Sunday, August 2, 2015

அரிசி... அபாயம்


 
அரிசி... உலகில் அறுபது சதவீதத்துக்கும் மேலானோரின் பசி தீர்க்கும் ஜீவ நாடி. தமிழ் மக்களின் பிரதான உணவுப்பொருள் என்பது மட்டுமின்றி சடங்குகள் சம்பிரதாயங்கள் தொட்டு கலாச்சாரத்தோடு ஒன்றிப்போயிருக்கும் உணவுப் பொருள். நம் வழி வரலாற்றில் மேய்ச்சல் சமூகத்திலிருந்து உற்பத்திச் சமூகமாய் மாறி விவசாயம் புரிந்த போது பயிரிடப்பட்டது நெல்தான். இப்படியாக தன்னகத்தே அளப்பரிய கலாச்சார மற்றும் பண்பாட்டு அடையாளத்தைக் கொண்டிருக்கும் அரிசி, நாகரிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த நூற்றாண்டு மனிதர்களின் உட்சபட்ச நுகர்வுக் கலாச்சாரத்தால் சிதைவுற்றுப்போயிருக்கிறது. ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் பெயரே புரட்சி, ஆனால் பசுமைப் புரட்சி விளைவித்ததோ நெற்பயிருக்கும் அது சார் பல்லுயிர்ச் சூழலுக்குமான சீர்குலைவு. ஆயிரக்கணக்கான நெல் ரகங்களை அழித்ததும், எல்லோரையும் நோயாளிகளாக்கியதும்தான் பசுமைப்புரட்சி நிகழ்த்திய சாதனை என்பது இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

‘‘இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரங்களும், 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லிகளும் இறக்குமதி செய்யப்படுகின்றது. உரப்பயன்பாட்டில் முதலாவது இடத்தில் பஞ்சாப்பும், அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலப் பகுதிகளில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக அளவிலான உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.  chlorpyrifos மற்றும் cypermethrin ஆகிய இரண்டு பூச்சிக்கொல்லிகள்தான் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. chlorpyrifos பூச்சிக்கொல்லி உலகெங்கிலும் வீடுகளில் உள்ள எறும்பு, கரப்பான் பூச்சிகளை கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலுள்ள அதிக நச்சுத்தன்மை காரணமாக 2001ம் ஆண்டு அமெரிக்கா இதை தடை செய்தது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பம் கலைதல், குறைப்பிரசவம், நோய்த் தொற்று ஆகியவற்றையும், பொதுவானதாக மனச்சோர்வு, மனச்சிக்கல், தூக்கக் குறைபாடுகள், பாலுணர்வு குறைபாடுகள், மூச்சிரைப்பு நோய், நுரையீரல் புற்றுநோய், நரம்பு மண்டல வியாதிகள், குமட்டல், வாந்தி, பேதி, பக்கவாதம், தசை செயலிழப்பு ஆகியவை இப்பூச்சிக் கொல்லியினால் ஏற்படுகிறது. இது நீர் நிலைகளில் கலக்கும்போது மீன், தேனீக்கள், ஆடு, மாடு ஆகிய உயிரினங்களிடத்திலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. cypermethrin பூச்சிக்கொல்லியை நியூரோ டாக்சின் எனப்படும் நரம்பு மண்டலத்தை நச்சுப்படுத்துவது என்றும் சொல்லலாம். எறும்பு, கரப்பான் பூச்சி சாக்பீஸ்களில் இப்பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல், வலிப்பு நோய், ரத்த நரம்புகளை அழித்தல் ஆகிய விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. ரசாயன உரங்களான யூரியா, பொட்டாஷ் போன்றவை சிறுநீரக கோளாறு, வயிற்று உபாதைகள், உடல் பருமன், ஹார்மோன் இயக்கக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்ததற்கான முக்கியக்காரணம் ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும்தான். உரப் பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலம்தான் புற்றுநோய் எண்ணிக்கையிலும் முதலிடம் வகிக்கிறது. அங்கு குடும்பத்துக்கு ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் புற்றுநோயின் எண்ணிக்கை  அபரிமிதமாக உயர்ந்துள்ளது’’ என்கிறார் சித்த வர்ம மருத்துவரும், சமூக ஆர்வலருமான பு.மா.சரவணன்

செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தி அரிசி விளைவிப்பது ஒரு புறமென்றால், அரிசியே செயற்கையாக தயாரிக்கப்படுகிறது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலக சந்தையில் எந்த ஒரு பொருள் அறிமுகமானாலும் அதே போன்றொரு போலியைத் தயாரித்து வெளியிடுவதில் முதன்மையான நாடு சீனா. சில காலம் முன் தமிழக சந்தையில் சைனா மொபைல்களின் ஆதிக்கம் இருந்ததை நாம் அறிவோம். அடுத்த அதிரடியாக ப்ளாஸ்டிக் அரிசியைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு கொரியப் பத்திரிக்கை ஒன்று, சீனாவில் தயாரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் அரிசி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், சாதாரண அரிசிகளைக் காட்டிலும் குறைந்த முதலீட்டில் கிடைப்பதால் வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக் கிழங்கு, ப்ளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பசைகளைப் பயன்படுத்தி இந்த அரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசி சமைக்கப்பட்ட பிறகும் கூட கல்லைப் போன்று கெட்டித் தன்மையுடனேயே இருக்கும். மூன்று கிண்ண அளவு ப்ளாஸ்டிக் அரிசியை உட்கொள்வது இரண்டு பாலிதீன் பைகளை சாப்பிடுவதற்கு சமமானது. இந்த அரிசி கூடிய விரைவில் இந்தியாவுக்குள் நுழையவிருக்கிறது.

நாம் எல்லாவற்றிலும் கவர்ச்சியைத்தான் விரும்புகிறோம், அரிசியும் கூட அதற்கு விதி விலக்கல்ல. கண்ணில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லும் நமக்கு அரிசி குறித்தான சரியான புரிதல் இல்லை. முதலில் நமது பண்டைய உணவு முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் எத்தகைய மாற்றத்தினை சந்தித்திருக்கிறோம் எனத் தெரிந்து கொள்வதும் அவசியம்.

நெல் பற்றிய ஆய்வாளரும் “நமது நெல்லைக் காப்போம்” என்கிற பிரச்சாரம் மூலம் பாரம்பர்ய அரிசி ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் இருப்பவருமான நெல் ஜெயராமனிடம் நமது பாரம்பர்ய அரிசிகள் பற்றிக் கேட்டபோது

மனிதனுக்கு மட்டுமானதல்ல உழவு

“ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட பிணைப்பைக் கொண்டதுதான் இயற்கை என்பதற்கு கண் முன் நிற்கும் சாட்சியம் விளை நிலங்கள்தான். விளை நிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்ன பறவைகள் வரும். பறவைகளின் எச்சம் மண்ணுக்கு உரமாகும். அடி காட்ல நடு மாட்ல நுனி வீட்ல என்கிற பழமொழியை நம்மாழ்வார் பெரும்பாலான கூட்டங்களில் சொல்வார். ஐந்தடி வரை வளர்ந்திருக்கும் நெற்கதிரை அறுவடை செய்து, அடியில் வைக்கோலை விட்டு விடுவார்கள் அது மண்ணுக்கு உணவாக இருந்தது. அறுவடை செய்த கதிரை அடித்து நெல்லை எடுத்துக்கொண்டு வைக்கோலை மாட்டுக்குக் கொடுத்தார்கள். நெல்லை குத்தி அரிசியைப் பிரித்தெடுத்து உமியை மாட்டுக்குக் கொடுத்தார்கள். மாடு அதனை உண்டு விட்டு போடும் சாணம் மண்ணுக்கு உரமானது. இப்படியாக விளைநிலங்களில் ஒரு உயிர்ச்சூழல் நிலவியது.

 அரிசி என்பது உணவுப்பொருள் மட்டுமல்ல, பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தமிழர் வாழ்வின் மங்கள, அமங்கள நிகழ்வுகளில் அரிசியும் அங்கம் வகிக்கிறது. மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருங்குருவை, காட்டுயானம், குழியடிச்சான், குள்ளங்கார் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றார்கள். நமது பாரம்பர்ய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் அதிக ஊட்டச்சத்து கொண்டதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் விளங்கியது. இவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது மாப்பிள்ளை சம்பா. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உரிய நெல். இளைஞர்களை முறுக்கேற்றும் சக்தி கொண்டிருப்பதால் இது மாப்பிள்ளை சம்பா என்று காரணப்பெயராக அழைக்கப்பட்டது. மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து வடித்து, அதன் நீராகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் உட்கொண்டு வந்தால் எப்படிப்பட்ட நோயும் குணமாகும். இப்படியாக ஒவ்வொரு ரகத்துக்கும் தனித்துவமான மருத்துவ குணம் இருப்பது போல இவை இயற்கைச்சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய வலுவுள்ளவை என்பதும் குறிப்பிட வேண்டியது. பசுமைப்புரட்சிக்குப் பின்னரான தலைகீழ் மாற்றங்களின் விளைவு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை பத்துக்குள் அடக்கி விட்டது. ஒரு காலத்தில் அரிசியை பணம் கொடுத்து வாங்குவது கௌரவக் குறைச்சலாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் அவரவர் தேவைக்கான உணவை அவர்களே உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். பெருகி வரும் நகர்மய சூழல் கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயப் பரப்பை சுருக்கிக் கொண்டே வருகிறது. நமது பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து விளைவிப்பதன் மூலம் நோயற்ற வாழ்வுக்கு அடிகோடிடலாம்” என்றார்.

இயற்கை என்பது தன்னைத்தானே விளைவித்துக் கொள்ளும் என்பதுவே இயற்கை விவசாயத்தின் அடிப்படை. உணவு உற்பத்திப் பெருக்கத்துக்காக நடத்தப்பட்ட பசுமைப்புரட்சியில் கொண்டு வரப்பட்ட இரசாயன உரங்கள் நம் மண்ணின் உயிர்த்தன்மையை கொன்று தின்றது. உண்ணும் உணவை விஷமாக்கி பற்பல நோய்களுக்கு மக்களைத் தள்ளியது. இதன் பின்னரே இயற்கை விவசாயத்தின் மீதான அதிர்வலைகள் மக்களிடையே ஏற்பட்டு இயற்கைக்கு திரும்புவோம் என்கிற முழக்கம் தீவிரமாய் எதிரொலிக்கிறது. பசுமைப்புரட்சி ஏற்படுத்திய வடுக்களைப் பற்றி விவரிக்கிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து.

பசுமைப்புரட்சி எனும் அபத்தம்

“உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு நெல் மற்றும் கோதுமை உற்பத்தியைப் பெருக்குவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பசுமைப் புரட்சி. உற்பத்திப் பெருக்கத்தை மட்டுமே கணக்கில் கொண்ட நேரு அரசு அதன் தீவிளைவுகளைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. நேருவின் பார்வை மேலோட்டமான பார்வையாக மட்டுமே இருந்தது. அமெரிக்காவின் சார்பை விட்டு விலக வேண்டும் என்று சொன்ன நேருதான் உலகப்பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் நார்மன் போர்லாக் எனும் அமெரிக்கரின் வழியைப் பின்பற்றினார். பசுமைப்புரட்சி என்பதே அவசரத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு முடிவுதான். ஏனென்றால் 1943ம் ஆண்டு ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் ஏற்படுத்திய அச்சுறுத்தல்தான் இந்த அவசர முடிவுக்குக் காரணமாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே உணவு உற்பத்தியில் நமக்கு எவ்விதப் பிரச்னையும் இருந்திருக்கவில்லை அதைப் பகிர்ந்தளிப்பதில்தான் சிக்கல் இருந்திருக்கிறது. வங்காளப் பஞ்சம் ஏற்பட்ட அதே ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அரிசி உட்பட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றாலும் இயற்கை விவசாயத்தின் மூலம் அது சாத்தியமே. வினோபாபாவே, ஜே.சி.குமரப்பா போன்றவர்கள் அன்றைய காலங்களில் இயற்கை விவசாயத்தை தீவிரமாக முன்னிறுத்தி வந்தார்கள். இவர்களைப் போன்ற செயல்பாட்டாளர்களோடு கலந்து பேசியிருந்தால் ஆரோக்கியமான பசுமைப்புரட்சி நடந்திருக்கும். ரசாயன உரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விவசாயத்திற்கு நீர், இரசாயன உரம்,  மனித உழைப்பு என அதிக உள்ளீடு தேவைப்பட்டது. அதிக விளைச்சலைக் கொடுக்கும் குறிப்பிட்ட பத்து ரகங்களுக்குள் மட்டுமே விவசாயம் சுருக்கப்பட்டு விட்டதால் மருத்துவ குணம் வாய்ந்த, இயற்கைச் சீற்றங்களைத் தாங்கக்கூடிய ரகங்கள் எல்லாம் மறுக்கப்பட்டு விட்டன. நெல் உற்பத்தி வணிகமயத்துக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் சிறுதானியங்களான ராகி, கம்பு, சாமை, திணை ஆகியவற்றின் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது. பல விதமான பயிர்களை நடவு செய்து வந்த மக்களை கவர்ச்சித் திட்டங்கள் மூலமாக நெல்லைப் பயிரிட வைத்த நிகழ்வுகளும் உண்டு.

நமது மண் இரசாயன உரங்களால் உயிர்த்தன்மை இழந்து நிற்கிறது. அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். இயற்கைக்குத் திரும்பி உயிரி பண்ணையம் மற்றும் பயிர் பண்ணையத்தை முன்னிறுத்தி இயற்கையான வழியில் உணவை உற்பத்தி செய்தலே உண்மையான பசுமைப் புரட்சி. இயற்கை ஆர்வலர்கள், களப்பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்களோடு கலந்து பேசி இயற்கை வழியிலான பசுமைப்புரட்சிக்கு வித்திட வேண்டும். இயற்கை வழியிலான விவசாயமே நிலைத்த தன்மையுடையது என்பதை அரசு உணர வேண்டும். இந்தியாவில் சிக்கிம் அரசு நீண்ட காலமாய் இயற்கை விவசாயத்தை முன் மொழிவதாலும் அது சார் திட்டங்களை வகுத்திருப்பதாலும் சிக்கிமில் நூறு சதவிகிதம் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் இயற்கை விவசாயம் பெரும்பான்மையாக நடைபெற்று வருகிறது. பீகார், உத்தரகண்ட் மாநிலங்களில் அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திராவில் அதி தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்த விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடு பொருள் செலவு குறைந்து நல்ல விளைச்சலும் கிடைப்பதால் நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்த மக்கள் இப்போது கிராமங்களுக்கே திரும்பி ஆர்வத்துடன் விவசாயம் புரிகின்றனர். ஆந்திராவில் இன்று முப்பது லட்சம் ஏக்கரில் பூச்சிக்கொல்லியற்ற விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

தமிழகத்திலும் இதே போன்ற நிலைமையை உருவாக்க Organic policy trasting commity  மூலமாக 2012ம் ஆண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. உணவு உற்பத்தியில் ஏற்படும் சீர்குலைவுகள் விவசாயிகளின் பிரச்னை மட்டும் கிடையாது. விளைவித்ததை நுகரும் நமது பிரச்னையும் கூட என்கிற பொதுப்பார்வையோடுதான் இப்பிரச்னையை அணுக வேண்டும். நம் சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் என எவற்றிலும் பஞ்சம் குறித்தோ அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தோ ஒரு சான்று கூட இல்லை. இயற்கை வழியிலான விவசாயத்தின் மூலம் தன்னிறைவு அடைய முடியும் என்பதற்கு இதற்கு மேலுமா உதாரணம் வேண்டும்.

அரிசியின் மருத்துவ மகத்துவம் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்

தவிர்க்கக் கூடாத அருமருந்து

Rice bible என்கிற நூலில் இந்தியாதான் அரிசியின் தாயகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அரிசி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.ஆர்.ஐ-யின் தலைவர் ரிச்சாரியா, இந்திய அளவில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வகையான அரிசி ரகங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்தியா அரிசி உற்பத்திக்கு இவ்வளவு சிறப்புகள் பெற்றிருப்பது ஒரு புறமிருந்தாலும் நம் வெப்ப மண்டல நாட்டுக்கு ஏற்ற உணவு அரிசிதான். அதிக கார்போ ஹைட்ரேட் இருப்பதால் உடல் பருத்து விடும், சர்க்கரை நோய் கூட வரலாம் என்கிற தவறான எண்ணத்தை மனதில் கொண்டு அரிசியை தவிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். அரிசி மீதான இது போன்ற பார்வையை முதலில் விட்டொழிக்க வேண்டும். அரிசியைத் தவிர்ப்பது நம் உடல் நலனுக்கு ஏற்றதல்ல. அரிசி சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படும் என்பது தவறான கருத்து. உடல் பருமனுக்கு மூலக்காரணம் உடல் உழைப்பு இல்லாததுதானோ ஒழிய அரிசி காரணமாகாது. “நல்ல நீரிழிவை போக்குங்கான் மெல்ல பசியளிக்கும் மணிச்சம்பா” என்று சித்த மருத்துவத்தில் ஒரு மேற்கோள் உள்ளது. நீரிழிவைப் போக்கக்கூடிய தன்மை சில ரக அரிசிகளுக்கு இருக்கிறது. நமது முன்னோர்கள் அரிசியை உணவாக உட்கொண்டுதான் திடகாத்திரமாகவும் அதிக ஆயுளோடும் வாழ்ந்தார்கள். எந்த நோய்களும் தாக்காத அளவிலான எதிர்ப்பு சக்தியை அரிசியிலிருந்தும் தொடு உணவான காய்கறிகளிலிருந்தும் பெற்றார்கள். இன்றைக்கு நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை அதிக ஆயுளும் இல்லை என்பதற்கு காரணம் நாம் உட்கொள்ளும் எதுவுமே இயற்கையில்லை என்பதுதான்.

ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களில் ஒரு போதும் உயிர்த்தன்மை இருக்காது. காய்ச்சல், தலைவலி போல புற்று நோய் மலிந்து கிடக்கிறது. முன்பெல்லாம் பணக்கார வியாதி என்றழைக்கப்பட்ட இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயப் பிரச்னைகள் இன்று அடித்தட்டு மக்களுக்கும் இருப்பதற்கு இதுவே காரணம். ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். இயற்கை அங்காடிகளில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசி, காய் கறிகள் கிடைக்கின்றன அவற்றினை உட்கொள்ளலாம். அரிசியிலும் கைக்குத்தல் அரிசியே சிறந்தது. இயந்திரத்தின் மூலம் உமி நீக்கப்படும்போது உமியோடு சேர்த்து அரிசியின் மேற்புறத்தில் இருக்கும் விட்டமின் பி சத்தும் நீக்கப்பட்டு சத்தற்ற அரிசியே கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசி அழிஜிமி ளிஙீமிஞிகிழிஜிஷி ஆகவும் செயல்படுகிறது. அரிசியை அரைத்து மாவாக்கி இட்லி தோசையாக உட்கொள்வதை விட புழுங்கல் அரிசியாக உட்கொள்வதே நல்லது. ஏனெனில் புழுங்கல் அரிசியில் சர்க்கரை அளவு மிகவும் குறைவு” என்றார்.

மருந்தை உணவாக்காதே உணவை மருந்தாக்கு என்பதுதான் நமது முன்னோர்களின் உணவுப்பழக்கம். நமது உணவில் மருந்தல்ல விஷமே இருக்கிறது... மாற வேண்டும் எல்லாமும் இயற்கையாக 
                                             
- கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர், ஜனவரி,2015

No comments:

Post a Comment