Saturday, October 31, 2015

மரபுச்சுவைதமிழ் பதிப்புலகம் கண்ட கோடிக்கணக்கான நூல்களில் கோடிகளைத் தாண்டி விற்ற நூல் மீனாட்சி அம்மாளின் சமைத்துப் பார். ருசிகரமான சமையல் வகைகளை சமைத்து உண்பதில் தமிழ்ச்சமூகத்தினருக்கு இருக்கும் ஆர்வத்துக்கும் அதற்கு வழிகாட்டும் சமையல் குறிப்புகளுக்கு கிடைக்கும் அதீத வரவேற்புக்கும் மேற்கூறிய செய்தியே உதாரணம். பாட்டி சமையல் தொடங்கி செட்டிநாடு, சைவம், அசைவம் என பல்வேறு தலைப்புகளில் சமையல் புத்தகங்கள் இன்று விரிந்து கிடக்கின்றன. மேற்கத்திய நாடுகளின் உணவு முறை மீதான மோகம் பரவிக்கிடப்பதால் அவற்றின் செய்முறை நூல்களுக்கும் பஞ்சமில்லை. உணவே மருந்து என்பதுவே நம் உணவுமரபு. முற்காலத்துக்குத் திரும்பியிருக்கும் சமீப கால எழுச்சியின் காரணமாய் இன்று சிறுதானியங்களின் தேவையும், உற்பத்தியும் பெருகியுள்ளது. இந்நிலையில் சிறுதானியங்களை சத்துக்காக மட்டும் சாப்பிடாமல் எப்படியெல்லாம் ருசியாக சாப்பிட முடியும் என்று கற்றுக் கொடுக்கிறது மரபுச்சுவை எனும் நூல். இந்நூலினை எழுதியிருக்கும் காந்திமதி தஞ்சாவூரின் செம்மை வனம் இயற்கை பண்ணை மூலம் வழக்கொழிந்து போயிருக்கும் மரபு சார் விடயங்களை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு பெண் பூப்படைந்தால் அப்பெண்ணுக்கு மாமன் முறையாகிறவர்கள் 16 நாளைக்கு அரிசிப்புட்டும், உளுந்தங்களியும் செய்து கொண்டு வந்து தர வேண்டும் என்கிற சடங்கு இருந்தது, இப்போதும் சில பகுதிகளில் இருக்கிறது. அரிசிப்புட்டும், உளுந்தங்களியும் பூப்பெய்திய பெண்ணின் உடலுக்கு சக்தியை ஏற்படுத்துபவை என்பதற்காக இப்படியான சடங்கு நடத்தப்படுகிறது. சிறுதானியங்கள் நமது வாழ்வியலோடு ஒன்றிப்போனது என்பதற்கு இது போல் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். பல்லாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து வந்த நமது உணவுமுறை இடைப்பட்ட காலத்தில் மேற்கத்தியத் தாக்கத்தாலும், உலகமயமாக்கல் சூழலாலும் சீர்குலைந்து போய்விட்டது. இதன் விளைவால் நாம் கணக்கில்லா நோய்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். மாதக் குடும்ப செலவுப் பட்டியலில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகிற அவல நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். புற்றுநோய் விகிதம் அதிகரித்ததற்கு ரசாயன உரங்களால் விளைவித்த உணவுப் பொருட்களே காரணம் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலை மாற வேண்டுமானால் மரபுசார் வாழ்வியலுக்குத் திரும்புவதுதான் தீர்வு என்கிற உண்மையை நம்மாழ்வார் போன்ற இயற்கை வல்லுநர்கள் பலரும் தீவிரமாக எடுத்துரைத்தனர். அவர்களின் தீவிர பரப்புரைக்குப் பிற்பாடு எழுந்த அலையால் பலரும் நஞ்சு கலந்த உணவை புறக்கணித்து இயற்கை முறையிலான உற்பத்திக்குத் திரும்பினர். ஜங்க் உணவுகளான பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மீதான மோகத்தை களைந்து பெருநகரங்களில் வசிப்பவர்களும் இயற்கை வழியிலான உணவுப் பொருட்களை விரும்பியதன் விளைவால் பல இயற்கை அங்காடிகளும் உதயமானது. நமது இன்றைய உணவில் அரிசியும், பருப்பும்தான் பிரதானமாக இருக்கிறது. சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய ராகி, கம்பு, சாமை, திணை, வரகு ஆகியவற்றின் மருத்துவ குணங்களையும், உட்கொள்ள வேண்டிய அத்தியாவசியங்களையும் உணர்ந்து கொண்ட மக்கள் பலரும் அவற்றினை நுகரத் தொடங்கியுள்ளனர். பலருக்கு அவற்றினைப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் விதவிதமாக சமைத்து சாப்பிட்டு ருசி கண்டவர்கள், சிறுதானியங்களைக் கொண்டு ராகிக்களி, கம்புச்சோறு, வரகுஅடை போன்றவற்றை மட்டும் செய்து சாப்பிட யோசிப்பது இயல்புதான்.

 சிறுதானியங்கள் உடல் நலத்துக்கு உகந்தது என்கிற எண்ணத்தில் ஒரு மருந்தைப் போல நினைத்துக் கொண்டு உட்கொள்கிறவர்களே அதிகம். இச்சூழலில் சிறுதானியங்களைக் கொண்டும் விதவிதமான சமையல் ரகங்களை செய்ய முடியுமா? என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் விளைவாகத்தான் நமது பண்டைய சமையல் முறைகள் குறித்த தேடலில் இறங்கினேன். சமையலைப் பொறுத்தவரையில் நமது தலைமுறையைக் காட்டிலும் பாட்டி சமையலே அதீத ருசியோடு இருப்பதை நாம் உணர்ந்திருப்போம். அப்படியாக இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட பெரியவர்கள் பலரையும் சந்தித்து இதற்கான குறிப்புகள் கேட்டேன். அவர்களின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சமைத்தபோது அவ்வளவு சிறப்பாக இருந்தது. அதற்கடுத்து சில சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டேன். அரிசிமாவில் புட்டு செய்வது போல் கம்புமாவில் செய்து பார்த்தால் எப்படியிருக்கும்? செய்து பார்த்தேன். இப்படியாக எனது பல சோதனை முயற்சிகளும் வெற்றிபெற்றது. வாயளவில் உள்ள தகவல்கள் காலப்போக்கில் மறைந்து விடலாம். அதனை எழுத்தாக்கி அச்சிலேற்றினால்தான் பலதரப்பட்ட மக்களுக்கும் இவற்றைக் கொண்டு சேர்த்த முடியும் என்பது மட்டுமல்ல இனி வரும் தலைமுறைக்கும் இவற்றினைக் கொடுக்க முடியும் என்பதால் எங்களது செம்மை வெளியீட்டகம் மூலமாக மரபுச்சுவை என்கிற தலைப்பில் அத்தொகுப்பை நூலாக கொண்டு வந்தேன். இயற்கை வாழ்வியல் மீதான ஆர்வம் பெருகி வரும் இச்சூழலில் எனது நூலுக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து இப்போது இரண்டாம் பதிப்பு கண்டுள்ளது. சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதே எனது நூலுக்கான நோக்கம். இருந்தும் மரபுதானியங்கள் அதிக விலையில் விற்பதால் உயர் நடுத்தர வர்க்க மக்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது என்பது அடித்தட்டு மக்களின் கவலையாக உள்ளது. தேவைகள் பெருகப் பெருகத்தான் உற்பத்தி பெருகும். மரபு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும்’’ எனும் காந்திமதிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அடிப்படையில் இவர் மாஸ் கம்யூனிகேஷன் படித்த பத்திரிக்கையாளர். பாலை திரைப்பட இயக்குனர் செந்தமிழனின் மனைவி. இவர்கள் இருவரும் தஞ்சாவூர் அருகே செம்மை வனம் எனும் இயற்கைவேளாண் பண்ணையை நிறுவி, நிர்வகித்து வருகின்றனர்.

‘‘எங்களுடையது காதல் திருமணம். நான் பணிபுரிந்த பத்திரிக்கையில் என் கணவரும் பணிபுரிந்த போது எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கமும், புரிதலும் காதலாகி திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு பூந்தமல்லியில் உள்ள சிண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு ஆண்டு காலம் விஷுவல் கம்யூனிகேஷன் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். நகர்மய சூழலில் வாழ்தில் விருப்பமில்லாமலும், எங்களது மகனை கிராமிய சூழலில் வளர்க்க வேண்டும் என்கிற காரணத்தாலும் என் கணவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கே திரும்பினோம். 10 ஏக்கரில் செம்மை வனத்தைத் துவங்கி அதனுள் தேக்கு, மா, பலா, அத்தி மரங்களையும், குதிரைவாளி, சோளம், கடலை பயிர்களையும் உரம், பூச்சிக்கொல்லிகளற்று பயிர் செய்து வருகிறோம். எல்லாவற்றிலும் நம் மரபு வழியை பின் தொடர்தலே சரி என்கிற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மாதந்தோறும் மரபுத்தொழில், மரபு வாழ்வியல், மரபு மருத்துவம் ஆகியவற்றுக்கான பயிற்சிகளை செம்மை வனத்தில் வழங்கி வருகிறோம். மாத்திரை மருந்துகளைத் தவிர்த்து உணவே மருந்து உடலே மருத்துவர் என்கிற கொள்கையின் அடிப்படையில் வாழ்வதற்கான பயிற்சிதான் மரபு மருத்துவப் பயிற்சி. நமது மரபு வழித் தொழில்களான செக்கு ஆட்டுதல், பலகாரம் செய்தல் போன்ற தொழிற்பயிற்சிகள் அளிக்கிறோம். இங்கு பயிற்சி பெற்ற பலரும் சூழலியலுக்கு பாதிப்பில்லாத இவ்வகைத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய விளையாட்டுகள் எல்லாம் வெற்றி தோல்வியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவையாக இருக்கின்றனவோ தவிர, கூட்டு முயற்சி, நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்ப்பதாக இல்லை. நமது மரபு விளையாட்டான கொலகொலையா முந்திரிக்கா விளையாட்டை எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு கூட்டு முயற்சி இருந்தது. அதனுள் ஒரு பாடலும் இருந்தது. அது மட்டுமில்லாமல் நரியை மடக்கி ஆட்டைக் காப்பாற்றும் நல்லெண்ணத்தையும் வளர்ப்பதாக இருந்தது. இப்படியான விளையாட்டுகளை மீட்டெடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளேன். செம்மை வனத்தில் நடந்த பொங்கல் விழாவின் போது, நாடக நடிகர் விஜயகுமார் 15 விளையாட்டுகளைத் தொகுத்து ஒரு நாடகமாக அரங்கேற்றினார். குழந்தைகளிடமும் மரபு சார் வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் நோக்கோடு செம்மை மரபுப் பள்ளி துவங்குவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மரபுச்சுவை நூலில் உணவு வகைகளுக்கான குறிப்புகள் இருந்தன. மரபு தானியங்களைக் கொண்டு பலகார வகைகளும் செய்ய முடியும். பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வரகில் செய்த அதிரசமும், பனி வரகில் செய்த முறுக்கும் கொடுத்தோம். சாப்பிட்ட எல்லோரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டியதோடு செய்முறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். மரபு தானியங்களைக் கொண்டு பலகாரங்கள் செய்வது பற்றியான குறிப்புகளைக் கொண்டு அடுத்த நூலைத் தொகுக்கும் பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறேன்’’ எனும் காந்திமதி எம்.எஸ்.சி யோகா பயின்றுள்ளார் அது மட்டுமின்றி கலைத் துறையிலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

‘‘தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நாடகத்துறையில் முனைவர் பட்டத்துக்காக ‘‘தமிழ்த் திரைப்படங்களில் தமிழர் அடையாளங்கள்’’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். சங்ககாலத் தமிழர் வாழ்வியல் முறையையை சங்க கால இலக்கியங்கள் பதிவில் வைத்தன. அது போல சமகால வாழ்க்கை முறையை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வல்லமை சினிமா எனும் ஊடகத்துக்குதான் இருக்கிறது. தமிழ்த்திரைப்படங்கள் தமிழர் வாழ்க்கையை எந்த அளவில் உண்மையாகக் காட்டியிருக்கின்றன என்பதுதான் என் ஆய்வின் கரு. தமிழர்களின் இசைப் பண்பாட்டு அடையாளமான பறையாட்டம் நான் விரும்பிக் கற்றுக்கொண்டது. பண்பாடு மற்றும் வாழ்வியல் முறைகளில் தமிழினம் உலகுக்கே முன் மாதிரியாக விளங்கியது. நம் இன்றைய நிலையின் அலத்தைக் களைய வேண்டுமெனில் மீண்டும் நாம் நமது மரபைப் பின் தொடர்தலே ஆகச்சிறந்த வழி’’ என்கிறார் காந்திமதி.


- கி.ச.திலீபன், படங்கள்: பரணி ,நன்றி: குங்குமம் தோழி 

No comments:

Post a Comment