Sunday, August 2, 2015

இவர்கள் மண் நேசர்கள்


மல்லியம்மன் துர்க்கம் ட்ரெக்கிங் குழுவினருடன் -2015

நமது ஆறாம் அறிவில் விளைந்த அறிவியலால் இயற்கையோடு இசைந்திருந்த நம் வாழ்வியல் தலைகீழ் விகிதமாய் மாறிப்போனது.  சூரியனை வைத்தே திசைகளையும், நேரத்தையும் கணக்கிட்ட மனித இனமோஇன்று மழை வருமா...” என்பதை தெரிந்து கொள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தை நாடிக்கொண்டிருக்கிறது. நகர்மயமாதலின் விளைவால் நாம் மேற்கொள்ளும் உச்ச பட்ச நுகர்வு நம் வாழ்க்கை முறையையே இயற்கையிலிருந்து அந்நியப்படுத்தி விட்டது. இந்நிலையில் இன்றளவிலும் தங்களது பாரம்பர்ய பழக்க வழக்கங்களோடு இயற்கையோடு இசைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பதியப்பட வேண்டிய ஒன்று. இதனைப் பதிவதன் மூலம் நாம் எவ்வளவு தூரம் இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறோம் என்பதை உணர முடியும் என் நோக்கோடு இக்கட்டுரையை எழுதுகிறோம்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண் என்ற குறளுக்கு சாட்சியாய் பவானி, மோயாற்றின் மணி நீரும், அணி நிழற்காடுகளையும் கொண்டு இயற்கை அழகின் பிரதிபலிப்பாய் விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் இருண்ட கிராமங்கள் பலவும் உண்டு. இன்றைய மனித வாழ்வின் இன்றியமையாத மின்சாரம், போக்குவரத்து என எவ்வித வசதிகளுமின்றி எப்படியேனும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களும் உண்டு. அப்படியொரு கிராமம்தான் மல்லியம்மன் துர்க்கம். ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இக்கிராமத்திற்கு பழங்குடி ஒருவரோடு பயணம் மேற்கொண்டோம். சத்தியமங்கலத்திலிருந்து மல்லியம்மன் துர்க்கம் செல்ல வேண்டுமானால் கடம்பூர் சென்று அங்கிருந்து கல் கடம்பூர் வழியாக 8 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பகுதியில் நடந்தே செல்ல வேண்டும். மலைப்பகுதியில் அடர்ந்த வனத்தினூடே நடந்து செல்வது என்பது மிகப்பெரிய சவாலான ஒன்று. ஏனெனில் யானைகள் நீர் அருந்த வரும் நீர்த்தேக்கத்தைத் தாண்டி நாம் பயணப்பட வேண்டும். அந்த சிறிய ஒற்றையடிப்பாதையில் அடி சறுக்காமல் கவனமாக நடந்து செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டிருந்தது எங்களது பயணம். வழி நெடுக உள்ள யானை லத்திகளை (சாணம்) வைத்தே யானை எப்போது வந்து சென்றது என்பதை இம்மக்கள் சரியாக யூகிக்கின்றனர்.

 நம்முடன் வந்த காளிச்சாமி என்பவருடன் பேசிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்எங்களுக்குன்னு இருக்குறது இந்தப் பாதை மட்டும்தான் நாங்க கடைகண்ணிக்கு போகனும்னாலோ, அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு போகனும்னாலோ இது வழியாய்த்தான் போகணும். ரொம்ப உடம்பு முடியாதவங்களை தொட்டில் கட்டி நாலு பேர் சேர்ந்து தூக்கிட்டு வருவோம். வர்ற வழியில ஏதாவது ஆச்சுன்னாலும் ஆனதுதான். ரொம்ப சிரமத்துக்கு நடுவுலதான் வாழ்ந்துகிட்டிருக்கோம் என்ன பண்ண முடியும் என்னதான் சிரமம் இருந்தாலும் சொந்த பூமியை உட்டுட்டு போயிட முடியுமா?” என்றார் அவர். இந்த பயணத்தின் போது முதுகில் பலாப்பழ மூட்டை சுமந்த படி வந்தவர்களையும், கைக்குழந்தையுடன் இந்த பாதையில் வந்தவர்களையும் பார்த்த போது மெல்லிய அதிர்ச்சி. மூன்று மணி நேர பயணத்துக்கு பிற்பாடு மல்லியம்மன் துர்க்கத்தை வந்ததடைந்தோம்.

இது இன்னைக்கு நேத்தல்ல 700 வருஷத்துக்கு முன்னாடி உருவான ஊரு. கொல்லிமலை அரப்பலேஸ்வரர்தான் எங்க குல தெய்வம் எங்களுக்கு கொல்லிமலைதான் பூர்விகமா இருந்திருந்திருக்கு. நாளடைவில்தான் இந்த ஊருக்கு எங்க முன்னவங்க குடியேறியிருக்காங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் மல்லியம்மனை மிஞ்சுன சக்தி எதுவும் இல்லை. மல்லியம்மன்  துணையோடுதான் நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கோம் அதனாலதான் எங்க கிராமத்துக்கு மல்லியம்மன் துர்க்கம்னு பேர்என்று ஊரின் வரலாற்றைச் சொல்லி முடித்தார் இளையப்பன்.

வாகன இரைச்சல், கைப்பேசியின் கதறல், ஓங்கு தாங்கி வளர்ந்து நிற்கும் கட்டடங்கள் என எவையுமின்றி ஒரு கிராமம் கிராமமாய் காட்சி தந்தது மல்லியம்மன் துர்க்கம். பழங்குடி மக்களுக்கே உரித்தான வாழாம்புல்லால் வேயப்பட்ட கூரை வீடுகள் பெரும்பான்மையான அளவில் இருந்தன. அங்கங்கு சில ஓட்டு வீடுகள். வாழாம்புல் கூரை கட்டுவதற்கு உழைப்பு மட்டுமே போதுமானது. மூங்கில் மூலம் சுற்றுச் சுவர்களை பின்னி அதன் மீது செம்மண் பூசி விடுகின்றனர். மேற்கூரையை மூங்கிலால் கட்டமைத்து பின்னர் வாழாம்புல்லால் வேய்கின்றனர். குளிர் காலங்களில் கதகதப்பாகவும், கோடை காலங்களில் குளிர்ச்சியோடும் புற தட்ப வெப்ப நிலையை மாற்றிக் கொடுப்பது இந்த வீடுகளின் தனிச்சிறப்பு.
பொதுவான ஆடைக்கலாச்சாரம்தான் இம்மக்கள் மத்தியிலும் உள்ளது. பெண்கள் புடவையும், ஆண்கள் வேட்டி சட்டையும், இளைஞர்கள் கால் சட்டையும் அணிந்த வண்ணம் உள்ளனர். சமகால நாகரிக வெளிப்பாடாய் அவை இருந்தாலும் இம்மக்களுக்கான கலாச்சார ஆடைகள் என்று தனியே எதுவுமில்லை.

சத்தியமங்கலம் பழங்குடி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது பாரம்பரிய உணவான ராகி களியை மறந்தே விட்டனர். ராகி விளைவிக்கப்பட்ட நிலங்களில் இன்று  மைதா மாவு ஆலைகளுக்காக மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் 10 ஆயிரத்திற்கும் மேல் கொள்முதல் செய்யப்படுவதால் இவர்களின் வாழ்க்கைத் தரமும் சற்றே உயர்ந்திருந்தாலும் இனி வரும் தலைமுறைக்கு ராகி என்ற தானியம் பற்றி தெரிய வாய்ப்புள்ளதா? என்கிற கேள்வி இருக்கும்போது இக்கிராம மக்கள் ராகியை பயிர் செய்கின்றனர். ராகி களியும், நியாய விலை அரிசியும் இவர்களது உணவாக உள்ளது. பிஞ்சு பலாக்காய் மற்றும் அவரை விதைகளின் கூட்டணியோடு இவர்கள் செய்யும் காரக்குழம்பு, ராகிக்களிக்கு பொருத்தமான ஒன்று. நெல் விளைவிக்க நல்ல நீர் வளம் வேண்டும் என்றுதான் பொதுக்கூற்று. வர நெல் என்று சொல்லக்கூடிய நெல்லை மானாவரி நிலத்திலேயே இம்மக்கள் பயிரிடுகின்றனர். மருத்துவத் தன்மை வாய்ந்த வரநெல்லில் சர்க்கரை சிறிதளவும் இல்லை. பண்டிகை நாட்களில் வரநெல்லில்தான் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுகின்றனர்.

மானம் பார்த்த பூமிஎன்று சொல்லப்படும் மானாவரி நிலத்தில் விவசாயம் புரிந்தாலும் இம்மக்கள் ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதில்லை. தங்களது கால்நடைகளின் சாணத்தை மட்டுமே இவர்கள் உரமிட்டு நல்ல விளைச்சலையும் பெறுகின்றனர். “யூரியா உப்பு போடுற பழக்கமெல்லாம் நம்மகிட்ட இல்லைங்க. அது நம்ம மண்ணைக் கெடுத்துடும். மாட்டுச்சாணியே போதும் அதுக்கு மேல வேற என்ன உரம் வேணும். மழையை நம்பி விதையைத் தூவுறோம் மழை வந்தாத்தான் உண்டு. இது வரைக்கும் மழை எங்களை ஏமாத்துனதில்லை. என்னதான் நல்லா விளைச்சல் இருந்தாலும் யானைக்கும், காட்டுப்பன்றிக்கும் போக மீதம் உள்ளதுதான் எங்களுக்கு. இது தெரிஞ்சேதான் நாங்க பயிர் பண்றோம்என நிலத்தைக் கொத்திக் கொண்டே நம்மிடம் பேசினார் ஆண்டியப்பன். அடர்ந்த காட்டுக்கு நடுவே இருக்கும் இவர்களது தோட்டங்களில் யானைகள் புகுந்து பயிர்களை மேய்வதும், இம்மக்கள் அவற்றை விரட்ட முடிந்த வரை போராடுவதும் அன்றாட வாடிக்கையான நிகழ்வுதான். விளைவிக்கின்ற பயிர்களில் 40 சதவிகிதம் யானைகளுக்கும், காட்டுப்பன்றிகளுக்கும் போக மீதம்தான் இவர்களுக்குக் கிடைக்கின்றது. தங்களது விளைச்சலையே சீர்குலைத்தாலும் இம்மக்கள் எவரும் அவைகளை சபிக்க மாட்டார்கள். யானை இறந்து விட்டால் சூடம் கொளுத்தி வணங்குவதை தலையாய கடமையாய் கொண்டுள்ள இம்மக்கள் யானையை சாமியாக பாவிக்கின்றனர். 

பலா, கொய்யா பழங்களை கடம்பூர் மற்றும் கெம்மநாயக்கன் பாளையத்திற்கு கொண்டு சென்று விற்பதும் இம்மக்களின் தொழிலாக உள்ளது. முதுகில் பழ மூட்டைகளை சுமந்து கொண்டு தாறுமாறான பாதையில் வியர்க்க விருவிருக்க நடந்து செல்லும் இவர்களிடம் பழங்களை சொற்ப விலைக்கும் வாங்கிக் கொண்டு இவர்களது உழைப்பினைச் சுரண்டுகின்றனர். வியாபாரிகள் கொடுக்கும் தொகை இவர்களின் கூலியாக உள்ளதே தவிர்த்து வருமானமாக இல்லை. அந்த சொற்ப வருமானத்தைக் கொண்டு அதே சாக்கு மூட்டையில் வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களது அறியாமையின் அர்த்தம் கூட அறியாமல் வீடு திரும்புகின்றனர். மலைப்பாதையில் இம்மக்கள் நாளொன்றுக்கு 16 கி.மீ தூரம் நடந்தே பயணம் செய்கின்றனர் என்பது அதிர்ச்சிகரமான தகவல் என்றாலும் அந்த நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

மல்லியம்மனை தங்களது முதன்மை தெய்வமாக வழிபடுகின்றனர். இம்மக்களுக்கான  ஆரவாரம், குதூகலிப்பு எல்லாம் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் மல்லியம்மன் கோவில் திருவிழாவின்போதுதான். பல்வேறு ஊர்களிலிருந்தும் வருகை புரியும் உறவினர்களை உபசரித்து தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறியபடி அந்த ஆண்டு சிறக்க வேண்டும் என மல்லியம்மன் மீது தங்களது பாரத்தை இறக்கி வைத்து விட்டது போன்றதொரு உணர்வில் அவர்கள் கலந்து விடுகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி கிடா வெட்டுதல், மாதேஸ்வரன் கோவிலில் குண்டம் திருவிழா என வைகாசி மாதம் இம்மக்களின் கலகலப்புக்கு சொந்தமானதாகிறது.

ஊரெங்கிலும் ஏரோட்டப்பட்டிருக்கும் நிலங்களும், பலா, கொய்யா மரங்களுமாய் தென்படுகின்றன. அவைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மும்முரமாக களையெடுத்தல், சாணமிட்டு உழுதிட்டுக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். பருத்த உடலுடன் அங்கு எவரையும் காண நேரவில்லை. உழைப்பு அவர்களது உடம்பை திடகாத்திரமாய் வைத்திருக்கிறது. சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் பற்றிக் கேட்டால் அப்படின்னா என்ன? என்கிற பதில்தான் உங்களுக்குக் கிடைக்கும். காமிராவும் கையுமாக ஊருக்குள் நுழைந்த நம்மிடம் விசாரித்த அவர்கள் இரவு உணவையும் தங்குமிடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். விருந்தோம்பலுக்கு உதாரணமாகவும் இவர்கள் விளங்குகிறார்கள். இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்த யானையை இவர்கள் கூச்சலிட்டு விரட்டும் காட்சியை பார்க்க நேர்ந்தது. எத்தனை தடைகள் வந்தாலும் தங்களது மண்ணை விட்டுக்கொடுக்க மறுக்கும் மண் நேசர்கள் இவர்கள். மாநகரப் புழுதியில் தவித்த நமக்கு இப்படியொரு கிராமமும் இம்மக்களும் காட்டிய ஒரு வாழ்க்கை மிகவும் புதியதாய் இருந்தது அந்த அனுபவத்தில் இருந்து மீள முடியாமல் மல்லியம்மன் துர்க்கத்திலிருந்து திரும்பினோம்.
                                         
-கி..திலீபன், நன்றி: புதிய வாழ்வியல் மலர், 2013

No comments:

Post a Comment