Saturday, July 2, 2016

காட்சி வன்முறை

சிகரெட்டை விட்டெறிந்து அதை லபக்கென வாயில் கவ்விப்பிடித்து புகைக்கும் ஸ்டைலுக்காகவே ரஜினிகாந்துக்கு பல ரசிகர்கள். தங்களது ஆதர்ச நாயகன் போலவே தாங்களும் ஸ்டைலாக புகைபிடிக்க வேண்டும் என்று பலரும் புகைப் பழக்கத்துக்கு ஆளாகினர். சமீபத்தில் நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்ததை நாம் அறிவோம். 90களின் இறுதியில் தூர்தர்ஷனில் வெளியான சக்திமான் தொடருக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. சக்திமான் போல பறக்க முயற்சித்தும், சக்திமான் தன்னைக் காப்பாற்றுவார் என்றெண்ணிக் குதித்தும் பல குழந்தைகள் இறந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெரும்பாலான கொலைகள் ஏதேனுமொரு திரைப்பட பாணியில் நிகழ்த்தப்படுவதாக நாம் தினசரிகளில் படிக்கிறோம். ஆக, திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்கள் தனிப்பட்ட மனிதனின் உளவியலை பாதிக்கிறதா?  புறவயத்தில் நிகழ்பவை அகவயத்தை பாதிக்காமல் இருக்க என்ன மாதிரியான புரிதல் தேவை? என்பவை இங்கு எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் இது குறித்து கேட்டபோது...

‘‘பிறந்த குழந்தை தன் பெற்றோர் மற்றும் சுற்றத்தாரைப் பார்த்துதான் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பேசவும் கற்றுக்கொள்கிறது. மற்றவரைப் பார்த்து தனது செயல்பாடுகள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிப்பதற்கு மூளையில் உள்ள mirror neurons எனும் நரம்புகள்தான் காரணம். பெற்றோர் இன்றி போதிய அரவணைப்பு இல்லாத சூழலில் வளரும் குழந்தைகளுக்கு உணர்வுகளைப் பிரதிபலிப்பதில் சிக்கல் ஏற்படும். யாரும் இங்கே எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. பிறந்த பிறகே மற்றவரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் இயற்கை. அப்படிக் கற்றுக்கொள்வதற்கு நல்லது கெட்டது வித்தியாசம் தெரியாது. ஒரு குழந்தை தனது தந்தையைப் பார்த்து பலவற்றைக் கற்றுக் கொள்கிறது. அதே தந்தை மது அருந்துகிறார், புகைபிடிக்கிறார் என்றால் அதனைப் பார்க்கும் குழந்தைக்கு அது இயல்பான நடவடிக்கையாக மாறிவிடும். ஒரு மனிதனுக்கு குழந்தை மற்றும் விடலைப் பருவம்தான் மிகவும் முக்கியமான பருவம். அந்தப் பருவத்தில்தான் ஒரு மனிதனின் நடத்தை மற்றும் குணநலன்கள் முடிவு செய்யப்படுகின்றன. எது சரி? எது தவறு? என்பதை அந்தப் பருவத்தில்தான் தீர்மானித்துக் கொள்கின்றனர்.

திரைப்படங்களில் புகை/மது காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகளை எதிர்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. சாதாரணமாக பொதுவெளியில் புகைபிடிக்கிறவருக்கும், திரைப்பட நடிகருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. திரைப்படங்களில் கதாநாயகன்தான் மைய பிம்பம். தங்களின் ஆதர்ச நாயகன் எதைச் செய்தாலும் தாங்களும் அதைச் செய்து பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் வரும். எம்.ஜி.ஆர் தனது படங்களில் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும், பிறருக்கு உதவி புரிபவராகவும் நடித்திருப்பார். அதை முன்மாதிரியாகக் கொண்டு அவரது ரசிகர்களும் அது போல வாழ்ந்தார்கள். அதன் பிறகான சினிமாவின் போக்கு முற்றிலுமாக மாறி வருகிறது. எந்த பிரச்னையாக இருந்தாலும் சண்டை போட வேண்டும் என்றாகியது. கொலை மற்றும் பாலியல் வன்முறைகள் சர்வ சாதாரண செயலாக திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டு வருகிறது. அதனைப் பார்கிறவர்களில் அடாவடியானவர்கள், பயந்த சுபாவம் கொண்டவர்கள் என இரு வகையினரும் இரு விதமாக பாதிக்கப்படுகின்றனர்.

அடாவடி குணம் கொண்டவர்கள் கொலை மற்றும் வன்முறைகளைத் திரும்பத்திரும்பப் பார்க்கும்போது desensitization எனும் உணர்ச்சியின்மைக்கு ஆளாகின்றனர். ரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழுபவர்களைப் பார்த்திருப்போம். அடிக்கடி ரத்தத்தை பார்க்கும்போது மயக்கமோ, பதைபதைப்போ எழாமல் இயல்பாகிப் போய்விடும். அது போல கொலை மற்றும் வன்முறைகள் இயல்பாகிப் போவதால் உணர்ச்சியின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒரு உயிர் கொலை செய்யப்படுவது குறித்து எந்த ஒரு வருத்தமோ, கரிசனமோ இல்லாமல் சர்வ சாதாரணமாகி விடும். சினிமா கட்டமைப்பது போலியான பிம்பம் என்பதை உணராமல் அவர்கள் அதை நிஜ வாழ்க்கையோடும் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நிஜ வாழ்க்கையில் நிகழும் ஒரு கொலையும் அவர்களை பாதிக்காது. அதற்கு அடுத்த கட்டமாக decreased empathy எனும் மனிதாபிமானத்தை இழந்து விடும் நிலைக்கு ஆளாவார்கள். ஆடு, கோழிகளைக் கொன்று சாப்பிடும்போது குற்ற உணர்ச்சியும், ஜீவ காருண்யமும் இல்லாது போவது போல், ஒரு உயிரைக் கொலை செய்வதும், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமாகி விடக் கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக சகிப்புத்தன்மை குறைந்து எந்தப் பிரச்னையையும் பேசித் தீர்க்க முயலாமல் எடுத்த உடனே வன்முறையில் ஈடுபடும் aggressive behavior எனும் நடத்தைக் கோளாறுக்கு ஆளாவார்கள்.

பயந்த சுபாவம் கொண்டவர்கள் மேற்சொன்னதற்கு நேர் எதிரான பிரச்னைக்கு ஆளாவார்கள். கொலை மற்றும் வன்முறைகளை பார்க்கும்போது, தன் மீதும் இது போன்ற வன்முறைகள் நிகழ்த்தப்படுமோ என்கிற பயத்துக்கு ஆளாவார்கள். உலகத்தையே அவர்கள் பயங்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டு விடும். இதனால் தனியாக சாலையில் நடமாடக் கூட யோசிப்பார்கள்.

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு வன்முறை நிறைந்த திரைப்படத்தையும், மற்றொரு குழுவுக்கு வன்முறை இல்லாத திரைப்படத்தையும் காட்டினர். பிறகு இரு குழுவினரையும் ஒன்றாக விளையாட விட்ட போது வன்முறைப் படத்தை பார்த்த மாணவர்கள் ஆக்ரோஷமாவதையும், பிறரை துன்புறுத்த முயல்வதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 1999ம் ஆண்டு அமெரிக்காவில் இரண்டு பதின்ம வயது மாணவர்கள் வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்தார். மேலும் 21 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இறுதியில் அவர்களை அவர்களே சுட்டுக்கொண்டு இறந்து விட்டனர். அந்த இரண்டு மாணவர்களின் வீட்டில் சோதனை நடத்திய போது அவர்கள் விளையாடிய வீடியோ கேம்ஸ் வன்முறையாக இருந்திருக்கிறது. pathological environment எனப்படும் ஆரோக்யமற்ற குடும்பம் மற்றும் புற சூழலில் வளர்ந்திருக்கின்றனர்.

2002ம் ஆண்டுக்கு முந்தைய 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் 37 பள்ளி கொலைகள் நடந்திருக்கின்றன. கொலை செய்தவர்களை நேர்காணல் புரிந்த போது வன்முறை படங்கள் மற்றும் புத்தகங்களே அவர்களது விருப்பத்திற்குரியதாக இருந்திருக்கிறது. அமெரிக்காவில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சராசிரியாக ஒரு மாணவன் வாரத்துக்கு 28 மணி நேரம் டிவி பார்க்கிறான். 18 வயதை அடைவதற்கு முன்பே 2 லட்சம் வன்முறை கலந்த காட்சிகளைப் பார்க்கிறான். 16 ஆயிரம் கொலைகளைப் பார்க்கிறான். ஒரு மணி நேரத்துக்கு ஒட்டுமொத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 812 வன்முறைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. கார்டூன் சேனல்களில் கூட ஒரு மணி நேரத்துக்கு 20 வன்முறை கலந்த காட்சிகள் காட்டப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

சிறு வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லி மாணவி ஜோதிசிங் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 17 வயது சிறுவனும் ஒருவன் என்பது எவ்வளவு அதிர்ச்சிகரமானது. சினிமா பாணியில் கொலை என்று பல செய்திகளை பார்க்கிறோம். எப்படி கொலை செய்தால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்பதை திரைப்படங்கள் கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். முன்பெல்லாம் பெரிய பிரச்னைக்காகத்தான் கொலை செய்வார்கள். இன்றைக்கோ கொலை மலிவாகி விட்டது. இந்த உணர்ச்சியின்மை மற்றும் மனிதநேயம் இல்லாமல் போகுதலுக்கு திரைப்படங்கள் முக்கியக் காரணியாக இருக்கின்றன. அதனுடன் பல புற சூழல்களும் இணைவதால்தான் வன்முறையாளர்கள் உருவாகுகிறார்கள். புற சூழல், குடும்ப சூழல் என எத்தனையோ காரணிகள் இருந்தாலும் திரைப்படம் என்பது பளிச்சென எல்லோரையும் சென்றடைவது. ஆக திரைப்படங்களில் நாம் வன்முறை மற்றும் புகை/மது காட்சிகள் இடம்பெறுவதை முடிந்தவரை தடுப்பது இச்சமூகத்துக்கு நல்லது.

புறச்சூழலில் மாற்றம் கோருவதோடு அகத்திலும் புரிதலை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இந்தப் புரிதலை பெற்றோர்கள்தான் தங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். திரைப்படமோ, தொலைக்காட்சியோ குழந்தைகளுடன் கூட்டாகச் சேர்ந்துதான் பார்க்க வேண்டும். வன்முறை மற்றும் ஆபாசங்கள் இடம்பெறும்போது சேனலை மாற்றாமல் அது குறித்த தெளிவை ஏற்படுத்த வேண்டும். சினிமாவோடு நிஜ வாழ்க்கையை தொடர்பு படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை விளக்க வேண்டும். குத்துச்சண்டை மற்றும் A சான்றிதழ் பெற்ற படங்களைப் பார்க்க குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சியில் மூழ்க விடாமல் அவர்களின் கவனத்தை விளையாட்டு, ஓவியம், இசை, வாசிப்பு என வேறு தளங்களில் திசை திருப்ப வேண்டும். இயல்பாக ஒரு பிரச்னை வரும்போது அதை எப்படி அணுக வேண்டும் என்பதை சொல்லித் தர வேண்டும். என்றைக்கும் வன்முறை ஒரு தீர்வாக இருக்காது என்பதை பதிய வைக்க வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறதா? என்பதை கூர்ந்து கவனித்து அதற்கு காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்து அதனை களைய வேண்டும்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

- கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர்

No comments:

Post a Comment