Saturday, October 31, 2015

பாதரச பயங்கரம்


நன்றாக கவனித்துப்பார்த்தால் தமிழகத்தில் இயங்கி வரும் ஒவ்வொரு தொழிற்சாலைக்குப் பின்னும் அதை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு அமைப்பேனும் இருக்கிறது. பொதுவாக ஒரு தொழிற்சாலை நிறுவப்படும்போது அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம் என்கிற மந்திரச் சொற்களால் மக்களை வசீகரித்து விடுகின்றனர். தங்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்கிற நம்பிக்கையில் அத்தொழிற்சாலைகளை மக்கள் அனுமதிக்கின்றனர். ஆனால் அவை வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்குவதை தாமதமாகத்தான் அவர்கள் உணர்கிறார்கள். கொடைக்கானலில் யூனிலிவர் நிறுவனத்தின் தெர்மாமீட்டர் தொழிற்சாலை ஏற்படுத்திய விளைவுகளும் அப்படிப்பட்டதுதான். உலகின் இரண்டாவது கொடிய விஷமாகக் கருதப்படும் பாதரசத்தைக் கொண்டு தெர்மாமீட்டர் தயாரித்த அந்நிறுவனத்தால் சோலைக்காடுகள் மற்றும் காப்புக்காடுகள் நிறைந்த கொடைக்கானலின் சூழலியல் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அதை விட முக்கியமானது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொண்டு வரும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள்தான். மாதவிடாய் கோளாறு, குறைபிரசவம், மலட்டுத்தன்மை, பூப்பெய்தாமை போன்ற பிரச்னைகளுக்கு பல பெண்கள் ஆளாகியுள்ளனர். சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு, பிறப்புக்கோளாறு, தோல், கண், பல் வியாதிகளுக்கு பல தரப்பினரும் ஆளாகியிருக்கின்றனர்.

சுற்றுலாத்தலமாக மட்டுமே அறியப்படும் கொடைக்கானலுக்குப் பின் இப்படியொரு சீர்கேடு புதையுண்டு கிடக்கிறது. மக்கள் போராட்டத்தின் காரணமாக அத்தொழிற்சாலை 2001ம் ஆண்டு மூடப்பட்டு விட்டாலும் கூட அதன் கழிவுகள் இன்னும் முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை. மழைப்பிடிப்புப் பகுதியாய் திகழ்கிற கொடைக்கானல் மலைப்பகுதி இக்கழிவுகளால் நாசகராமாகி உள்ளது. தீவிரமான இப்பிரச்னையைப் பற்றி பாண்டஸ்- இந்துஸ்தான் லீவர் லிமிடெட் முன்னாள் பாதரசப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் மகேந்திரபாபுவிடம் பேசினோம்...

‘‘அமெரிக்காவில் வாட்டர்டவுன் என்னுமிடத்தில் இயங்கி வந்த தெர்மாமீட்டர் தொழிற்சாலை, சூழலியல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்கிற காரணத்துக்காக தடைசெய்யப்பட்டது. அங்கு தடைசெய்யப்பட்ட அத்தொழிற்சாலைதான் 1984ம் ஆண்டு கொடைக்கானலில் கொண்டு வரப்பட்டது. 28 டிகிரி செல்சியஸில் பாதரசம் ஆவியாகிவிடும் என்பதால் அதற்கும் குறைவான தட்பவெப்பநிலை கொண்ட கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்தனர். ஆரம்பத்தில் பாண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தால் துவங்கப்பட்ட இத்தொழிற்சாலையை நாளடைவில் யூனிலிவர் நிறுவனம் கைப்பற்றியது. இத்தொழிற்சாலை துவங்கப்படும்போது கண்ணாடி தயாரிப்பதாகக் கூறிதான் அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறது. பாதரசம் என்னும் கொடிய விஷத்தைக் கொண்ட உற்பத்திக்கென சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பாதரசத்தின் பாதிப்புகள் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எந்த விதமான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. பாதரசம் கொடிய விஷம் என்பது பற்றி அறியாத நாங்கள் அதை சாதாரணமாக வெறும் கைகளில் கூட கையாண்டோம்.

எங்களுக்கென சீருடைகள் வழங்கப்பட்டிருந்தன. மூக்கை மூடிக்கொள்ள நாப்கினும், தலைக்கு தொப்பியும் வழங்கப்பட்டிருந்தது. எதற்காக இதனை வழங்குகிறார்கள் என்றே தெரியாமல் நாங்கள் அணிந்து வந்தோம். கொடைக்கானல் குளிரான பகுதி என்பதால் சீருடைகளை துவைத்தால் காய்வதற்கு இரண்டு, மூன்று நாட்கள் கூட ஆகும். இப்படியான சூழல்களில் சாதாரண சட்டை பேண்ட் அணிந்து கொண்டு கூட வேலைக்குச் சென்றிருக்கிறோம். சீருடை இல்லாமல் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் நாங்கள் பணிபுரிந்ததை அந்நிறுவனம் கண்டுகொள்ளவே இல்லை. திடம், திரவம், வாயு என்னும் மூன்று நிலைகளுக்கும் மாறுவது பாதரசத்தின் இயல்பு. தெர்மாமீட்டர் தயாரிப்பில் மொத்தம் 22 நிலைகள் உள்ளன. பாதரசத்தை திரவ நிலையில்தான் தெர்மாமீட்டருக்குள் உட்புகுத்த முடியும். அந்த நிலையின்போது 480 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சூடுபடுத்தப்பட்டு தெர்மாமீட்டருக்குள் பாதரசம் உட்புகுத்தப்படுகிறது. அப்போது வெளியாகும் ஆவியால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதோடு தொழிற்சாலைக்கு அருகில் இருந்த காடுகளிலும், பாம்பாறு அணையிலும் இந்த நச்சு ஆவி கலந்தது. பாம்பாற்றில் கலந்து அதன் மைய ஆறான வைகை ஆற்றையும் பாதித்தது. ஆண்டுக்கு சராசரியாக அந்நிறுவனம் 90லட்சம் தெர்மாமீட்டர்கள் தயாரித்தது. இத்தயாரிப்பில் சராசரியாக 20 லட்சம் தெர்மாமீட்டர்கள் உடைந்து வீணாயின. தயாரிப்பின்போது இது போன்ற இழப்புகள் தவிர்க்கவியலாததுதான். உடைந்த தெர்மாமீட்டரிலிருந்து வெளியாகும் பாதரசத் துகள்கள் எங்களது உடைகளில் ஒட்டிக் கொண்டன. இத்துகள்களால் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது எங்களது குடும்பத்தினரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இத்தொழிற்சாலையில் பணிபுரிந்த எல்லோரும் பெரும்பாலான நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்குமளவு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குளிர்பகுதியில் இது போன்ற உடல் நலக்கோளாறு ஏற்படுவது சாதாரணம்தான் என்கிற அளவில் நாங்கள் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. தொழிற்சட்டத்தின்படி தொழிற்சாலைகளுக்கான ஆய்வாளர் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். தொழிற்சாலை இயங்கிய 18 ஆண்டுகளில் தனியார் மருத்துவரை அழைத்து வந்து பெயரளவில் மட்டுமே மருத்துவப் பரிசோதனையை நடத்தினர். மாதத்துக்கு இரண்டு முறை எங்களது சிறுநீரைப் பெற்று வந்தனர். நாங்களும் ஏதோ விதிமுறை போல என்கிற அளவில் சிறுநீரை கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆலை மூடப்பட்ட பின் 2003ம் ஆண்டு எங்களது சிறுநீர் மற்றும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைத் தர வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டதற்கு 200 பேரது முடிவுகளை மட்டுமே கொடுத்தார்கள். சிறுநீர் ஆராய்ச்சி முடிவில் பலரது சிறுநீரில் 300-400 வரை மைக்ரோ கிராம் இருந்துள்ளது. 20 மைக்ரோ கிராம் இருக்கலாம் ஆனால் இவ்வளவு அதிகமாக இருந்தும் முடிவுகள் எங்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டன. இதை முன்னரே அறிந்திருந்தால் பாதிப்பிலிருந்து ஓரளவாவவது தப்பியிருப்போம். எவ்வித பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எங்களது வாழ்வையே சூறையாடி விட்டது’’ என்று ஆதங்கப்படுகிறார் மகேந்திரபாபு.

2000ம் ஆண்டில் பழனிமலை பாதுகாப்புக்குழு (PHCC) நடத்திய ஆய்வில் உலகின் இரண்டாவது கொடிய விஷமான பாதரசம், கொடைக்கானலில் பரவலாக இருப்பதாக ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன் பிறகுதான் அந்த ஆலை சூழலியலுக்கு எதிராக செயல்பட்டு வருவது குறித்தான விழிப்புணர்வே ஏற்பட்டிருக்கிறது.

‘‘சூழலியல் பாதிப்பு மட்டுமல்லாமல் சிலரது மரணத்துக்கும், உடல் ரீதியான பிரச்னைகளுக்கும் இத்தொழிற்சாலைதான் காரணம் என்பதை அப்போதுதான் உணர்ந்தோம். 2001ம் ஆண்டு அத்தொழிற்சாலையில் மொத்தம் 129பேர் பணிபுரிந்து வந்தனர். அந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி பழைய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தொழிற்சாலைக்கு எதிராக ஊர்வலத்தை நடத்தினோம். அடுத்த நாளான மார்ச் 8ம் தேதியே தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். மார்ச் மாதத்திலிருந்து நவம்பர் வரை உற்பத்தியே நடக்காமல் சம்பளம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

உடைந்த தெர்மாமீட்டர்களை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தனர். அந்த இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்களைக் கொண்டு புதைத்தை தோண்டி எடுத்து 98 டன் உடைந்த தெர்மாமீட்டர் கழிவுகளை தமிழகமெங்கும் காய்லாங்கடைகளில் விற்றுவிட்டனர். கொடைக்கானலில் உள்ள கடையில் 7 டன் விற்கப்பட்டிருந்தது. யாருமே அதை வாங்காததால் நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டு மழையிலும் வெயிலிலும் காய்ந்து கொண்டிருந்தது. அச்சமயங்களில் கொடைக்கானலில் சாலைகளில் பாதரசம் உருண்டோடியது. இதற்குப் பிறகுதான் இப்பிரச்னை பூதாகரமாய் உருவெடுத்தது.

2001ம் ஆண்டு நவம்பர் மாதம் பணிபுரிந்து வந்த 129 பேருக்கும் விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை அத்தொழிற்சாலை செயல்படுவதில்லை. தொழிற்சாலை இயங்கிய 18 ஆண்டுகளில் 135டன் பாதரசம் பயன்படுத்தப்பட்டு, 16.5 கோடி தெர்மாமீட்டர்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பல நூறு கோடிகள் வருவாயை ஈட்டிக் கொண்டது அந்நிறுவனம். இந்த ஆலை ஏற்படுத்திய தாக்கத்தால் 400 பேர் கண், பல், தோல் நோய்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் கோளாறு மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். 30 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்புக்கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு என்ன சொல்லப்போகிறது யூனிலிவர்? இதற்காகத்தான் நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் மகேந்திரபாபு.

ஆலைக்கு எதிரான போராட்டம்
இப்பிரச்னையில் களத்தில் நின்று பணியாற்றியவரும் சென்னை ஆதரவுக்குழுவின் உறுப்பினருமான நித்தியானந்தன் ஜெயராமனிடம் போராட்ட வரலாறு குறித்து கேட்ட போது...

‘‘2001ம் ஆண்டிலிருந்து ஆலைத் தொழிலாளர்கள், பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த ஷீலாராணிசுங்கத் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். 289டன் கண்ணாடி மற்றும் பாதரசக்கழிவுகளை கப்பல் மூலம் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பினார். உலக வரலாற்றிலேயே வல்லாதிக்க நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்குத்தான் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. முதல் முறையாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கழிவு கொண்டு செல்லப்பட்டது என்கிற வரலாறு இந்தப் போராட்டத்துக்கு உண்டு.

 ஆலை செயல்பட்ட ஆறரை ஏக்கர் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளிலும் பாதரசம் கலந்திருக்கிறது. கொடைக்கானல் என்பது நீர்பிடிப்பு பகுதி என்பதால் அலட்சியப்படுத்தாமல் முறையாக சுத்திகரிக்க வேண்டும். ஒரு கிலோ மண்ணில் பாதரசத்தின் அளவு பத்து மில்லி கிராம் அளவுக்குள் இருப்பது போல சுத்திகரிப்பதாக நிறுவனம் தெரிவித்தது. இங்கிலாந்து தரக்கட்டுப்பாட்டு அடிப்படையில் ஒரு கிலோ மண்ணில் 1 மில்லி கிராம் அளவு மட்டுமே பாதரசத்தின் அளவு இருக்கும்படி சுத்திகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆலை நிர்வாகமும் கூட்டு சேர்ந்து கொண்டு 10 மி.கி என்ற அளவை 25 மி.கி ஆக உயர்த்தியுள்ளனர்.
யூனிலிவர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3.6 லட்சம் கோடி ரூபாய். அந்நிறுவனத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் ஆண்டுக்கு 4800 கோடி ரூபாயை செலவழிக்கிறது. இப்படியான பணக்கார நிறுவனம் தனது வருவாயில் சொச்சம் ரூபாய்களை செலவழித்தாலே நாங்கள் கோரும் சுத்திகரிப்பை மேற்கொள்ள முடியும். தன்னை அன்னைதெரசா போல் காட்டிக்கொள்ளும் அதன் தலைவர் பால்போல்மேன் சுத்திகரிக்க வேண்டிய கடமையக் கூட செய்ய மறுக்கிறார். உலகத்தரக்கட்டுப்பாட்டு அளவில் சுத்திகரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வரை இப்போராட்டம் தொடரும்’’ என்கிறார் நித்தியானந்தன் ஜெயராமன்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நாமும்தான் பாதரசக்காற்றை சுவாசிக்கிறோம்... இது கொடைக்கானலின் பிரச்னை மட்டுமல்ல... தமிழகத்தின் பிரச்னை... நம் பிரச்னை

பாக்ஸ்
பாதரசத்தின் வேதியியல் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து வேதியியல் ஆசிரியர் ரவிசுந்தரபாரதியிடம் கேட்டபோது

‘‘பாதரசம் (hydrargyrum) என்பது நீர்மஉலோகம் ஆகும். உலோகங்களிலேயே மிகுந்த அடர்த்தியானது பாதரசம்தான். 13.6மில்லி அளவு பாதரசம் ஒரு கிலோ எடை கொண்டது எனும்போது அதன் அடர்த்தியை புரிந்து கொள்ள முடியும். பாதரசம் உடலுக்குள் சென்று ரத்தம், தசையில் கலந்துவிட்டால் அதனை எந்த சிகிச்சையாலும் பிரிக்கவே முடியாது. ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து மூளைக்குச் செல்லக்கூடிய ரத்தநாளங்களை அடைத்துவிடும். இதனால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்கள் ஏராளம். பாதரசத்தை வெப்பப்படுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் ஆவி நுரையீரல் மற்றும் சுவாசப்பிரச்னைகளை ஏற்படுத்தவல்லது. எந்த ஒரு உலோகத்துடனும் உடனடியாக வினைபுரியக்கூடிய இயல்புடையது. தங்கத்தைக் கூட வெள்ளி நிறத்தில் மாற்றிவிடும். இதன் அபாயத்தை உணர்ந்து வெளிநாடுகளில் இதை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பான முறையிலும் கையாள்கிறார்கள். நம் நாட்டில் சர்வ சாதாரணமாக கையாளப்படுகிறது. அது மட்டுமின்றி யார் நினைத்தாலும் வாங்க முடியும் என்கிற அளவில் பாதரச விற்பனை இருக்கிறது. பாதரசம் மனிதர்களுக்கும் சூழலியலுக்கும் தீங்கு விளைவிப்பதால் பாதரசத்துக்கு மாற்று வந்து விட்டன. ஆகவே பாதரசப் பயன்பாட்டை அறவே தவிர்த்துவிடுவது நல்லது’’ என்கிறார்.

- கி.ச.திலீபன்நன்றி : குங்குமம் டாக்டர் 

No comments:

Post a Comment