Thursday, March 19, 2015

நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? - நீதி கேட்கும் நீஜிஇயற்கையிலிருந்து தூர விலகிப்போன மனித வாழ்வியலுக்கு மத்தியில் இன்னமும் இயற்கையோடு இசைந்து வாழ்ந்து வருபவர்கள்தாம் பழங்குடி மக்கள். ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தங்களது பாரம்பர்ய அடையாளத்தோடு பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த வன விரும்பிகளின் இன்றைய வாழ்விலோ விவரிக்க இயலாத அளவு அடிப்படை வாழ்வாதாரச் சிக்கல்கள் இருக்கின்றன. இவர்களின் பிரச்சனைகள் குறித்து விவரித்தோமேயானால் பக்கங்கள் போதாமை ஏற்படும். கல்வி அறிவின்மை காரணமான அறியாமையால் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு எதிராக ஒரு பழங்குடியே களத்தில் இறங்கிப் போராடுவது குறிஞ்சி பூ மலர்வதைப் போல்தான். அப்படியாக கோத்தர் பண்டைய பழங்குடி இனத்திலிருந்து குறிஞ்சிப்பூவாய் மலர்ந்திருக்கிறார் நீலகிரி மாவட்டம் சோலூர் கோக்காலில் வசிக்கும் நீஜி சரஸ்வதி. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாழும் கோத்தர் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கென 15 ஆண்டுகளாக இவரது போராட்டம் நீள்கிறது. நீலகிரி பண்டைய பழங்குடிகள் கூட்டமைப்பின் செயலாளராகவும்சோலூர் கோக்காலின் வனக்குழு மற்றும் கிராமசபாவின் தலைவியாகவும் உள்ள இவரிடத்தில் பேசினோம்

“நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர்தோடர்பணியர்குரும்பர்காட்டுநாயக்கர்இருளர் என ஆறு இனத்தைச் சேர்ந்த பண்டைய பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்களுள் கோத்தர் இனத்தில் வெகுசொச்சமாக 3742 பேரே வாழ்ந்து வருகிறோம். கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர்திருச்சுக்கடிகொல்லிமலைகுந்தா கோத்தகிரிமேல் கூடலூர்கோத்தகிரிகீழ் கோத்தகிரி என ஏழு கோக்கால்களில் மட்டுமே எங்களது சமுதாயத்தினர் வாழ்ந்து வருவதால் பாதுகாக்கப்பட வேண்டிய பழங்குடிகள் பட்டியலில் கோத்தர்களும் உண்டு. ஜெர்மனியிலிருந்து வந்த ஆய்வாளர் ஒருவர் குந்தா கோத்தகிரியில் இருக்கும் எங்களின் வழிபாட்டு மரமான கேளக்காய் மரத்தின் வேரை எடுத்துச் சென்று ஆய்வு செய்ததில் அம்மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இங்கு வாழ்ந்து வருவதற்கு இதுவே சாட்சி” என்று கோத்தர்களின் பூர்விகத்தை பேசியவர் அடுத்ததாக அவர்களின் கலாச்சாரம் பற்றி பேசினார்

“எருமை மேய்த்தல்இரும்பு பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல்விவசாயம் ஆகியவைதான் எங்களது தொழில். ஆரம்பத்தில் பார்ம்பர்ய சிறுதானியங்களான ராகிசாமை,திணைகம்பு போன்றவற்றை விளைவித்தோம் இப்போது கேரட்பீட்ரூட்உருளைக்கிழங்கு ஆகியவை பயிரிடுகிறோம். பழங்குடி மக்கள் பலரும் தங்களது பாரம்பர்யத்திலிருந்து விலகி வேறு மதத்தை தழுவி விட்டனர். நாங்கள் கடவுள் நம்பிக்கை தொடங்கி எவற்றிலும் எங்களது பாரம்பர்யத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு,துபிட்டி என்னும் வெள்ளை நிற புடவையை அணிந்து கொள்வதும்ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும் எங்களது பாரம்பர்ய உடைக்கலாச்சாரம். இன்றளவிலும் அதே கலாச்சாரத்தோடுதான் வாழ்ந்து வருகிறோம். ஒரு பெண் பூப்படைந்தததுமே தலையில் மண்டூ சூடி விடுவோம். மண்டூ சூடப்பட்ட பெண் திருமணத்துக்கு தயாராகியிருக்கிறாள் என்பது பொருள். அதன் பிறகு பெண் பார்க்க பலரும் வருவார்கள். திருமணம் நடந்த பின் மாப்பிள்ளை வீட்டார்பெண் வீட்டாருக்கு ஒரு ரூபாய் இருபத்தைந்து பைசா கொடுத்து பெண்ணைக் கூட்டிச் செல்வார்கள். ஐனூர் அம்மனூர்தான் எங்களின் குல தெய்வம். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஏழு கோக்கால்களிலும் ஐனூர் அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதற்கு அடுத்தபடியாக இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் வல்தா எனும் பண்டிகை கொண்டாடுவோம். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் இது போன்ற திருவிழாக்கள்தான் எங்களுக்கான ஆறுதல்” என்றார்.
போராட்ட மனநிலைக்கு நீங்கள் தயாரானது எப்போதுஎன்றோம் “எங்களுக்கு பசித்தால் நாங்கள்தான் சாப்பிட வேண்டும் அது போலதானே போராட்டமும்எங்கள் உரிமைகளுக்காக நாங்கள்தான் போராட வேண்டும் அந்த எண்ணம் மட்டும்தான் எனக்கு பிரதானமாக இருந்தது. எங்களுடையது விவசாயக்குடும்பம்தான் படிக்காததால் வாழ்வில் எதிர்கொண்ட கசப்புகளை கருத்தில் கொண்டு என் தந்தை என்னை படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க ஊட்டி வரை செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவுவிடுதிகளில் தங்கி படிக்க வைத்தால் கலாச்சாரம் கெட்டு விடும் என்கிற எண்ணத்தால் அதற்கு மேல் என்னை படிக்க வைக்கவில்லை. அதன் பிறகு 1999ல் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பெண்கள் நல மேம்பாட்டுக்கான கன்வினராக இருந்தேன். நிறைய மக்களை சந்திக்கிற வாய்ப்பு அதன் மூலம் கிடைத்தது. எங்கள் சமூகத்தின் அடிப்படையான பிரச்சனையே கல்வியறிவின்மைதான் என்கிற தெளிவும் எனக்கு அப்போதுதான் ஏற்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் திட்டங்கள் எதுவும் தானாக முன் வந்து செய்யப்படவில்லை. நாங்காளாக சென்று கேட்டபின்னர்தான் கிடைத்தது. கேட்டால்தான் கிடைக்கும் என்றால் கேட்டுக்கொண்டே இருப்போம். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற கருத்தை உடைத்து திறக்காவிடில் தகர்த்தெறிய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுதான் எனக்கான போராட்ட உணர்வை தூண்டியது” என்றார்.

தகர்த்தெறியப்பட வேண்டிய அளவுக்கு கோத்தர்களின் பிரச்னைகள் என்னஎன்றதற்கு “கோத்தர் மட்டுமல்ல ஒட்டு மொத்த பழங்குடியினருக்கே பொதுவாக பல பிரச்னைகள் இருக்கின்றன. நீலகிரியின் பூர்வகுடிகள் நாங்கள். போதிய படிப்பறிவின்மை காரணமான அறியாமையால் வெகு சொற்ப பணத்துக்கு எங்களது பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டன. சொந்த நிலத்தை விற்று விட்டு அதே நிலத்தில் கூலி வேலை பார்க்கிற அவலம் பழங்குடியினருக்கு இருக்கிறது. 2006ம் ஆண்டு தமிழக வனப்பாதுகாப்பு சட்டத்தில் வனமும் பழங்குடிகளும் வேறுவேறல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்குடி மக்களிடமிருந்து வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வாங்கிய நிலங்கள் செல்லுபடியாகாது என்கிற சட்டம் இருக்கிறது. ஆனால் அச்சட்டம் வெறும் காகித அளவில் மட்டுமே இருக்கிறதே ஒழிய நடைமுறையில் இல்லை. மிகவும் சொற்ப விலைக்கு பல ஏக்கர் நிலத்தை விற்றவர்களுக்கு இது வரையிலும் நிலம் திரும்பக் கிடைக்கவில்லை. சார்பதிவாளர் அலுவலகத்தில் பழங்குடியின் நிலம் பழங்குடி அல்லாதோருக்கு பதியப்படுகிறது. பதிவு செய்யக்கூடாது என சார்பதிவாளரிடம் முறையிட்டோம். அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என பொறுப்பற்ற பதில்தான் எங்களுக்கு வந்தது. 2002ம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்ரியாசாகு பழங்குடியின் நிலம் பழங்குடியை தவிர்த்து வேறு எவருக்கும் பதிவு செய்யப்படக்கூடாது என தடை உத்தரவு போட்டார். எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்களுக்கு உறுதுணையாய் இருந்தார். ஆனால் அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு இன்று வரையிலும் நிலப்பதிவு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எருமைப் பட்டியை நாங்கள் உண்டி எனக்கூறுவோம். காக்கோர் உண்டி மற்றும் தேவர்கோடு உண்டி அருகே இருக்கும் 1800 ஏக்கர் நிலத்தைப்ரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே ஊரின் பொதுப்பயன்பாட்டுக்காக எனது தாத்தா மயிலன் ஒதுக்கக் கோரி ஒதுக்கப்பட்டது. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நிலம் 1990ல் வனத்துறையால் ரிசர்வ்டு வனமாக்கப்பட்டது. எங்களுக்குச் சொந்தமான அந்த 1800 ஏக்கர் நிலத்தில் எருமை மேய்க்கக்கூட செல்ல முடியாத அளவுக்கு வனத்துறையின் கெடுபிடி இருக்கிறது. எருமை மேய்ப்பவர்களை அடிக்கடி ஏதாவது காரணத்துக்காக வனத்துறை கைது செய்யும் சம்பவங்களும் இங்கு தொடர்கதை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இரண்டு பேர் வெளி வந்த இரண்டு நாட்களிலேயே இறந்தனர். எங்களுக்கு சொந்தமான 1800 ஏக்கர் நிலத்தில் நாங்களே கால் வைக்க முடியாத சூழல் இங்கு நிலவுகிறது. அந்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

2011ம் ஆண்டு தலைமைச்செயலகத்தில் ப்ளேனிங் கமிஷனராக இருந்த கிருஷ்ணதாஸ் காந்தி என்பவர்பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீட்டில் எங்களுக்கான தேவைகள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் கருத்து கேட்டார். சோலூர் கோக்கால் மக்களின் தேவைகளை நன்கு ஆராய்ந்து ஒரு பட்டியலை எழுதிக்கொடுத்தேன். அவற்றுள் டிராக்டர் மற்றும் டில்லர் வேண்டும்தொகுப்பு வீடுகளாக இல்லாமல் எங்களது கலாச்சார வீடுகள் வேண்டும்எருமைகள் வேண்டும் என சிலவை மட்டுமே நிறைவேற்றப்பட்டன. கிருஷ்ணதாஸ் காந்தி அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். பழங்குடிகள் ஒவ்வொரு சமுதாயமும் தனித்தனியாக நிற்பதை விட எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களது கோரிக்கைகளை முன் வைத்தால் வலுவாக இருக்கும் என்றார். அதன் பிறகு நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஆறு பழங்குடிகளிடமும் பேசி அவர்களை ஒருங்கிணைத்தேன். எல்லோரும் ஓர் இயக்கமாய் இணைந்து நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பைத் துவக்கினோம்” என்றார்.

அரசால் ஒதுக்கப்படும் நிதி முறையாக பழங்குடி மக்களுக்கு சேர வேண்டும்கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்கல்விக்கடன் துரிதமாக வழங்கப்பட வேண்டும்ஒரு சதவீதமே வழங்கப்படும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதம் வழங்க வேண்டும் ஆகியவை இக்கூட்டமைப்பின் கோரிக்கைகளாக தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. தண்ணீர் பிரச்னை,சாலை வசதி என வாழ்வின் அடிப்படியான பிரச்னைகள் முதற்கொண்டு களத்தில் இறங்கிப் போராட மக்களை ஒருங்கிணைப்பது நீஜிதான். தங்களது நியாயமான கோரிக்கைகளை முன் வைக்க எத்தகைய போராட்டத்தையும் முன் நின்று நடத்தும் நீஜிக்கு பழங்குடி மக்களின் ஆதரவு மட்டுமல்லாது பல பொதுநல அமைப்புகளின் ஆதரவும் இருக்கிறது.
“மக்கள் சட்ட மையத்தின் தமிழ் மாநில இயக்குனர் வழக்கறிஞர் விஜயன் குழு எங்க பிரச்னைகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். 2004ம் ஆண்டு சுதந்திர தினத்தில் ஊட்டி சேரிங்கிராஸில் எங்களது அடிப்படை உரிமைகளுக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினோம். 2008ம் ஆண்டு குடியரசு தின விழாவில் எங்கள் நிலத்தில் எங்களை வாழவிடுங்கள் எனக் கூறி முட்டி போட்டு போராடினோம். போராடத்தால் நாங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லையெனினும் வனத்துறை சார்பாக வனக்குழு உருவாக்கப்பட்டது. அதன் மூலம் வனத்தில் உள்ள பொருட்களை சேகாரம் செய்து விற்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் குறைகளைக் கூறும் கிராம சபா உருவாக்கப்பட்டது” எனும் நீஜிதான் இவ்விரண்டுக்கும் தலைவியாக இருந்து முன் நடத்திச் செல்கிறார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள் எனும் நூலில்கோத்தர் பற்றிய பதிவில் நீஜி சரஸ்வதியைப் பற்றியும் அவரது செயல்பாடுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “மீன் வேண்டாம் மீன் பிடிக்கக் கற்றுக்கொடு இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். கல்வி அறிவற்ற சமூகம் வளர்ச்சி பெறாது. எங்களுக்கு முக்கியமாக கல்வி வேண்டும். கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பழங்குடிகள் ஆய்வு மையம் ஆகியவற்றில் பழங்குடிகளுக்கு வேலை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் பழங்குடிகளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கும் ஆராய்ந்து அறிவதற்கும் ஒரு பழங்குடியை விட சிறந்த நபர் யாராக இருக்க முடியும்காட்டு விலங்குகளின் மீது இந்த அரசு காட்டும் கரிசனம் கூட காட்டு வாசிகள் மீது காட்டுவதில்லை. ஏன் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையாநாம் வாழ்வதற்காக குரல் எழுப்புகிற உரிமை எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கிறது. எங்கள் சமூகத்திலிருந்தும் முழு வீச்சுடன் உரிமைக்கான குரல் எழும்பும். கல்வி இந்த மாற்றத்தை ஏற்படுத்தும்” உறுதிபடப்பேசுகிறார் நீஜி.

                 - கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் தோழி

No comments:

Post a Comment