Saturday, July 2, 2016

ஆண் இயக்குனர்களால்தான் வெற்றியைக் கொடுக்க முடியுமா? இயக்குனர் சுதா கொங்கரா
விளையாட்டை மையப்படுத்தி தமிழில் சில திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை விளையாட்டுக்குள் இருக்கும் அரசியல், காதல், துரோகம் ஆகியவற்றைப் பிரதானப்படுத்துபவையாகவே உள்ளன. குத்துச்சண்டையை கதைக்களமாகக் கொண்டு அக்களத்தை ஆழமாக சித்தரித்த விதத்தில் ‘இறுதிச்சுற்று’ படத்தை தமிழின் முதல் முழுமையான ‘ஸ்போர்ட்ஸ் மூவி’ எனலாம். பெரிய ஓப்பனிங் எதுவும் இல்லாமல் சாதாரணமாக வெளியான இத்திரைப்படம், இரண்டே நாட்களில் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆனது. அப்படத்தில் வட சென்னையைச் சேர்ந்த ஏழை மீனவப்பெண் சர்வதேச பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் வென்று சாம்பியன் ஆகிறாள். படத்தின் கதையை அதன் இயக்குனர் சுதா கொங்கராவுடனும் நாம் பொருத்திப் பார்க்கலாம். தமிழில் சில பெண் இயக்குனர்கள் இருந்தாலும் மலையாளத்தில் அஞ்சலி மேனன், இந்தியில் ஃபாரா கான், மீரா நாயர் போல் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இதுவரையிலும் பெரிய வெற்றியை யாரும் கொடுத்ததில்லை. அப்படியாக ‘இறுதிச்சுற்று’ படத்தின் வெற்றி சுதா கொங்கராவின் வெற்றி மட்டுமல்ல. இயக்குனர் துறையில் பெண்களின் பங்களிப்புக்கான உந்துதலும் கூட. சுதா கொங்கராவைச் சந்தித்தோம்...

ஆந்திர நெடி அடிக்கும் பெயராக உள்ளதே என்றதற்கு ‘‘என் சொந்த ஊர் விஜயவாடா பக்கம். பிறந்து மூன்று வயதுக்கு அப்புறம் சென்னைக்கு குடிவந்துட்டோம். அடையாறு சிஷ்யா பள்ளியிலும், உமென்ஸ் கிறிஸ்டியன் காலேஜ்லயும்தான் படிச்சேன். பூர்விகம் ஆந்திராவா இருந்தாலும் நான் பக்கா சென்னைவாசி’’ என்றவர் தனது திரைத்துறைப் பிரவேசம் குறித்துப் பேசுகிறார்.

‘‘மணிரத்னம் சாரோட ‘பகல் நிலவு’ ‘மௌனராகம்’ படங்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த மாதிரி படம் எடுக்கனும்னு ஆசைப்பட்டுத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். 2002ம் ஆண்டு ரேவதி இயக்கிய ‘மித்தர் மை ஃப்ரண்ட்’ங்கிற தேசிய விருது பெற்ற ஆங்கிலப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினேன். படம் பார்த்துட்டு மணிரத்னம் சார் நல்லாருக்குனு பாராட்டினார். அவர்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டராகனும்னு வாய்ப்பு கேட்டேன். ‘‘நீ நல்லா எழுதுற எதுக்காக அசிஸ்டெண்டா வேலை செய்யனும்னு ஆசைப்படுற? நீயே படம் பண்ணலாமே’’ன்னு சொன்னார். இருந்தாலும் எனக்கு அப்போதைக்கு படம் பண்ண முடியும்ங்கிற நம்பிக்கை வரலைன்னு சொன்னேன். கன்னத்தில் முத்தமிட்டாள் படம் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ல இருந்தப்ப நான் அவர்கிட்ட உதவி இயக்குநராக சேர்ந்தேன். ‘யுவா’ ‘ஆயுத எழுத்து’ ‘குரு’ன்னு ஆறரை ஆண்டுகள் அவர்கிட்ட அசிஸ்டெண்டா இருந்தேன்’’ என்கிறார்.

சுதா கொங்கராவின் முதல் படம் ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘துரோகி’. அப்படம் தோல்வியடைந்தது. அந்தத் தோல்விக்குப் பிற்பாடுதான் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார். அந்தத் தோல்வியை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? என்றோம்.

‘‘துரோகி படம் தோல்வியடைஞ்சதால பெரிய வருத்தமோ, இறுதிச்சுற்று வெற்றியடைஞ்சதால பெரிய சந்தோஷமோ படவில்லை. ஏன்னா எல்லாமே கடந்து போகிற மேகங்கள்தான். இறுதிச்சுற்று படத்தை விட துரோகி படத்துக்குத்தான் அதிகம் உழைச்சேன். துரோகியோட களம் ரொம்ப ரிஸ்கான களம். அதைப் புரிஞ்சுக்கிறதுக்காக நான் பல மாதம் ராயபுரத்துலயே வாழ்ந்தேன். அப்படியான உழைப்புக்கு அப்புறம் உருவான படம் தோல்வியடைஞ்சுது. அந்தத் தோல்வியை ஏத்துக்கத்தான் வேணும். தோல்வியையே நினைச்சுக்கிட்டிருந்தம்னா அடுத்த வெற்றியை நம்மால கொடுக்கவே முடியாது’’ என்கிறார்.

விளையாட்டை மையப்படுத்திய கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் இருந்த காரணம் எது? பள்ளி, கல்லூரி காலங்களில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்ட விளையாட்டு எது? என்றோம்.

‘‘விளையாட்டுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை. நான் எதுவும் விளையாட மாட்டேன். கிரிகெட் பிடிக்கும். டென்னிஸ் அதை விடப் பிடிக்கும். ஸ்போர்ட்ஸ் சினிமாக்களை விரும்பிப் பார்ப்பேன். 15 வருடங்களுக்கு முன்பே ‘இறுதிச்சுற்று’ படத்தின் கதை எனக்குள்ள இருந்தது. பாக்ஸிங்குக்கு பதிலாக தடகள வீராங்கனையோட கதையா அதை நான் முடிவு பண்ணியிருந்தேன். இப்படியான சூழலில்தான் 2008ம் ஆண்டு ஒரு ஆங்கில தினசரியில் ராயபுரத்தில் ஸ்போர்ஸ் கோட்டாவில் அரசு வேலை வாங்குவதற்காக தங்களது பெண் பிள்ளைகளை பாக்ஸிங்குக்கு அனுப்பி வைக்கிறாங்கங்கிற செய்தியைப் படிச்சேன். அந்த செய்திதான் பாக்ஸிங்கை மையப்படுத்தக் காரணமா இருந்தது. பாக்ஸிங் ஒரு புதுமையான களமா இருக்கும். அது மட்டுமில்லாம துரோகி படம் பண்ணும்போது வடசென்னையை நான் முழுமையா உள்வாங்கியிருந்தேன். அவங்க ட்ரெஸ், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் கவனிச்சிருக்கேன். அவங்க பேசுற வட சென்னைத் தமிழில் நானும் பேசக் கத்துக்கிட்டேன். வட சென்னையை கதைக்களமா வெச்சு பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்.

ஒரு விளையாட்டை மையப்படுத்தி கதை பண்ணும்போது அந்த விளையாட்டைப் பத்தின முழுமையான தகவலும் அதில் பதிவு பண்ணனும். பாக்ஸிங்கைப் பத்தி முழுமையாத் தெரிஞ்சுக்கிறதுக்காக நிறைய படிச்சேன். பழைய பாக்ஸிங் க்ளிப்பிங்குகளெல்லாம் போட்டுப்பார்த்தேன். ஹிசார் மற்றும் டெல்லி சென்று பல பாக்ஸிங் கோச்களை சந்திச்சு பேசினேன். எல்லோரும் அவங்களோட கதையைச் சொன்னாங்க. அப்படியாகக் கேட்ட சில உண்மைக்கதைகளையும் படத்தின் காட்சியாக வைத்தேன்’’ என்கிறார்.

இறுதிச்சுற்றின் நாயகி ரித்திகா சிங் நிஜத்திலும் கிக் பாக்ஸர் என்றாலும் மும்பையில் நவீன வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவரை வட சென்னை மீனவப் பெண்ணாக நடிக்க வைக்க என்ன மாதிரியான பயிற்சிகள் கொடுத்தீர்கள்? என்றோம்.

‘‘2012ம் ஆண்டு ரித்திகாவைப் பார்த்தப்பவே அந்தப் பொண்ணுதான் என் படத்தோட கதாநாயகினு முடிவு பண்ணிட்டேன். படத்துடைய வசனங்களை வட சென்னை மீனவப் பெண்களை பேச வெச்சு அதை ரெக்கார்டு பண்ணி அந்தப் பொண்ணுக்குக் கொடுத்தேன். தனுஷ் படப்பாடல்களைக் கேட்கச்சொன்னேன். அந்தப் பொண்ணு அந்த ரெக்கார்டைக் கேட்டே வட சென்னைத் தமிழையும் அதன் தொணியையும் கத்துக்கிட்டா. ஒரு மீனவப் பெண்ணுக்கான பாடிலாங்குவேஜை கூத்துப்பட்டறை கலைஞர்கள் மூலம் கற்றுக்கொடுத்தோம். அந்தப் பொண்ணோட கண்ணுல உணர்ச்சிகள் சரியா வராம இருந்தது. கூத்துப்பட்டறை கலைவாணி மேடம் மூலமா அதுக்கும் பயிற்சி கொடுத்து நடிகையாகவும் அந்தப் பொண்ணு தேறிய பிறகுதான் நடிக்க வெச்சோம். மாதவனும் தன்னோட கதாப்பாத்திரத்துக்காக 2 ஆண்டுகள் உழைத்தார். பாக்ஸிங் கோச் மாதிரி தெரியுறதுக்காக கடுமையான உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்குள் கொண்டு வந்தார். அவர்தான் இந்தப்படம் இந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறும்னு சொன்னார். ராஜ்குமார் ஹிரானிகிட்ட இந்த ஸ்க்ரிப்டை எடுத்துப் போனதும் அவர்தான்’’ என்கிறார்.

படம் எடுக்கும்போதே இப்படத்துக்கு ஏ செண்டர் துவங்கி சி சென்டர் வரை அனைத்து தரப்பட்ட பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததா? என்றதற்கு ‘‘மணிரத்னம் சார்கிட்ட அசிஸ்டெண்டா இருந்த காலத்துல இருந்தே நடிகர் கார்த்தி எனக்குப் பழக்கம். கார்த்தி எனக்கு தம்பி மாதிரி. நான் என்ன ஸ்கிரிப்ட் பண்ணாலும் அவர்கிட்டதான் கொடுத்து கருத்துக் கேட்பேன். இறுதிச்சுற்று ஸ்கிரிப்டை படிச்சவர் இந்த கதையில நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க. எனக்கு இந்த ஸ்க்ரிப்ட் ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னார். ஸ்க்ரிப்ட் மேல எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தாலும் இது ஒரு மல்டிப்ளக்ஸ் சினிமான்னுதான் ப்ரொடியூசர் உட்பட எல்லோரும் நினைச்சாங்க. எல்லாத் தரப்பு மக்களையும் இந்தப் படம் கவரும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏன்னா இது எல்லோருடைய வாழ்க்கையும்தான். கதைக்காக எடுத்துக்கிட்ட விளையாட்டு பாக்ஸிங்கா இருக்கலாம் ஆனா இந்தக் கதையை எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்க முடியும். ஏன்னா எல்லோருமே அவங்கவங்களுக்கான துறையில சாதிக்கனும்னு போராடிகிட்டுத்தான் இருக்காங்க. என் நம்பிக்கை வீண் போகலை’’ என்கிறார்.

சுதா பயின்ற சிஷ்யா பள்ளியில் ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தி இரண்டாவது மொழியாகவும், சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாகவும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அவரது குடும்பமும் ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டதால் தெலுங்கே பிரதான மொழியாக இருந்திருக்கிறது. இப்படியான சூழலில் தானே முயன்று தினசரிகளை எழுத்துக்கூட்டி வாசித்து தமிழ் பயின்றதாகக் கூறுகிறார். ‘‘நான் பெரும்பாலும் வாசிக்கிறது ஆங்கில நூல்கள்தான். தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படிச்சிருக்கேன். புதுமைப்பித்தனுடைய ‘செல்லம்மாள்’ எனக்கு ரொம்பவும் பிடிச்ச கதை. ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமின்னு குறிப்பிட்ட அளவுக்குதான் தமிழ் நூல்களை வாசிச்சிருக்கேன். தமிழில் நல்லா எழுதுறவங்களைப் பார்த்தாலே பொறாமையா இருக்கும். ஆங்கில எழுத்தாளர்களில் ஷேக்ஸ்பியர் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர். கிரண் நகர்கர், கலீத் ஹுசைனியும் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள்’’ என்கிறார்.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பெண் இயக்குனர்களுக்கான இடம் வெற்றிடமாகவே இருக்கிறதே? என்றோம்.

‘‘லட்சத்தில் ஒரு பெண் கூட திரைப்பட இயக்குநராக முன் வராததே இதற்குக் காரணம். ஆண்களைப் போலவே பெண்களும் திரைப்படைப்பாளியாக முன் வந்தால் நிச்சயம் பல வெற்றிகளைக் கொடுப்பார்கள். அதனால் ஆண் இயக்குநர்களால்தான் வெற்றியைக் கொடுக்க முடியும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்’’ என்கிறார் சுதா கொங்கரா.

 -கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் தோழி

No comments:

Post a Comment