம்பை அப்படியே கீழே போட்டு விட்டேன். இது மேற்கொண்டும் நான் உன்னை எப்படி அடிக்க முடியும் பீட்டர்?

நான் அப்படியே சுவரோரமாய் சலனமற்று உட்கார்ந்து விட்டேன். மேத்யூ கத்தியை எடுத்து விட்டான். ஈரமணலுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்து துருவேற்றப்பட்ட கத்தி அது. உன்னைக் குத்தி விட்டு சில நொடிகள் தாமதித்து உருவினால் அதன் துரு உன் ரத்தத்தில் கலந்து விடும். அந்த ஆக்சிஜனேற்றம் உன்னை ஒவ்வொரு நாளும் கொல்லும் என்பதுதான் அவர்களது கணக்கு. அவர்களுக்குள் அவர்கள் என்னன்னவோ பேசிக்கொள்கிறார்கள். எதையும் கூர்ந்து கவனிக்கும் நிலையில் நானில்லை. மேத்யூ உன்னை நோக்கி வருகிறான். இன்னும் சில நொடிகளில் எல்லாமே நடந்தேறவிருக்கிறது. இப்போது நான் என்ன செய்வது? கண்களை இறுக மூடிக்கொள்வதா? இல்லை இதுகாலமும் என்னை ஜெயித்துக் கொண்டே இருந்த நீ தோற்கப்போவதை கண் கொண்டு பார்த்துச் சிலிர்ப்பதா? எல்லாமும் எனக்குப் பொய் எனப்படுகிறது பீட்டர். இதுவரையிலான எனது முன்னெடுப்புகள் யாவையும் பேரபத்தமாகத் தோன்றுகிறது எனக்கு.
விடுக்கென எழுந்து மேத்யூவைத் தடுத்தேன். இருகைகளையும் கூப்பி வேண்டி விட்டு வேண்டாம் எனத் தலையசைக்கிறேன். என்னவாயிற்று? என்று அவன் கேள்வியெழுப்புகிறான். எனக்குள் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது என்கிறேன்மேத்யூ தன்னுடைய கதையிலிருந்து இது கொஞ்சம் மாறுபட்டிருகிறது என்கிறான். நான் இப்போது இருக்கும் இதே சூழலில் மேத்யூ இருந்த போது, மாணிக்கம் அவனது எதிராளியைக் கத்தியால் குத்துவதை பார்த்துக் கொண்டாடித் திளைத்ததாகச் சொல்கிறான். ஏனோ என்னால் அது முடியவில்லை என்கிறேன். அது முடிந்திருந்தால் நான் இன்னொரு மேத்யூவாகியிருப்பேன் என்கிறான்.

நான் உனைப் பார்க்கிறேன், நீயும் என்னைப் பார்க்கிறாய் இக்கணத்தில் உன் எண்ண அலைவரிசைகளில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? ஒன்று இனி நீயோ நானோ நேருக்கு நேர் சந்திக்கவே கூடாது என்று நினைக்கலாம். இல்லையெனில் நீ ஆளாகியிருக்கும் இதே கதிக்கு என்னை ஆளாக்க வேண்டும் என்று வஞ்சம் கொள்ளலாம். இவ்விரண்டைத் தாண்டி வேறெதையும் யோசிக்குமளவுக்கு யாரும் இங்கே வளர்ச்சி காணவில்லை பீட்டர்.

- கி.ச.திலீபன், நன்றி: உயிர் எழுத்து, பிப்ரவரி 2017

No comments:

Post a Comment