Saturday, July 2, 2016

நமது உணவில் என்ன இருக்கிறது? - வாணிஹரி நேர்காணல்



வாணி ஹரி

ஒரு கேள்வி நமது வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தைக் கூட ஏற்படுத்தும் என்பதற்கு அழகிய உதாரணம் வாணிஹரி. டைம் இதழ் தேர்ந்தெடுத்த நூறு இணையப்பிரபலங்களில் ஒபாமாவோடு சேர்த்து இவரும் ஒருவர். உணவுப் பொருட்களில் மேற்கொள்ளப்படும் ரசாயனக்கலப்புகள் குறித்து இவர் எழுதி வரும் ஃபுட்பேப் என்கிற வலைத்தளத்தை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இவரது வலைப்பதிவின் எதிரொலியாக பல உணவு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பில் ரசாயனக் கலப்பை நிறுத்தியிருக்கின்றன. இப்போது இவருக்கு வயது 35, காலத்தை பத்தாண்டுகளுக்கு பின் நகர்த்திப் பார்ப்போம். அப்போது இவர் பருத்த உடலோடு ஆஸ்துமா மற்றும் அலர்ஜி தொந்தரவுகளுக்கு ஆளாகி அடிக்கடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருந்தார். தனது மோசமான உணவுப்பழக்கத்தால் இந்நிலைக்கு ஆளானவரோ இன்றைக்கு உலகுக்கே உணவுப்பழக்கம் குறித்து பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த தலைகீழ்மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஒரு கேள்வி ‘‘நமது உணவுப் பொருளில் என்ன இருக்கிறது?’’ என்பதுதான். அக்கேள்விக்கு விடைகாண களத்தில் இறங்கி இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பல உணவு நிறுவனங்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. அமெரிக்க உணவுப் பழக்கங்கள், உணவு நிறுவன மோசடிகள் என எதைப்பற்றியும் துணிச்சலுடன் பேசுபவரைச் சந்தித்தோம்.

‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவாக இருந்தாலும் எனது பூர்விகம் பஞ்சாப் மாநிலம்தான். என் அம்மா பஞ்சாப்பின் பாரம்பர்ய உணவு வகைகளை சமைப்பார். இருந்தும் நான் அமெரிக்கர்கள் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக பீட்சா, பர்க்கர் போன்றவற்றைதான் சாப்பிட்டு வந்தேன். சாக்லேட்டுகள் மேல் எனக்கு அலாதிப் ப்ரியம் இருந்தது. விதம் விதமான ஃப்ளேவர்களை சாப்பிட்டுவேன். படிப்பு முடிந்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் ஆக வேலை பார்த்தேன். அக்கால கட்டங்களில் நிறைய சாப்பிடுவதற்கான சூழல் இருந்தது. ஒரு கட்டத்தில் என் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆஸ்துமா, அலர்ஜி, உடல் பருமன், தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தேன். அப்போதுதான் எனக்கு உடல் நலம் குறித்த அக்கறையே வந்தது. நான் ஏன் இப்படியானேன்? என்று அலசியபோது என் உணவுப்பழக்கங்கள்தான் என்னை இப்படியாக்கியது என்பதை உணர முடிந்தது. நமது உடலுக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுதான் உடல் நலத்தைத் தீர்மானிக்கும். நான் சாப்பிடும் உணவுப் பொருட்களில் என்ன இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள முற்பட்டேன்.

மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட் ஆக பணிபுரிந்ததால் அதன் மூலம் கிடைத்த தொடர்புகள் மூலம் உணவு நிறுவனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. சிப்போட்டல் என்கிற ஜப்பானிய ரெஸ்டாரண்டுக்குச் சென்று அங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் என்னென்ன சேர்க்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதனை புகைப்படம் எடுத்து வந்தேன். பின்னர் அந்தப் பொருட்களின் தன்மை மற்றும் விளைவுகள் குறித்து அத்துறை சார்ந்த வல்லுநர்களிடம் நேர்காணல் புரிந்து அதனை ஆவணப்படுத்தினேன். அது குறித்து இணையத்தில் எழுதியதன் பிற்பாடு சிப்போட்டல் உணவக நிறுவனத்தினர் நான் குறிப்பிட்ட ரசாயனங்களை அவர்களது உணவுப்பொருட்களிலிருந்து நீக்கி விட்டனர். மருத்துவ இதழ்கள், நூல்கள், இணையதளங்கள் மூலம் இது குறித்த நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் எனது நண்பர்கள் மூலம் அங்குள்ள உணவுப் பொருட்களில் கலக்கப்படுபவை பற்றி புகைப்படம் எடுத்து அனுப்ப சொன்னேன். சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரசாயனக் கலப்பு குறித்து விளக்கம் கேட்டு வந்தேன்’’ என்கிறவர் தனது ஃபுட் பேப் வலைத்தளம் துவங்கிய கதையைக் கூறுகிறார்.   
உணவுக் கலப்படங்களுக்கு எதிரான எனது செயல்பாடுகளைப் பார்த்த பலரும் வலைத்தளம் ஒன்றைத் துவங்கி இது குறித்து எழுதும்படி வலியுறுத்தினர். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபுட்பேப் என்கிற எனது வலைத்தளத்தைத் துவங்கினேன். இணையம் என்பது மக்களை எளிதில் சென்றடையும் சக்தியாக உருவெடுத்து விட்டதால் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பினேன். பெரிய உணவு நிறுவனங்களான Kraft, Chick-fil-A, Chipotle, Subway, General Mills, Panera Bread, Anheuser-Busch, and Starbucks என பலவையும் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் என்ன இருக்கிறது? என்பதை தொடர்ந்து எழுதி வருகிறேன்’’ எனும் வாணிஹரிக்கு உலக அளவில் 54 மில்லியன் வாசகர்கள் இருக்கிறார்கள். இந்திய பாரம்பர்ய உணவுக்கலாச்சாரத்தைத் தான் பெரிதும் விரும்புவதாகச் சொல்லும் இவர் இந்தியர்கள் விழிப்படைய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

இந்தியர்கள் எல்லோருக்கும் நம்முடைய உணவு எங்கிருந்து வருகிறது என்கிற கேள்வி இருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்டு வரும் உணவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லவே இல்லை. பிஸ்கட் பாக்கெட்டில் எடிபில் வெஜிடபுள் ஆயில் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இது எந்த மூலப்பொருளிலிருந்து கிடைக்கிறது? என்கிற கேள்வி உங்களிடம் இருக்கிறதா? உணவுப்பொருளில் சேர்ப்பதற்கு அனுமதியில்லாத hexane என்கிற ரசாயனத்திலிருந்து செயற்கையாக உருவாக்குகிறார்கள். நம் உணவில் என்ன இருக்கிறது? என்பதை அறிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. நாம் நமது வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும். பதப்படுத்தப்படாத எண்ணெய்கள்களை நாம் பயன்படுத்த வேண்டும். நெய் மற்றும் உள்ளூரில் செக்கில் அரைத்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட பொருட்களைத் தவிர்த்து விட்டு இயற்கையாக விளையும் காய்கறிகளை சாப்பிடலாம்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உணவுக் கலப்படங்கள் மற்றும் இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு இப்போதுதான் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இன்னும் பல  படிகள் முன்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. மோசமான உணவுப்பழக்கத்தால் நோய்க்கு ஆளான பிற்பாடுதான் நானே இது குறித்து தேட ஆரம்பித்தேன். நோய்க்கும் நமது உணவுமுறைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர். பொதுவாக எல்லோரிடமும் உடல் மீது ஒரு அக்கறை இருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முன்னெடுப்புகள் இருக்கவேண்டும்’’ என்பவரிடம் உணவு நிறுவனங்களின் இம்மோசமான போக்கு பற்றி கேட்டதற்கு

‘‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருளை சத்தான பொருள் என்று கூறி விற்பனை செய்கிறார்கள். இது சத்தானது என்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று கேட்டால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உணவுப் பொருட்களை பதப்படுத்துவதற்காக சோடியம் பாஸ்பேட், நைட்ரேட், பி.ஹெச்.ஏ, பி.ஹெச்.டி போன்ற கொடிய வகை ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். உணவுத்தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (food and drug administrative) விதித்திருக்கிற அளவுக்கும் அதிகமான அளவில் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். பல்லாயிரம் கோடிகள் வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமேதான் கருத்தில் கொள்கின்றன. உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. 1958ம் ஆண்டு fda அங்கீகரித்த உணவுப் பொருட்களில் 800 விதமான கலப்படங்கள் இருப்பதாக அமெரிக்கன் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இன்றைக்கு அது 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இன்னும் அதிகமாக வளரும் சூழ்நிலைதான் இருக்கிறது. விவசாயம் மற்றும் உணவு தயாரிப்பில் மேற்கொள்ளப்படும் ரசாயனப் பயன்பாட்டுக்கு அரசு தடை விதிப்பது கிடையாது. இந்த விஷயத்தில் உலகிலேயே அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது’’ என்பவர் ஃபுட்பேப் என்றொரு நூலை எழுதியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பதிப்பகத்தின் பெஸ்ட் செல்லராக இருக்கும் அந்நூலில் 21 வகையான உணவுக் கலப்படங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

‘‘உணவு மற்றும் ரசாயன நிறுவனங்களின் சார்புடைய வல்லுநர்கள் என்னுடைய கருத்துகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், நுகர்வோர் செயல்பாட்டாளர்களைக் கொண்ட குழு என்னிடம் இருக்கிறது. எனது கட்டுரைகள் ஒவ்வொன்றையும் தீவிரமாக ஆலோசித்து, ஆதாரப்பூர்வமாகத்தான் முன் வைக்கிறேன். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நமது கைகளில்தான் இருக்கிறது. முதலில் நமது உடலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவைப் பெறுவது நமது உரிமை என்கிற விழிப்புணர்வு பரவலாக ஏற்பட வேண்டும். எழுத்து மற்றும் பேச்சின் வாயிலாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது பணி’’ என்கிறார் வாணி ஹரி.

- கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் தோழி


No comments:

Post a Comment