Saturday, July 2, 2016

‘லாக்கப்’ சந்திரகுமார் நேர்காணல்


சந்திரகுமார்

உலக அரங்கில் தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டும் என்கிற தமிழ்த் திரை ஆர்வலர்களின் நெடுநாள் கனவு ‘விசாரணை’ திரைப்படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. அதிகார மையம் தங்களது சுய நல நோக்கங்களுக்காக அப்பாவிகளை பலி கிடாவாக்குகிறது என்பதை எவ்வித வணிக சமரசங்களுமின்றி நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது விசாரணை திரைப்படம். இதற்காக வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம் என்கிற விருதைப் பெற்றது. கோவையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சந்திரகுமார் பொய்யான திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு காவல்துறையின் சித்ரவதைகளுக்கு ஆளானவர். அந்த அனுபவத்தையும் காவல் துறை மீதான கசப்பையும், கேள்விகளையும் எழுத்தாக வடித்த ‘லாக்கப்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டதுதான் விசாரணை திரைப்படம். சந்திரகுமாரை சந்தித்தோம்...

‘‘1983ம் ஆண்டு அப்போதைய ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் உள்ள கடையொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகாலையிலிருந்து இரவு வரைக்கும் கடையில்தான் வேலை. வேலை முடிந்த பின் குண்டூர் காந்தி பூங்காவில் நானும் உடன் பணிபுரியும் நண்பர்களும் தங்குவோம். இப்படியான சூழலில் திருட்டு வழக்கு ஒன்றில் குற்றவாளிகளைப் பிடித்து விட்டதாக கணக்குக் காட்டுவதற்காக எங்களைக் கைது செய்தனர். திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினர். கொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லாமல் சித்ரவதைப்படுத்தினர். எங்களுக்குத் தெலுங்கு தெரியாது என்பதால் எதற்காக நாங்கள் கைது செய்யப்பட்டோம் என்றே தெரியாமல் தவித்தோம். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைச் சொல்வதற்குக் கூட மொழி ஒரு தடையாக இருந்தது. இப்படியானதொரு மோசமான சூழலிருந்து மீண்டு வந்த பிற்பாடு நீதித்துறை மற்றும் காவல்துறை மீதான நன்னம்பிக்கை தகர்ந்து போனது.

அதிகார வர்க்கத்தின் முன்னால் மனித உரிமைகள் செல்லாக்காசுகளாகி விடுகின்றன என்பதை உணர்ந்த பிற்பாடு மனித உரிமை செயல்பாடுகளில் என்னை இணைத்துக் கொண்டேன். அமைப்பு சாரா தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக ஏஐடியூசி தொழிற்சங்கம் மூலம் போராட்டங்களில் ஈடுபட்டேன். தொழிற்சங்கப் பணிகளுக்காக காவல் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை வந்த போது, காவல் துறையின் நடவடிக்கைகளை கண்கூடப் பார்க்க முடிந்தது.  முதலாளிகளிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்டும், அவர்களின் பொதுப்புத்தியில் பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை.  ஏனென்றால் இதற்கு இந்தியத் தமிழ்ச்சாதி அமைப்புகள் கூட காரணம். இவற்றையெல்லாம் பார்த்தபோது எழுந்த கசப்பின் எதிரொலிதான் லாக்கப்’’ என்கிறார்.

எல்லா நாடுகளிலுமே காவல் துறை இப்படித்தான் இருக்கிறதா?

‘‘நிச்சயமாக இல்லை. சுவிட்சர்லாந்து, நார்வே, கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளிலெல்லாம் காவல்துறை சேவை மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களது கையிலிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டு விட்டது. ஒரு முழ நீளமுள்ள கைத்தடியை இடுப்பில்தான் செருகியிருக்க வேண்டும். பொதுமக்களை நோக்கி கைத்தடியை நீட்டக்கூடாது. எதிராளி துப்பாக்கி அல்லது கொலை ஆயுதங்களை  எடுத்தால் மட்டுமே காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்து பயன்படுத்த வேண்டும். கைகளால் கட்டிப்பிடிக்கக்கூடாது, நாடாவால் சுற்றித்தான் பிடிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  இவையெல்லாம் அம்மக்கள் மனித உரிமைகளுக்கா போராடிப்பெற்றவை. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் அதிகார மையத்துக்குள் பார்ப்பனியம் பாசிஸமாக உருவாகியிருப்பதுதான் முக்கியச் சிக்கலாக இருக்கிறது. பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களே காவல் துறையின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். இவர்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ள அதிகாரம் சாமானியர்களை பலி கிடாவாக்கி குற்றவாளிகளைத் தப்ப வைத்து விடும். செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்கு காவல்துறையினர் கையில் எடுக்கும் ஆயுதம் அடி உதைதான். ஒருவனை அடித்து உடலைச் சிதைப்பதன் மூலம் உள்ளமும் சிதைந்து போகும். இதனால் அவனது ஆன்மா தகர்ந்து போய் உயிர்வாழ்ந்தால் போதும் என்கிற இறுதி நிலைக்கு வந்து என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வான். இந்த உளவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

காவல் துறையின் இப்போக்குக்கு அடிப்படைக் காரணம் என்ன?

‘‘காவல்துறைக்கு அளிக்கப்படும் உட்சபட்ச அதிகாரம்தான். அடக்குமுறையை மறுக்கிற எதிர்க்கிற உரிமை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். இங்கு அவரவர்கள் அவரவர்களால் இயன்ற அளவுக்கு மற்றவர் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாதியக் கட்டமைப்பே ஒரு சமூகத்தின் மீது மற்றொரு சமூகம் அதிகாரம் செலுத்துவதாகத்தான் இருக்கிறது. இந்தப் படிநிலையில் அடித்தட்டு மக்கள் மீது பலதரப்பட்டவர்களும் தங்களது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். காவல்துறையினர் சீருடை அணிந்த அடியாட்களாகத்தான் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள காவல்துறை மூலம் ஆயுத பலத்தை பிரயோகிக்கிறார்கள். தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக நடந்த அறப்போராட்டத்தில், பொதுமக்களுக்கு எதிராக காவல்துறையினர் ஆயுதபலத்தை வைத்து மேற்கொண்ட மூர்க்கத்தனமான செயல்பாடுகளை நாமறிவோம். முதலில் அதிகாரத்தை நாம் தகர்த்தெறிய வேண்டும். எவர் மீதும் அதிகாரம் செலுத்த எவருக்கும் உரிமை இல்லை. போராட்டங்கள் வாயிலாகத்தான் அதிகாரத்துக்கு எதிரான குரலை எழுப்ப முடியும். அதிகாரத்துக்கு எதிரான மனித சுதந்திரத்துக்கான பார்வையைத்தான் லாக்கப் நாவலில் முன் வைத்தேன். எழுத்தாய் பதியப்பட்ட உடல் வலியை காட்சியாக கண் முன்னே விரித்திருக்கிறதுவிசாரணை’.

வெற்றிமாறன் உங்களை எப்படி அணுகினார்?

‘‘வெற்றிமாறனிடம் உதவியாளராய் பணியாற்றும் ஞாநி என்கிற தங்கவேலன் எனது நண்பர். அவர் வெற்றிமாறனுக்குலாக்கப்நாவலைக் கொடுத்திருக்கிறார். படித்து முடித்த வெற்றிமாறன் தங்கவேலனிடம் ‘’படிக்கத்துவங்கி இரண்டு மூன்று பக்கங்களிலேயே என்னுள் அது காட்சியாய் விரிய ஆரம்பித்து விட்டது. நாவலைப் படிக்கும்போதே திரைக்கதை எழுதத் துவங்கி விட்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார். இரவு படித்தவர் அடுத்த நாள் காலை படமாக்கத் திட்டமிட்டு, தயாரிப்பாளர் துவங்கி நடிகர்கள் வரை எல்லோரையும் முடிவு செய்து விட்டார்.  இதுபற்றி என்னிடம் பேசுவதற்காக என்னை அழைத்தார். நான் ’’எனது பெயரைப் போடுவீர்களா?’’ என்று கேட்டேன். ‘‘இப்படியொரு பதிவைக் கொடுத்த உங்களை ஒரு கோடிப் பேரிடம் எடுத்துச் செல்வேன்’’ எனச் சொன்னார். குண்டூரில் நான் தங்கியிருந்த காந்தி பூங்கா, நான் சாப்பிட்ட உணவகம் என நிஜ சம்பவம் நடந்த பல இடங்களில் படப்பிடிபு மேற்கொண்டனர். நானும் அதில் பங்கு கொண்டேன்.

வெனிஸ் திரைப்பட விழாவுக்குச் சென்ற அனுபவம் எப்படி இருந்தது?

தமிழ் சினிமா உதயமாகி இந்த 97 ஆண்டுகளில் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வாங்கிய முதல் திரைப்படம் விசாரணைதான். 2000 திரைப்படங்களிலிருந்து சிறந்த 20 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்விசாரணைபடமும் ஒன்று. விருது வழங்கும் விழாவுக்கு யாரெல்லாம் செல்வது என்கிற பட்டியலில் எனது பெயரையும் வெற்றிமாறன் சேர்த்திருந்தார்.  கதாசிரியனான எனக்கு இப்படியொரு அங்கீகாரம் அதுவரையிலும் கிடைதத்ததில்லை. ‘‘சிறையில் சித்ரவதைகளுக்கு ஆளான போது அந்த அவலக் குரல் வெளியே கேட்காதா? என்று நினைத்திருப்பீர்கள். அந்தக் குரலை உலகம் முழுக்கவும் எதிரொலிக்க வைக்கிறேன்’’ என்றார் வெற்றிமாறன். வெனிஸ் நகரில் 700 பேர் இருந்த திரையரங்கில்விசாரணைதிரைப்படம்  திரையிடப்பட்டிருந்தது. படக்குழுவினர் எல்லோரும் தமிழ் பாரம்பர்ய உடையான வேட்டி சட்டை அணிந்து சென்றிருந்தோம். அதற்காகவே நிறைய கைத்தட்டுகள் கிடைத்தது. படம் முடிந்ததும் பார்த்த எல்லோரும் எழுந்து நின்று 8 நிமிடங்கள் கைத்தட்டினர். என்ன சொல்வதென்றே எங்களுக்குத் தெரியாமல் எல்லோருக்கும் அழுகையே வந்து விட்டது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களும் நேரில் வந்து என் கைகளைப் பற்றி கண்ணீர் வடித்தனர். ‘‘இப்படியொரு சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுக்காததற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்’’ என்றனர். ‘விசாரணைபடத்தின் இந்த வெற்றி தமிழ் சினிமாவின் வெற்றி. இதைச் சாதித்த வெற்றிமாறனுக்கே எல்லாப் பெருமையும் சேரும்.

விசாரணைதிரைப்படம் பார்க்கும்போது நீங்கள் அனுபவித்த சித்ரவதைகளையும், வலிகளையும் உணர்ந்தீர்களா?

‘‘தினேஷ்தான் நாயகன் என்றதும் நான் மகிழச்சிக்குள்ளானேன். காரணம்அட்டக்கத்தி’ ‘குக்கூபடங்களில் தினேஷின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். திறமையான நடிகர் அவர். அது மட்டுமல்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன் நான் எப்படி இருந்தேனோ அது போலவே தினேஷ் இருக்கிறார். தினேஷின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. நான் அனுபவித்த வலியை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கடத்தியதுதான் விசாரணை படத்தின் வெற்றி. வெற்றிமாறன் என் கதையை செழுமைப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்வேன். நாவலில் நான் கையாண்ட நுட்பமான சித்தரிப்புகளையும் காட்சிகளாக வைத்திருந்தார்.   

சமூகத்தில் இப்படம் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்தும்?

நிச்சயமாக மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். தேக்கமடைந்திருக்கும் மனநிலையைத் தகர்ப்பது கலையின் கடமை. சித்ரவதைகள் மூலம் உடலைச்சிதைக்கலாம் ஆனால் ஒரு  மனிதனின் ஆன்மாவை சிதைக்க முடியாது என்பதை ஒரு காட்சி தெளிவாக விளக்குகிறது. மரணத்தின் தருவாயில் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி ‘‘நான் வாழ்றதுக்காக உங்களைக் கொல்லணுமா’’ என்றொரு கேள்வியை தினேஷ் கேட்பார். இது ஒட்டுமொத்த மனித இனத்துக்கான கேள்வி. தான் வாழ்வதற்காக பிறரைக் கொல்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை ஒரு சாமானியனின் பார்வையில் அக்காட்சி விளக்குகிறது. கலையும் சமூக மாற்றத்துக்கான கருவிதான். 

- கி..திலீபன், நன்றி: குங்குமம்

No comments:

Post a Comment