Saturday, July 2, 2016

சங்கீதா ஸ்ரீராம் - நேர்காணல்சங்கீதா ஸ்ரீராம்
 ‘‘பசுமைப்புரட்சி என்பது நேரு அரசின் மகத்தான செயல்பாடுகளில் ஒன்று. அது மட்டும் நடந்திருக்காவிட்டால் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் போல் இந்தியாவே உணவின்றி தத்தளித்திருக்கும்.  நவீன விவசாயத்தினால்தான் இந்தியாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது என்று பசுமைப்புரட்சி இந்தியாவின் மாபெரும் சமூக மாற்றமாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  நவீன வேளாண்மை மட்டும் தக்க சமயத்தில் கை கொடுக்காமலிருந்தால் நம் தலைமுறை என்னவாகியிருக்கும்? என்கிற கேள்வியும் நம்மில் பலருக்கு இருக்கிறது. பசுமைப்புரட்சி என்பது இந்திய விவசாயத்தில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சீர்திருத்தம் என்பது ஓர் கற்பிதம். இந்த கற்பிதத்தை உடைத்து உண்மையை அறிய வேண்டுமெனில் பசுமைப்புரட்சியின் வரலாற்றையும் அதனூடே இணைந்திருக்கும் அரசியலையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று துவங்கியது சங்கீதா ஸ்ரீராமின் தேடல். பரந்துபட்ட அந்த தேடலுக்குப் பின்னர் பசுமைப்புரட்சியின் வரலாற்றை மிக நுட்பமான பார்வையோடு பசுமைப்புரட்சியின் கதை' என்கிற நூலாக எழுதியிருக்கிறார். பசுமைப்புரட்சி என்பது விவசாய சீர்திருத்தம் அல்ல, சீரழிவு என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறது இந்நூல்.  இயற்கை விவசாய செயல்பாடுகள் ஒரு புறமென்றால் மாற்றுக் கல்வி மற்றும் மாற்று சமுதாயத்துக்கான செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருபவரைச் சந்தித்தோம்...
‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். என் கல்லூரிக்காலம் வரையிலும் கூட சென்னயைத் தாண்டி கிராமப் புறங்களைப் பார்த்தேயிராத அளவுக்கு இந்தப் பெருநகர வாழ்க்கைக்கு மட்டுமே பரிச்சயப்பட்டிருந்தேன்.  எனக்குள் எழும் கேள்விகளே என் செயல்பாடுகளுக்கான ஆதாரமாக இருக்கின்றன. நான் தனியார் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன், தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றான். இத்தகவல் எனக்குள் கனத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலைக்குத் துணியும் அளவுக்கு மதிப்பெண் நிறைய வாங்க வேண்டும் என்று அவனுக்கு எவ்வளவு அழுத்தம் தரப்பட்டிருக்கும்? என்கிற கேள்வி எழுந்தது. மதிப்பெண்களை மட்டுமே முதன்மைத்துவப்படுத்தும் இந்த கல்விமுறை முறை எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. பத்தாம் வகுப்பில் நான் பள்ளியில் இரண்டாவது இடம் பெற்றிருந்தும், பதினோராம் வகுப்பில் வொக்கேஷனல் துறையில் தையல் மற்றும் ஆடை வடிவமைப்பைத் தேர்வு செய்தேன். பொதுவாக அதிக மதிப்பெண் பெறுகிறவர்கள் அறிவியல் துறையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு வொக்கேஷனல் துறைதான் ஒரே வழி. எனது ஆசிரியர்கள் யாருமே எனது முடிவை ஆதரிக்கவில்லை.  எனக்கு பிடித்த கல்வியைக் கற்பதில் நான் உறுதியாக இருந்து தையல் கலை கற்றேன்" என்கிறார்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நுண்கலை தேர்ந்தெடுத்துப் படித்திருக்கிறார். கல்லூரியில் இயங்கி வந்த நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்து செயலாற்றிய போது இவருக்குள் பல திறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
‘‘நாட்டு நலப்பணித் திட்டக் களப்பணிக்காக செங்கல்பட்டுக்கு அருகே உள்ள கிராமத்துக்குச் சென்றோம். பெருநகர சூழலில் வளர்ந்த எனக்கு உண்மையாக ஒரு கிராமம் எப்படி இருக்கும் என்பது தெரியாததால் அது ஒரு புது அனுபவமாக இருந்தது. கிராமத்து வாழ்க்கை, விவசாயம், அம்மக்களின் பொருளாதார சூழல் என பலவற்றையும் நேரடியாகப் பார்க்க முடிந்தது. மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது கல்லூரியில் டிஸ்போசபிள் பிளாஸ்டிக் கப்புகள் அறிமுகமாயின.  இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஒரு பேராசிரியரின் தலைமையில் ஈடுபட்டோம். இப்படியாகத் துவங்கிய சின்னச் சின்ன செயல்பாடுகளின் தொடர்ச்சியாக கல்லூரிப் படிப்பை முடித்தபின் எக்ஸ்னோரா அமைப்பில் இணைந்தேன். திடக்கழிவு மேலாண்மை, கூவத்தை தூய்மையாக்குதல், பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி போன்ற முனைப்புகளில் நான்கு ஆண்டுகள் ஈடுபட்டேன்.
அப்போதுதான் ஒட்டுமொத்த மக்களும் பெரு நகரம் என ஒரே புள்ளியில் குவிவது ஏன்? என்கிற கேள்வி எழும்பி, அதன் விளைவாக இவரது பார்வை கிராமங்களை நோக்கித் திரும்பியது.
‘‘சுற்றுச்சூழல் துறையில் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றேன். அது ஒரு புது அனுபவமாக இருந்து நிறைய விஷயங்களை எனக்கு கற்பித்தாலும், நான் தேடிய கேள்விகளுக்கு விடைகளை அளிக்கவில்லை. அதனால், ஒரு ஆறு மாதகாலம் இந்தியா முழுவதும் கிராமப்புற மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களுக்கும் பயணம் செய்தேன். அப்போது நவீன வேளாண்மை ஏற்படுத்திய மோசமான விளைவுகளை கண்கூட பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  பின்னர், பல இயற்கை விவசாயப் பண்ணைகளையும் சென்று பார்வையிட்டேன். ரசாயனங்களைத் தவிர்த்து மகசூல் பெற முடியாது என்கிற கருத்தைப் பொய்யாக்கும்படி நன்கு விளைந்திருந்தன. இச்சூழலில்தான் நம்மாழ்வார் அய்யா பற்றி கேள்விப்பட்டேன். அப்போதுதான் அவர் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி முகாம்கள் மூலம் பஞ்சகவ்யத்தை அறிமுகப்படுத்திகொண்டிருந்தார். 2000ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் நடந்த முகாமில்தான் அவரைச் சந்தித்தேன். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு ஏற்பட்டது அவரிடமிருந்துதான். அவருடனேயே பல இடங்களுக்குப் பயணித்தேன். பசுமைப்புரட்சி ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி பேச்சுவாக்கில் ஒவ்வொன்றாகச் சொல்வார். இயற்கை விவசாயத்தை முற்றிலுமாக மறுத்து நவீன வேளாண்மையையும், பசுமைப்புரட்சியையும் ஆதரிப்பவர்கள் ஒரு புறமென்றால், இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்கள் கூட அன்றைய சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும்போது பசுமைப்புரட்சி காலத்தின் கட்டாயம் எனும் கருத்தைக் கொண்டிருக்கின்றனர். நம்மிடம் வரலாற்றுத் தெளிவு இல்லாததால்தான் பெருவாரியானவர்கள் பசுமைப் புரட்சியை ஏற்றுக்கொள்கின்றனர். அந்த தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கோடு காலச்சுவடு இதழில் பசுமைப்புரட்சியின் கதை எனும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினேன். அதுவே பின்னர் ஒரு புத்தகமாக வெளிவந்தது.
பசுமைப்புரட்சியை ஆதரிப்பவர்கள் முன் வைக்கும் முக்கியக்காரணம் 1943ம் ஆண்டு ஏற்பட்ட வங்கப்பஞ்சம். முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரை பேரை பலிகொண்ட அப்பஞ்சம் போல் இந்தியா முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பசுமைப்புரட்சி என்கிற கருத்து பலரிடமும் இருக்கிறது. வங்கபஞ்சம் ஏன் ஏற்பட்டது? என்பதை இவர் தன் நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார். இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் ஜப்பானியர்களிடம் பர்மாவை இழந்த போது பர்மாவிலிருந்து கிடைத்துக்கொண்டிருந்த நெல் வரவு நின்று போனது. ஜப்பானியர்கள் வங்காளத்தையும் கைப்பற்றி விடுவார்கள் என்கிற பயத்தில் ஆங்கிலேய ராணுவத்தினருக்காக வங்காளத்தில் உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டன. 1942ம் ஆண்டு வங்கத்ததைத் தாக்கிய புயல் இளம்பயிர்களை அழித்தது. ஆங்கிலேயர்கள் மூட்டை மூட்டையாக இங்கிருந்து பயிர்களை ஏற்றுமதி செய்தனர். இதன் காரணமாக சாமானிய மக்கள் உணவு கிடைக்காமல் இறந்தனர். வங்கப்பஞ்சத்துக்குக் காரணம் உணவு விநியோகச் சிக்கலும் அதன் பின்னாள் இருந்த அரசியலும்தானே தவிர உணவு உற்பத்தியில் பிரச்னை இருக்கவில்லை எனவும் பசுமைப்புரட்சி இலாபநோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை பலியிட்ட ஒரு வரலாற்றுச் சோகம் என்பதையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

 அந்த சமயத்தில்தான் தர்மபுரி, அனந்தபூர் (ஆந்திரா) மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்றேன்.  முன்பெல்லாம் சிறுதானியங்களை விதைத்து அதிலேயே தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்தவர்கள் முற்றிலுமாகப் பணப்பயிருக்கு மாறியிருந்தார்கள்.  அதன் விளைவாக, சிறுதானிய உணவுப்பழக்கங்களை விட்டொழித்திருந்தனர். இதனால் நோய் என்பதையே அறிந்திராத இவர்கள் பல நோய்களுக்கும் ஆளாகினர். பணப்பயிர் உற்பத்தியின் காரணமாக அவர்கள் தங்களது வாழ்க்கை முறையையே இழந்திருந்தனர். மீண்டும் சிறுதானியங்களை ப் பயிர்செய்து, தங்களுக்குத் தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டபின் மீதமிருக்கும் உற்பத்தியை நகரங்களில் விற்பனை செய்துகொடுப்பதாக அவர்களிடம் கூறினோம். அதன் பிறகு 2008ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து சிறுதானியங்கள் மற்றும் இயற்கை விளைபொருட்களை சென்னையில் விற்பனை செய்யத் தொடங்கினோம். ரிஸ்டோர் எனும் லாப நோக்கற்ற நிறுவனத்தின் மூலம்.
உற்பத்தியாளர்-விற்பனையாளர்- நுகர்வோர் இடையிலான நல் உறவுதான் ஆகச்சிறந்த பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் என்றார் காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா. வணிகம் என்பது மனித உறவின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் எங்களது ரிஸ்டோரில் முன்னெடுத்தோம். அது ஒரு இயற்கை விளைபொருள் அங்காடி என்பதைத் தாண்டி ஓர் இயக்கமாகவே செயல்பட்டோம். எங்களது ரிஸ்டோரில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்று சான்றிதழ் பெற்ற விளைபொருட்களை விற்பதில்லை எனத் தீர்மானித்தோம். சான்றிதழ் அளிக்கப்பட்டதை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்கிற தவறான போக்கை நாங்கள் ஆதரிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு விளைபொருளும் எங்கு விளைவிக்கப்பட்டது, விளைவித்த விவசாயி யார் என நுகர்வோர் தெரிந்து கொள்ள விரும்பினால் தகவல் மற்றும் தொடர்புகளைக் கொடுக்கிறோம். நுகர்வோர் தான் நுகரும் விளைபொருளை விளைவித்த விவசாயியை அறிந்து கொள்வது என்பது ஆரோக்கியமான வணிகம் மட்டுமல்ல நல்ல சமுதாயக் கட்டமைப்பாகவும் இருக்கும். ஆனால் நவீன பொருளாதாரம் இவற்றைச் செய்வதில்லை. மாறாக உற்பத்தியாளர் - விற்பனையாளர் - நுகர்வோர் இடையே சந்தேகத்தையும், போட்டியுனர்வையும், பிரிவையுமே உண்டாக்குகின்றன. நவீன பொருளாதாரக் கொள்கையைக்  கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அந்தக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும்’’ என்றார்.
‘‘பெருநகரங்களில் மனநிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறவர்கள், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய பலரையும் ஒருங்கிணைத்து 2013ம் ஆண்டு நிலத்துக்கு திரும்புவோம்" (Back to the Land) எனும் அமைப்பைத் துவங்கினோம். ஆண்டுக்கு ஒருமுறை நாங்கள் ஒன்று கூடி எங்களது வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் பற்றி பகிர்ந்து கொள்வோம். எல்லோரையும் ஒரு குடும்பமாக ஒன்றிணைக்கும் முயற்சிதான் இது’’ என்பவருக்கு இன்றைய கல்வி முறை மீதும் பெரும் விமர்சனங்கள் இருக்கின்றது.
‘‘கல்வி என்பது கற்பிக்கப்படுவதாய் ல்லாமல் வாழ்க்கையினூடே கற்றுக்கொள்வதாய் இருக்க வேண்டும். மனப்பாடக்கல்வியால் எந்த வித பயனுமில்லை. வாழ்க்கைக்கானதாகவும், சுய சிந்தனையை விதைப்பதாகவும் நமது கல்வி முறை மாற வேண்டும்’’ என்பவர் மாற்று சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு ஆஷிஷ் கோத்தாரி என்பவர் துவங்கிய விகல்ப் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். ‘‘ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைய வேண்டும். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல்தான் சமூகம். எனவே ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து பேசி அவரவர்களது துறையில் அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டியவை பற்றிய தெளிவுக்கு வர வேண்டும். சமுதாய மாற்றம் எனும் ஒரு புள்ளியில் எல்லோரும் இணையும்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்’’ என்கிறார்.
கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். 'உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிலிருந்தே தொடங்கட்டும்!' என்ற காந்தியின் வாக்கு,  ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கான  முக்கியமான தொடக்கப் புள்ளியாகக் கருதுகிறேன்.  "என்னிலிருந்து அஹிம்சை முறையில் மாற்றம் தொடங்கவேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும்? எனும் தேடலில் நாங்கள் சில நண்பர்கள் ரிதம்பரா எனும் அமைப்பின் மூலம் இணைந்துள்ளோம். நான் தற்போது வசிக்கும் திருவண்ணாமலையில்  இதைத் தழுவிய பல நிகழ்வுகளையும் பட்டறைகளையும் நிகழ்த்தி வருகிறோம்.
- கி..திலீபன், படம்: திவாகர், நன்றி: குங்குமம் தோழி

1 comment: