Wednesday, March 25, 2015

தப்புச்சத்தம் -சிறுகதை

மாதையனின் இந்தப்பிறவிக்கான வாழ்க்கையில் இருக்கும் கிழிசலான பக்கங்களில் இசை தன் பெயரை விலாவாரியாக எழுதிக்கொண்டது. அது எழுதப்பெற்றது போக மீதமிருக்கும் பக்கங்கள் வெகு சொச்சமே. அப்படியிருந்தும் அவற்றில் இன்னும் சிலவை வெற்றுப்பக்கங்களாகவே இருக்கின்றன. மாதையனுக்கு இசை பிடிக்கும். ஏழை பணக்கார வர்க்கமாகட்டும், இன்பம், துன்பம் சூழல்களாகட்டும் இசையின் வடிவங்கள்தான் மாறுகிறதே ஒழிய இசை ஒன்றுதான். பகலின் நடுநிசி வேளை அது. சூரியன் நடுக்கோட்டில் நின்று கொண்டு வாட்டியெடுத்துக் கொண்டிருந்தது. தன் குடிசை வீட்டுக்குள் பெரிதொன்றும் வெப்பத்தை உணராதவராய் மெலிந்த போன தன் தேகத்தை கயிற்றுக்கட்டிலுக்கு கொடுத்தபடி படுத்துக் கிடந்தார். சட்டையணியாத வெற்றுடலில் துருத்திக் கொண்டு நிற்கும் மார்புக்கூடு. ஒட்டிப்போயிருந்த அந்த வயிற்றில் பசியைத் தவிர யாதொன்றும் இருந்ததாய் தகவல் இல்லை. அதோ குடிசை வீட்டின் ஒரு மூலையில் கிடத்தப்பட்டிருக்கும் ஆதிகாலத்து டிரான்சிஸ்டர், இந்த முதுமைப் பயணத்தின் கைத்தடியாய் அவரைக் கூட்டிச்சென்று கொண்டிருக்கிறது.

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்…
ரசித்துக் கேட்டார், இந்த வாழ்க்கையை நிரப்ப இதற்கு மேல் என்ன வேண்டும்? மனநிறைவு தட்டுப்பட்டது. டிரான்சிஸ்டரில் ஒலிக்கும் ஒவ்வொரு பாடலும் மாதையனுக்குள் ஏதோ ஒன்றை பழைய நினைவுகளிலிருந்து கிளறி விட்டுச்செல்கிறது. கடந்த கால நினைவுகள் மனதிற்குள் வந்தெழும்பினாலே நிகழ்காலம் கசப்பாகி விடுகிறது போலும். கடந்த காலத்தில் தவற விட்டனவற்றை நினைத்து நிகழ்காலத்தில் ஏங்கும் சுகத்தை இந்தப் பாடல்கள் அவருக்கு கொடுக்கத் தவறுவதில்லை. இது பாட்டு மட்டுமல்ல மாதையனின் கடந்த காலத்திற்குள்ளான மறுபிரவேசம்.
எழுந்து நின்றவர் பானைத்தண்ணீரை சொம்பில் மொண்டு குடித்தார். தண்ணீர் வயிற்றுக்குள் இறங்கிய கணம் தேகம் முச்சூடும் மின்சாரம் பாய்ந்த உணர்வு. அந்த உணர்வின் பெயரே தமிழ் மானிட சமுதாயத்தில் பசி என்றழைக்கப்படுகிறது. விறகடுப்பருகே கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்த மண் பானையில் சோறு வடித்து பசி ஓட்டிய பொழுதுகள் மறைந்து போய் நேற்று மதியத்திலிருந்தே அந்த பானையும் அவரது அடுப்பும் வெறுமனே கிடக்கிறது. கெம்பத்தராயன் கரட்டிலிருந்து பொறுக்கி வரப்பட்ட சுள்ளிகளும் அப்படித்தான். ஊரில் ஏதேனும் எழவு விழுந்தாலாவது மூர்த்தி கடையில் கிலோ நாலு ரூபாய்க்கு விற்கும் ரேசன் அரிசி வாங்கிப்போடலாம் என்றால் வயசான டிக்கட்டுகள் இழுத்துக்கொண்டிருக்கிறதே தவிர போய்ச்சேர்ந்த பாடில்லை… வயிற்றுப் பாட்டுக்கென சாவை எதிர்பார்த்துக்கிடக்கிற கலைஞனின் குமுறலாக இது இருந்தது. மாதையனின் பசிக்காக ஒரு மரணத்தை எதிர்நோக்குவது நியாயமற்றதுதான், இருந்தும் பசியின் குரூரம் மனிதத்தன்மையை அவ்வப்போது மறக்கடிக்கச் செய்வதும் இவ்வுலகின் யதார்த்தங்களில் ஒன்று. ஒரு மாத காலமாகவே சுத்து வட்டாரத்தில் எங்கும் எழவே விழவில்லை, கோவில் திருவிழா வர கிடக்கிறது இன்னும் நான்கு மாதங்கள், ஏதோ அன்றொரு வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்து வாங்கிப்போட்ட ரேஷன் அரிசியைக் கொண்டு கஞ்சி வடித்து பசியை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், நேற்றைய பொழுதில் அதுவும் தீர்ந்து போய் கஞ்சிக்கும் நாதியற்றவராய் கிடக்கிறார் மாதையன்.
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்…ஏன்…ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்…ஏன்..ஏன்..
ஒலிக்கவும் அட்ராசக்க.. என்று அவர் தொடை தட்டிய சமயம் குடிசையின் படலைத் திறந்து கொண்டு பழனிச்சாமி உள் நுழைந்தார். அழுக்குப் படிந்திருந்த கதர் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் வந்திருந்தார். கக்கத்தில் மிக சாந்தமாய் தொங்கிக் கொண்டிருந்தது தப்பு. மாதையனைப் பார்த்தார், அந்தப் பார்வைக்குள் ஏகக் கேள்விகள் அடங்கியிருந்தும் ஓரளவு புரிந்தவராய் சுதாரித்து எழுந்து அமர்ந்தார் மாதையன், கக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த தப்பைப் பார்த்ததும் வில் அம்புடன் வேட்டைக்குப் புறப்படும் வேட்டைக்காரன் போலவே பழனிச்சாமி மாதையனுக்கு தென்பட்டார். சக வேட்டையன் தன்னையும் வேட்டைக்கு அழைக்கிறான் என்பதைத்தான் அப்பார்வை உணர்த்திற்று.. குடிசையின் வடக்கு மூலையில் தொங்கிக் கொண்டிருந்த தப்பை எடுத்து மாட்டிக் கொண்டு பழனிச்சாமியைப் பார்த்தார், பின்னர் இருவரும் வேகமாய் நடையிட்டனர்.
“ஏம்பழனி யாரூட்டு எழவு”
“நம்ம ஆறுமுகக்கவுண்டர்தான்”
“அடக்கெரகத்த… நல்லாத்தான இருந்தாரு”
“என்ன எழவுன்னு தெரியல… எதையோ அரைச்சுக் குடிச்சு செத்துப்போயிட்டாராம் மனுசன்”
“நாங்கும்பிட்ட ஒண்டிக்கருப்பன் என்னைக்கைவிடலை, நேத்திலிருந்து கஞ்சி குடிக்காம ஊரில ஒரு எழவையும் காணமேன்னு படுத்துக்கெடக்குறேன் நல்ல வேளையா ஆறுமுக கவுண்டரு புண்ணியத்துல இன்னைக்கு வகுறு நம்ப சாப்பாடும் குடியும்தான்” மகிழ்ச்சி பீய்ச்சி அடிக்கும் விதமாய் எட்டி நடையிட்டபடியே மாதையன் சொன்னார். ஆறுமுகக் கவுண்டரின் இறப்புச் செய்தியே மாதையனின் பாதி பசியை தின்று விட்டது போல அவரது நடையின் வேகம் சொல்லியது.
ஒத்தப்பனமரக்காட்டிலேயே ஆறுமுகக்கவுண்டர்தான் பெரிய தலை. பத்துப் பேரைத் தூக்கிப்போட்டு பந்தாடக்கூடிய திராணி அவரிடத்தில் தட்டுப்படும். என்னதான் சொத்துக்காரராக இருந்தாலும் இரும்பு பிடித்த அவரது கைகள் காப்பு காய்த்திருக்கும். நல்ல மீசையும் கிர்தாவும் வைத்து ஆளே மிரட்டும் தொணியில் இருப்பார். ஊரில் எந்த நல்ல காரியத்துக்கும் நன்கொடை வேண்டுமென அவர் வீட்டில்தான் ரசீதுடன் காத்துக்கிடப்பார்கள். ஊர் மரியாதையை சம்பாதிக்கும் பொருட்டு ஆயிரம் அல்லது ஐநூறை அளந்து போடுவார். பின்னாட்களில் மாபெரும் கபடிப்போட்டி நடத்துறோம் என தூக்கநாயக்கன்பாளையத்தில் இருந்தும் கூட இவரைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ரசீதுப் புத்தகத்தை வாங்கி அதில் ஆயிரமோ ஐநூறோ அவர் எழுதும்போது நன்கொடை கேட்டவர்களுக்கு புல்லரித்து விடும். எழுதி விட்டு நாளைக்கு வந்து காசை வாங்கிக்கங்க என்று அவர் சொல்லி விட்டு சிரிக்கும்போது புல்லரிப்பில் சிலிர்த்து நின்ற ரோமங்கள் அப்படியே அடங்கிப்போகும். இவர் கொடுக்கும் நன்கொடை எழுத்தளவில் மட்டும்தான் என்பதை உணர்ந்தவரகள் இந்தப் பக்கம் திரும்பிப்பார்ப்பது கூடக் கிடையாது. ஏப்ரல் 1ம் தேதி விளையாடுகிற ஏமாத்து விளையாட்டில் கைதேர்ந்தவராக முத்திரை குத்தப்பட்டார். பெண் பித்து தலைக்கேறி காமத்தின் உச்சத்தை எட்டிப்பார்த்து விட எத்தனித்ததில் இருந்ததெல்லாம் இல்லாமற்போக சின்ன ஒரசலுக்குத்தான் இத்தனையுமா? என அந்த பித்து தெளிந்த சமயம்தான் இந்த முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும். ராஜ வாழ்வை வாழ்ந்தவனிடம் ஓட்டாண்டியாக வாழ்ச்சொல்வது ஏற்க முடியாத வலிதானே.
ஒத்தப்பனமரக்காட்டு மண் சாலைகளில் புழுதியை பரப்பிய வண்ணம் சொகுசு கார்கள் பலவும் வந்தபடி இருந்தன. ஆறுமுக கவுண்டரின் அம்பாஸிடர் காரை மட்டுமே கண்டிருந்த இந்த மண் சாலைகளுக்கு இந்த கார்களின் வருகை புதிதுதான். வருகிறவர்கள் எல்லாம் பூமாலையோடும் கோட்டித்துணியோடும் சென்று கொண்டிருக்கும் மர்மம் புரியாமல் ஊருக்கு வெளியே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தனர்.
ஆறுமுகக் கவுண்டரின் விஸ்தாரமான அந்த பங்களா ஜமீன் பங்களாவுக்குரிய அத்தனை தகுதிகளையும் பெற்று, போன பொங்கலுக்கு செய்யப்பட்டிருந்த பெயிண்டிங்கில் தகதகத்து மின்னியது. அவரது வீடு எழவு வீட்டிற்கான அறிகுறியே இல்லாமல் காணப்பட்டது. வந்திருந்த எல்லோரும் கடமைக்கென கைகட்டி நின்று கொண்டு முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள முயற்சித்தது அப்பட்டமாய் தெரிந்தது. பெரிய அளவில் அழுகையோ அரற்றலோ இருந்ததாகத் தெரியவில்லை. கிராமத்துப் பெருசுகள் சில ஒன்று கூடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்ததோடு சரி. ஒத்தப்பனமரக்காடு கிராமம் அதன் இயல்பில் சிறிதளவு மட்டும் மாற்றம் காட்டியிருந்தது. கட்டாயம் துக்கத்துக்கு போயாக வேண்டிய நிர்பந்தத்துக்கு கிராமமே ஆட்பட்டிருந்தது. ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் பலரும் வந்து நின்று துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஈரோடு, பெருந்துறை பகுதிகளிலிருந்தும் பல உறவினர்கள் எந்த வித சோகத்தையும் காட்டிக்கொள்ளாமல் வந்தமர்ந்திருந்தனர்.
வழக்கமான சாங்கிய சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு வெள்ளைத் துணிகளால் சூழப்பட்டிருந்த ஆறுமுகக் கவுண்டரின் உடல் பங்களாவின் முன்பகுதியில் கிடத்தப்பட்டிந்தது. வெளியே கையில் தீப்பந்தம் ஏந்தி தரையில் துண்டு விரித்து உட்கார்ந்து கொண்டிருந்த வண்ணான், வருகிறவர், போகிறவர் முகங்களையெல்லாம் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். தன்னைக் கடக்கும் போது ஒவ்வொருவரின் கைகளும் சட்டைப் பாக்கெட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிற அவனது எதிர்பார்ப்பு எல்லா நேரங்களிலும் நடந்தேறுவதில்லை. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லரைக்காசுகள் கடமைக்கென வந்து விழுந்தன. பத்து ரூபாய் நோட்டுக்கள் விழுவதே அதிசயமாகத்தான் இருந்தது. வெள்ளையும் சொள்ளையுமாய் ஏசி காரில் வருகிறவர்களின் கைகளில் பத்து ரூபாய்க்கு மேல் அகப்படாமல் போனதை எண்ணி சபித்துக்கொண்டிருந்தது அவனுக்கு மட்டுமே தெரியும். அப்போதுதான் மாதையனும், பழனிச்சாமியும் வந்து சேர்ந்திருந்தனர். ஆறுமுகக் கவுண்டரின் உறவினர் ஒருவர்தான் அவர்களை தனியே ஒரு ஓரத்திற்கு கூட்டிச்சென்றார்.
“ஊருல எழவு உழுந்தா உங்களை வெத்தலை பாக்கு வெச்சழைக்கணுமோடா?” என்றார்.
“இல்லைங் சாமி… கரட்டுக்கு போயிருந்த மாதையனை கூட்டியார நேரமாயிடுச்சுங்..” என சமாளித்தார் பழனிச்சாமி.
“சரி…நல்லா கேட்டுக்கங்க… ஊர்ல பெரிய மனுஷன் எழவு அதனால சத்தம் காதைப் பொளக்கோணும் சொல்லிட்டேன்”
“அதெல்லாம் பண்ணிடலாமுங்க… கொஞ்சூண்டு உள்ள எறக்கிப்புட்டமுன்னா அப்புறம் சத்தம் தானா வருமுங்க”
“சரிய்யா… பட்டாசு வாங்கப் போன மாதேசு கிட்ட சரக்கு வாய்ண்டு வரச் சொல்லியிருக்கேன்.. சித்த நேரத்துல வந்துடும்… அப்புறம் குடிச்சுப் போட்டு சகிட்டுக்கு அடிச்சுத்தள்ளுறீங்க” அதிகாரத்தோரணை வெளிப்பட வார்த்தைகளை கொட்டி விட்டு இருவரையும் பார்த்தார்.
“எல்லாம் பண்ணிப்போடலாமுங்க” என்று சொன்ன இருவரின் கண்களிலும் வர்ணிக்க முடியாத ஆனந்தப் பூரிப்பு. போன மாதம் கொங்கர்பாளையத்தில் நடராசன் வீட்டு எழவில் குடித்ததோடு சரி… மதுவின் ருசியை ஒரு மாத காலமாகவே ஏங்கித்தவிக்கிறது மனசு. தலைக்கேறும் போதையில் தப்படித்தவாறே ஆடிக்கொண்டு சகலத்தையும் மறந்து வாழ்க்கையின் இன்பத்தின் அத்தியாயங்களை மட்டும் படிக்கிற வாய்ப்பு போதையில்தான் கிடைக்கிறது என்று இருவரும் முழுமையாக நம்பினர்.
தூக்கநாயக்கன்பாளையம் டாஸ்மாக்கிலிருந்து வாங்கி வந்த ஆஃப் டைமண்ட் ரம்மை இருவரும் பகிர்ந்து கொள்ளும்படி மாதையனிடம் ஒப்படைத்தான் மாதேஷ். பங்களாவின் பக்கவாட்டில் வேப்ப மரம் ஒன்று குடையாக கிளை பரப்பி நிழலையும் தூய காற்றினையும் தாராளமாய்க் கொடுத்துக் கொண்டிருந்தது. கொளுத்தும் உச்சி வெயிலுக்கு அந்த மரத்தடியைத் தவிர வேறெந்த இடமும் சரிப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. மாதையனும் பழனிச்சாமியும் வேப்ப மர நிழலுக்குப் போனார்கள். வேப்பையின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்த காக்கை ஒன்று இட்ட எச்சம் பழனிச்சாமியின் தோள் பட்டையில் விழுந்து தெரித்தது. “அடக் கெரகத்த…” என்றவாறே வேப்பிலைகளை பிய்த்து அதன் மூலம் எச்சத்தை சுத்தம் செய்தார். பங்குனி வெயிலின் உக்கிரத்துக்கு இந்த வேப்பமரத்தடியில் வீசிய மெல்லிய காற்று அப்படியே கொஞ்சிக் குலாவிச் செல்வது போன்று இருவரும் உணர்ந்தனர். பழனிச்சாமி ரம்மை பங்கிடத் துவங்கினார். பாட்டிலிலிருந்து வெளியே கொட்டும் இந்த கருப்பு திரவத்தை சுவைத்து விடத்தான் எத்தனை பாடு என மாதையன் நினைத்துக் கொண்டார்.
முதல் சுற்று ஊற்றப்பட்ட டம்ளர்களில் தண்ணீர் கலந்து இருவரும் குடிக்க ஆயத்தமாகினர். மூக்கினருகே டம்ளரை கொண்டு வந்த மாதையன் முகர்ந்து பார்த்து விட்டு
“எழவெடுத்தவன் மட்டமான சரக்கை வாங்கியாந்திருக்கான்” என்றார்.
“பின்ன உனக்கென்ன மிலிட்டரி சரக்கா கொடுப்பாங்க ரெண்டு இழு இழுத்தமா தூக்கி கெடாசிட்டு போனமான்னு இரு” எனச் சொல்லி விட்டு ஒரே சாய்ப்பில் டம்ளரை காலி செய்தார் பழனிச்சாமி.
முகத்தை சுளித்தபடியே மாதையன் குடித்து முடிக்க, எதுக்களித்தது. ஏக்… ஏக் என்றவர் நெஞ்சைத் தடவிக்கொடுத்து சரிப்படுத்திக் கொண்டார்.
இருவரும் பத்தாம் நம்பர் பீடி பற்றி விட்டு இரண்டாவதும் கடைசியுமான சுற்றினை ஊற்றி பாட்டிலை காலி செய்தனர். மாதையனுக்கு முதல் சுற்றில் வந்த எதுக்களிப்பு தற்போது இல்லை. டம்ளரை கசக்கி எறிந்து விட்டு இன்னொரு பீடியை இழுத்து முடித்த மாதையனின் தலை இலேசே சுழன்றது.
“தப்பட்டை…என்ன கவுந்துடுவியாட்டிருக்கு…”
“நா…செத்துப் பொழைச்சவண்டா… எமனெ பார்த்து சிரிச்சவண்டா…” நெஞ்சு நிமிர்த்தி பாடினார் மாதையன்.
“ஒனக்கு ஏறிக்கிச்சு” என்ற பழனிச்சாமி தானே சுற்றித்திரிந்து பிய்ந்து போன தென்னை ஓலைகளை கொண்டு வந்து நெருப்பு மூட்டினார். நெருப்பில் தப்பை காட்டி சூடேற்றும்போது தப்பு நன்கு முறுக்கேறும். பிறகு அடிக்கிற அடி ஒன்றொன்றும் இடி மாதிரி கேட்கும். பழனிச்சாமி தன் பறையை தீயில் இட்டுக்காட்டத் தொடங்கினார். பாடுவதை நிறுத்தி விட்டு மாதையனும் வந்து தன் தப்பை தீயில் காட்டி சூடேற்றினார். இதிலும் ஒரு நேர்த்தி வேண்டும், வெப்பம் அதிகமாகிப்போனால் தப்பு கிழிந்து விடும், இருவரும் இது போன்ற நேர்த்திகளில் கைதேர்ந்தவர்கள்.
மாதையனின் மழலைப் பருவ நினைவு முழுக்கவே அப்பனும் அவரது தப்பாட்டமுமே நிறைந்து கிடக்கிறது. மாதையனுக்கு எட்டு வயதிருக்கும் எங்கோ சாவு வீட்டில் சாராயம் குடித்து விட்டு வந்து படுத்தவர்தான் விடியற்காலையில் செத்துப்போனார். ஒற்றைத் துணையாக இருந்த அம்மாவும் இவரது பதினைந்தாவது வயதில் சுப்புக்கவுண்டரின் தோட்டத்தில் பாம்பு தீண்டி வாயில் நுரை தள்ள செத்துப் போனது. தான் சாபம் வாங்கிக் கொண்டு பிறந்து விட்டவனாய் உள்ளூர நினைத்துக் கொண்டார். அம்மாவை பாடையிலேற்றினார்கள், அப்போது அப்பனின் தப்பை கையிலெடுத்தவர், பிணம் கொண்டு சென்ற வழியெங்கும் தப்படித்தபடி ஆடிக்கொண்டே வந்தார். தப்பின் மீது அன்று தொட்ட பிடியை இரண்டு தலைமுறைகள் துளிர்த்து விட்ட போதும் இன்று வரையிலும் தளர்த்தவில்லை. முனியப்ப மாமனின் மகள் ராசாமணி மீது கொள்ளைப் பிரியம் கொண்டிருந்தும் ஒரு கட்டத்தில் தப்பா? ராசாமணியா? என கேள்வி முன் வைக்கப்பட்ட போது தப்புதான் என வெடுக்கெனச் சொன்னார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஈர்ப்பும், காதலும் இவருக்குத் தப்பின் மீது. ராசாமணியை சத்தியமங்கலத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள் அந்த கணத்தோடு எல்லாம் நிறைவு பெற்றுப் போனது. காலப்போக்கில் சரோஜாவோடு போர்வைக்குள் உறவாடியது தனிக்கதை. மாதையனின் வாழ்க்கையை இசையே நிரப்பியிருக்கிறது.
பிணத்தை தூக்கி விடலாம் என முனுமுணுத்தார்கள் “டேய்.. மாதேஷூ.. எங்கடா அவனுக சரக்கப்போட்டுட்டு கவுந்துட்டானுகளா? தூக்குற நேரமாச்சு போய் கூட்டியா..” கூட்டத்திலிருந்து குரல் வரவே வேப்பமரம் நோக்கிப் போனான் மாதேஷ்.
அதிகாரத்தொணியில் அழைப்பு விடுத்தான், இருவரும் வெடுக்கெனக் கிளம்பி முன் பகுதிக்கு வந்து அடிக்கத் துவங்கினர். இருவரின் கொட்டுச்சத்தத்தை வைத்தே ஆறுமுகக்கவுண்டரைத் தூக்கப்போகிறார்கள் என்பதை சனம் அறிந்து கொண்டது. பாடையில் ஏற்றப்பட்டு அவர் சுடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டார். இருவரிடமும் “சத்தம் போதாது.. இன்னும் பலமா” என நச்சரித்தான் மாதேஷ்.
ஒத்தப்பனமரக்காட்டின் நடுவீதியில் பிணம் சென்றுகொண்டிருந்தது. தூவப்பட்ட பூக்களில் கலந்திருந்த சில்லரைக்காசுகள் சாலையில் பட்டுத் தெரித்தன. வழி நெடுக நின்றிருந்த சிறார்கள் அந்த காசுகளை எடுக்க முற்பட்ட போது அவர்களின் தாயார்கள் தலையாட்டி மறுத்தனர். ஆறுமுகக் கவுண்டரின் பிணம் கடந்து சென்றதும் அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் சொம்புத் தண்ணீரால் சாலையை நனைத்தபடி இருந்தனர்.
கிரங்கடிக்கும் போதையில் தப்புச்சத்தமும் சேர்ந்ததால் தன்னையறியாமல் ஆடிக்கொண்டிருந்தார் மாதையன். பழனிச்சாமிக்கு ஓரளவுதான் போதை ஏறியது என்பதால் அவரிடத்தில் நிதானம் தென்பட்டது. வழியில் இருந்த சிறுவர்கள் பலரும் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். இதுவல்லவோ இசை என்று மாதையனுக்கு பெருமையைக் கொடுத்துக் கொண்டே வந்தது இந்த தப்புச்சத்தம். மாதேஷிடம், இதற்கு மேலும் தப்பில் சத்தம் வராது என்பதை சொல்லிப் புரியவைக்கும் நிலையில் மாதையனும் இல்லை பழனிச்சாமியும் இல்லை.
ஆறுமுகக் கவுண்டர் மண்ணோடு மண்ணானார். அத்தனை காரியங்களையும் முடித்து விட்டு சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் கூட்டம் வீடு திரும்பியது. மாதையனுக்கும், பழனிச்சாமிக்கும் பந்தியெலெல்லாம் இடம் ஒதுக்கப்படவில்லை. ஒரு ஓரத்தில் தரையில் அமர வைக்கப்பட்டு கறிச்சோறு போடப்பட்டது. மாதையனைக் குத்திக்குடைந்து கொண்டிருந்த பசியில் சோறு போட்டு கொழம்பு ஊற்றப்பட்ட அடுத்த கணமே அள்ளி வாயில் திணித்தார்.
“தப்பட்ட ஒனக்குத்தான் அந்த சோறு எவனுந் தூக்கிட்டுப் போயிட மாட்டான் பாத்து பொறுமையாத் திண்ணு” என்று மாதேஷ் சொன்னதும் வாய் நிரம்ப சோற்றை அடக்கிக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினார் மாதையன்.
எல்லா பரிபாலனைகளும் முடிந்த பின்னர் வேப்ப மரத்தின் கீழ் காத்திருந்தவர்களை நோக்கி மாதேஷ் வந்தான். வந்தவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து கைவிட்டு மாதையன், பழனிச்சாமி கையில் ஆளுக்கு நூறு ரூபாய்த் தாளைத் திணித்தவன் “ கெளம்புங்க” என்றபடி தலையை ஆட்டினான்.
“நூறு ரூவா தர்றீங்க இது என்னத்துக்கு பத்துமுங்க” என்றார் மாதையன்.
“டேய் உங்களுக்கெல்லாம் பாட்டில் வாங்கி ஊத்தியுட்டு வயிறு நெம்ப கறி சோறு போட்டாலும் இப்படித்தாண்டா கேப்பீங்க” அகங்காரத்தின் உச்சக்கரலாய் கேட்டது இருவருக்கும்.
“தப்பட்ட இவருகிட்ட நமக்கென்ன பேச்சு நாம கவுண்டரு மகன்கிட்ட பேசிக்குவோம் வா” பழனிச்சாமி சொன்னதும் அடுத்த கணமே மாதேஷ் அவர்கள் கையில் மேலும் நூறு ரூபாயைத் திணித்து “தொலையுங்க” என்றான்.
“எங்களுக்கு ஒரு எழவுக்கு முந்நூறு ரூவா தர்றாங்க நீங்க எரநூறக் குடுத்து என்ன செய்ய” மாதையனும் கடிந்தார்.
“அதான் சரக்கு வாங்கிக் கொடுத்ததுக்கு சரியாய்போச்சு கெளம்புங்கடா இங்கிருந்து உங்ககூட பெரும் ரோதனையாப் போச்சு” மாதேஷ் அதட்டலானான்.
“பழனி அதான் சரி நாம கவுண்டரு மகண்டயே பேசிக்குவோம் வா” என்று மாதையனும் அழுத்தமாய்க் கூற வேறு வழியின்றி மேலும் ஆளுக்கு ஒரு நூறைக் கொடுத்து விட்டு ”சக்கிலி நாய்” என்று திட்டியபடியே கோபத்தின் சீற்றத்தோடு நடந்து சென்றான் மாதேஷ்.
“முந்நூர்ரூவா குடுக்குறதுக்கு மூக்கால அழுவுறாம்பாரேன்” மாதையன் சொன்னார்.
“இவனுக கூடவெல்லாம் மாரடிக்கனுமான்னுதான் தப்பத்தூக்கிட்டு திரிஞ்சவனெல்லாம் இப்பப் பொழப்பப் பாக்கப்போயிட்டான். சுத்து வட்டாரத்துல நாம ரெண்டு பேருந்தான் காணாதத கண்டுட்ட மாதிரி இது கூடவே திரியுறோம்” சலித்துக் கொண்டார் பழனிச்சாமி.

சூரியனின் மங்கலான ஒளி ஒத்தப்பனமரக்காட்டின் மீது படர்ந்திருந்தது. மாலைப்பொழுதை தின்று கொண்டு இரவு எட்டிப்பார்க்கிற தருணத்தில் ஒத்தப்பனமரக்காட்டின் நடுவீதியில் மாதையனும் பழனிச்சாமியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். தூவப்பட்டிருந்த பூக்கள் செருப்பில்லாத கால்களுக்கு மெத்தென இருந்தது.
“பழனி, மப்பு துளி கூட இல்ல” விசனத்தோடு சொன்னார் மாதையன்.
“எனக்கு மட்டும் என்ன இருக்குதாம் அட உடுக்கெரகத்த இந்த மாதேஷ் தாயோழிக்கு தேனிந்தப் பொழப்பு” பொரிந்தார் பழனிச்சாமி
“அட உடுவியா அத உட்டுப்போட்டு என்ற நெனப்பெல்லாம் இப்ப பாட்டில் மேலதான் இருக்கு” மாதையனின் பேச்சோ வேறு கோணத்தில்
“ஒன்னும் வெசனப்பட்டாத, திருவிழா மட்டும் வரட்டும் பத்து நாள் குடிதான்” பழனிச்சாமி சொல்ல இப்போதே மாதையனுக்குள் திருவிழாக் கலை வந்தது.
ஒத்தப்பனமரக்காட்டின் முக்கில் இருக்கும் மூர்த்தி கடைக்கு வந்ததும் பழனிச்சாமி அதற்கு வடபுறத்தில் இருக்கும் தன் வீடு நோக்கிப் போனார். மூர்த்தியைப் பார்த்துச் சிரித்தபடியே கடைக்கு வந்தார் மாதையன்.
“எழவு உழுந்தா எல்லாருக்கும் வெசனம், உங்களுக்குத்தா கொட்டாண்ட்டம்” மூர்த்தி சொன்னார்.
“பாட்டில் சாராயமும் கறிசோறும் இருக்கிற நாளெல்லாமே கொண்டாட்டந்தான் மூர்த்தி” என்றவர் இருநூறுரூபாய்க்குள் தன் மளிகை சாமான்களையும் இரண்டு கட்டு பத்தா நம்பர் பீடியையும் வாங்கிக் கொண்டு நூறு ரூபாயை வேட்டி மடிப்பில் வைத்துக் கொண்டார்.
“பழசு ஒரு எழுபது தரணுமில்ல”
“தராம ஓடியா போயிருவேன் அடுத்த எழவு உழுவட்டும் நீ கேக்கவே தேவையில்லை நானாவே தந்துர்றேன்”
“நாங்கடன திரும்ப வாங்க யாரையாச்சும் சாகவா சொல்ல முடியும்” மூர்த்தி கேட்டு விட்டுச் சிரித்தார்.
ரேசன் அரிசி மற்றும் இன்னபிற பொருட்களை சுமந்தபடி மாதையன் வீடு நோக்கி நடக்கலானார். மூர்த்தி சில விநாடிகள் அவர் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
() () () ()
இன்றைய பொழுது ஆற்றாத துயரத்தை கொண்டு புலரும் என்பதை மாதையன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிகாலை நேரமதில் பழனிச்சாமி செத்துவிட்டார் என அவரது பேரன் ராசு, மாதையனிடம் சேதி சொல்லிப்போனான். குடிசையின் படலை சாத்திக் கொண்டு கட்டிலில் படுத்துப் புரண்டு அழ வேண்டும் போலிருந்தது. ஐம்பது ஆண்டுகளாய் ஒன்றாய்த் திரிந்த ஓர் உயிர் மரித்து விட்டதென போகிற போக்கில் வந்த செய்தியோ மாதையனை நிலைகுலையச்செய்தது. திருவிழாவைப்பற்றியும் தத்தம் பத்து நாள் குடி குறித்தும் நேற்று பேசி விட்டுப்போன ஆளா இது? மாதையனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
மாதையன் தப்பைத் தொட்ட காலம் தொட்டே பழனிச்சாமியுடனான சிநேகிதம். அடுத்தடுத்த காலப் பரிணாமங்களில் மாதையனை நேசிக்கும் ஓர் உயிர் பழனிச்சாமிதான் என்றாகிப் போனார். இந்த வாழ்க்கையில் வரவு செலவுக் கணக்குகள் போக மீதமிருப்பது என்னவோ நமக்கான மனிதர்கள்தான். மாதையனுக்கு அப்படியாகப்பட்டவர் பழனிச்சாமி. தப்பை எடுத்தார் தோள் பட்டையில் மாட்டிக் கொண்டவர் வெற்று மனதோடு, விவரிக்கவியலா துன்பங்கள் ஒரு சேர வேகமாய் கிளம்பினார்.
எழவு வீட்டிற்கான எவ்வித சுவடுகளுமற்றிருந்தது பழனிச்சாமி வீடு. அந்த வலுவிலேயே பழனிச்சாமி வீடுதான் தார்ஸ் வீடு. தப்பும் கையுமாகத் திரியும் அப்பனைக் கண்டு நொந்து போன பழனிச்சாமியின் மகன் சக்திவேல் தன் உழைப்பின் காரணமாய் எழுப்பிய வீடு இது. மூன்று அறைகள் இருந்த அந்த வீட்டின் பிரதான அறையில் பழனிச்சாமியை கிடத்தியிருந்தார்கள். வலுவிலிருக்கும் சனங்கள் மட்டுமே எழவுக்கு வந்து கொண்டிருந்தனர். மாதையனும் ஒருவராய் வந்து பழனிச்சாமியைப் பார்த்தார். பழனிச்சாமி எவ்வித சலனங்களுமற்றிருந்தார். பழனிச்சாமி என்பவன் யார்? மாதையனுக்குள் கேள்வி உதயமானது. தன்னை திட்டியும் தன்னை அனுசரித்தும் அன்பு காட்டுவானே அவந்தான் பழனிச்சாமி எனில் மூச்சுக்காட்டாது படுத்திருக்கிறானே இவன் யார்? அப்படியெனில் இவனை வேண்டாமென விட்டு விட்டுப் போன அந்த உயிர்தான் பழனிச்சாமியோ? இப்படியாகப் பட்ட எண்ணங்கள் அவரை லயித்திருந்தன. அழுகை, ஒப்பாரி சத்தங்கள் உதயமான சமயம் மாதையன் வெளியே வந்தார்.
காரியத்திற்கு தேவையான சாமான்களை வாங்குவதற்காக தூக்கநாயக்கன்பாளையம் செல்லவிருந்த வேலனிடத்தில், நூறு ரூபாயைக் கொடுத்து எம்.சி வாங்கிவரும்படி சொல்லி அனுப்பினார். பிளாஸ்டிக் நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்தவர் எங்கேயோ பார்வையைச் செலுத்தியபடி இருந்தார். முதிர்வை எட்டிய மனிதர்களுக்கு பொதுவாகவே அவர்களது கடந்த காலத்தின் நினைவுகளை மட்டுமே தான் வாழ்ந்ததற்கான சாட்சியங்களாய் உணர்வார்கள். மாதையனுக்குள்ளும் அப்படியாகப்பட்ட நினைவுகள் இருக்கின்றன. அதில் முக்கால்வாசியில் பழனிச்சாமி இருப்பார். இறப்பு என்பது இயல்பே இதனை உணர்ந்ததால்தான் சாவையும் கொண்டாடுகிறோம் என்பது மாதையன் தன் தப்பாட்ட வாழ்க்கையினூடே உணர்ந்தது. வெளிப்படையான ஒரு உண்மை, இது வரை எந்த எழவு வீட்டிலும் மாதையன் இவ்வளவு சோகத்தோடு உட்கார்ந்ததில்லை.
“எப்படி ஆச்சாம்”
“ராத்திரி படுத்தவர்தானாம் காலையில் எந்திரிக்கவே இல்லையாம்… வந்தா இப்படி ஒரு சாவு வரணும்”
“ஆமாமா கெடையில கெடந்து இருக்கிறவங்களுக்கும் தும்பத்தக் கொடுத்துட்டிருக்கக் கூடாது”
இப்படியான விசாரிப்புகளும் விளக்கங்களுமாய் சம்பாஷனைகள் நடந்து கொண்டிருக்க காலம் மாலை வேளைக்கு நகர்ந்து சென்றிருந்தது. அச்சமயத்தில்; “எடுத்துர்லாம்” என்கிற குரலும் வந்தது.
வாங்கி வரப்பட்ட குவாட்டர் எம்.சியில் பகுதியளவு மட்டும் குடித்து விட்டு மீதத்தை வேட்டி இடுக்கில் செருகிக்கொண்டார் மாதையன்.
“நேரமாச்சு பாடிய எடுத்துர்லாம்” என்ற குரல் வெளிப்பட்டதும் வெளியே உட்கார்ந்திருந்த சொச்சம் பேர் எழுந்து நின்றனர்.
பழனிச்சாமி பாடையில் ஊர்வலம் போனார். கொட்டுச் சத்தத்தால் பிணம் கடக்கப்போவதை ஊருக்குச் சொல்லிக்கொண்டு வந்தார் மாதையன். இதுகாலம் வரையிலும் பழனிச்சாமியில்லாது எந்த எழவுக்கும் தப்படித்தது கிடையாது. பழனிச்சாமி எழவிற்கு என்ன செய்ய? அவ்வப்போது சிற்சில கேள்விகள் அவரிடத்தே.
பழனிச்சாமி புதைக்கப்பட்டார். வந்திருந்த கூட்டம் காரியத்தை முடித்து விட்ட பெருமூச்சோடு வலுவை நோக்கி நடக்கலாயினர். மாதையன் அங்கிருந்து நகரவில்லை. புதைக்கப்பட்ட இடத்தின் தலைமாட்டின் அருகே உட்கார்ந்து கொண்டார்.
காலம் மாலைக்கும் இரவுக்கும் நடுநிசியில் நின்று கொண்டிருந்தது.
இடுப்பில் செருகியிருந்த பாட்டிலை எடுத்தார்.
“நீ இருந்திருந்தீன்னா இந்த சாராயத்தை உனக்குத்தான் குடுத்துருப்பம் பழனி” என்றவர் மூடியைத் திருகி அப்படியே உள் இறக்கினார்.
இருட்டியிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மாதையன் பெருங்குரலெடுத்து அழத்துவங்கினார். இன்னும் இன்னும் அழுது கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. இருள் மட்டுமே நிரம்பிக் கிடக்கும் யாருமற்ற அந்த வெளியில் இவரது அழுகையை அமர்த்த எவருமே இல்லை.
“உஞ்சாவுக்கு தப்படிக்க நானிருந்தேன் எஞ்சாவுக்கு தப்படிக்க யாருமே இல்லையே பழ்னி” என்று சொல்லி விட்டு வேதனையை அழுகையாய் வெடித்தார்.
அந்தத் தரையில் இரண்டு சொட்டேனும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும். இவரது அழுகையையும், குமுறலையும் தூரந்தள்ளி இருக்கும் மக்களுக்கு இந்த காற்று எடுத்துச் செல்லுமா எனத் தெரியாது இருந்தும் அவர் அழுது கொண்டே இருக்கிறார்.
     - கி.ச.திலீபன், நன்றி: மலைகள் இணைய இதழ் 

No comments:

Post a Comment