Sunday, August 2, 2015

மாட்டுப்பால் மனிதனுக்கானதல்ல...

உலகில் ஜீவித்த முதல் நொடி துவங்கி கடைசி நொடி வரையிலும் கணக்கிட்டு பார்த்தால் பல்வேறு வடிவங்களில் பல லிட்டர் கணக்கான பாலை நாம் உட்கொள்கிறோம். தெருவுக்கு நான்கு தேநீர் விடுதிகளாய் நிறைந்து காணப்படுகின்ற இந்தியாவின் தேசிய பானமாக இருக்கும் தேநீரின் அத்தியாவசியமான மூலக்கூறு பால்தான். இப்படியாக மனித வாழ்வியலோடு இரண்டறக்கலந்த அம்சமாக விளங்குகிற பாலில் தண்ணீரை கலப்படம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் சமீபத்தில் தமிழகத்தில் பரபரத்த செய்தி. இதன் தொடர்ச்சியாக பாலில் தண்ணீர் மட்டுமல்ல, மைதா மாவு, அரிசி மாவு, சீன பவுடர், யூரியா போன்றவையும் கல்கக்கப்படுகிறது என்று வெளியான பட்டியலோ பால் விரும்பிகளை புருவம் உயர்த்த வைத்தது. இந்நிலையில் பொதுவாக பால் நல்லதா? என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.
“குழந்தை கால்சியம் மற்றும் புரதச்சத்தோடு வளர்வதற்காகத்தான் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதே போல கன்றுக்குட்டியின் ஊட்டச்சத்துக்கென சுரக்கும் மாட்டின் பாலை மனிதன் அபகரித்தது மிகத்தவறானது” என்று தொடங்குகிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை.

மாடும் மனித வாழ்வியலும்

மனித இனம் விவசாயம் புரிந்து உற்பத்திச் சமூகமாக மாறிய காலத்திலிருந்து மாடு மனித வாழ்வியலோடு கலந்து விட்டது. ஏர் பூட்டி நிலத்தை உழுவதற்கும் இன்ன பிற விவசாயத்தேவைகளுக்கும் மாடு பயன்படுவது போல மாட்டின் கழிவுகள் மண்ணுக்கு உரமாய் மண்ணைச் செழிக்க வைக்கின்றன. இப்படியாக விவசாயத்துக்கு உற்ற துணையாய் விளங்கும் மாட்டினை வழிபடும் பொருட்டு மாட்டுப்பொங்கல் கொண்டாடும் சமூகத்தினர் நாம். மாட்டிலிருந்து பால் கறந்து அதை வணிகமாக்கியது நம் மரபில் இல்லாத ஒன்று. அன்றைய காலத்தில் காளை மாடுகளுக்குத்தான் பெரிதளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாட்டின் பால் கன்றுக்குட்டிகளுக்குத்தான் என்கிற கருத்தியல் எல்லோரிடமும் இருந்தது. தாய் இல்லாத குழந்தை மற்றும் உணவு உட்கொள்ள முடியாத முதியோர்களுக்கு மட்டும்தான் பால் கொடுக்கப்பட்டது. இதை வைத்துப் பார்க்கும்போது மாட்டுப் பால் என்பது நம் உணவு முறையில் இல்லாத ஒன்று. 1935ம் ஆண்டு ப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கால்நடைத்துறை உயர் அதிகாரியாக இருந்த லிட்டில் உட் என்பவர் LIVE STOCK OF SOUTHERN INDIA என்ற நூலை எழுதியுள்ளார். பாலுக்காக இங்கு மாடுகள் வளர்க்கப்படவில்லை. பால் என்பது ஒரு வணிகப்பொருள் அல்ல என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலை என்ன? காளை மாடு வளர்ப்பதைக் காட்டிலும் பசு மாடுகளே அதிகளவிற்கு வளர்க்கப்படுகிறது ஏனெனில் அதிலிருந்து கிடைக்கும் பாலுக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய சந்தைக்காக. இன்றைய தலைமுறையிடம் மாட்டின் பயன் என்ன? என்று கேட்டால் பால் கறத்தல் என்கிற பதில் மட்டுமே வரும்.

வேதனையளிக்கும் வெண்மைப்புரட்சி
எந்த ஒரு உயிரினத்துக்கும் தனது கன்றின் எடைக்கு பத்தில் ஒரு பங்குதான் பால் சுரக்கும். நம் மண் சார்ந்த நாட்டு மாடுகளிலிருந்து அதிகபட்சமாக நான்கரை லிட்டர் பால்தான் கறக்க முடியும். அந்த பாலைக்கொண்டு நாடெங்கிலும் நிலவிய பாலின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.1970ம் ஆண்டு வெண்மைப்புரட்சி என்கிற பெயரில் முட்டை, வெண்பன்றி, பால் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் 20 லிட்டருக்கும் மேல் பால் கொடுக்கக் கூடிய அயல் நாட்டு மாடுகளான ஜெஸ்ஸி, சிந்து, எச்.எஃப், ப்ரவுன் ஸ்விஸ், ரெட் டேன் ஆகிய மாடுகள் கொண்டு வரப்பட்டு நம் மாடுகளோடு கலப்பினம் செய்யப்பட்டது. மண் சார்ந்த உணவு, மண் சார்ந்த உற்பத்தி என வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதுதான் இயற்கையின் நியதி. குளிர்பிரதேசங்களில் வளர்ந்த இந்த மாட்டினங்கள் வெப்ப மண்டலப் பகுதிக்கு ஏற்புடையது அல்ல. இன்று 45 லிட்டர் வரையிலும் இந்த மாட்டினங்கள் பால் தருகின்றன என்றால் இதைச் சாத்தியப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பால் அதிகம் சுரப்பதற்கு மாட்டின் ஹார்மோனை தூண்டி விடுவதற்காக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. பிரசவத்தின்போது கர்ப்பப்பை விரிவடைவதற்காக போடக்கூடிய அந்த ஊசியைப் போடும்போது அந்த மாடு பிரசவ வேதனையோடுதான் பாலை கொடுக்கிறது. ஹார்மோன் ஊசிகளால் சுரக்கும் பாலை குடிக்கும் நமக்கு என்ன ஆகும்? என்று யோசித்துப்பாருங்கள். முன்பெல்லாம் பதினைந்து வயதுக்கு மேல்தான் பெண் குழந்தைகள் பூப்பெய்துவார்கள். ஆனால் இப்போதோ தன் உடல் குறித்த எந்த புரிதலும் இல்லாத பத்து வயது குழந்தைகள் கூட பூப்பெய்தி விடுகிறார்கள் இதற்கு காரணம் ஹார்மோன் ஊசியால் சுரந்த பாலைக் குடிப்பதுதான். பெண்களுக்கு இப்படியென்றால் ஆண்களுக்கு நேர் எதிர்வினையாக மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. ஆண்மை குறைவுக்கு என லாட்ஜில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை தேடி பலர் செல்லக்காரணமும் இதுதான். பெரிய பட்டியலே போடும் அளவிற்கான நோய்களை கொடுப்பதுதான் வெண்மைப்புரட்சியின் நிகழ்த்திய சாதனை.

பால் தேவையா?

இயற்கை நியதிப்படி அதனதன் பால் அதனதன் கன்றுகளுக்கு மட்டுமே. மனிதர்களுக்கான பால் தாய்ப்பால்தான். பாலை அருந்த வேண்டிய தேவை நமக்கு என்ன இருக்கிறது? என்று ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். நன்றாக யோசித்தால் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகுதல் என்பதுதான் முக்கியக்காரணமாய் இருக்கும். பாலில் கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகள் அதிகம். அதை ஜீரணிப்பதற்கு கடின உடலுழைப்பு தேவை. இன்று உடலுழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. நமது வாழ்வியல் சூழல் மாறும்போது அதற்கேற்ற உணவு முறையைத்தான் பின்பற்ற வேண்டும். இறுதியாக சொல்லப் போனால் மாட்டுப்பால் நமக்கான உணவு கிடையாது, அது மட்டுமின்றி நம் மண்ணுக்கே தொடர்பில்லாத கலப்பினப்பசுக்களில் இருந்து கறக்கப்படும் கேடு நிறைந்த பால் தேவையே இல்லை.

அலோபதி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஏனெனில் கால்சியம் சத்துக்காக பாலை பரிந்துரைப்பவர்கள் அவர்கள்தான். உணவியல் நிபுணர் ஷைனியிடம் இது குறித்து கேட்டோம்...

‘‘காலம் காலமாக பால் நல்லது என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் பால் மனிதனுக்கு அத்தியாவசியமான தேவை கிடையாது. இன்றைய சூழலில் பசும்புல் சாப்பிட்டு வளர்கிற மாடுகளைக்காட்டிலும் செயற்கைத்தீவனங்கள் தின்று வளர்கிற மாடுகளே அதிகம். பால் சுரப்புக்காக பல ஊசிகளைப் போட்டு சுரக்கிற பால் நிச்சயம் கேடு விளைவிக்கக் கூடியது. சரும நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு பாலை தவிர்க்கும்படி வலியுறுத்துகிறோம். பாலை தவிர்த்ததால் பலரது உடல்நிலை முன்னேற்றமும் கண்டிருக்கிறது. Lactose intorelance என்கிற தன்மையுடையவர்கள் பாலை அவசியம் தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு பால் செரிமானம் ஆகாது. பால் குடிப்பதற்கான அவசியம் என்ன? பாலில் கால்சியம், பொட்டாசியம், புரதம், பாஸ்பரஸ், விட்டமின் A, B, B12 ஆகிய சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்களுக்காகத்தான் நாம் பால் குடிக்கிறோம் என்றால், ராகி, சாமை, திணை, வரகு போன்ற சிறுதானியங்கள், மீன், முட்டை, இறைச்சி, கருவேப்பிலை, கீரை, புதினா, மல்லி, கொண்டைக்கடலை, உளுந்து, ராஜ்மா ஆகியவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே மேற்கண்ட சத்துகள் கிடைக்கும். இன்று பெரும்பாலானோர் பால் குடிப்பது சத்துக்காக மட்டுமல்ல டீ, காபி பழக்கத்திற்கு அடிமையாவதால்தான். பால் பொருட்களை புறக்கணிப்பதால் நமக்கு எந்த வித இழப்பும் இல்லை என்பது உறுதி. பால் பொருட்களையே உட்கொள்ளாமல் வாழ முடியுமா? என்றால் அதற்கு நல்ல உதாரணம் வீகன்ஸ். சைவ உணவு உண்பவர்களில் வீகன்ஸ் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்கள், பால் மற்றும் பால் மூலம் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப்பொருளையும் உட்கொள்வதில்லை. அவர்கள் நல்ல உடல் நலத்தோடுதான் இருக்கிறார்கள். பால் குடித்தே தீர வேண்டும் என நீங்கள் நினைத்தால் செயற்கைத்தீவனங்கள் இன்றி பசும்புல் சாப்பிடும் மாட்டின் பாலைக் குடிக்கலாம்’’ என்றார்.

பொதுவாக பால் நல்லதா? என்பது குறித்து காசிப்பிச்சை முன் வைத்தனவற்றைப் பார்த்தோம். தேவையற்ற உணவுப்பொருளான பாலுக்கு பின்னே இருக்கும் மிகப்பெரும் சந்தை. அந்த சந்தைக்கென தயாரிக்கப்படும் பாக்கெட் பால், பால் பவுடர் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பால் கலப்படம் குறித்து அடுத்த இதழில் விரிவாக பார்ப்போம்.

தொடர்ச்சி...

ஆவின் பால் கலப்பட செய்தியையே மக்கள் இன்னும் ஜீரணிக்காத நிலையில் திடீரென லிட்டருக்கு பத்து ரூபாய் விலையை உயர்த்தி ஆவின் தன் வாடிக்கையாளர்களை விழி பிதுங்க வைத்திருக்கிறது. பால் விலையேற்றத்திற்கு பலத்த எதிர்குரல்களும் போராட்டங்களும் வெடித்து வரும் சூழலில் “விலையேற்றத்திலும் ஒரு நன்மை இருக்கிறது” என்று நெத்தியடியாய்க் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன். “பால் விலையேறும்போதாவது பாலின் பயன்பாடு குறைய வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் மனித இனத்துக்கு நல்லதுதான்” என்கிறார். இவர் தன்னிடம் வரும் நோயாளிகள் அத்தனை பேரிடமும் பால் பொருட்களை தவிர்த்து விடும்படி அறிவுறுத்துகிறார். தனது மருத்துவ அட்டையின் பின்புறத்தில் Avoid animal milk at all ages for the healthy life என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவரிடத்தில் பாலை ஏன் எதிர்க்கிறீர்கள்? எனக் கேட்டோம்.

“மனிதனுக்கு பால் எதற்கு தேவை? என்கிற கேள்வியை முன் நிறுத்தினால் மருத்துவ ரீதியில் அலசி ஆராயும்போது தேவையே இல்லை என்பதை விட அதிபயங்கர விளைவை ஏற்படுத்தும் என்கிற பதில்தான் வரும். நான் மரபணுவியல் படிக்கும்போது பால் தொடர்பான மரபணுக்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் இது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். எந்த ஒரு உயிரினத்துக்கும் உடல் மற்றும் மூளை வளர்ச்சியடையும் வரையிலும்தான் பால் தேவை. அதற்கு பிறகு உட்கொள்ளப்படும் பால் உபரிதான். அப்படி கணக்கிடுகையில் மனிதனுக்கு மூன்று வயது வரையிலும் மூளை வளர்ச்சி இருக்கும். பாலில் லேக்டோஸ் எனும் சர்க்கரைச் சத்து இருக்கிறது. அது சிறுகுடலுக்கு செல்லும்போது அங்கிருக்கும் லேக்டேஸ் எனும் நொதிப்பொருள் அதை க்ளுக்கோஸ்- கேலக்டோஸ் என்று இரண்டாகப் பிரிக்கிறது. அதில் கேலக்டோஸ் மூளை, கண் மற்றும் நரம்பு மண்டலங்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. மனிதனுக்கு மூன்று வயது வரையில் மட்டும்தான் மூளை வளர்ச்சியடையும், அதற்குப் பிறகு பால் குடிப்பதை விட்டு விட வேண்டும். ஏனெனில் கேலக்டோஸை இரண்டாகப் பிரிக்கிற கேலக்டேஸ் நொதி மூன்று வயதுக்கு மேல் சுரக்காது. எனவே சிறுகுடலுக்கு வரும் கேலக்டோஸ் செரிமானம் ஆகாமல், பெருங்குடலுக்கு சென்று அங்குள்ள பாக்டீரியாக்களை சாப்பிட்டு கார்பன் டை ஆக்ஸைடாய் மாறி வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். போதுமான மூளை வளர்ச்சிக்கு பிறகும் கேலக்டோஸ் இருந்தால் அதன் உபரி கண் லென்சிலும், இரத்தக்குழாயிலும் படிகிறது. இதனால் இரத்தக்குழாய் அடைப்பு, மற்றும் கண்புரை ஆகியவை ஏற்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது குழந்தை கால்சியம் சத்தோடு வளர பால் குடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மனிதனை விடவும் பல மடங்கு பெரிய யானை மற்றும் வேறெந்த உயிரினமாவது கர்ப்ப காலத்தில் பால் குடிக்கிறதா? என்றால் இல்லை. அப்புறம் எப்படி அவைகளுக்கு மட்டும் திடகாத்திரமான எலும்புகளோடு குட்டிகள் பிறக்கின்றன? என்றால் அவை தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. பாலில் இருக்கும் கால்சியம் இரண்டாம் தர கால்சியம்தான். தாவரங்களில் இருக்கும் கால்சியம்தான் முதல் தர கால்சியம். கால்சியத்திற்காகத்தான் நீங்கள் பால் குடிக்கிறீர்கள் என்றால் கீரை வகைகளை உட்கொண்டால் பாலை விட முதல் தரமான கால்சியம் உங்களுக்கு கிடைக்கும். எலும்பு வளர்ச்சிக்காக பால் குடிக்கலாம் என்பது உலகின் ஆகச்சிறந்த பொய்களில் ஒன்று. ஏன் என்கிறீர்களா? இயல்பாகவே மனித ரத்தத்தில் 7.4 பி.ஹெச் அமினோ அமிலம் இருக்கிறது. பால் குடிக்கும் போது ரத்தத்தில் உள்ள பி.ஹெச் அளவு உயர்கிறது. ரத்தத்தில் பி.ஹெச் அளவைக் குறைத்து சமநிலையை ஏற்படுத்துவதற்காக எலும்பு கரைக்கப்படும். பாலால் எலும்பு வலுவடையும் என்கிற கருத்துக்கு நேரெதிராக எலும்பு தேய்மானம் ஆகிறது என்பதுதான் உண்மை. பசும்பாலில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகளவில் இருக்கிறது. புரத ஒவ்வாமை இருப்பவர்கள் பாலை உட்கொள்ளும்போது பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை பால் சாப்பிடும்போதும் வயிற்றில் சில மில்லி அளவு ரத்தக்கசிவு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் வரும் நோய்களில் ரத்த சோகையும் ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணிகள் பாலை உட்கொண்டால் ஏற்படும் ரத்தக்கசிவால் ரத்த சோகை வலுவடையும். கர்ப்ப காலத்தில் ரத்த சோகையைத் தடுக்க இரும்பு சத்து மாத்திரைகளையும் கொடுத்து விட்டு, இரத்த சோகையை ஏற்படுத்தும் பாலையும் குடிக்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

லான்செட் எனும் உலக அளவிலான மருத்துவ இதழ் 1992ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின் படி உலகில் பால் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் பால் சாப்பிடுபவர்களுக்கு மூன்றரை பங்கு அதிகமாக இரத்தப் புற்றுநோய் மற்றும் லிம்போமேனியா எனும் புற்றுநோய் ஏற்படுவதாக கூறியுள்ளது. பாலில் இருக்கும் Bovine lymphoma virus தான் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. மாட்டிறைச்சியை உண்ணும் அசைவ விரும்பிகளைக் காட்டிலும் பால் மற்றும் நெய் போன்றவற்றை சாப்பிடும் சைவ உணவினருக்குத்தான் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகிறது. சிலர் கெட்டபழக்கங்கள் எதுவும் இல்லை என சொல்கையில் டீ, காபி குடிப்பதில்லை என்பார்கள். உண்மையில் டீ, காபியை விடவும் அபாயகரமானது பால். என்னிடம் வருகிறவர்களிடத்திலெல்லாம் பாலைக் குடிக்காதீர்கள் என்பதுதான் என் பிரச்சாரமாக இருக்கிறது“ என்கிறார்.

பால் குடிக்க வேண்டாம் என்பது இதுவரை நாம் பேட்டி கண்ட மருத்துவர்களின் கூற்றாக இருக்கிறது. பாலுக்கு மிகப்பெரிய வணிக சந்தை இருக்கிறது அந்த சந்தைக்காக பாலுக்குப் பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியல் இதைவிட மோசமானது என்கிறார் அக்கு ஹீலர் உமர் ஃபாருக். “உடலின் மொழி” “வீட்டுக்கு ஒரு மருத்துவர்” எனும் நூலை எழுதியுள்ள இவர் தற்போது பால் உற்பத்திப் பெருக்கத்திற்காக செய்யப்படும் மோசடிகள் குறித்துப் பேசுகிறார்.

கால்சியம் குறைபாடு எனும் கற்பிதம்

கால்சியம் குறைபாட்டுக்கு பால் குடிக்க வேண்டும் என்று மக்கள் மனதில் பொய்யாக ஒரு பரப்புரை நிகழ்த்தப்படுகிறது. கால்சியம் உள்ள உணவை சாப்பிட்டுத்தான் கால்சியம் பெற முடியுமா? என்றால் அறிவியலின் கூற்றோ வேறு. பிரான்ஸ் விஞ்ஞானி டாக்டர்.லூயி கேர்வரான், மனிதன் கால்சியத்திற்காக பாலை உட்கொள்கிறானென்றால் பால் தரும் மாடு கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது? எனும் கேள்வியை எழுப்புகிறார். இந்த கேள்வியின் பதில்தான் நம் உடலின் உருவாக்கம். தனக்குத் தேவையான எல்லா வகை சத்துக்களையும் உணவுகளில் இருந்து பெறும் உயிராற்றலில் இருந்து உடலே உருவாக்கிக் கொள்கிறது. மாடு புற்களிலிருந்து பெறும் மெக்னீசியத்தை கால்சியமாக மாற்றிக் கொள்கிறது. கோழி தன்னுடைய உணவான மைக்காவை கால்சியமாக மாற்றிக் கொள்கிறது. நமது உணவுகளிலிருந்து தேவையான சத்துகளை உருமாற்றிக் கொள்ள உயிராற்றல்தான் தேவை. ஒரு உதாரணம், கோழி முட்டையில் கால்சியம், புரதம், கார்போஹைடிரேட் இன்னும் பிற சத்துகள் இருக்கின்றன. முட்டை அடைகாக்ககப்பட்டு குஞ்சுகளாக வெளி வருகிறது. இந்த சத்துக்களால்தான் கோழிக்குஞ்சு பிறந்தது எனில் இந்த சத்துகளை கொண்டு ஆய்வுக்கூடங்களில் நாமே குஞ்சுகளைத் தயாரித்துக்கொள்ள முடியும். எந்த ஒரு உயிரும் உயிராற்றலில் இருந்துதான் உருவாகிறதே தவிர சத்துக்களால் உருவாகுவதில்லை. உயிர் உருவான பிறகு தனக்குத் தேவையான சத்துக்களை உடலின் உதவியோடு உற்பத்தி செய்து கொள்கிறது. எனவே நம்முடைய உணவுகளில் உயிராற்றல் இருப்பதுதான் முக்கியமே தவிர, சத்துக்கள் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. உயிராற்றலில் இருந்து தேவையான சத்துக்கள் உருவாகும். கால்சியத்தைப் பெற பால் குடிக்க வேண்டும் என சொல்வது மிகப்பெரிய அபத்தம்.

பால் பவுடர் எனும் கொடுமை

பால் கிடைக்காத சூழலில் பாலுக்கு மாற்றாக பால் பவுடரை கலக்கி பயன்படுத்துவது வாடிக்கை. திரவ வடிவிலான பாலை திட வடிவுக்கு கொண்டு வர என்னென்ன செயல்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்று நாம் ஒரு நாளேனும் யோசித்திருப்போமா? பாலை பவுடராக்குவதற்காக மெலமைன் எனும் நச்சுப்பொருள் கலக்கப்படுகிறது. இதன் விளைவை அறிந்து உலகில பல நாடுகள் மெலமைன் அளவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 2008 -09ம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சீனக்குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிறுநீரக பாதிப்பு குறித்து சீன அரசு நடத்திய ஆய்வில் மெலமைன் எனும் நச்சுப்பொருள்தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 2009ம் ஆண்டு சீனாவில் விற்கப்படும் பால் பவுடர்கள் சோதனை செய்யப்பட்ட போது அவற்றில் மெலமைன் நச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். உடனே சீன அரசு பல பால்பவுடர் நிறுவனங்களைத் தடை செய்தது. எந்தக் கம்பெனி பால்பவுடர்களை சீன அரசு தடை செய்ததோ அதே கம்பெனி இந்தியாவில் தன்னுடைய விளம்பரங்களையும், விற்பனையையும் எவ்விதத் தடைகளும், நிபந்தனைகளுமின்றி விற்றுத் தீர்க்கிறது. சீனாவுக்கு முன்னரே இந்த பால் பவுடர் நிறுவனங்கள் 1980களில் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டது குறிப்பிட வேண்டியது. இயற்கைக்கு முரணாக தயாரிக்கப்படும் எதுவுமே இயற்கையான சத்தை கொடுத்து விட முடியாது.

பாக்கெட் பாலும் விதி விலக்கல்ல 

நம்மில் பெரும்பாலானோர் பாக்கெட் பாலை பயன்படுத்த என்ன காரணம்? ஒன்று எளிதாக வாங்கி விடலாம், மற்றொன்று பால் கெட்டியாக இருக்கும் தண்ணீர் கலப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனும் நம்பிக்கை. ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் 87 சதவீதம் தண்ணீரும், 13சதவீதம் இதர பொருட்களும் இருப்பதுதான் பால். இயற்கையின் இந்த இயல்புக்கு மாற்றாக கெட்டியான பால் வேண்டும் என நாம் விரும்புகிறோம். பாக்கெட் பாலின் உருவாக்கம் பற்றிப் பார்ப்போம். பல ஊர்களின் பால் பண்ணைகளில் இருந்து பெறப்படும் பால் மொத்தமாக சேமிக்கப்பட்டு அதிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுகிறது. பின்பு கொழுப்பு நீக்கப்பட்ட பாலினை உடைத்து இயந்திரத்தின் மூலம் கலக்கப்படுகிறது. பாலின் தரத்திற்கு ஏற்றவாறு அதன் கெட்டித் தன்மையை அதிகரிக்க, தேவையான அளவிற்கு கொழுப்பு அல்லது கொழுப்பு பவுடர் சேர்க்கப்படுகிறது. புரதத்தின் அளவைக் கூட்டவும், கொழுப்பின் அளவைக் கூட்டவும் இப்படியான செய்முறைகள் செய்யப்படுகின்றன. இது வழக்கமான முறை.

சில நிறுவனங்கள் பாலின் கெட்டித்தன்மைக்காக ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ், மரவள்ளிக் கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற பொருட்களை கலக்குகின்றனர். பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அமோனியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றில் ஏதேனும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது. அமோனியா இருப்பதாலும், மிக எளிதாக கிடைப்பதாலும் சிறு வியாபாரிகள் பலரும் யூரியாவை பாலில் கலக்குகிறார்கள். பாலை மிக அதிகமான குளிர்ச்சிக்கு உட்படுத்துதல், கிருமிகளை நீக்குதல், செயற்கை சுவை அதிகரித்தல் என்று பல நிலைகளைக் கடந்து பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. பாலின் இயற்கையான உயிராற்றல் ரசாயனக் கலப்பாலும், இயற்கைத் தன்மை மாற்றத்தாலும் பாதிப்படைகிறது. உயிராற்றலே இல்லாத பாலை குடித்து நமக்குத்தான் என்ன வந்து விடப்போகிறது?

100 நாள் அபாயம்

100 நாட்களானாலும் கெட்டுப்போகாத சிந்தடிக் பால் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஏன் நூறு நாள் கெடாது? என்கிற கேள்வியை எழுப்ப வேண்டும். ஏனென்றால் அது பாலே அல்ல என்பதுதான் பதில். சிந்தடிக் பால் மாட்டிலிருந்து பெறப்படுவது அல்ல. வேதியியல் கூறுகள் மூலமே இவை தயாரிக்கப்படுகின்றன. இந்த செயற்கை பாலை நாம் ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்து விட முடியாத அளவு இதன் தயாரிப்பு உத்திகள் உள்ளன. வாஷிங் மிஷின் போன்ற டிரம்மில் வெந்நீருடன் காஸ்டிக் சோடாவும், யூரியாவும் கலக்கப்படுகிறது. டிரம்மை வேகமாகச் சுழல வைத்து அதிலிருந்து நுரை பொங்கி வரும்போது அதனுள் டிடர்ஜண்ட் பவுடர், ஷாம்பூ ஆகியவை கலக்கப்படுகிறது. கொழுப்புச் சத்துக்காக மட்டரகமான ஆயிலும், வெண்மை நிறத்திற்காக கிழங்கு மாவும், இனிப்பதற்காக சாக்ரீமும் சேர்க்கப்பட்டு முப்பது நிமிடங்களில் தயாரிக்கப்படுகிறது இந்த நச்சுப்பால். யூரியாவைக் கலப்பதன் மூலம் கொழுப்பு அல்லாத பிற சத்துக்களைக் கூடுதலாகக் காட்ட முடியும். அதே போல காஸ்டிக் சோடா கலப்பதன் மூலம் பால் கெடாமல் பார்த்துக்கொள்ளவும், அதன் அமிலத்தன்மையை சமன் படுத்திடவும் முடியும். கொழுப்புச் சத்திற்காகக் கலக்கப்படும் எண்ணெய் தண்ணீரில் கரைவதற்காக டிடர்ஜண்ட் பவுடர் சேர்க்கப்படுகிறது. இப்படியாக மிக நேர்த்தியோடு தயாரிக்கப்படுகிறது இந்த செயற்கை பால். புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள இந்த சிந்தடிக் பாலின் விற்பனை பற்றி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் புள்ளி விபரத்தைப் பார்ப்போம். சத்தீஸ்கர், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் செயற்கைப் பால் புழங்குகிறது. குஜராத் 89%, பஞ்சாப் - 81%, ராஜஸ்தான் 76%, தில்லி- 70%, மகராஷ்ட்ரா- 65% என்ற விகிதங்களில் செயற்கைப் பால் விற்பனையில் உள்ளது. தமிழ்நாட்டில் இது குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகள் நடைபெறவில்லை.

கலப்பட யுக்தி

பாலின் வெள்ளை நிறத்தைப் பார்த்தாலே பயம் வரும் அளவிற்கு அதன் கலப்படம் நம்மை அச்சுறுத்துகிறது. பால் கலப்படம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 30ம் தேதி நீதியரசர்.ராதாகிருஷ்ணன் மாநில அரசுகளுக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளார். குழந்தைகளின் முக்கிய உணவாக இருக்கும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் அந்தப் பரிந்துரை. ஆயுள் தண்டனை வழங்கும் அளவிற்கு பாலின் கலப்படங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. பால் என்பது வணிகப்பொருளாய் உருமாற்றம் பெற்ற பின்புதான் இத்தனை விளைவுகளையும் சந்திக்க நேர்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பால் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவ்வளவு வருவாய் ஈட்ட முடியும் என்கிற இலாப வெறி மனிதர்களைப் பற்றியோ அவர்களது உடல் நலன் குறித்தோ யோசிக்க விடுவதில்லை. ஹார்மோன் கலப்படம் முதலாவது, கன்றுக்குட்டி சீக்கிரம் வளர்ந்தால்தானே பால் கறக்க முடியும் அதற்காககத்தான் ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன.  ஹார்மோன் மூலம் பசு வளர்ப்பதையும், பால் கறப்பதையும் ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த தடை உத்தரவுகளை கோடிகளில் புரளும் பால் நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. ஹார்மோன் கலப்புகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதிக அளவில் பால் கறப்பதற்காக மரபணு மாற்று உயிரியல் தொழில் நுட்பமும் பசுக்களில் பயன்படுத்தப்படுகிறது. அதிக பால் கறக்கும் பசு இனத்தையும், சீக்கிரம் வளரும் பசு இனத்தையும் கலப்பினம் செய்து தொழில் ரீதியான கறவை மாடுகளை தயாரிக்கப்படுகின்றன. இது போன்ற கலப்படங்களால் மனித இனம் சந்திக்க இருக்கும் பெரு வியாதிகளை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்” என்கிறார் உமர் ஃபாரூக்.

காலம் காலமாக இயற்கை ஆர்வலர்கள் பாலை ஒரு வெள்ளை விஷம் என்றே குறிப்பிடுகிறார்கள். சாதாரண பாலே விஷம் என்றால் கலப்படங்களுக்கும், வேதியியல் மாற்றங்களுக்கும் ஆளாகும் பாக்கெட் பால், கலப்பினப்பசுக்களின் பால், பால் பவுடர், சிந்தடிக் பால் போன்றவற்றை என்ன சொல்வது? பாலை தவிர்த்து வாழ முடியாது என்கிற எண்ணமிருந்தால் இப்போதே அதை அழித்து விடுங்கள். டீ குடிப்பதால் சுறுசுறுப்பு வருகிறது என நம்புகிறோம், உண்மையில் அதன் சூடுதான் நம்மை சுறுசுறுப்பாக்குகிறது. பாலைத் தவிர்த்து கேரள மக்களை போல் கட்டன் சாயா (பால் அற்ற தேநீர்) அருந்தலாம். உடல் நலத்தை பேணிக்காப்பதில் அலட்சியம் காட்டுவது மிகப்பெரிய மூடத்தனம். உடல் நலத்திற்கு பிறகுதான் எல்லாமும் என்பதை கருத்தில் கொள்வோம் பாலைத் தவிர்த்த வாழ்வை சாத்தியப்படுத்துவோம்.
                          -கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் டாக்டர், 2014

 

No comments:

Post a Comment