Saturday, October 31, 2015

அலுமினியம் அபாயம்


எச்சரிக்கை: அலுமினியப் பாத்திரங்களில் சமைக்க வேண்டாம்
இதுகாலம் வரையிலும் சமைக்கிற உணவுப்பொருட்களில்தான் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியிருந்தது. இப்போது பாத்திரங்களில் கூடவா? என்று நீங்கள் கேட்கலாம். வேதியியயலின் கூற்றுப்படி எந்த ஒரு பொருளையும் வெப்பப்படுத்தும்போது அதன் தன்மை மாறி விடும். அப்படியாக அலுமினியப் பாத்திரங்கள் வெப்பத்தாலும், அமிலப்பொருட்களுடன் வினை புரிவதாலும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விலை மலிவாகக் கிடைப்பதன் காரணமாக ஏழை மக்கள் பெரும்பாலானோர் அலுமினியப் பாத்திரத்தில்தான் சமைக்கிறார்கள். எனவே இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அத்தியாவசியமாகிறது.

அலுமினியத்தின் வேதியியல் தன்மை மற்றும் வினைபுரிதல் பற்றி விளக்குகிறார் வேதியியல் பேராசிரியர் சிவசாமி

‘‘அலுமினியம் என்பது ஒரு தனிமம் ஆகும். உலகில் அதிகம் கிடைக்கக் கூடிய தனிமங்களில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது (முதல் இரண்டு இடங்களில் ஆக்சிஜன், சிலிக்கன் இருக்கின்றன) அலுமினியம் என்பது பல விதங்களில் நமக்கு நன்மை தரும் உலோகம். இதன் அடர்த்தி மிகவும் குறைவு என்பதால் எடையும் குறைவாக இருக்கும். குறைவான அடர்த்தியாக இருந்தாலும் மிகவும் வலிமையானதாக இருக்கும். அலுமினியத்துடன் மெக்னீசியம்,  இண்டியம் போன்ற உலோகங்களை சேர்க்கும்போது மெக்னாலியம், இண்டாலியம், ட்யூராலுமின் போன்ற உலோகக் கலவைகள் கிடைக்கின்றன. குக்கரில் அழுத்தத்தைத் தாங்குவதற்காக மெக்னாலியம் பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் மேற்கூரைகள் ட்யூராலுமின் உலோகக் கலவையால்தான் கட்டப்படுகின்றன. non corrosion எனும் துருப்பிடிக்காத தன்மை அலுமினியத்துக்கு உண்டு.  அது மட்டுமின்றி எளிதாக வளைக்கலாம், நெளிக்கலாம் என்பதால் பாத்திரங்கள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இரும்பு மற்றும் மண் பாத்திரங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்திலேயே அலுமினியப்பாத்திரங்களை உற்பத்தி செய்து விட முடியும். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்துகிற தன்மையுடையது என்பதால் மின்சாரத்துறையில் அலுமினியக் கம்பிகளின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மருந்து அட்டைகள் துவங்கி கூல்ட்ரிங்ஸ் டின், சிப்ஸ் பாக்கெட் என பல வடிவங்களில் அலுமினியத்தை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தனை விஷயங்களிலும் நமக்கு நண்பனாக இருக்கும் அலுமினியம் சமையல் விஷயத்தில் மட்டும் எதிரியாகி விடுகிறது.

அமிலம் மற்றும் காரத்தன்மையுள்ள உணவுப் பொருட்களுடன் அலுமினியம் வேதிவினைபுரியக்கூடியது. சோடியமும் க்ளோரினும் வினைபுரியும்போது சோடியம்க்ளோரைடு கிடைப்பதைப் போல் உப்புடன் அலுமினியம் வினைபுரியும்போது அலுமினியம் காம்பவுண்ட் உருவாகிறது. அது போல அலுமினியத்துடன் எழுமிச்சை சாறு வினைபுரிந்தால் அது அலுமினியம் சிட்ரேட், தயிருடன் வினையாற்றினால் அது அலுமினியம் லாக்டேட், புளியுடன் வேதிவினை புரிந்தால் அது அலுமினியம் டார்டரேட், தக்காளியுடன் வினை புரிந்தால் அது அலுமினியம் பாஸ்ரேட் என எதனுடன் வினைபுரிகிறதோ அதற்கேற்ற தன்மைகளில் அலுமினியம் உப்பாக மாறி உணவினுள் கலந்து விடுகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அலுமினியப் பாத்திரங்களின் அடியில் aluminum pitting என்று சொல்லக்கூடிய கருப்புப் புள்ளிகள் ஏற்படுகிறது. இந்த வேதிவினை மாற்றம் சாதாரண தட்பவெப்பநிலையில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெறும். அதுவே வெப்பப்படுத்தினோம் என்றால் வேதிமாற்றம் விரைவில் நடந்து விடும்.

உதாரணத்துக்கு அமிலத்தன்மை - காரத்தன்மை இல்லாத நன்னீரை அலுமினியப்பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை கண்ணாடித் தட்டில் ஊற்றி ஆறவையுங்கள். ஒரு நாள் கழித்துப் பார்த்தீர்கள் என்றால் தண்ணீரில் அலுமினியம் ஹைட்ராக்சைடு உப்பு வீழ்படிவாக இருக்கும். சாதாரண தண்ணீருடனே இப்படியாக வினைபுரியும்போது அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் புளி, தக்காளி, உப்பு, எழுமிச்சை ஆகியவற்றுடன் வினைபுரியும்போது எவ்வளவு உப்பு நம்மிடம் தேங்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

உடலில் உட்புகும் அலுமினியத்தை நமது சிறுநீரகத்தால் சுத்திகரிக்க முடியாது. இதனால் அது உடலை விட்டு வெளியேறாமல் உடலின் பல பகுதிகளில் தங்கி விடும். நாற்பது ஆண்டுகள் அலுமினியப் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் 5 மில்லி கிராம் அளவு அலுமினியம் நமது உடலில் தங்கியிருக்கும். 5 மி.கி அலுமினியம் என்பதே உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதுதான். அதனால் அலுமினியத்தை மெல்லக் கொல்லும் விஷம் என்று சொல்லலாம். டெஃப்லான் கோட்டிங் போடப்பட்ட அலுமினியப் பாத்திரத்தைத்தான் நாம் நான் ஸ்டிக் என்று பயன்படுத்தி வருகிறோம். அதனை கீறல் விழாதபடி பயன்படுத்துமாறு எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் கீறல் விழும்போது அலுமினியம் வெளியே வந்து விடும் என்பதால்தான். dupont என்கிற நிறுவனம்தான் டெப்லான் கோட்டட் மெட்டீரியல்களைத் தயாரித்து வந்தது. டெஃப்லான் கோட்டிங்கால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்ட பின் அந்நிறுவனம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் சிவசாமி.

அலுமினியத்தை உட்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கு மாற்று குறித்தும் விளக்குகிறார் சித்தவர்ம மருத்துவர் பு.ம.சரவணன்

‘‘உடலில் தங்கும் அலுமினியம் சிறுநீரகம், எழும்பு மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளை செல்களின் வளர்ச்சியை பாதிப்பதால் மறதிநோய், எண்ணச்சிதைவு நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. அலுமினியம் என்பது சமைப்பதற்கான உலோகப்பொருள் அல்ல. அகழ்வாராய்ச்சிகள் புரியும்போது மண்பாண்டஙகளும், இரும்புப் பாத்திரங்களும்தான் கண்டெடுக்கப்படுகின்றன. ஆகவே சங்க காலத்திலிருந்தே இரும்பு மற்றும் மண் பாத்திரங்களைத்தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். மண் பாத்திரத்தில் சமைக்கும் போது சமைக்கின்ற பொருளின் இயற்கைத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். அதே போல் அதன் சத்துகள் பெருமளவில் அழியாது. அவ்வளவு சீக்கிரத்தில் உணவுப் பொருள் கெட்டுப்போகாது என்பதால் மண் பாத்திரங்கள்தான் ஆகச்சிறந்தது என்று சொல்லலாம்.

 இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது இரும்புச் சத்து இல்லாதவர்களுக்கு இரும்புச் சத்து கிடைக்கும். இந்தக் கூற்றை உண்மை என நிரூபித்துக் காட்டிய சம்பவமும் உண்டு. தென்னாப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலானோருக்கு இரும்புச் சத்து குறைவாக இருந்தது. சமைக்கும் பாத்திரத்தில் இரும்புத் துண்டைப் போட்டு சமைக்கும்படி அறிஞர்கள் வலியுறுத்தினர். இந்த அறிவுரையை ஆரம்பத்தில் யாரும் ஏற்கவில்லை. தென்னாப்பிரிக்க மக்களின் நம்பிக்கை சார்ந்த சின்னமாக மீன் சின்னம் இருக்கிறது. இரும்பில் மீன் சின்னம் செய்து அதனை சமையல் பாத்திரத்தில் போட்டு சமைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்கிற கருத்தைப் பரப்பினர். சில மாதங்களிலேயே இம்முறையில் சமைத்ததை சாப்பிட்டவர்களுக்கு இரும்புச் சத்து கூடியதை அந்நாட்டு மருத்துவர்கள் கண்டறிந்தனர். சூடு படுத்தப்படும்போது இரும்பு அயனிகள் இரும்புச் சத்தாக மாற்றமடைகின்றன. இருந்தாலும் ஒரு கட்டத்துக்கும் மேல் இரும்புச் சத்து உடம்பில் சேரும்போது அது உபரியாகி சிடரோசிஸ் என்னும் நோய் ஏற்படலாம்.

செம்புப் பாத்திரத்தில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்பட்டாலும் இதுவரையிலும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. செம்புப் பாத்திரத்தில் களிம்பு உற்பத்தியாகும் என்பதால் அடிக்கடி அதனை சுத்தப்படுத்திய பின்னரே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் உடல் ரீதியான உபாதைகளை ஏற்படுத்தி விடும். எல்லாவற்றையும் விட எளிமையான வழி என்றால் அது எவர்சில்வர்தான்.  இரும்பு+ தகரம்+ நிக்கல் + மேங்கனீஸ்+ கார்பன் என பல உலோகங்களின் கூட்டுக் கலவைதான் எவர் சில்வர்.  இதனை வெப்படுத்தும்போது கூட தீங்கை ஏற்படுத்தும் வேதிமாற்றங்கள் நடைபெறுவதில்லை. எவர்சில்வரில் பல வகைகள் இருக்கின்றன. விலை கூடுதலானாலும் யோசிக்காமல் அவற்றுள் தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். குக்கரில் கூட தற்போது எவர் சில்வர் குக்கர் வந்திருப்பதால் அதனை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. எவர்சில்வர் ஸ்டெயின்லெஸ் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கீறல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனுள் இருக்கும் நிக்கல் உணவில் கலந்து விடும்’’ என்கிறார் பு.ம.சரவணன்

ஒவ்வொன்றிலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டாக வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது பண்டைய வாழ்க்கை முறையைத்தான் நமக்கான பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நமது வாழ்க்கை முறை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேள்வியை எழுப்பினாலே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழியைக் கண்டறிந்து விடலாம்.

அலுமினியம் தவிர்ப்போம்!


- கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர் 

No comments:

Post a Comment