Saturday, July 2, 2016

மரபணு மாற்றம் - பேரழிவுக்கான பேராயுதம்


இந்தியாவில் இதுவரையிலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி மட்டுமே இருந்து வரும் நிலையில், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை கொண்டு வருவதற்கான அத்தனை வேலைகளும் சத்தமே இல்லாமல் நடந்து வருகிறது. தனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளுக்கு எதிராக தன்னைக் காட்டிக் கொண்ட பா.ஜ.க ஆட்சியில்தான் தற்போது டெல்லி வேளாண் பல்கலைக்கழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு கள ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் ஆள்கிற ஹரியாணா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மரபணு மாற்று கடுகையும், களப்பரிசோதனையையும் எதிர்க்கின்றன. 2008ம் ஆண்டு பி.டி (Bacillus Thuringiensis) கத்திரிக்காய் கொண்டு வருவதற்கு எதிராக எழுந்த பெருங்குரலை அடுத்து அது தடை செய்யப்பட்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அனுமதிக்கும்போது உடல் நலக்கோளாறுகள், சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு இந்திய இறையாண்மையும் பறிபோகும் என்கிறார் உணவு செயல்பாட்டாளர் அனந்து

‘‘நமது பண்பாட்டில் விதை என்பது விற்பனைப் பொருள் அல்ல. என்றைக்கு விதை விற்பனைப் பண்டமானதோ  அன்றைக்குதான் இது போன்ற அழிவுகளுக்கான அடித்தளம் உருவானது. மரபணு மாற்றம் என்பது தாவரங்களின் மரபணுவுடன் வேறு உயிரினம் அல்லது நுண்ணுயிரின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ-வை சேர்த்து புதிய மரபணுவை உருவாக்குவதுதான். 2003ம் ஆண்டு மன்சாண்டோ என்னும் விதை நிறுவனம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதையை சொசைட்டிகள் மூலம் விற்கத் துவங்கியது. சாதாரண பருத்தி விதை கிலோ 30 ரூபாய்தான், ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி பருத்தி விதை கிலோ 2000 ரூபாய் ஆக விற்கப்பட்டது. இவ்வளவு விலை கூடுதலாக இருந்தும் விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு பி.டி பருத்தி விதையை வாங்கிப் பயிரிட்டார்கள் என்றால் அதன் மீது நடத்தப்பட்ட பரப்புரையே முக்கியக்காரணம். 1940களில் கிழக்கிந்திய கம்பெனியால் அமெரிக்கன் காட்டன் எனும் பருத்தி விதை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நமது நாட்டுக்கு இது உகந்ததல்ல என்று காந்தி அன்றைக்கே எச்சரித்தார். எதிர்பாராத விதமாக அந்த விதைகளினூடாக american boll worm என்று சொல்லக்கூடிய காய்ப்புழுவும் வந்து விட்டது. இப்படியாக பரவிய காய்ப்புழுவைக் கொல்வதற்காக அதிக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் விளைவிக்கப்படும் விளைபொருட்களில் பருத்தி 5 சதவிகிதம்தான் ஆனால் 55 சதவிகித பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்திக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 70 சதவிகிதம் பேர் பருத்தி விவசாயிகள்தான். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கே பல ஆயிரத்தை கொட்ட வேண்டியிருக்கும் மோசமான சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். பி.டி பருத்தி விதையை விதைத்தால் காய்ப்புழு மட்டுமல்ல எந்த புழுவும் தாக்காது. பூச்சிக்கொல்லிக்காக செலவிடத் தேவையில்லை என்று பரப்புரை நிகழ்த்தப்பட்டது. பூச்சிக்கொல்லிகளால் நொந்து போன விவசாயிகள் பி.டி பருத்தி வாங்கிப் பயிரிட்டார்கள். இன்றைக்கு மாற்றம் வந்ததா? என்றால் எவ்வித மாற்றமும் இல்லை. விதையை விற்ற அதே நிறுவனம்தான் அதற்கான பூச்சிக்கொல்லியையும் விற்றுக் கொண்டிருக்கிறது.

மன்சாண்டோ, சிஞ்ஜெண்டா, பேயர், டூபாண்ட் போன்ற நிறுவனங்கள்தான் விதை விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவைகளில் கொடூரனிலும் கொடூரனாக இருப்பது மன்சாண்டோ நிறுவனம்தான். 2014ம் ஆண்டில் மட்டும் மன்சாண்டோ நிறுவனத்தின் வருவாய் 49 ஆயிரம் கோடி ரூபாய். இலாபம் ஈட்டுவதற்காக உடல் நலம், சுற்றுச்சூழல் என எவற்றிலும் அக்கறை காட்டாத இந்நிறுவனம்தான் இப்போது மரபணு மாற்று கடுகைக் கொண்டு வந்திருக்கிறது. புஷ்பா பார்க்கவா எனும் அறிவியலாளர் ‘‘தேவை இருப்பின் மருத்துவ உபயோகத்துக்கு வேண்டுமானால் மரபணு மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் உணவுக்குப் பயன்படுத்தவே கூடாது என்று சொல்லியிருக்கிறார்’’ 2008ம் ஆண்டு பிடி கத்திரிக்காயைக் கொண்டு வந்த போது இந்தியா முழுவதிலும் எதிர்ப்பலைகள் இருந்தன. முதன்முறையாக ஒரு சனநாயக நிகழ்வாக, பெயரளவில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நேர்மையான முறையில் நடத்தினார் அன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். சூழலியலாளர்கள், அறிவியலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பும் அதனை எதிர்த்ததன் காரணமாக பி.டி கத்திரிக்காய் தடை செய்யப்பட்டது. மரபணு மாற்றத்தை எதிர்ப்பதற்கான முக்கியக்காரணம் விதைகளை இழந்து நமது நாட்டின் இறையாண்மை பறிபோய்விடும் என்பதால்தான். மரபணு மாற்று விதைகளுக்கு மறு முளைப்புத் திறன் கிடையாது. எனவே குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் அதை ஒவ்வொரு முறையும் வாங்க வேண்டும். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விதைகளை ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம்தான் ஒவ்வொரு முறையும் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒரு கட்டத்தில் அவர்களின் பிடிக்குள் நாம் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்’’ என்று இதனைச் சுற்றியுள்ள விதை அரசியலைப் பற்றிப் பேசுகிறார் அனந்து.

உலக அளவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளின் தாக்கம் எந்தளவில் இருக்கின்றது? மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் பரிசோதனைத் தரம் மற்றும் அதனால் ஏற்படும் உடல் மற்றும் சூழல் சீர்கேடுகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார் இயற்கை விவசாய ஆராய்ச்சியாளார் அரச்சலூர் செல்வம்.

‘‘மரபணு மாற்றம் என்பது பாக்டீரியா, தேள், பாம்பு, மார்பகம், சிலந்தி என அவரவர் கற்பனைக்கேற்றவற்றில் இருந்து மரபணுவை எடுத்து ஏதேனும் ஒரு தாவரத்தின் மரபணுவோடு பொருத்திப் பார்த்தால் என்னவாகும்? என்று சோதிப்பதன் விளைவுதான். அறிவியல் வளர்ச்சி ஆக்கத்துக்கு வழி வகுக்காமல் அழிவுக்கு இட்டுச்செல்கிறது என்பதற்கு நேரடியான உதாரணம் இதுதான். நேரடியாக உண்ணக்கூடிய உணவுப்பொருட்களில் மரபணு மாற்றம் இன்னும் வரவில்லை. கெனோலா ஆயில், பருத்தி, மக்காச்சோளம், சோயா ஆகியவற்றில்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் இதன் வருகைக்குப் பிறகு பலரும் பல்வேறு விதமான அலர்ஜிகளுக்கு ஆளாகியுள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் முழுமையான பாதுகாப்பானதா? என்பதற்கான உண்மையான ஆய்வுகள் இதுவரையிலும் நடத்தப்படவில்லை. விதையை விற்கும் மன்சாண்டோ நிறுவனமே அந்த ஆய்வையும் மேற்கொண்டு தரமானது என்கின்றது. அதாவது விடையை எழுதியவரே மதிப்பெண் போட்டுக்கொள்வது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்? எலிகளை சோதனைக்குட்படுத்தும்போது பல தலைமுறை சோதனைகளுக்குப் பின்னரே முடிவுக்கு வர வேண்டும் என்கிறார் ப்ரான்ஸ் அறிவியலாளர் எரிக் செராலினி. அவர் ஆறு தலைமுறை எலிகளுக்கு மரபணு மாற்று உணவைக் கொடுத்து பரிசோதித்தார். தலைமுறைக்கு தலைமுறை எலிகளின் இனப்பெருக்க சக்தி குறைந்து கொண்டே வந்தது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. மேலும் புற்றுநோய் மற்றும் பலவீனம் ஆகியவை அதிகரித்திருக்கிறது. ரஷ்யாவில் எரினா எர்மகோவா என்பவர் மன்சாண்டோவின் மக்காளச்சோளத்தை எலிகளுக்குக் கொடுத்து புற்றுநோய் ஏற்பட்டதை அறிவித்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை இங்கிலாந்தில் அனுமதிக்கலாமா? என்பதற்காக ஆர்பட் புஸ்டாக் என்பவர் எலிகளுக்கு உருளைக்கிழங்கைக் கொடுத்தார். பிறகு ஆராய்ச்சி செய்த போது எலிகளின் உள்ளுறுப்புகளில் கொப்புளங்கள் இருந்ததை கண்டுபிடித்துக் கூறியதன் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட்டார். மரபணு மாற்றத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் மீதெல்லாம் சேற்றை வாரி இறைக்கும் போக்குதான் நடந்து வருகிறது. மரபணு மாற்றத்தை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் எல்லாம் விதை நிறுவனங்களின் கைக்கூலிகள்தான்.

மன்சாண்டோ நிறுவனத்தின் விதைகளை ஆராய்ச்சி செய்வதற்கு அந்நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என காப்புரிமை பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்திடம் ஒப்புதல் பெற்று செய்யப்படும் ஆராய்ச்சி எப்படி உண்மையானதாக இருக்க முடியும்? இன்னும் முறையான நேர்மையான முறையில் மரபணு மாற்று உணவுகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்படவில்லை என்பதால் அதன் விளைவுகளைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. பல்வேறு விதமான புற்றுநோய்கள், வளர்சிதை மாற்றக்குறைபாடு ஆகியன போன்ற பெரும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மரபணு மாற்றம் எதற்காகத் தேவை? இவற்றில் ஏன் வெளிப்படைத் தன்மையில்லை? ஐரோப்பிய நாடுகள் ஏன் மரபணு மாற்றத்தை அனுமதிக்கவில்லை? என்று பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. மரபணு மாற்று கடுகு கொண்டு வருவதன் மூலம் கடுகு எண்ணெய் உற்பத்தியை 15-25 சதவிகிதம் வரை உயர்த்த முடியும் என்கிறார்கள்.
இதே போல்தான் பி.டி பருத்தியிலும் காய்ப்புழு தாக்குதலில் இருந்து விடுதலை என்று அறிவித்துக் கொண்டு வந்தார்கள். இப்போது என்னவாயிற்று? காய்ப்புழுக்கள் எதிர்ப்புத்திரனைப் பெற்றுக்கொண்டு விட்டன. பூச்சிக்கொல்லி தேவையில்லை என்பதனால் பி.டி பருத்தியை வாங்கி பயிரிட்ட விவசாயிகள் இன்றைக்கு படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதே நிலைமைதான் கடுகுக்கும். பருத்தியாவது பணப்பயிர் ஆனால் கடுகோ உணவுப்பயிர். இதனால் உடல் நலம், சூழல் மட்டுமல்லாமல் பொருளாதார அளவிலும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கப்போகிறோம்.

மரபணு மாற்றுக் கடுகு களைக்கொல்லியைத் தாங்கி வளரும் என்கிறார்கள். ரவுண்ட் அப் கலைக்கொல்லியால் புற்றுநோய் ஏற்படும் என்பதை எரிக் செராலினி ஆராய்ந்து கூறியுள்ளார். ரவுண்ட் அப் என்பது களைக்கொல்லி அல்ல தாவரக்கொல்லி. எந்த தாவரமாக இருந்தாலும் அதனை அழித்து விடும். அதை தாங்கி வளரக்கூடிய திறனைத்தான் மரபணு மாற்றம் மூலமாக கொடுக்கிறார்கள். பி.டி கத்திரிக்காய்க்கு என்னென்ன காரணங்களால் தடை விதிக்கப்பட்டதோ அது கடுகுக்கும் பொருந்தும் என்பதை மறக்க வேண்டாம். பல நாடுகள் களப்பரிசோதனையைக்கூட அனுமதிக்கவில்லை ஏனென்றால் களப்பரிசோதனையின் போது பக்கத்து விளைநிலங்களில் உள்ள விளைபயிரோடு இவை மகரந்தச் சேர்க்கை புரிந்து பரவும் அபாயம் உள்ளது என்பதால்தான். மரபணு மாற்றுப் பரிசோதனை என்பது முதலில் விலங்குகளளவில் துவங்கப்பட்டு விலங்குகளுக்கு எதுவும் நேரிடவில்லை எனும் பட்சத்தில்தான் களப்பரிசோதனையில் இறங்க வேண்டும். மரபணு மாற்று உணவை சாப்பிட்ட எலியின் ரத்தத்தை 16 சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இது போன்ற பல நடைமுறைகள் எதுவும் இங்கு பின்பற்றப்படவில்லை. மோடி ஆட்சியில் genetic enjeneering aprooval commityயின் வலைத்தளம்  பொதுமக்கள் பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது. ஆக இவ்விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறது.

பருத்தியில் மரபணு மாற்று வருவதற்கு முன் 65 சதவிகிதம் நாட்டு ரகம், 35 சதவிகிதம் வீரிய ஒட்டுரகம் இருந்தது. ஆனால் தற்போது 95 சதவிகிதம் பி.டி பருத்திதான் உள்ளது. இதே நிலை ஒவ்வொரு பயிருக்கும் வந்தால் இந்தியாவே நோய்க்கூடாரமாகிவிடும். விளைச்சலை அதிகரிப்பதற்காக மரபணு மாற்றம் தேவையில்லை. செம்மை நெல் சாகுபடி முறையில் மூன்று மடங்கு அதிக விளைச்சலை இயற்கையாகவே நாம் பெற முடியும்’’ என்கிறார் அரச்சலூர் செல்வம்.

சித்த மருத்துவர் திருநாராயணன் இது பற்றிக் கூறும்போது

‘‘பாரம்பரியமாகவே நம்மிடம் வெள்ளம் தாங்கி வளரக்கூடியது, வறட்சி தாங்கி வளரக்கூடியது என ஒவ்வொரு கால நிலைக்கும் ஏற்ற பயிர்களும், ரகங்களும் இருக்கின்றன எனும்போது மரபணு மாற்றம் தேவையே இல்லாத ஒன்று. நீரிழிவு, சொரியாஸிஸ், ஹார்மோன் ரீதியான பிரச்னைகள், பெண்களுக்கு கர்ப்பபபை மற்றும் மார்பகப் புற்றுநோய், குழந்தைகளுக்கு கருவிலேயே ஏற்படும் குறைபாடுகள் என இவையெல்லாம் உணவு மாறுபாட்டால்தான் ஏற்படுகிறது என்பதை பற்பல ஆய்வுகளும் நிரூபித்து விட்டன. இச்சூழலில் நன்மை தரும் இயற்கையான முறையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அரசோ நம்மை மேலும் பல நோய்களுக்கு ஆட்படுத்தப் பார்க்கின்றது. பி.டி பருத்தியால் பெற்றதை விட இழந்ததுதான் அதிகம். இதே நிலைதான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எல்லாவற்றுக்கும்’’ என்கிறார் திருநாராயணன்.

எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம் அப்போதுதான் உணவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உலக அரசியலை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.... விழிப்படைவோம்

- கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர்

No comments:

Post a Comment