Thursday, March 19, 2015

கற்பித்தல் அல்ல வாழ்ந்து காட்டல்ஸ்கூல் வேன் வருவதற்குள் சீருடை அணிவித்து, மதிய உணவை டிபன் பாக்ஸில் திணித்துக் கொடுத்து டாட்டா பை காட்டும் அவசரம் இந்த தாய்மார்களுக்கு இல்லை. நம் தட்பவெப்பநிலைக்கே பொருந்தாத ஷூவை மாட்டிக்கொண்டு, கனத்துக் கிடக்கும் புத்தகப் பையை சுமந்தபடி பால்யத்தின் விளையாட்டுத்தனங்களை தொலைத்து விட்ட ஏக்கப்பார்வை இந்த குழந்தைகளிடம் இல்லை. ஏனெனில் இவர்கள் பள்ளி செல்வதில்லை. இருந்தும் கற்கிறார்கள், வகுத்து வைக்கப்பட்ட பாட முறையையல்ல, கண் முன்னே விரிந்து கிடக்கும் வாழ்க்கையை. ஐந்தே புத்தகங்களுக்குள் குழந்தைகளின் அறிவைச் சுருக்கி வைக்கும் இந்த மெக்காலே கல்வி முறை மீது நம்பிக்கையற்ற பெற்றோர்கள் நடத்துவதுதான் ஹோம் ஸ்கூலிங். அப்படியென்றால் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதை வீட்டில் வைத்துச் சொல்லித் தருவார்களோ? என்று நீங்கள் யோசித்தால் அது தவறு. இங்கு கற்பித்தல் என்கிற ஒன்று கிடையவே கிடையாது என்கின்றனர் ஹோம் ஸ்கூலிங் செய்யும் பெற்றோர்கள். 

‘‘குழந்தைகளுக்கு யாருமே ஆசிரியரா நின்னு வகுப்பெடுக்கத் தேவையே இல்லை. அவங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுத்துட்டு அவங்க விரும்புறதை செய்யுற சுதந்திரத்தைக் கொடுத்துட்டாலே போதும் அதுல இருந்து நிறைய கத்துக்குவாங்க... நாம உருவாக்கத் தேவையில்லை நம்மளைப் பார்த்து அவங்களே உருவாகிக்குவாங்க’’ என்று ஹோம்ஸ்கூலிங்கின் சாரம் குறித்துப் பேசத்துவங்கினார் சங்கீதா ஸ்ரீராம். திருவான்மியூரில் வசித்து வரும் சங்கீதா ஸ்ரீராம் & ராஜீவ் தம்பதியினர் தங்களது மகள் ஈஷாவுக்காக ஒதுக்கியிருக்கும் அறை முழுவதும் புத்தகங்களும், விளையாட்டுப் பொருட்களுமாகவே இருக்கின்றன. அதில் ஒன்று கூட பாடப்புத்தகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கல்வி முறை மீது அப்படி என்ன அதிருப்தி? எனக்கேட்டதற்கு ‘‘யாருடைய சொல்லும் இங்க வேத வாக்கில்லை, அதனால எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதை அப்படியே ஏத்துக்காம அதுக்குள்ள சில கேள்விகளை எழுப்பணும். அந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுற பயணமாத்தான் கல்வி இருக்கணுமே தவிர தகவல்களைத் திணிக்கிறது முறையான கல்வி கிடையாது. பட்டாம்பூச்சியுடைய சிறகசைவையும் அதன் அழகையும் பார்த்து ரசிச்சுக்கிட்டிருக்கிற குழந்தைகிட்ட போய் சூரியன் பூமியிலிருந்து இத்தனை லட்சம் மைல் தொலைவுனு சொன்னா அதை உள்வாங்காது. ஏன்னா அப்ப அதோட மனசு முழுமைக்கும் பட்டாம்பூச்சியைப் பத்தின சிந்தனைதான் இருக்குமே தவிர சூரியன் எவ்வளவு தொலைவுங்கிறது பத்தி எந்த அக்கறையும் இருக்காது. அப்படியிருக்கும்போது என்னைப் பாரு, நான் சொல்றத கவனின்னு சொல்றது கூட ஒரு வன்முறைன்னுதான் சொல்லணும்.

 ஒரு விஷயத்தை கத்துக்கிறதுக்கான தேவை உருவாகுறப்பதான் ஆர்வமும், வேகமும் உருவாகும். சூரியனைப் பத்தி தெரிஞ்சுக்கிற தேவை உருவாகுறப்போ அந்தக் குழந்தை அதுக்கு முன் வரும். வருஷம் பூராவும் அஞ்சு புத்தகத்தை வெச்சுக்கிட்டு படிச்சு அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதி பாஸ் ஆகிட்டா எல்லாம் முடிஞ்சுது. பதினொன்னாம் வகுப்பு படிக்கிற மாணவனுக்கு பத்தாம் வகுப்புல என்ன படிச்சோம்னு கூட நினைவிருக்கிறதில்லை. பதினைஞ்சு வருஷம் கூடி படிச்சதுக்கு டிகிரி சர்டிஃபிகேட்டும், அந்த சர்டிஃபிகேட்டுக்கு உண்டான வேலையையும் தவிர்த்து இந்தக் கல்வி முறையில் வேற என்ன கிடைச்சிருக்கு. முந்தைய காலத்துலயெல்லாம் எட்டு வயசுக்கு மேலதான் பள்ளிக்கூடத்துக்கே போக ஆரம்பிச்சாங்க. இயற்கையிலேயே எட்டு வயசுலதான் சொல்றதை உள்வாங்குற அளவுக்கு மனதளவில் தயாராக முடியும். ஆனா இன்னைக்கு கணவன் & மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போகணும்ங்கிறதுக்காக ரெண்டு வயசுலயே கொண்டு போய் ஸ்கூல்ங்கிற பேர்ல கூட்டமா அடைச்சு வெச்சு அந்த வயசுக்கான ஆசைகளை புதைச்சுடறாங்க. குழந்தைகள் கூடவே நிறைய நேரத்தை செலவழிக்கும்போதுதான் அவங்களுக்கு இருக்கிற ஆயிரம் ஆசைகள், கனவுகள், கற்பனைகளைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க முடியும். அதுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்தா போதும்’’ என்று தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தவர் அடுத்ததாக ஹோம் ஸ்கூலிங்கைப் பற்றி பேசத்துவங்கினார். 

‘‘ஒரு மெக்கானிக்கோட மகன் ஸ்கூல் படிக்குற காலத்துலயே பைக்கை பிரிச்சு மேயுற அளவுக்கு மெக்கானிக்கல் அறிவோட இருப்பான். யாரும் அவனுக்குக் கத்துக் கொடுக்கலை இருந்தாலும் அவன் அப்பாவுடைய ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமா கவனிச்சதால அவனுக்கும் அந்த அறிவு கிடைச்சிருக்கும், இதுதான் ஹோம் ஸ்கூலிங். நாங்க எங்க குழந்தைக்கு எதுவும் கத்துக்கொடுக்கலை. வாழ்க்கையை நல்ல படியா வாழுறோம் அதிலிருந்து அவ நிறைய விஷயங்களைக் கத்துக்குறா.

எம்பொண்ணுக்கு அஞ்சு வயசாகுது, எங்க வீட்டுக்கு வர்றவங்களெல்லாம் கேட்குற முதல் கேள்வி ‘‘உங்க பாப்பாக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?’’ன்னுதான். அவளுக்கு இன்னும் எழுதப் படிக்கத் தெரியாது, நானும் சொல்லித் தர விரும்பலை. படிக்கணும், எழுதணும்னு அவளுக்கா எப்ப ஆர்வம் வருதோ அப்ப சொல்லிக் கொடுத்தா போதும் அதீத ஆர்வத்தோடவும் வேகத்தோடவும் கத்துக்குவா. எங்களுடைய கடமை என்னன்னா அதுக்கான சூழலை உருவாக்குறதுதான். அவ முன்னாடி நிறைய புத்தகங்கள் வாசிச்சோம்னா என்ன இது? இதை எப்படி படிக்கிறது?ன்னு அவளா முன் வருவா. இப்படியா குழந்தைகளுக்கு முன் மாதிரியா வாழ்ந்து காட்டுற பெத்தவங்களாலதான் ஹோம் ஸ்கூலிங்கில் ஈடுபட முடியும்.

நிறைய படக்கதைப் புத்தகங்கள், அறிவியல் தொடர்பான புத்தகங்கள், விண்வெளி தொடர்பான படங்கள் அடங்கிய புத்தகம், விளையாட்டுப் பொருட்கள்னு பலதும் அவ கைக்கெட்டுற உயரத்துல, திறந்த வெளியில அடுக்கி வெச்சிருக்கோம். அவளுக்கு எப்ப என்ன செய்யணும்னு தோணுதோ அதை அவளே முடிவு பண்ணி செய்யட்டும்ங்கிறதுக்காகத்தான் இப்படி. ஒரு நேரம் புத்தகத்தை எடுத்து படங்களைப் பார்ப்பா, இன்னொரு நேரம் கட்டைகளை அடுக்கி அவளா வீடு செய்வா இப்படி என்ன தோணுதோ அதை அவ போக்குல விட்டுர்றோம். விண்வெளி அறிவியல் தொடர்பா ஈஷாவுக்கு நிறைய ஆர்வமும் அறிவும் இருக்கு. 

ஒரு தடவை அவளை கடற்கரைக்கு கூட்டிட்டுப்போயிருந்தப்ப வானத்தையே உத்துப்பார்த்துட்டிருந்தா, ஒரே நிலா ஏன் ஒவ்வொரு நாளும் வெவ்வேற சைஸ்ல இருக்குன்னு ஒரு கேள்வி கேட்டா, யூடியூபில் அது குறிச்சு விளக்கின வீடியோவை அவளுக்கு போட்டுக் காட்டின பிறகு அது சம்மந்தமா இன்னும் நிறைய தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்பட்டு கத்துக்கிட்டா. இவளோட ஆர்வத்துக்காக இவளை பிர்லா கோளரங்கம் கூட்டிட்டுப் போயிருந்தேன். நானே முதன் முறையா அப்பதான் அங்க போனதால ஈஷாவுக்கு எவ்ளோ ஆர்வமும், வியப்பும் இருந்ததோ எனக்கும் அது இருந்தது. என் குழந்தையோட சேர்ந்து நானும் நிறைய கத்துக்கிட்டேங்கிறதுதான் உண்மை. ஹோம் ஸ்கூலிங் பண்றதுக்கு பெத்தவங்க ஜீனியஸா இருக்கணும்ங்கிற அவசியமெல்லாம் இல்லை, நம்ம குழந்தை கேட்குற கேள்விகளுக்கு பதில் தெரியலைன்னாலும் எந்த வழியில தெரியுமோ அந்த வழியைக் காட்டணும். இந்த மாதிரியான அணுகுமுறைதான் இதில் முக்கியம்’’ என்றார். 

அடுத்ததாக சிவேஷ், விஷ்வேஷ் என்று தன் இருமகன்களையும் ஹோம் ஸ்கூலிங்கில் வளர்த்து வரும் கோகிலாவிடம் ‘‘ஹோம் ஸ்கூலிங்கில் வளர்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருக்கிறதா? படிப்புக்கான சான்றிதழ்களுக்கு என்ன செய்வீர்கள்? என்று கேட்டோம். 

‘‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூலிங்’’ மூலமா நேரடியா பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதிடுவோம். கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டியோட ‘‘ஓ’’ லெவல் தேர்வுகளையும் எழுத முடியும். அமெரிக்க நாடுகளில் பல ஆண்டுகளாகவே ஹோம் ஸ்கூலிங் நடைமுறையில் இருந்து வருது. ஹோம் ஸ்கூலிங்கில் படிச்சுட்டு வந்தவங்களுக்குத்தான் அங்க வேலை வாய்ப்புல முன்னுரிமை கொடுக்கிறாங்க. அதனால் வேலை வாய்ப்புகளில் எந்தப் பிரச்சனையும் கிடையாது’’ கிடையாது என்றவர் மேலும் 

‘‘குழந்தைகளுக்கு நாம கொடுக்கிற சுதந்திரம்தான் எல்லைகளே இல்லாமல் கற்பனை செய்யவும், சிந்திக்கவும் வைக்குது. என் மகன் சிவேஷ் விண்வெளி தொடர்பா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் காட்டுறான். புத்தகம், இணையம் மூலமா பல தகவல்களை அவன் தெரிஞ்சுக்க வழி பண்றோம். அவனுக்கு கற்பனைத் திறன் அதிகமா இருக்கு. கற்பனையாக இவனாவே ஒரு நாட்டை உருவாக்கி வெச்சிருக்கான்.

அந்த நாட்டு மக்கள் இப்படியிருப்பாங்க, அவங்க வீடுகள் இப்படியிருக்கும்னு எல்லாத்தையும் கற்பனை பண்ணிருக்கான். இவனோட கற்பனை நாடு நிலையா இருக்காது, மிதந்துகிட்டே பல இடங்களுக்குப் போய்க்கிட்டிருக்கும். இந்த கற்பனையை நாம வெறும் விளையாட்டுத்தனமாய் எடுத்துக்க முடியாது. ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கிட்டம்னா கூட அதன் மேல பல்லாயிரக்கணக்கான பார்வைகளை முன் வைக்க முடியும். நாம பார்க்குற ஒரு விஷயத்தை குழந்தைங்க வேறொரு கண்ணோட்டத்துல பார்க்குறாங்க. அவங்க பார்வை நம்மையே வியப்புல ஆழ்த்துற மாதிரி இருக்கும். கத்துக்கணும்ங்கிற ஆர்வம் மட்டும் வந்துட்டா போதும் காலம் முழுசுக்கும் அவங்க பல விஷயங்களைக் கத்துக்கிட்டே இருப்பாங்க. பலவற்றின் மீது அவங்க தேடுதல் தொடர்ந்துகிட்டே போகும்’’ என்றார். 

ப்ரி.கே.ஜி அட்மிஷனுக்குக் கூட லகரங்களில் பணம் கட்டி விட்டு வரிசையில் காத்து நிற்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் இந்தக் கல்வி முறையையே சாடி விட்டு குழந்தைகளின் தேவை, விருப்பத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் ஹோம் ஸ்கூலிங் பெற்றோர்கள் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள்.
                          - கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் தோழி 

No comments:

Post a Comment