Thursday, March 19, 2015

மருத்துவத்திலிருந்து மகத்துவத்துக்கு
நாம் இயற்கைக்கு விரோதாமன காலத்தில்
வாழ்கிறோம் மறுபடியும் அதை
இயற்கையானதாக மாற்ற வேண்டும்
நமது பாடல்கள் மூலமும்
அறிவார்ந்த சீற்றத்தின் மூலமும்
    - கென் சரோ விவா

 “இயற்கைக்கு முரண்பட்ட வாழ்வினைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உணவுப் பழக்கம் தொடங்கி ஒவ்வொரு அசைவிலும் நமது வாழ்வியல் இயற்கையை விட்டு தூர விலகி நிற்கிறது. சொத்து சேர்ப்பதைப் போல நமது உடலுக்குள் பல நோய்களை சேர்த்துக் கொண்டிருப்பதற்கான காரணம் இதுதான் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்நமது முந்தைய தலைமுறை நமக்கு மாசற்ற உலகை கொடுத்து விட்டுப் போனது... நாமோ நஞ்சான நிலத்தையும்விஷமாகிப் போன நதிகளையும்சுவாசிக்கத் தகுதியற்ற காற்றையும்தான் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கவிருக்கிறோம்” என உண்மையை உரக்கப் பேசுகிறார் உமா மகேஸ்வரி. திருத்துறைப்பூண்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர் தற்போது காரைக்கால் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராய் பணி புரிந்து வருகிறார். மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி இவருக்குள் ஒரு பன்முகத்தன்மை உண்டு. திருவள்ளுவர் வாழ்வியல் பயிற்சி நடுவம் மூலம் இயற்கையோடு இசைந்து வாழ்வதற்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார். இயற்கை விவசாயம் மூலம் நஞ்சில்லா நெற்களை விளைவித்துஇவர் நடத்தி வரும் நமது உலகம் இயற்கை அங்காடி மூலம் அவற்றை விற்பனை செய்து வருகிறார். அது மட்டுமின்றி காரைக்காலில் உள்ள திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாழ்வியலுடன் கூடிய கல்வியையும் புகட்டுகிறார். சமூக நோக்கை கருத்தில் கொண்டு தன்னால் இயன்ற அளவுக்குமான தனது பங்களிப்பை மேற்கொண்டு வருபவரிடம் பேசினோம்

“சமூகத்தை வேறு கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய பார்வை எனக்கு ஏற்பட்டதற்கு என் அப்பா அமிர்தலிங்கம்தான் காரணம். அவர் திராவிடர் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தார். எனது ஆரம்ப காலம் முதற்கொண்டே சாதிமதங்களைக் கடந்த ஒரு பகுத்தறிவுப் பார்வையை எனக்குள் விதைத்தார். பள்ளிக் காலத்தில் பாடப்புத்தகம் மட்டுமல்லாது காந்திபெரியார்அன்னை தெரசா என தவிர்க்க இயலாத சமூகப் பங்காற்றுனர்களின் வாழ்வையும்போராட்டத்தையும் படித்தேன். அன்னை தெரசா என்னை நெகிழ வைத்து விட்டார்,என் முன் மாதிரியும் அவர்தான். அதன் பிறகுதான் அடித்தட்டு மக்களுக்கு என்னால் இயன்ற அளவு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வேரூன்றியது. அந்த எண்ணம்தான் என்னை மருத்துவர் ஆவதற்குத் தூண்டியது. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தேன். படிப்பு முடிந்ததும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் மருத்துவ அதிகாரியாக பணியில் அமர்ந்தேன்.

அடித்தட்டு மக்களைச் சந்திப்பதற்கும்அவர்களுக்கு மருத்துவம் புரிவதற்குமான வாய்ப்பு அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் கிடைக்கும். காரைக்கால் அருகே விழுதியூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதலாக ஆறு ஆண்டுகள் பணி புரிந்தேன். எந்த நோக்கத்துக்காக மருத்துவம் படித்தேனோ அது நிறைவேறியது அந்த கிராமத்தில்தான். மருத்துவம் பார்க்க வரும் பெண்கள் தங்களது குடும்ப பிரச்னைகளைக் கூட மனம் திறந்து கூறி அழுதிருக்கின்றனர். நானும் அவர்களைத் தேற்றி அனுப்பியிருக்கிறேன். நாம் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைக் காட்டிலும் அவர்கள் மீது செலுத்தும் அக்கறைபிரச்னைகளைக் கேட்கும் பொறுமைநமது ஆறுதலான வார்த்தைகள்தான் மிக முக்கியம் என்பதை உணர்ந்தேன். மருத்துவர் என்கிற அடையாளம் தவிர்த்து மக்களோடு மக்களாய் ஐக்கியமாவதன் மூலம்தான் அவர்களது பிரச்னைகளை உள்வாங்க முடியும்” என்றவர் இயற்கை வாழ்வியலை புறந்தள்ளியதால் நாம் சந்தித்த விளைவுகள் குறித்தும் இயற்கை வாழ்வியலின் அத்தியாவசியம் குறித்தும் பேச ஆரம்பித்தார்.

“இயற்கை வாழ்வியல் மற்றும் விவசாயம் குறித்தான புரிதலை எனக்கு ஏற்படுத்தியதில் நம்மாழ்வார் அய்யாவுக்கு பெரும்பங்கு உண்டு. குடும்பம் உயிர் சூழல் நடுவம் அமைப்பு மூலமாக கொழுஞ்சிப் பண்ணைகிள்ளுக்கோட்டைப் பண்ணைகளில் நம்மாழ்வார் இயற்கை விவசாயம் புரிந்து வந்தார். கோட்ரம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் அகதிகளுக்காக குடும்பம் உயிர்சூழல் நடுவம் மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த மருத்துவ முகாமில் நானும் கலந்து கொண்டேன். அப்போதுதான் நம்மாழ்வார் அய்யாவின் தொடர்பு கிடைத்தது. இயற்கை மீதான ஒரு ஆழமான பார்வையை ஏற்படுத்தியது அவர்தான். அதன் பின்னர் இயற்கை வாழ்வியல் குறித்து தெரிந்து கொள்ள முற்பட்டேன். மருதமலை சுப்ரமணியம்திருமானூர் காசிபிச்சைதண்டையார்பேட்டை ஸ்ரீ ராமலுஆடுதுறை ராமலிங்கம் ஆகிய இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர்களின் முகாம்களில் கலந்து கொண்டேன். என் வாழ்க்கையை வேறொரு தளத்துக்கு கொண்டு போனது அந்தத் தருணங்கள்தான்.

சுகப்பிரசவங்கள் அருகி இப்போது சிசேரியன் பெருகி வருகிறதுபருவமெய்த பெண்களுக்கு சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றதுபெண்களிடத்தில் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது இப்படியாக இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு எத்தனையோ பிரச்னைகள். இதற்கான காரணங்களில் முதலாவது ரசாயன உரங்களால் விளைந்த உணவினை உட்கொள்வதுஇரண்டாவது உடல் உழைப்பே இல்லாத வாழ்வியல் சூழல் இவை இரண்டும்தான். ஆகவே நாம் இயற்கை சார் வாழ்வியலுக்கு திரும்ப வேண்டியதன் அத்தியாவசியத்தை உணர்ந்தேன். அதன் விளைவாக 2006ம் ஆண்டு திருவள்ளுவர் வாழ்வியல் பயிற்சி நடுவத்தை துவக்கினேன். இதன் மூலம் மாதந்தோறும் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியில் இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். நம்மாழ்வார் எங்களது பயிற்சி முகாமில் இரண்டு முறை கலந்து கொண்டு பயிற்சி அளித்திருக்கிறார். தஞ்சாவூர் சித்தர்காசிப்பிச்சைஸ்ரீ ராமலு,மருதமலை சுப்ரமணியம்பால சுப்ரமணியம் என இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்குகிறோம். வருமுன் காப்பதே சிறந்தது என்பது வலியுறுத்துகிறோம். ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்கான அடிப்படைப் பயிற்சி இது” எனும் உமா மகேஸ்வரி காரக்காலை அடுத்துள்ள சங்கமங்கலத்தில் நண்பர்கள் நான்கு பேருடன் இணைந்து 20 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை விவசாயம் புரிந்து வருகிறார்.

“இயற்கை என்பது தன்னைத்தானே விளைவித்துக் கொள்ளும் என்பதுதான் இயற்கை விவசாயத்தின் அடிப்படை. இருந்தும் ரசாயன உரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் நமது மண் உயிர்த்தன்மையற்று மலடாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிரூட்டுவதற்கான பணியைத்தான் நம்மாழ்வார் மேற்கொண்டார். அவர் காட்டிய வழியில் மூலிகை பூச்சி விரட்டிபஞ்ச காவ்யம்,அமுத கரைசல்மண்புழு உரம் ஆகியவற்றை நாங்களே தயாரித்து விவசாயம் புரிகிறோம். பாரம்பர்ய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பாஇலுப்பைப்பூ சம்பாகருங்குருவை,கருப்புகௌனிகாட்டுயானம் ஆகியவற்றை பயிரிடுகிறோம். அரிசியில் சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது என்கிற பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது. நாங்கள் பயிரிடுகிற நெல் ரகங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை” என்கிறார்.  கோவைதஞ்சை,கும்பகோணம் பகுதிகளில் இவர்களுக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். காரைக்காலில் நமது உலகம் இயற்கை அங்காடி மூலமும் இங்கு விளையும் அரிசிகளை விற்பனை செய்து வருகின்றார். இவரது வயலில் குளம் வெட்டியிருக்கிறார் இதன் மூலம் மீன் வளர்ப்பது, ஆடு,மாடுகோழிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்குவதுதான் இவரது அடுத்த கட்ட திட்டமாம்.

“தாய்மொழிக்கல்வியை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கோடு பேராசியர் மருதமுத்து அய்யாதான் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப்பள்ளியைத் துவங்கினார். என் வழிநடத்துநர்களில் அவர் மிக முக்கியமானவர். அவரது தலைமையில்தான் எங்களது சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது. தமிழ் மொழி சார்ந்து பல ஆய்வுக்கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். நானும் என் கணவரும்தான் இந்தப் பள்ளியை தற்போது நிர்வாகித்து வருகிறோம். சமச்சீர் கல்விதான் என்றாலும் அதையும் தாண்டி தமிழ் பண்பாடுஅறநெறிகளைப் புகட்டுகிறோம். இங்கு படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் தமிழ் மொழி மீதான ஆழ்ந்த தெளிவும்அளவில்லாத பற்றும் இருக்கும். நமது மொழியையும்பண்பாட்டையும் அதன் சிறப்புகளையும் உணர்ந்த ஒரு இளம் தலைமுறை உருவாக தாய்மொழிக்கல்வி மிக அவசியம்” என்றவர் இறுதியாக

”வானத்தைப் பார்த்தே நேரத்தை அளவிட்டுச் சொல்கிற பெரியவர்களைப் பார்த்திருப்போம். ஏன் நம்மால் அப்படி சொல்ல முடியவில்லைஐந்தறிவுள்ள விலங்கினங்கள் கூட பேரிடர் ஏற்படப் போவதை முன்னரே அறிந்து கொள்கின்றன. ஏன் அது நம் ஆறாம் அறிவுக்கு எட்டவில்லை?இயற்கை மீது நமக்கு பற்றில்லாததுதான் காரணம். இந்நிலை மாற வேண்டுமானால் நமது ஆற்றல் மிகு செயல்களால் மட்டுமே முடியும். என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு பரப்புக்குள் எனக்கான வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. அதை அனுதினமும் நடைமுறைப் படுத்துவது மட்டுமே எனது முக்கியப் பணி” நம்பிக்கையோடு முடிக்கிறார் உமா மகேஸ்வரி.

          -கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் தோழி

No comments:

Post a Comment