Saturday, July 2, 2016

சிறுநீரக செயலிழப்பு - ஏன்?ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்ளும் சிறுநீரகத்தை நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை என்று சொல்லலாம். இந்த துப்புரவுப் பணி நடைபெறவில்லையென்றால் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் உடலிலேயே தங்கி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இறுதிக்கட்டமாக மரணத்தைத் தழுவ நேரிடும். அதுதான் சிறுநீரக செயலிழப்பு. காலம் காலமாக சிறுநீரக செயலிழப்பு இருந்து வந்தாலும் சமீப காலமாக பெருகி வருகிறது. பத்து வயது குழந்தைக்குக் கூட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிற இந்த அவல நிலைக்கு என்ன காரணம்? இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றம் ஆகியவைதான். இது குறித்து சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் சௌந்தர்ராஜனிடம் பேசினோம்...

‘‘சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வகைப்படும். முதலாவது acute எனப்படும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு, இரண்டாவது chronic எனப்படும் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு. தற்காலிக சிறுநீரக செயலிழப்பு என்பது ஒவ்வாமை, அதிக ரத்த இழப்பு, கட்டுவிரியன் பாம்பு மற்றும் வண்டு, குழவி போன்ற விஷப்பூச்சிக்கடி, வயிற்றுப்போக்கு, வாந்தி என உடலில் உள்ள நீர் வெளியேறுவதால் ஏற்படும். 2 நாள் முதல் 4 வாரங்களுக்குள் இது குணமடைந்து விடும். நிரந்தர சிறுநீரக செயலிழப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வது. இது மொத்தம் 5 நிலைகளில் நடைபெறுகிறது. முதல் நிலையில் சிறுநீரை உற்பத்தி செய்யும் அளவு குறையும். 100 ml per minute என உற்பத்தியாகும் சிறுநீர் 15 ml per minute ஆகக் குறைந்து விடுவதுதான் இறுதி நிலையான ஐந்தாம் நிலை. இந்நிலையில் சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்து விடும்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, சிறுநீர்ப்பாதை அடைப்பு. சிறுநீரகக் கல், புரதநீர் சிறுநீரில் கலந்து வெளியேறுதல், மரபணு ஆகியவை நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு முக்கியக் காரணங்களாகும். சுகர்கேன் நெப்ரோபதி எனப்படும் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர்க செயலிழப்பு ஏற்படும். மெக்சிகோவின் கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தண்ணீரே குடிக்காமல் வேலை செய்ததால் அவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் இதை சுகர்கேன் நெப்ரோபதி என்கின்றனர். இதற்கு முன்பு காரணம் தெரியாத சிறுநீரக செயலிழப்பு இருந்தது. அதற்கான காரணம் இன்றைக்குக் கண்டறியப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கும் தண்ணீரைக் குடிப்பதாலும், உணவுகளில் கலந்திருக்கும் ரசாயனங்களாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. நிறமூட்டிக்களில் உள்ள காரீயம், பழங்களை பழுக்கவைப்பதற்கும், பாதுகாக்கவும் நிகழ்த்தப்படும் ரசாயனக் கலப்புகள் ஆகியவையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றன. வாந்தி, விக்கல், மூச்சு வாங்குதல், ரத்தசோகை, கால்வீக்கம் ஆகியவையெல்லாம் நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் ஆகும். ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து விட்டால் உணவுக்கட்டுப்பாடுகள் மூலம் இதன் தீவிரத்தன்மையைக் குறைக்க முடியும். இறுதி நிலைக்குச் சென்று விட்டால் டயாலிசஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு’’ என்கிறார் சௌந்தர்ராஜன்.

சூழலியலின் சுத்திகரிப்பாளனாய் விளங்கும் ஊன் உண்ணிக் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் டைக்ளோஃபீனக் எனும் வலிக்கொல்லி மருந்துதான். மனிதர்களுக்கான இந்த மருந்தை கால்நடைகளுக்கும் செலுத்துகின்றனர். கால்நடைகளின் உடலில் கலக்கும் இந்த மருந்து, அவை இறந்த பிற்பாடு அவற்றை உண்ணும் கழுகுகளின் சிறுநீரகத்தைத் தாக்கி மரணமடையச் செய்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இதன் எதிரொலியாக கால்நடைகளுக்கு அளிக்க முடியாத அளவுக்கு 30 மில்லி டைக்ளோஃபீனக் மருந்து பாட்டில்களைத் தடை செய்திருக்கிறது அரசு. இது போன்ற வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாய் இருக்கின்றன என்கிறார் உயிர்வேதியலாளர் திவாகர்...

‘‘aspirin, phenacetin, பாராசிடமால் போன்ற வலிநிவாரணிகள் எல்லாமும் சிறுநீரகத்தை பாதிக்கின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவை சிறுநீர்கத்தில் renal patillary necrosis எனும் நோயை ஏற்படுத்துகின்றன. நெக்ரோசிஸ் என்பது வாழும் காலத்துக்கு முன்பே இறத்தல். சிறுநீரகத்தில் பாட்டிலரி என்கிற தசை இருக்கும். அதன் செல்கள் இறந்து விடுவதுதான் இந்நோயின் தன்மை ஆகும். அதன் செல்கள் ஏன் இறக்கின்றன என்றால் அதற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தை வலி நிவாரணிகள் தடுத்து விடுகின்றன. சிறுநீரகம் சரி வர இயங்க நிறைய ஹார்மோன்கள் தேவைப்படுகின்றன. சிறுநீரகத்துக்கான ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு prostaglandin எனும் ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோன் உற்பத்தியாக cyclo oxygenases என்பது முக்கியக் காரணியாக இருக்கிறது. வலி நிவாரணிகள் இந்தக் காரணியின் உற்பத்தியை தடுத்து விடுகின்றன. oxidation என்பது சுவாசிக்கும்போது அனைத்து செல்களும் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் கொண்டதும் மீதம் இருக்கும் ஆக்சிஜன் உடைவது. இது ஆக்சிஜன் உடையும்போது free radical உற்பத்தியாகி செல்களை பாதிக்கும். அந்த free radical ஏற்படாமல் தடுப்பதற்கு glatathiole என்கிற ஏண்டி ஆக்சிடெண்ட் தேவைப்படுகிறது. cyclo oxygenases எனும் வினையூக்கியின் உள்ளடக்கமாக இருக்கும் glatathiole ஐ வலி நிவாரணிகள் தடுத்து விடுகின்றன. இதன் காரணமாக glatathiole கிடைக்காமல் free radicalக்கு ஆட்பட்டு சிறுநீரகம் செயலிழந்து போகும்.

1970களில் இது கண்டறியப்பட்ட பிறகு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வலி நிவாரணிகளைத் தடை செய்து ஒழித்தன. இதைப் பற்றிய ஆய்வு சுவிட்சர்லாந்தில்தான் நடந்தது. 1980களில் 28 சதவீதமாக இருந்த சிறுநீரக செயலிழப்பு வலி நிவாரணிகளின் தடைக்குப் பின்னர் 90களில் 12 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெண்கள் மாதவிடாய்க் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மருந்துகளும் இதே பணியைத்தான் செய்கின்றன. இது போன்ற வலி நிவாரணிகளைத் தவிர்த்தே ஆக வேண்டும்’’ என்கிறார் திவாகர்.

நம் உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்களே இன்றைக்கு நமது பெரும்பாலான உடல் நலப் பிரச்னைகளுக்கு மூலக்காரணமாய் இருக்கின்றன. பெருகி வரும் சிறுநீரக செயலிழப்புக்கும் அவையே முக்கியக் காரணம் என்கிறார் சித்தவர்ம மருத்துவர் பு.மா.சரவணன்...

‘‘உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் பயன்படுத்துகின்ற ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிதீவிரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லவை. பால் சுரப்புக்காக மாட்டுக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசியின் தன்மை மாட்டின் பாலின் மூலம் வெளியேறுகிறது. இதனால்தான் மாட்டுப்பால் குடிக்கிற பெண் குழந்தைகள் கூட சீக்கிரம் பருவமெய்தி விடுகின்றனர். அது போல மனிதர்களின் உடலில் தங்கும் ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நச்சு, உணவுப்பொருட்களில் கலக்கப்படும் நிறமூட்டிகள், கரும்புச் சக்கரையில் பயன்படுத்தப்படுகின்ற ஹைட்ரோஸ் ஆகியவற்றை சிறுநீரகத்தால்தான் வெளியேற்ற முடியும். ஏசியன் பசுபிக் ஜர்னல் ஆஃப் ட்ராஃபிக்கல் பயோ மெடிசன் 2014ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் எலிகளுக்கு ஹைட்ரோஸ் கொடுக்கப்பட்ட போது அதன் ரத்தத்தில் யூரியா மற்றும் க்ரியேட்டனின் அளவு அதிகரித்துக் காணப்பட்டதும், உடலில் உள்ள கால்சியம் சத்து குறைந்து, சிறுநீரகத்தின் க்ளோமருல்லர் பாதிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழப்பு அல்லது புற்றுக்கு ஆளாகும் என அந்த ஆய்வு கூறியுள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில் உணவுப்பொருட்களில் அதிக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் தீவிர உறுப்பு சிதைவு மற்றும் செயலிழப்புக்கு ஆளாகும் மக்கள் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய மூன்று உறுப்புகளின் பாதிப்புகள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கக் கூடியவை. மஞ்சள் கிழங்கை பாதுகாக்க பயன்படுத்தப்படும் சல்பாஸ், நெல், கரும்பு, வாழைக்கு பயன்படுத்துகின்ற டிம்மிட் போன்ற ரசாயனங்கள் உட்கொள்ளா விட்டாலும் பாதிப்பை ஏற்படுத்துபவை. சல்பாஸை பக்கத்தி வைத்திருந்தால் கூட உயிரைப் பறித்து விடும் அளவுக்கு பாதகமானது. சைபர் மெத்ரின் போன்ற அதிதீவிர பூச்சி மருந்துகளைத் தெளிக்கும்போது 50 அடி தள்ளியிருக்கிறவர்களுக்கே மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். நமது உணவு இது போன்ற நச்சுகளால்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த உணவுகள் வழியே உடலில் தங்கும் இது போன்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. இவை சிறுநீரகத்தடங்கள் மற்றும் உட்புறச்சுவர்களில் மிகையாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாளடைவில் இதன் தாக்கம் அதிகமாவதால் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாக நேரிடுகிறது’’ என்கிறார் பு.மா.சரவணன்.  

விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன? என்பதற்கு கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வீரனே எடுத்துக்காட்டு...

‘‘களைவெட்டுறதுக்காகப் போனப்ப ஒரு வயல்ல பாய்ஞ்சு முடிச்சு அடுத்து வயலுக்கு போய்க்கிட்டிருக்கிற கொப்பு(சிறுகால்வாய்) தண்ணீரைக் குடிச்சேன். கொஞ்ச நேரத்துலயே தொண்டை பயங்கரமா வலிச்சுது. இருமினப்ப ரத்தம் வந்துச்சு. தலை சுத்தல் வரவே அப்படியே படுத்துட்டேன். எழுந்திரிச்சுப் பார்த்தப்ப கை, காலெல்லாம் கொஞ்சம் வீங்கியிருந்தது. டாக்டரைப் போய்ப்பார்த்தப்ப அக்யூட்டுங்கிற கிட்னி பிரச்னை, கல்லீரல் மற்றும் தைராய்டு பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா சொன்னார். நான் தண்ணி குடிக்கிறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அந்த வயல்ல மருந்தடிச்சிருந்தாங்க. அதோட விளைவுதான்னு டாக்டர் சொன்னார். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டப்புறம் பத்து நாள் கழிச்சுதான் அக்யூட்ங்கிற பிரச்னை சரியாச்சு. எனக்கு இன்னமும் தைராய்டு பிரச்னை குணமாகலை’’ என்கிறார் வீரன். பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயலில் இருந்து வந்த தண்ணீர் உள்ள அதன் தாக்கம் பயிர்களிலும்தான் இருக்கும்.

- கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர்

No comments:

Post a Comment