Sunday, August 2, 2015

பழமும் நஞ்சு

காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டிட்டார்
கோலை ஊன்றி கூனி நடப்பவர்
வாழைக்குமரராய் வழி நடப்பாரே - இது சித்தமருத்துவத்தின் கூற்று.

 இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் உட்கொண்டால் கோலை ஊன்றி நடக்கும் வயோதிகர் கூட வாலிப முறுக்கோடு வலம் வருவார். இக்கூற்றினை மேற்கோளாகக் காட்டியதற்கான காரணம் என்னவெனில் மருந்தாகவும் இருந்த உணவுப் பொருட்கள் நமது வாழ்வியலில் இன்று அருகி விட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். காய்கறிகள் என்கிறோம், காய் என்றால் காய்கள், கறி என்றால்? என்கிற கேள்வியை எழுப்பினால் மிளகைத்தான் கறி என்று குறிப்பிடுகிறோம் என்கிற பதில் கிடைக்கிறது. இதன் மூலம் மிளகு என்பது நம் தமிழ் உணவு முறையில் எத்தகைய முக்கியத்துவத்துடன் விளங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நமது பண்டைய உணவு முறையில் அறுசுவைகளும் இருந்திருக்கிறது. காரத்துக்காக நாம் மிளகைத்தான் பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் மிளகாய் நம் மண்ணைச் சார்ந்த விளைபொருள் அல்ல. அன்றாட சமையலில் முக்கிய இடத்தை ப் பிடிக்கும் காய்களாகட்டும், நாம் விரும்பி உண்ணும் கனிகளாகட்டும் அவற்றுள் பெரும்பாலானவை வேற்று மண்ணைச் சார்ந்தவை. எந்த மண்ணில் விளைந்தால் என்ன விளைபொருள் விளைபொருள்தானே? என்று எதிர்கேள்வி கேட்கலாம். இடத்தையும், காலத்தையும் முதற்பொருளாகக் கொண்டு நம் தமிழ்க்குடிகள் குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐந்திணைகளை வகுத்தார்கள். அந்தந்த திணையினைச் சார்ந்த மக்கள் அங்கு விளையும் உணவுப்பொருளையே உட்கொண்டார்கள். இயற்கையின் கட்டமைப்பு இதுதான், அந்தந்த மண்ணுக்கு ஏற்ற தட்பவெப்பநிலையில் வாழும் மக்களுக்கு ஏற்ற உணவுதான் அம்மண்ணில் விளையும். முதல் விடயம் நாம் நமது மண்ணுக்கான விளைபொருட்கள் பலவற்றையும் புறக்கணித்து விட்டோம். சரி நாம் இன்றைக்கு உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் நம் மண்ணுக்கானதா? என்கிற கேள்வியை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தாலும் அவை எந்த அளவில் நமக்கு பாதகம் விளைவிப்பதாய் இருக்கின்றன என்பதனை அலசினோம்...

“திராட்சைக் கொத்துகள் ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுவதால்தான் திராட்சை மீது வெள்ளைப்படிமம் இருக்கிறது என்பது பரவலாக அறியப்பட்டதுதான். இன்றைய சூழலில் நாம் சாப்பிடுகிற அத்தனை உணவுப் பொருட்களுமே விஷம்தான்“ என்கிற பகீர் தகவலுடன் துவங்குகிறார் நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் ம.குமார்

வாழை
வாழைப்பழம் என்பது அன்றாட வாழ்க்கையில் நாம் உட்கொள்ளும் அத்தியாவசிய பழமாகி விட்டது. கடைக்குச் சென்று வாழைப்பழம் வாங்கும்போது கண்ணைப் பறிக்கும் அளவு மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுகிறோம். வாழை விரைவில் பழுக்க வேண்டும் என்பதற்காகவும், மஞ்சள் நிறம் மற்றும் பளபளப்புக்காக மேற்கொள்ளப்படும் சித்து வேலைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இயல்பாக எத்திலின் வாயுதான் வாழையைப் பழுக்கை வைக்கிறது. அதன் அடிப்படையை வைத்துக்கொண்டு அடைக்கப்பட்ட ஒரு அறைக்குள் வாழைப்பழங்களை வைத்து அதனுள் எத்திலினை வம்படியாக திணிக்கிறார்கள். எத்திலின் வாயு அங்குள்ள ஆக்சிஜனுடன் வினை புரிந்து வாழையை பழுக்க வைப்பதோடு, நல்ல மஞ்சள் நிறத்தோடு பளபளப்பாக்கி விடுகிறது. இதற்கு முன்னதாக வேறொரு யுக்தி கையாளப்பட்டது. அதாவது வாழைத்தார்கள் நிரம்பிய அறையினுள் ஊதுபத்தியைப் பற்ற வைத்து விட்டு காற்று உட்புகாதபடி அடைத்து விடுவர். அப்போது உள்ளிருக்கும் ஆக்சிஜன் கார்பன் டை ஆக்ஸைடாக மாறிவிடும், கார்பன் டை ஆக்ஸைடுக்கு ஒரு பழத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை இருப்பதால் வாழை பழுத்து விடும். இயல்பில் ஒரு பழத்தை நாம் முதிர்ந்த நிலையில் பறிக்கும்போது ஓரிரு நாட்களிலேயே பழுத்து விடும். அதன்பிறகு அதனை உட்கொள்வதைத்தான் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்தோம். தற்கால சூழலில் பழ விற்பனை என்பது வணிகமயமாக்கப்பட்ட பிறகு சீக்கிரம் பழுக்க வைத்து விற்பனை செய்து காசு பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்கிறது. அதன் விளைவுதான் இது போன்ற நாசக்கேடுகளுக்கு வழி வகுக்கிறது. இதில் கொடுமை என்னவெனில் எத்திலின் வாயுவை பயன்படுத்தலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்கிறது. விளைச்சலையும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டும்தான் அப்பல்கலைக் கழகம் கருத்தில் கொள்கிறது என்பதற்கு எண்டோசல்பான் போன்ற கொடிய நச்சுகளையும் வேளாண்பல்கலைக்கழகம் பரிந்துரை செய்திருக்கிறது என்பதே உதாரணம்.

மா
மாம்பழம் வெளியே பார்ப்பதற்கு நல்ல மஞ்சள் நிறத்திலும் பளபளப்புடனும் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நமக்கும் அதைப் பார்த்ததுமே ஆசை வந்து வாங்கிப் போய் அரிந்து பார்த்தால் உள்ளே வெள்ளையாகவும், புளிப்பாகவும் இருக்கும். கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதன் விளைவுதான் இது. இயற்கையாக மாம்பழத்தில் முதிர்ச்சியடையும்போது 0 எத்திலின் வாயு உற்பத்தியாகி அதனை பழுக்க வைக்கும். ஆனால் பிஞ்சிலேயே பழுக்க வைக்க வேண்டும் என்றால் அசட்டலின் வாயு தேவைப்படுகிறது. அசட்டலின் வாயுவை வெளியிடும் தன்மை கார்பைட் கல்லுக்கு உண்டு. அடைக்கப்பட்ட அறையினுள் மாம்பழக் கூடைகளை வைத்து அதனுள் சிறிதளவு கார்பைட் கல்லை பொட்டலமாக்கி வைத்து விடுவர். கார்பைட் கற்களிலிருந்து வெளிப்படும் அசட்டலின் வாயு மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. அசட்டலின் வாயுவும் எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வாயுதான். செயற்கையாக அசட்டலின் வாயுவை செலுத்தி பழுக்க வைப்பதன் மூலம் அதை உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால் உலக நாடுகள் பலவும் இம்முறைக்கு தடை விதித்துள்ளன.

மாதுளை

குறைந்த பட்சம் இருபது முறையாவது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட பிறகுதான் மாதுளை பறிக்கப்படுகிறது. பறிக்கப்பட்ட மாதுளைகளின் நல்ல அடர் சிவப்பு நிறத்துக்கும் கண் கவர்ச்சியாக தெரிவதற்கெனவும் பியூரிடான் போன்ற அதி விளைவை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்களைத் தெளித்து பேக் செய்கின்றனர். அதனால் மாதுளை சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு, பொலிவுடன் இருக்கும்.

ஆப்பிள்

சத்துகள் நிறைந்த பழம் என்று அதிகளவில் பரிந்துரைக்கப்படும் ஆப்பிள் குளிர்பிரதேசங்களில் விளையக்கூடியது. பழம் அழுகுவது என்பது இயற்கை எய்துதல். இப்படியாக எல்லா பழங்களுக்கும் குறிப்பிட்ட வாழ்நாள் இருக்கிறது. குளிர்பிரதேசங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நமது சந்தைகளுக்கு வந்து விற்கப்படும் ஆப்பிள் பறிக்கப்பட்ட நாளிலிருந்து பல நாட்களானாலும் அழுகாமல் இருக்கிறதே எப்படி? குளிர்பிரதேசத்திலிருந்து வெப்ப மண்டலப் பகுதிக்கு வரும்போது அந்த தட்பவெப்பநிலையை சமாளிப்பதற்காகவும், குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் இருப்பதற்காகவும் ஆப்பிள் மீது மெழுகு பூசப்படுகிறது. அந்த மெழுகு தரும் பளபளப்பைக் கண்டுதான் நாம் நல்ல பழம் என்று எண்ணிக் கொண்டு வாங்கிச் சென்று உண்கிறோம். அந்த மெழுகு உள்ளே செல்லும்போது வயிற்றுக்குள் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

தர்பூசணி

தர்பூசணியின் இயல்பான அளவும், அதன் இளம்பச்சை நிறமும் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் இன்றைக்கு கடையில் விற்கும் தர்பூசணிகள் கரும்பச்சை நிறத்தில் பூசணிக்காய் அளவில்தான் இருக்கிறது. அதை வாங்கிச் சாப்பிடும் நமக்கு தர்பூசணிக்கான சுவையும் கிடைப்பதில்லை, ஏனெனில் அவை வீரிய ஒட்டுரக தர்பூசணிகள். ஒரு ரகப் பயிரின் மகரந்தத்தூளை இன்னொரு ரகத்துடன் இணைத்து மகரந்தச் சேர்க்கை நடக்க வைப்பதன் மூலம் புதிதாய் ஒரு ரகம் கிடைக்கும் அதற்குப் பெயரே ஒட்டுரகம். இது இயற்கையாகவே நடக்கும் நிகழ்வு என்றாலும், இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற இரண்டு ரகங்களை தேர்ந்தெடுத்து அவற்றுள் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தி விளைவதுவே வீரிய ஒட்டுரகம். இயற்கை சுழற்சிப்படி ஒவ்வொரு பருவத்துக்கும் அதன் தட்ப வெப்பத்தை சமன் செய்யும் விதத்திலான பழங்கள்தான் விளையும். கோடைக்காலத்தில் விளையும் தர்பூசணி, நுங்கு ஆகியவை குளிர்ச்சியை தந்து வெப்பத்தை சமநிலைப்படுத்துபவை. கோடைக்காலத்தில் மட்டும் விளையக்கூடிய சீசன் பழமான தர்பூசணி இன்று எல்லா பருவங்களிலும் விளைவித்து விற்கப்படுகிறது. தர்பூசணி நம் மண்ணைச் சார்ந்த பழம் இல்லையென்றாலும் அதன் விதை ஒரு காலத்தில் விவசாயிகளிடம் இருந்தது. விவசாயிகளும் அந்தந்த பருவத்தின்போது பயிரிட்டு வந்தனர். ஆனால் இன்று தர்பூசணியின் விதைகள் தனியார் நிறுவங்களின் வசம் உள்ளது. எனவே எச்சூழலிலும் தர்பூசணியை பயிரிட வேண்டி அவை நிர்ப்பந்திக்கின்றன. கோடைக்காலத்தில் மட்டுமே விளையும் தர்பூசணியை வேறு பருவத்தில் விளைவிக்கும்போது அதன் தட்பவெப்பநிலையை தாங்கி வளர வேண்டும். அதற்காக ரசாயனத் தெளிப்பு மூலம் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இப்படியாக பயிரிட்ட நாள் தொடங்கி அறுவடை செய்யும் நாள் வரைக்கும் இரசாயனங்கள் துணையால் மட்டுமே அவை விளைவிக்கப்படுகின்றன. ஐஸ் பாக்ஸ், சுகர் பேபி என்பது போன்ற கவர்ச்சிகரமான பெயர்களை தாங்கி வரும் தர்ப்பூசணிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

பப்பாளி

பழங்களிலேயே தர்பூசணி மற்றும் பப்பாளி பழங்கள்தான் அதிக அளவில் ரசாயனத் தெளிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. இப்போது புழக்கத்தில் இருக்கும் ரெட் லேடி ரக பப்பாளி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுரகமாகும். தைவான் தட்பவெப்ப சூழலுக்கான ரகம் நம் மண்ணில் விளைவிக்க வேண்டுமானால் ரசாயனத்தை அள்ளித் தெளிப்பதைத் தவிர்த்து வேறு என்ன வழி இருக்க முடியும்? அத்தனை ரசாயனத்தையும் உட்கொண்டு வளரும் பப்பாளியை சாப்பிடும் நமக்கு என்னவாகும் என்பதை ஒரு கணம் யோசிக்க வேண்டும்.

கேரட்/உருளை/தக்காளி

மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட், விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. அப்படியாக கொண்டு செல்லப்படும்போது அடிபட்டு கேரட்டின் சில பகுதிகள் அழுகி விடுகின்றன. இதனால் சந்தையில் அடிபட்ட கேரட்டுகளை யாரும் வாங்க மாட்டார்கள். இதற்காக பூஞ்சாணக்கொல்லியை நீரில் கரைத்து அந்தக் கரைசலினுள் முக்கி எடுத்து பேக் செய்கின்றனர். இதனால் அடிபட்டாலும் அழுகாமல் புதுப்பொலிவான தோற்றம் தரும். இதே போன்று உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி கவர்ச்சிகரமான பளபளப்புடன் இருப்பதற்கென ஷூ பாலிஷ் பயன்படுத்தப்படுகிறது.

விதை அரசியல்

இன்றைக்கு நிறைய பழங்கள் சீட்லெஸ் என்கிற பெயரில் விதையற்ற பழங்களாகவே வருகின்றன. விதைகளை அகற்றி விட்டு உண்ணுவதற்கு சோம்பேறித்தனப்படும் நாம் அதனை ஒரு வரப்பிரசாதமாக எண்ணி வாங்கி உண்பதுண்டு. விதையற்ற பழங்களை இரண்டு விதமாகப் பார்க்கலாம். முதலாவது நாம் உட்கொள்ளும் எந்த ஒரு உணவுப் பொருளுக்கும் வித்தாற்றல் இருக்க வேண்டும். அதன் மூலம்தான் நமக்கு வித்தாற்றல் கிடைக்கும். விதையில்லாத பழங்கள் வித்தாற்றலற்றவை, அவற்றை உண்ணும் நமக்கு மலட்டுத்தன்மைதான் ஏற்படும். இரண்டாவது விதை நம்மிடத்தில் இருந்தவரை சரியான பருவத்தில் சரியான முறையில் பயிரிட்டு வந்தோம். விதைகள் தனியார் நிறுவனங்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்ட பிறகுதான் இப்படியான கலப்புகள் ஏற்படுத்தப்பட்டது. விதையற்ற பழங்கள் விளையும்போது இனி வரும் தலைமுறைகள் விதைக்காக தனியார் நிறுவனங்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற அவல நிலை ஏற்படும்.

நம்மிலிருந்து துவங்க வேண்டும்

பழங்கள் மட்டுமல்ல  நாம் உட்கொள்கிற எல்லா உணவுப்பொருட்களும் விஷம் என்கிற உண்மையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நுகர்வோராகிய நமக்கு நல்ல தரமான, உடல் நலத்தைச் சிதைக்காத பொருட்களைக் கோரும் உரிமை இருக்கிறது. ரசாயனங்களற்ற இயற்கை முறையில் விளைவித்த விளைபொருட்களை வாங்குவதென உறுதி கொள்ள வேண்டும். கண்ணுக்கு கவர்ச்சியாகத் தெரிவதெல்லாமே ஆபத்தானது என்பதனை உணர வேண்டும். கீரை வாங்கப் போகையில் பூச்சி அரித்திருக்கும் கீரையை புறக்கணித்து விட்டு பூச்சியே அரிக்காது தளதளவென இருக்கும் கீரையை வாங்கி வருகிறோம். கீரை என்றால் நிச்சயம் பூச்சி அரித்திருக்க வேண்டும். பூச்சி அரிக்காத கீரை என்பது பூச்சிகள்கூட உண்ணத் தகுதியற்ற கீரை என்பதுவே உண்மை. பசுமைப் புரட்சி நடந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1985ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள விளைபொருட்கள், அவற்றை உண்ணும் உயிரினங்களின் தாய்ப்பால் ஆகியவற்றில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையில் குழந்தை பெற்ற பெண்களில் பத்தில் எட்டு பேரது தாய்ப்பால் விஷமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை மூடி மறைக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்துதான் வெளியானது. அன்றைய நிலவரப்படியே இப்படி ஒரு அதிர்ச்சி என்றால் இன்றைக்கு சொல்லவா வேண்டும்? நஞ்சற்ற விவசாயத்துக்கு வித்திடும்படியாக அரசின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் அது மட்டுமே இதற்கு முழுத்தீர்வாக அமையும்’’ என்கிறார்.

விஷமாகிப் போன இம்மாதிரி உணவுப்பொருட்களை உண்ணும் நமக்கு என்னவெல்லாம் ஆகும்? விவரிக்கிறார் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் சுகுமார்
‘‘எனக்கு புகைபிடிக்கிற பழக்கம் கிடையாது, மது அருந்தும் பழக்கம் கிடையாது ஆனால் எனக்கு எப்படி புற்றுநோய் வந்தது? என்று பலர் வினவுவதை நாம் பார்க்க முடியும். புகையிலை பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் விகிதத்தை விடவும், விஷமாகிப்போன உணவை உட்கொள்வதால்தான் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுகிறது. வயிறு, உணவுக்குழாய், கணையம், பெருங்குடல் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு விஷம் தெளிக்கப்பட்ட உணவுகளே காரணம். நரம்பு சம்மந்தப்பட்ட றிகிஸிரிமி ஷிளிழிமிஷிவி, தோல் வியாதிகள், பெண்களுக்கு குழந்தையின்மை, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தவல்லது. பூச்சிக்கொல்லி தெளிப்பவர்கள் நூறு நாட்கள் தெளிக்கும்போது ரத்தப்புற்றுநோய், லிம்போமா மற்றும் சார்கோமா ஆகிய புற்று நோய்கள் ஏற்படுகிறது. பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் மற்றும் ஆண்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்பட பூச்சிக்கொல்லித் தெளிப்பு மூலக்காரணமாய் அமைகிறது. உலகின் வளர்ந்த நாடுகளில் உணவுப்பொருட்களில் ரசாயனத் தெளிப்பின் அளவைக் குறிப்பதற்காக பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மூன்று நிற சின்னங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பச்சை நிற சின்னம் இருந்தால் வாங்கி சாப்பிடலாம். ஆரஞ்சு நிற சின்னம் கொஞ்சம் பாதிப்பானது, சிவப்பு நிற சின்னம் குறியிடப்பட்டால் அதை வாங்கவே கூடாது. இம்மாதிரியான முறை நமது நாட்டில் இல்லை. பழங்கள், காய்களை சுத்தமாக ஓடும் நீரில் கழுவி உட்கொள்ள வேண்டும். தோல் உரிக்கக் கூடிய வகைகளை தோலை உரித்து உண்ணலாம், ஆனால் இது முழுத்தீர்வாக அமையாது. வீட்டுத் தோட்டம் மூலம் இயற்கை முறையில் காய்கறிகளை வளர்த்து பயன்படுத்துவது தகும்’’ என்கிறார்.

            -கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர், மார்ச்2015

No comments:

Post a Comment