Saturday, October 31, 2015

காகித ஆலைக்கு எதிராகப் போராடும் நிர்மலாநிர்மலா
அடுப்பங்கரைக்குள்ளாகவே பெண்கள் அடங்கிக் கிடந்த காலம் அல்ல இது... தங்களது இருப்பும், அடிப்படை வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்படும்போது வெகுண்டெழுந்து போராடும் மனதிடத்துக்கு இன்றைக்கு பல பெண்கள் தயாராகி விட்டனர். தங்களது வீரியம்மிக்க போராட்டத்தின் மூலம் அரசு இயந்திரத்தையே அதிர வைத்த பெண்களும் உண்டு. அந்த வரிசையில், தங்களது வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருக்கும் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பாதகம் விளைவிக்கும் காகித ஆலைக்கு எதிராகப் போராடி வரும் நிர்மலாவையும் இணைத்துக் கொள்ளலாம். நாமக்கல் மாவட்டம் இருக்கூரைச் சேர்ந்த இவர் படித்தது பத்தாம் வகுப்பு வரையிலும்தான். விவசாயக்கூலிக் குடும்பத்தில் பிறந்து கூலித் தொழில் மேற்கொண்டு வந்தவர் தற்போது குத்தகை நிலத்தில் விவசாயம் புரிகிறார். கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளையத்தில் எட்டு ஆண்டுகளாய் இயங்கி வரும் சரஸ்வதி காகித ஆலை ஏற்படுத்தும் சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிரானதுதான் இவரது போராட்டம். இப்போராட்டம்தான் இன்றைக்கு கூடங்குளத்தில் நடைபெற்று வரும் பெண்கள் போராட்டத்துக்கு முன் மாதிரியாக இருக்கிறது. அது மட்டுமல்ல மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் அதிர்வு அதற்கு பிறகு அடிக்கல் நாட்டிய பல தொழிற்சாலைகளை விரட்டியடித்திருக்கிறது. தீரம்மிக்க இப்போராட்டத்தின் அங்கமாய் செயல்பட்ட நிர்மலாவிடம் பேசினோம்
 
கபிலர்மலையைச் சுற்றி கபிலக்குறிச்சி, கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், இருக்கூர், வடகரைத்தூர் என ஐந்து ஊராட்சிகள் இருக்கின்றன. விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள இப்பகுதிகளுக்கு காவிரி ஆற்றின் ஜேடர்பாளையம் அணையிலிருந்து பிரியும் ராஜவாய்க்காலின் கசிவு நீரும், நிலத்தடிநீருமே நீராதாரம். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஆண்டுக்கு 360 நாட்கள் தண்ணீர்பாய்கிற வாய்க்கால் ராஜவாய்க்கால்தான். இப்பகுதியின் நிலத்தடி நீர் சிறுவாணி அணை நீர் போல தனித்த சுவையுடன் இருக்கும். இந்த நீராதாரத்தைக் கொண்டு நெல், கரும்பு, வாழை ஆகியவற்றை பிரதானமாக பயிர் செய்து வருகிறோம். விவசாயமும் அது சார் தொழிலுமே எங்களின் வாழ்வாதாரம். அந்த வாழ்வாதாரத்துக்கே வேட்டு வைக்கும்படியாக தன் கழிவுகளால் ஐந்து ஊராட்சிகளின் நிலத்தையும், நீரையும் அசுத்தப்படுத்தி வருகிறது சரஸ்வதி காகித ஆலை. எங்களுக்குச் சோறிடும் நிலத்தையும், நீரையும் காக்க நாங்கள்தான் போராடியாக வேண்டும். மண்ணைக்காக்கும் இந்தப் போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல இனி பிறக்கப்போகிற தலைமுறைக்கானதும் கூடஎனத் தொடங்கியவர் காகித ஆலையின் துவக்கம் மற்றும் போராட்டம் உதித்த வரலாறு பற்றிப் பேச ஆரம்பித்தார்.

போராட்டக்களத்தில் நிர்மலா
“2001ம் ஆண்டு வேட்டுவம்பாளையத்தில் சரஸ்வதி காகித ஆலை துவங்கப்பட்டது. அதாவது ஆந்திரா மற்றும் கரூரில் துவங்கப்பட இருந்து அங்குள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக விரட்டியடிக்கப்பட்டு இங்கு துவங்கப்பட்டது. பொதுவாக காகிதத் தயாரிப்பு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. மரக்கூழை வைத்து புதிதாக காகிதம் உற்பத்தி செய்வது முதல் வகை. கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சி மூலம் காகிதம் மற்றும் அட்டைகளை உற்பத்தி செய்வது இரண்டாவது வகை. இந்த வகையிலான உற்பத்தியால் சூழலியல் சீர்கெடும் என்பதால் உலகநாடுகள் பலவற்றிலும் இதற்கு தடை இருக்கிறது. அதுமட்டுமின்றி மேலைநாடுகளில் இந்த வகையிலான காகித உற்பத்திக்கு ஒரு டன்னுக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் செலவாகிறது என்றால் இங்கு வெறும் மூன்றாயிரம் ரூபாய்தான் செலவாகிறது. சூழலியல் சீர்கேடு மட்டுமின்றி மனிதவளச் சுரண்டலும் நடக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகளை மறுசுழற்சி மூலம் வெள்ளை நிற அட்டையாக்குகிற உற்பத்தியை சரஸ்வதி காகித ஆலை மேற்கொள்கிறது. கழிவுப் பொருட்களை வெள்ளை நிறமாக்குவதற்கு எண்ணற்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி முடிந்ததும் வெளியேறும் ரசாயனக் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்புகளுமின்றி அப்படியே நிலத்தில் பாய்ச்சப்பட்டன.

காகித ஆலை வந்த புதிதில் அது ஏற்படுத்தவிருக்கும் சீரழிவு குறித்தான விழிப்புணர்வு எங்களிடத்தில் இருந்திருக்கவில்லை. நாள்பட நாள்படத்தான் அதன் தாக்கத்தை உணரத் துவங்கினோம். தனித்த சுவையுடன் இருக்கும் நிலத்தடி நீர் உப்புக் கரித்து வாயில் வைக்க முடியாதபடி ஆகியிருந்தது. எங்களது குடிநீர் மிகப்பெரும் சீர்கேட்டுக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்த சமயம் 2005ம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், குடிநீர் வடிகால் வாரியமும் கிணறுகளையும், நீர்நிலைகளையும் ஆய்வு செய்தது. நிலத்தடி நீர்வளம் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, குடிப்பதற்கு தகுதியற்றது என்கிற அடிப்படையில் பல கிணறுகளுக்கு சீல் வைத்தது. முறையான சுத்திகரிப்பு பணிகள் மேற்கொண்ட பின்னரே கழிவை வெளியேற்றும்படி மூன்று மாதங்களுக்கொரு முறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்புவதும், கூடிய விரைவில் சரி செய்து விடுகிறோம் என ஆலை நிர்வாகத்தினர் பதில் தருவதுமாக மக்களை முட்டாளாக்கும் நிகழ்ச்சிகள் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தன.

அன்றைக்கு கபிலர்மலை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த நெடுஞ்செழியனிடம் விவசாயிகள் ஒன்று கூடி காகித ஆலையை மூட நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தோம். அப்போது எங்களைத் திட்டி, கைது செய்து விடுவேன் என மிரட்டினார். அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் காகித ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டனர். இச்சூழலில்தான் 2006ம் ஆண்டு எங்களது பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் மட்டும்தான் தீர்வு என்று தீர்க்கமாக முடிவெடுத்தோம். காகித ஆலைக்கு எதிரான போராட்டத்துக்காக விடியல் விவசாயிகள் சங்கம் என்கிற அமைப்பு துவங்கப்பட்டு போராட்டங்கள் அதன் வாயிலாக முன்னெடுக்கப்பட்டன. இப்போராட்டத்தில் கீழ் வகுப்பினர், மேல் வகுப்பினர் என்று எவ்வித சாதியப் பிரிவினைகளுமில்லாமல் எல்லோரும் ஒரே அணியில் நின்று போராடத் துவங்கினோம். எப்படியாயினும் தீர்வை எட்டி விட வேண்டும் என்கிற முனைப்பு இருந்ததால் கைது, வழக்கு எது பற்றியும் அச்சமின்றி களத்தில் இறங்கினோம்.

கபிலர் மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்று திரண்டு உண்ணாநிலை போராட்டம் நடத்தினோம். பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினோம். ஆலைக்கு முன் ஆடு, மாடுகளைக் கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது எங்கள் மீது மட்டுமல்லாமல் எங்களது கால்நடைகள் மீது வழக்குப் போடப்பட்டு கால்நடைகளுடனும் குழந்தைகளுடன் கைதாகி சிறைக்குச் சென்றோம். ஆலையின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த சட்ட மன்ற உறுப்பினர் நெடுஞ்செழியனை முற்றுகையிட்டோம் பின்னர் காவல் துறையினர் வந்துதான் விடுவித்தனர். ஆலையை மூடக்கோரி கபிலர் மலையில் ஏழு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தோம். ஆலையில் தோட்ட வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட ஒருவரை சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக எங்கள் போராட்டக் குழுவினர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கினைத் திரும்பப் பெற வேண்டும் என மூன்றாயிரம் பேர் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். எங்களது போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.
 
பரமத்தி வேலூரில் எனது தலைமையில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக கபிலர் மலையில் தடையை மீறி 800 குழந்தைகள் மட்டுமே கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. எங்களது இந்த மக்கள் போராட்டத்துக்கு எந்த அரசியல் கட்சியும் ஆதரவு தெரிக்கவில்லை.
நிலத்தைக் காக்கும் எங்களது போராட்டம் வெறும் அடையாளப்போராட்டமாக மட்டும் நின்று விடாமல் 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தீவிரத்துடன் நடைபெற்றது. 27 வகையான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி பத்துக்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியனின் தாக்குதல், காவல் துறையினரின் சித்ரவதை என இத்தனை வலிகளையும் தாங்கி நாங்கள் போராடியதன் விளைவாக காகித ஆலையில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளதுஎன்கிற நிர்மலா அனைத்துப் போராட்டங்களிலும் எதற்கும் அஞ்சாமல் முன் நின்றவர். இவரது கணவர் கைது செய்யப்பட்ட பிறகு கூட எது குறித்தும் அச்சம் கொள்ளாமல் பெண்களைத் திரட்டி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு தன் குழந்தைகளுடன் கைதாகியிருக்கிறார். இந்தப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வு பல ஆலைகளின் உதயத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்கிறார்.

எங்களது தொடர்போராட்டம் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்தது. அரசு இயந்திரம் எப்போதுமே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகத்தான் செயல்படும் ஆகவே ஒரு ஆலை கட்டப்பட்டு செயல்படத் துவங்கிய பின் அதனைத் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினமானது. வரும் முன்னரே காப்பதுதான் சிறந்தது என்பதை எங்களது போராட்டம் உணர்த்தியது. மோகனூர் ஒன்றியம், மாடகாத்தம்பட்டியில் காகித ஆலை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, பொதுமக்களே ஒன்று திரண்டு ஜேசிபி கொண்டு கட்டடத்தைத் தகர்த்தனர். கோபிச்செட்டிப்பாளையம் அருகே புஞ்சைத்துறையம்பாளையம் மற்றும் அளுக்குளி ஆகிய ஊர்களில் துவங்கப்படவிருந்த காகித ஆலைகளுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்ததன் விளைவாக அம்முயற்சி கைவிடப்பட்டது. கபிலர் மலை அருகே குன்னமலையில் எரிசாராய ஆலை கொண்டு வரப்பட இருந்ததையொட்டி வெடித்த மக்கள் போராட்டத்தால் அதுவும் கைவிடப்பட்டதுஎன்கிறார் நிர்மலா.

 2014ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி மன்னார்குடியில் நடைபெற்ற மீத்தேன் திட்டத்திற்கான எதிர்ப்புக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிர்மலா தங்களது போராட்டம் எப்படியாகப்பட்டது என்பதைப் பற்றி அனுபவ உரை நிகழ்த்தியிருக்கிறார்.
காகித ஆலை இப்போது கழிவுகளை வெளியேற்றுவதில்லை ஆகவே இப்போராட்டம் வெற்றி பெற்றது என்று இத்தோடு ஓய்ந்து விட மாட்டேன். எனது நிலமும், நீரும் நான் சுவாசிக்கிற காற்றும் எப்போதெல்லாம் சீரழிவுக்குட்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் எதற்கும் தயங்காமல் போராடியே தீருவேன்... நமது வாழ்க்கைக்காக நாம்தான் போராடியாக வேண்டும்எழுச்சிகரமாய் பேசுகிறார் நிர்மலா.

  -கி..திலீபன், படங்கள்: சி.சுப்பிரமணியம், நன்றி: குங்குமம் தோழி No comments:

Post a Comment