Sunday, August 2, 2015

தூக்கநாயக்கன்பாளையத்து வெள்ளைச்சுவர் 
குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு
என்.டி ராமராவை கிருஷ்ணனின் மனித அவதாரமாகவே பார்த்து தரிசித்தனர் தெலுங்கு மக்கள். திரையில் எம்.ஜி.ஆர் வாங்கிய ஒவ்வொரு அடியும் தன் மீது விழுவதாய் பதறித்துடித்தார்கள் தமிழ் மக்கள். உலகில் எந்தவொரு கலை வடிவத்துக்கும் கிடைக்கப்பெறாத அதீத வரவேற்பு சினிமாவுக்குக் கிடைத்ததென்றால் நம்மோடு நெருக்கமான, இருந்தும் அதனுள் மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தத்தைப் பிரதிபலித்ததுதான் காரணம் என்பது என் கருத்து. எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் சாட்டையில் அடிவாங்குகிற காட்சியைப் பார்த்த பலருக்கும் கண்களில் நீர் கோர்த்தது. சில அடிகள் விழுந்த பின், அதே சாட்டையால் எம்.ஜி.ஆர், நம்பியாரை திருப்பி விளாசியபடி நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று பாடுகையில் தங்களையும் மறந்து ஒரு உத்வேகத்துடன் கைத்தட்டல்கல்களைச் சமர்ப்பித்தனர். நாயகத்தனத்தைத்தான் மக்கள் ஆராதித்தார்கள். நடைமுறையில் இல்லாத குணாதிசயங்களோடும், நிகழ்த்த முடியாத வீரதீர செயல்களை நிகழ்த்திக் காட்டுபவனையே தங்களது நாயகனாக மக்கள் ஏற்றுக் கொண்டனர். எம்.ஜி.ஆர் ஒரு மேடையில் உரை நிகழ்த்தப்போகிறார் என்றால் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து இடம் போட்டு அமர்ந்து விடுவார்களாம். ஏனென்றால் அப்போதுதான் அவரை கிட்டத்தில் பார்க்க முடியும் என்பதற்காய். இப்படியாக திரைப்படங்களையும், கதாநாயகர்களையும் கொண்டாடிய சமூகம் இது. உலக வரலாற்றிலேயே தமிழ்நாட்டில்தான் திரைத்துறையிலிருந்து ஆறு முதலமைச்சர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதுவே மேற்சொன்னதற்கு சாட்சியம். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் சினிமா மீதான மோகமும், வீச்சும் வேறு. இப்பத்தியின் மையத்தைப் பற்றிக் கூறும் முன் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
 
சினிமாவை மிகையுணர்ச்சியுடன் அணுகுவது கிராம மக்களின் பொதுவான இயல்பு. எனது அப்பா சொன்ன ஒரு சம்பவம் அன்றைக்கு எனக்கு நகைப்புக்குரியதாய் இருந்தது. தூக்கநாயக்கன்பாளையத்தில் அண்ணாசிலைதான் மையமான இடம். ஐம்பதாண்டுகளுக்கு முன் அண்ணாசிலை இருக்கும் இடத்தில் ஓலைகளால் வேயப்பட்ட சினிமா கொட்டகை ஒன்று இருந்தது. படத்தின் பெயர் தெரியவில்லை ஒரு படத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக அந்த ஓலைக் கொட்டகையும் தீப்பிடித்து விட்டது. எல்லோரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வர, சிரத்தையெடுத்து தீயினை ஒருவழியாக அணைத்து முடித்தனர். அச்சம்பவத்தின்போது படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி, சினிமாவில் தீப்பிடித்தால் நிஜத்திலுமே தீப்பிடிக்கும் என்று பயந்து அதன் பிறகு சினிமாவுக்கே போகவில்லை என்று அப்பா சொன்னார். உண்மையில் இது நகைப்புக்குரிய விடயமல்ல. சினிமா அன்றைக்கு நிழலாக அல்லாமல் நிஜமாகப் பார்க்கப்பட்டது என்பதனை இச்சம்பவத்தின் மூலம் உணர முடிகிறது. வடிவேல் காமெடி ஒன்று, ஒரு படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆரின் கத்தியை நம்பியார் கத்தி பறித்து விட நிராயுதபாணியாக அவர் நம்பியாரின் கத்தியின் வீச்சிலிருந்து தப்பிக்கொண்டிருப்பார். இக்காட்சியைப் பார்க்கும் வடிவேல் “என் தலைவனுக்கு கத்தியில்லையா இந்தா தலைவா புடிச்சுக்கோ” என்று ஒரு அரிவாளை எடுத்து டிவி மீது எரிவார்.. அதற்கு பிறகு நடக்கும் களேபரங்கள் வேறு… கிட்டத்தட்ட இது போல நிஜத்திலொரு சம்பவம் நடந்து திரைச்சீலை கிழிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. நம்பியார் ஒரு ஆன்மிகவாதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு திரையுலகமே புகழ்பாடும். ஆனால் மக்களைப் பொறுத்தவரை நம்பியார் யார்? திரையில் எம்.ஜி.ஆருக்கு எதிரான ஒவ்வொரு காட்சியின்போதும் பல வசவுகளை வாங்கிக் கொண்டவர். இன்றைக்கும் விஜய் ரசிகர்கள் அஜித்தையும், அஜித் ரசிகர்கள் விஜயையும் சமூக வலைத்தளங்களில் கேலியாக சித்தரிக்கத்தான் செய்கிறார்கள். தொழிற்போட்டியை இப்படியாக அணுகுவது மூடத்தனம் என்பதை விட இது ரசிக மனநிலையின் உச்சம், அதாவது எனது நாயகன் முன்பு வேறு யாவரும் நிற்க முடியாது என்பதனை நிறுவுவதற்காக ஒரு ரசிகன் மேற்கொள்ளும் போராட்டம் என்று கூடப் பார்க்கலாம்.

80களின் இறுதியில் காவிரி டெல்டா பிரச்னை காரணமாக தமிழகமே வறட்சியைச் சந்தித்திருந்த சூழல் அது. அச்சமயத்தில் பச்சை தீட்டப்பட்ட வயல்வெளிகளையும், வாய்க்கால் வரப்புகளையும் படம் பிடித்து ஒரு சினிமா வெளியாகிறதென்றால் தமிழக மக்களின் புருவம் உயரத்தானே செய்யும். அப்படியாக எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தது பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம். தமிழ்நாடே வறட்சியில் இருக்கும்போது இப்படியொரு லொகேஷனை எங்கதான் பிடிச்சீங்க? என்று ஆனந்த விகடன் விமர்சனம் செய்திருந்தது. அக்காலகட்டத்தில் கிராமப்புறக் கதைக்களமென்றால் தமிழ்த் திரையுலகமே வந்து குவிந்த கோபிச்செட்டிப்பாளையத்தில்தான் பூந்தோட்ட காவல்காரன் படமாக்கப்பட்டது. நான் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன் என்பதுவும், எனது ஊர் பல படப்பிடிப்புகளைக் கண்டிருக்கிறது என்பதுவுமே இப்பத்தியினை எழுதுவதற்கான தகுதியாய் கருதுகிறேன்.

 தூக்கநாயக்கன்பாளையத்தில் 1958ம் ஆண்டு ஸ்ரீதேவி திரையரங்கம் துவங்கப்பட்டது. இது சி செண்டர் திரையரங்கம். படம் வெளியாகி முதல்கட்டமாக ஏ மற்றும் பி செண்டர்களில் ஓடி முடித்த பிற்பாடு அந்தப் படச்சுருள் சி செண்டருக்கு வரும். ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையத்துக்காரர்கள் பார்த்து முடித்து படத்தையே மறந்த பிற்பாடுதான் எங்கள் ஊரில் திரையிடுவார்கள். எனது பால்ய காலத்தில் டிக்கெட் விலை பெஞ்ச் 5 ரூபாய், சேர் 6 ரூபாய், ஷோஃபா 7 ரூபாயாக இருந்தது. எனது அப்பாவின் பால்ய காலத்தில் பைசாக்களில்தான் இருந்திருக்கும். உரிமைக்குரல் படம் வெளியான போது டிக்கெட்டுக்கு அடிதடியே நடந்ததாம். பலர் சுற்றுச்சுவரின் கம்பி வேலியைத் தாண்டிக் குதித்து சட்டை கிழிய, ரத்தம் சொட்டவெல்லாம் படம் பார்க்கப் போனார்களாம். ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் வந்தது என்றெல்லாம் என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனது காலத்தில் இது போன்றதொரு சம்பவத்தைப் பார்த்தது கிடையாது. எனது சிறுவயது எல்லோரையும் போலத்தான் எவ்வித இலக்குகளுமற்று மகிழ்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்திருந்தது. அன்றைய கால சூழலில் எனக்குப் பிடித்த இரண்டு விடயமென்றால் ஒன்று சாப்பிடுவது இன்னொன்று படம் பார்ப்பது. என் குடும்பம் மருத்துவரிடம் அணுகிய பிறகு எனது சாப்பிடும் ஆர்வத்துக்கு ஒப்புக்கொண்டது, ஆனால் படம் பார்க்கும் ஆர்வத்துக்கு குறுக்காலே நின்றது.

 கெஞ்சி, கீழே படுத்துப் புரண்டெல்லாம் அழுதிருக்கிறேன் படத்துக்குப் போக வேண்டுமென்று. என் அப்பா அனுப்ப மாட்டார். “அதெப்படிடா கண்ணுல தண்ணியே வராம அழுவுற” என்பார். நானும் முயற்சி செய்து பார்த்தும் கண்ணீர் வரவே இல்லை. அப்பாவுக்கு தமிழ் சினிமா மீது என்ன கோபமோ தெரியவில்லை. ஆனால் ஹாலிவுட் படங்களின் தமிழ் டப்பிங் போடும்போதும், ஜாக்கிச்சான் படங்கள் போடும்போதும் அவராகவே காசு கொடுத்து அனுப்பி வைப்பார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாங்கள் குடும்பத்தோடு சென்று பார்த்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

என்னை சினிமாவுக்கே அனுப்பாத அப்பா யார் என்பதை இங்கே நான் பதிந்தாக வேண்டும். பார்க்கிற எல்லோரையும் பங்கேற்கத் தூண்டுகிற வல்லமை சினிமாவுக்கு உண்டு. 80களில் சத்யராஜ், சிவக்குமார், கவுண்டமணி, மணிவண்ணன், பாக்யராஜ் என கொங்குப் பட்டாளம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த எண்ணற்ற பேருக்குள் சினிமாக் கனவுகள் புதைந்து கிடந்தன. அப்படியாக இயக்குனர் கனவைச் சுமந்திருந்திருந்தவர்தான் என் அப்பா. அவர் பிறந்து வளர்ந்த வீட்டின் பூஜையறைக் கதவில் ஒரு துளை இருக்கும். அத்துளைக்குப் பின்னாலும் ஒரு கதையினை உருவாக்கி வைத்திருக்கிறார். அத்துளையில் வேஸ்ட் நெகடிவை பொருத்தி, லென்ஸ் வழியே சூரிய ஒளியை நெகடிவ்க்கு பாய்ச்சும்போது உள் இருக்கும் வெள்ளைச் சுவரில் நெகடிவ் பெரிதொரு பிம்பமாய்த் தெரியும். இப்படியாக படம் காட்டுகிறேன் என்று சக வயதினரிடம் என் அப்பா சில பைசாக்களை கட்டணமாக வசூலித்திருக்கிறார். இது அவரின் பள்ளிக்காலத்தில் நடந்த நிகழ்வு. இச்சம்பவம் கூட என் அப்பாவின் சினிமாக் கனவுக்கு அடித்தளமாய் இருந்திருக்கலாம். அது மட்டுமின்றி கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலைச் சேர்ந்த பாக்கியராஜ் பெற்ற வெற்றியும் என் அப்பாவுக்கு உந்துதலை அளித்திருக்கும் என்பது என் அனுமானம்.

1985ம் ஆண்டுக்குப் பிற்பாடு, என் அப்பாவின் சினிமாக் கனவு நாடக வடிவில் வெளிப்பட்டது. “ஏகாம்பரம் என்ன சொல்ற” “மேற்கில் ஓர் உதயம்”” “”பொழுது விடிகிறது” “ஒரு குடிசையின் ஓரம்” “ஓர் புதிய பார்வை” என இவை ஐந்தும் என் அப்பாவின் எழுத்து-இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் ஆகும். இவற்றுள் “ஒரு குடிசையின் ஓரம்” நாடகம் பலமான வரவேற்பு பெற்ற காரணத்தால் கோபிச்செட்டிப்பாளையம், கோவை என மூன்று முறை அந்நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. குடிசையின் ஓரம் நாடகத்தின் கதையை அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். சம்பாதிப்பதையெல்லாம் பிடுங்கிக் குடிக்கும் குடிகாரக் கணவனை வைத்துக் கொண்டு தனது இரண்டு மகன்களைக் காக்கப் போராடும் ஒரு பெண்ணின் கதை அது. அதில் என்னை உருக்கிய இடம் ஒன்று, குடித்துக் குடித்து ஒரு கட்டத்தில் கணவன் இறந்து விடவும் ஊரின் முக்கியஸ்தர்கள் வீடுகளிலிருந்து எழவுக்கு சோறு கொடுத்து விடுவார்கள். பட்டினி அவர்களது வீட்டில் குடிகொள்ளும். பசிதாளாமல் மூத்த மகனின் உடல் நிலை மோசமாகி விடும். அப்போது இளைய மகன் அம்மாவிடம் கேட்பான் “ஏம்மா அண்ணன் செத்துப் போயிருமல்ல” உடனே அம்மா “ஏப்பா கேக்குற” அதற்கு “அப்பத்தான பெரிய ஊட்டுலர்ந்து சோறு குடுத்து வுடுவாங்க” என்பான். இந்தக் காட்சியை நான் விவரித்திருப்பதை விட என் அப்பா அழுத்தமாக விவரித்தார். நான் அழுது விட்டேன் என்பது மறுக்க முடியாத உண்மை. ஓர் புதிய பார்வை நாடகத்தை படமாக்குவதற்காக ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருந்தார். என் அம்மா எடைக்குப் போடக்காத்திருக்கும் குப்பைகளில் அதுவும் ஒன்றாகக் கிடந்தது. நான் எடுத்துப் படித்தேன். திரைக்கதை எந்த வடிவத்தில் எழுதப்படுமோ அப்படி எழுதியிருந்தார். திரைக்கதை நூல்களைப் படித்திருப்பாரோ என்கிற சந்தேகம் கூட என்னுள் வந்தது. என் அப்பாவுக்குள் இருந்த திரைப்பட இயக்குனர் எங்கே மரணித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. சினிமாக் கனவு என்பது என் தந்தையின் வாழ்வில் கனவாக மட்டுமே போய்விட்டது என்றெண்ணியதுண்டு. என் அம்மாவை காதலித்துக் கரம்பிடித்தார். அதற்கு பிறகான குடும்பப் பொறுப்புகள் கூட அவரை அது மேற்கொண்டு சினிமாவைப் பற்றி யோசிக்க விடாமல் செய்திருக்கலாம்.

என் அப்பா இளையராஜா ரசிகர் அல்ல வெறியர். உலகிலேயே இளையராஜாவுக்கு நிகரான இசையமைப்பாளர் கிடையாது என்கிற கருத்தில் இன்றைக்கு வரையிலும் நிலை கொண்டிருக்கிறார். தொலைக்காட்சியில் பாடல் என்று ஓடினால் இளையராஜா பாடலாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் அப்பாவின் எண்ணம். இருந்தும் எல்லா நேரங்களிலும் அது ஈடேறுவதில்லை. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என யாராக இருந்தாலும் அவருக்கு அந்த இசை எரிச்சலை ஏற்படுத்தவல்லது. “இதெல்லாம் ஒரு பாட்டுன்னு கேட்டுக்கிட்டிருக்கியே” என்பார். ஒரு கனிணி அதில் இளையராஜாவின் அத்தனை பாடல்களையும் பதிவேற்றிக் கொடுப்பதுதான் நான் தந்தைக்காற்றும் நன்றி என்று சொல்வார். மகனாக அந்த நன்றிக்கடனை ஆற்றத்தான் வேண்டும்.

கோபிச்செட்டிப்பாளையத்துக்கு சின்ன கோடம்பாக்கம் என்று இன்னொரு பெயரும் உண்டு. 80களில் துவங்கி 90களின் முற்பாதி வரைக்கும் படப்பிடிப்பு என்ற சொல்லுடனே கோபிச்செட்டிப்பாளையத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டிருந்தது. சோப்பு சீப்பு கண்ணாடி படம் துவங்கி கடைசியாக வானவராயன் வல்லவராயன் படம் வரைக்கும் சின்ன கோடம்பாக்கத்தைப் பார்க்க முடியும். “ஷூட்டிங் எடுங்குறாங்க” என்பது எங்களது பகுதி மக்களுக்கு ரொம்பவுமே பரிச்சயப்படுப்போன வார்த்தைதான். தூக்கநாயக்கன்பாளையத்திலிருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் வழியில் பவானி குறுக்கிடுகிறது, அதைக்கடப்பதற்கு ஆற்றுப்பாலம் ஒன்றிருக்கும். சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி-அனுஜா காட்சிகள் இடம் பெறுவது அந்த ஆற்றில்தான். இப்படியாக ஆற்றுப்பாலம், வயல்வெளிகள் என எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு ஊருக்கு வருபவர்கள் ஊரில் உள்ள பத்து பேரிடமாவது அதைச் சொல்லி விடுவார்கள். அதைச் சொல்வதில் அவர்களுக்கு விவரிக்கவியலாத மகிழ்ச்சி. இத்தகவலைக் கேட்டவுடன் கேட்கப்படும் கேள்விகள், என்ன படம்? யாரு கதாநாயகன்? யாரு கதாநாயகி? என இந்த மூன்று கேள்விக்குள்ளாகத்தான் இருக்கும். பிரபலமான கதாநாயகன், கதாநாயகி என்றால் உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். படப்பிடிப்பு பார்த்து முடித்து விட்டு இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி இன்பமுறுவார்கள். தாவணிக்கனவுகள், முந்தாணை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, எங்க சின்ன ராசா, ராசுக்குட்டி என பாக்கியராஜின் முக்கால்வாசிப் படங்கள் அங்கு படமாக்கப்பட்டவைதான். விஜயகாந்த்தும், சரத்குமாரும்தான் இங்கு அதிக அளவிலான படப்பிடிப்புகளில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பைப் பார்க்கும்போது நாம் சாதாரணமாகக் கடந்து செல்கிற ஒரு காட்சியைப் படமாக்க என்ன பாடுபடுகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
தூக்கநாயக்கன்பாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் இயக்குனர் ஆர்.வி. உதயக்குமார். எங்கள் ஊரில் அட்டியண்ணன் என்றொரு பஞ்சாயத்துத் தலைவர் இருந்தார். ஊரே மரியாதை செலுத்தும் அவரது குணாதிசயத்தைக் கொண்டுதான் எஜமான் படத்தில் வானவராயன் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். ஆனால் அவரது ஒரு படம் கூட கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் படமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என் அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு சினிமாவுக்கான கீற்று கிடைத்ததென்றால் என் அம்மா வழியில் இன்னும் இரண்டு கீற்றுகள் கிடைத்தன. ஒன்று தயாரிப்பாளர் ஜி.ராமச்சந்திரன் இன்னொன்று திரைத்துறையில் சில படங்களில் இணை இயக்குனராய் பணியாற்றிய சுரேஷ் மாமா. ஜி.ராமச்சந்திரன் என்கிற ஜி.ஆர் என் அம்மாவுக்கு தூரத்து சொந்தம். ஒரு வகையில் என் அம்மாவுக்கு மாமா முறை, எனக்கு தாத்தா முறை. மனுநீதி படத்தின் மூலம் தம்பி ராமையாவை இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் அவர்தான். என் பாட்டி வீட்டுக் கதவில் மனுநீதியின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும், ஜி. ஆர் வழங்கும் என்கிற இடத்தில் அவரது படமும் இருக்கும் அதனைக் காட்டி இவருதான் எங்கண்ணன் என்று என் பாட்டி பூரித்துப் போய்ச் சொன்னதை இன்றைக்கும் மறக்க முடியாது. அக்காலகட்டத்தில் எந்த உறவினர்கள் வீட்டுக்குச் சென்றாலும் அவரது பாட்டுதான் என்றிருந்தது. மனுநீதி படம் வெளியானது. போட்ட காசை எடுத்து கொஞ்சம் இலாபமும் பார்த்த படமாக அமைந்தது. அப்படத்தில் வடிவேல் மதிற்சுவர் தாண்டுகிற காமெடி எல்லோராலும் ரசிக்கப்பட்டது. முரளியிடம் முன்கதையை சொல்லும் கணக்குப் பிள்ளையாக ஜி.ஆர் நடித்திருந்தார். போஸ்டரில் புகைப்படம் பார்த்தே பூரித்த உறவினர்கள் அவரை திரையில் பார்த்ததும் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பற்றி சொல்லவா வேண்டும். சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த சவுண்ட் பார்ட்டி அவரது இரண்டாவது படம். முதல் படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகியான ப்ரதிக்‌ஷாவையே இரண்டாவது படத்திலும் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தில்  நாயகியின் குடிகாரத்தந்தையாக அரிதாரம் பூசியிருந்தார். மனுநீதி அளவுக்கு இந்தப்படம் போகவில்லையெனினும் சத்யராஜ் எனும் நட்சத்திர மதிப்பீட்டால் ஓரளவு போனது. அதற்கடுத்து அவர் காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி என்று இரண்டு படங்களைத் தயாரித்தது வரையிலும்தான் தெரியும். காசு இருக்கணும் படத்தில் தன் இளைய மகனையே கதாநாயகனாக்கியிருந்தார். இந்தப் படித்தில் இவர் தறித்திருந்தது திருநங்கை வேடம். ஜெயா டிவியில்தான் இப்படத்தைப் பார்த்தேன். இப்படத்தைப் பார்க்கும்போது நல்ல சினிமா குறித்தான அறிவும் தேடுதலும் என்னுள் இருந்தது. ஆகவே படம் பார்த்ததும் ஒற்றை வரியில் உப்புமா என்று எனக்குள் விமர்சனம் செய்து கொண்டேன். எங்க ராசி நல்ல ராசி படத்தை பார்க்கிற ஆர்வமே எனக்கு இருக்கவில்லை என்பதால் தினத்தந்தியில் விளம்பரத்தை மட்டும்தான் பார்க்க நேர்ந்தது. புதிய சிந்தனைகளுடனும், நல்ல திரைமொழியுடனும் படம் பண்ணக் காத்திருந்து, காத்திருந்து வாய்ப்பே கிடைக்காமற்போன பலர் இருக்கையில் கதைத் தேர்வே இல்லாமல் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் என்பது என் தனிப்பட்ட ஆதங்கமாய் இருந்தது. சிறிது காலம் முன் கிடைத்த தகவலின்படி அவர் கன்னடத்தில் படம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாய்க் கேள்விப்பட்டேன். என்னதான் இருந்தாலும் இன்னமும் தீர்ந்துவிடாத அவரது சினிமா ஆர்வம் குறித்து ஒரு வித பெருமிதமும் எனக்குண்டு.

அடுத்ததாய் சுரேஷ் மாமா. என் அம்மாவுக்கு ஒன்று விட்ட தம்பி. வேதா மற்றும் சில தமிழ்ப்படங்களில் இணை இயக்குனராய் பணியாற்றிருக்கிறார். வேதா படத்தின் பணிப் புகைப்படங்களை அவர் ஊருக்கு வந்த போது காட்டினார். அருண் விஜய், ஷீலாவுக்கு காட்சிகளை விவரிக்கும்படியான படங்களை பார்த்த சமயம் “மாமா பெரிய ஆளுடோய்” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். நானும் அவரும் கதை பேசியபடி தூக்கநாயக்கன்பாளையத்தை சுற்றியதெல்லாம் இன்னமும் மறையா சுவடுகள். ஏறத்தாழ பத்தாண்டுகள் இருக்கும், அப்போது அம்மா கேட்டார்
“சுரேஷு..நீ ஜி.ஆர்கிட்ட கத சொல்லாம்ல அவரு ப்ரொடியூஸ் பண்ணுவாருல்ல”
“அக்கா எனக்கு எந்த சொந்தக்காரங்க யார் தயவும் தேவையில்லை… என்னோட முயற்சியில நான் வந்து காட்டணும்” என்று மாமா சொன்ன போது ஒரு கணம் சிலிர்த்துப் போனேன். அடுத்ததாய் அம்மாவின் கேள்வி
“எப்ப சுரேஷு கல்யாணம் பண்ணப் போற?
“கொஞ்ச நாள்ல டைரக்டர் ஆயிடுவேன்கா ஆனதும் பண்ணிடலாம்” என்றார். பத்தாண்டுகளாயிற்று மேற்சொன்ன பதில் இன்னமும் முழுமை பெறவே இல்லை.

எனது திரைத்துறைக் கனவுக்கு ஆரம்பத்திலிருந்தே முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என் அப்பா. சினிமாதான் வாழ்க்கை என்று நான் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியாயிற்று. எங்களுக்குள்ளான இது குறித்த வாக்குவாதத்தின் போது அப்பா சொன்னார் “இப்பவெல்லாம் யாருடா சினிமா பார்க்குறாங்க” என்று.
 - கி.ச.திலீபன், நன்றி: நற்றிணை இலக்கிய காலாண்டிதழ்

No comments:

Post a Comment