Thursday, March 19, 2015

நதியைக் காக்கப் போராடும் நங்கை
தொழில் நிறுவனங்கள் தங்களது இலாபவெறிக்காக சூழலியலை சூறையாடுவதும்அதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதிப்பதும் நமக்கொன்றும் புதிய செய்தி அல்ல. தமிழ் மக்களின் போராட்ட உணர்வுக்கு கூடங்குளமே நம் கண் முன் நிற்கும் சாட்சியம். இன்றளவிலும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பிரச்னையை முன் நிறுத்தி போராட்டக்குழுக்களும்குழுக்களை ஒன்றிணைத்த கூட்டமைப்பும் தங்களது பலத்த எதிர்க்குரலை எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவற்றுள் வெற்றிபெற்ற போராட்டங்கள் வெகு சொச்சமே. தன் நச்சுக் கழிவுகளை வெளியேற்றி பவானி ஆற்றையும் அது சார் விவசாயம் மற்றும் பொது மக்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியது மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலை. ஆலையை மூடக்கோரி எழுந்த அதிர்வலைகளின் எதிரொலியாக ஆலை மூடப்பட்டு மக்கள் போராட்டத்துக்கு ஒரு மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கான முக்கியக் காரணிகளில் ஒருவர் சத்தியசுந்தரி. பவானி நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவரான இவர் ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். கோபிச்செட்டிப்பாளையத்தில் மகப்பேறு மருத்துவராய் உள்ள இவரது அகவையோ எண்பதைக் கடந்து விட்டது. இருந்தும் இன்றளவிலும் மருத்துவப் பணியையும்சமூக செயல்பாடுகளையும் தொட்டுத் தொடர்கிறார்.

“ஆடம்பர நுகர்வுக்காக அத்தியாவசியத்தை இழந்து வருகிறோம் என்பதுதான் இன்றைய உலகின் அவலம். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலை நாசமாக்கியதுசென்னை மாநகரின் வளர்ச்சி கூவகத்தை சாக்கடையாக்கினஈரோடு தோல் தொழிற்சாலைக் கழிவுகள் காலிங்கராயன் கால்வாய் மற்றும் காவிரி ஆற்றை கவலைக்குள்ளாக்கினமுன்பு மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலைதற்போது பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காகித ஆலைகள் பவானி ஆற்றை பாழாக்கி வருகின்றன. இப்படியாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நதிக்குப் பின்பும் அது நாசக்கேடாக்கப்படுகின்ற துயரம் நடந்து கொண்டே இருக்கின்றன. இச்சீரழிவுக்கு காரணம் மனிதனின் மிதமிஞ்சிய நுகர்வுதான். ஒரு ஆறு பாழ்படுவது குறித்தான அக்கறை நகரவாசிகளை விட கிராமவாசிகளுக்கே அதிகம். ஏனென்றால் விவசாயத்தையும்விவசாயத்தொழில்களையும் சார்ந்திருக்கும் அவர்களது வாழ்வாதாரமே ஆற்று நீரை நம்பித்தான் இருக்கிறது. பவானி ஆற்றைக் காக்க வேண்டும் என்கிற என்னுடைய போராட்ட எண்ணத்துக்குக் காரணம் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்கிற பின்புலம்தான்.

நான் வளர்ந்த சூழல் என்பது விவசாயத்தோடு ஒன்றிப்போனது. விவசாயத்தின் தேவை,விவசாயிகளின் நிலை பற்றியான புரிதல் எனக்கு ஏற்பட்டது அப்படித்தான். 1957ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவம் படித்து முடித்தேன். அதன் பிற்பாடு கோபிச்செட்டிப்பாளையத்தில் தனியார் மகப்பேறு மருத்துவராக என் பணியைத் துவக்கினேன். 1934 முதல் கோபி லேடிஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. மருத்துவத்தைத் தாண்டியும் எனது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காக கோபி லேடிஸ் கிளப்பில் இணைந்தேன். அதன் மூலம் தேவாரம் வகுப்புவயலின் வகுப்புஷெட்டில் கார்ட்சமையல்குழந்தை வளர்ப்புவீட்டு நிர்வாகம் போன்ற பயிற்சிகளை பல பெண்களுக்கு அளித்து வந்தோம். இலவச மருத்துவ முகாம்கள் பலவையும் எனது ஒருங்கிணைப்பில் நடந்திருக்கிறது. 90களின் தொடக்கத்தில் பெண்கள் பெரும்பாலான பேருக்கு முடி உதிர்வு அதிகரித்திருந்தது. இது பற்றி லேடிஸ் கிளப்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது தண்ணீர் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்தோம். அது குறித்து ஆராய்ந்த போதுதான் மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலைக் கழிவுகள் பவானி ஆற்றில் கலக்கப்படுவதை அறிந்து கொண்டோம்.

மரத்தைக் கூழாக்கி அந்தக் கூழிலிருந்து நூலிழைகள் தயாரிக்கும் பணி விஸ்கோஸ் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆலையின் மரத்தேவைகளுக்காக நீலகிரி வனப்பகுதிக்குள் குறிப்பிட்ட இடத்தில் யூகலிப்டஸ் மரங்கள் பலவற்றை வளர்த்தும் வளர்ந்த மரங்களை வெட்டியும் வந்தனர். மரங்கள் வெட்டப்பட்டதால் அப்பகுதிகளில் மண் சரிவு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. அது மட்டுமின்றி யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடிய தன்மையுடையவை என்பதால் சுற்று வட்டார நிலத்தடி நீர் வளமும் குறைந்தது. நூழிலை தயாரிப்புக்குப் பின்னரான நச்சுக் கழிவு நீரை பவானி ஆற்றில் கலந்து வந்தனர். பவானி ஆறும் மோயாறும் பவானிசாகர் அணையில் சங்கமிக்கின்றன. பவானிசாகர் அணை மூலம் மூன்றரை லட்சம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரின் குடிநீர்த் தேவையையும் இந்த அணைதான் பூர்த்தி செய்கிறது. அப்படியிருக்கையில் இந்த கழிவுநீர் கலப்பால் பற்பல விளைவுகளை சந்திக்க நேரிட்டது. வெளியேற்றப்படும் கழிவுநீரில் டயாக்சின் எனப்படும் ஆர்கனோ க்ளோரின் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதன் விளைவால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் கருப்பாக ஓடியது. பொது மக்கள் பலருக்கும் முடி உதிர்வுதோல் நோய்கள் ஏற்பட்டது. நெல் விளைச்சல் வெகுவாகக் குறைந்ததுநிலக்கடலை காய்க்காமல் கருகிப்போனது. கால்நடைகள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகின. ஆண்களுக்கு மலட்டுத்தன்மைபெண்களுக்கு கருச்சிதைவு,மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்பட கழிவு நீர் கலந்த தண்ணீர் மூலக்காரணமாய் இருந்தது.

மேட்டுப்பாளையம்சிறுமுகைசத்தியமங்கலம்தொட்டம்பாளையம் என பல பகுதிகளில்,தமிழக பசுமை இயக்கம்ஈரோடு சுற்றுச் சூழல் இயக்கம்மேட்டுப்பாளையம் சுற்றுச்சூழல் மன்றம்தமிழக விவசாயிகள் சங்கம் என பல அமைப்புகளும் ஆலையை மூடக்கோரி பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தன. எங்களது தரப்பிலிருந்து கோபி லேடிஸ் க்ளப் சார்பிலும் போராட்டங்களை நடத்தினோம். ஒரே நோக்கத்துக்காக தனித்தனிக் குழுக்களாகப் போராடுவதைக் காட்டிலும் அத்தனைக் குழுக்களும் ஒன்றாகச் சேரும்போதுதான் பலம் வாய்ந்த போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதனை உணர்ந்து கொண்டோம். அதன் முடிவாகத்தான் அனைத்துக் குழுக்களையும் ஒன்றிணைத்து பவானி நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பைத் துவக்கினோம். நீர்வளத்தைப் பேணிக்காத்தல்மரங்கள் வெட்டப்படுதலைத் தடுத்தல்மழை வளத்தை அதிகரித்தல்காடுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை காத்தல்விவசாய வளர்ச்சியை நோக்கி செயல்படல் ஆகியவை இந்த கூட்டமைப்பின் நோக்கங்களாக முன் மொழியப்பட்டன’’ எனும் சத்தியசுந்தரி அக்கூட்டமைப்பின் தலைவராக ஏக மனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

‘‘விஸ்கோஸ் ஆலை மாதத்துக்கு 300டன்&ஆக இருந்த உற்பத்தியை 650 டன்&ஆக உயர்த்தியது. இதனால் இரண்டு மடங்கு அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. இதனை எதிர்த்து பவானி நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அன்றைய சூழலில் 5000 பேர் கலந்து கொண்ட இப்போராட்டம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. நாடங்கங்கள்பிரச்சாரங்கள்துண்டறிக்கைகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் ஊட்டிகோவை,மேட்டுப்பாளையம்சிறுமுகைசத்தியமங்கலம் என பல பகுதிகளிலும் ஆலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மேதா பட்கர்திண்டுக்கல் பால் பாஸ்கர்நம்மாழ்வார் ஆகியோரை அழைத்து வந்து பேச வைத்தோம். இவ்வாறாக நடந்த எங்களது போராட்டத்தின் எதிரொலியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விஸ்கோஸ் ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்துகுடிநீர் விநியோகத்தை தடை செய்தது.

ஆலை நிர்வாகத்தினர் இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து எங்களது கூட்டமைப்பின் சார்பில் நானும் அந்த வழக்கில் பங்கேற்றேன். கழிவு நீரை சுத்திகரித்து வெளியிட ஆலை நிர்வாகத்துக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 1999ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆலை நிர்வாகத்தினர் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இரவோடு இரவாக கழிவுநீரை சுத்திகரிக்காமலேயே பவானி ஆற்றில் கலந்தனர். இதனால் 15 டன் மீன்கள் ஆற்றில் செத்து மிதந்தன. இதன் எதிர்வினையாக கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டாலும் ஆற்றில் கலக்கக்கூடாது என்கிற மகத்தான தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதி மன்றம். ஆலையை ஒட்டியுள்ள 300 ஏக்கர் நிலப்பகுதியை விலைக்கு வாங்கி அதில் விவசாயம் புரிவது போல் இந்தக் கழிவு நீர் பாய்ச்சப்பட்டது. இதன் காரணமாக சுற்றுவட்டாரக் கிணறுகளில் தண்ணீர் நிறம் மாறிப்போனது. நிலத்தடி நீர் வளமும் பாதிப்புக்குள்ளானது. இதனை எதிர்த்தும் எங்களது கூட்டமைப்பின் சார்பில் போராட்டங்களை முன்னெடுத்தோம். 2002ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தொழில் முதலீடு மற்றும் நிதி சீரமைப்பு வாரியம் விஸ்கோஸ் ஆலையை மூடியது’’ என்று ஆலை மூடப்பட்டதன் வெற்றிக்கதை சொன்னவரிடம் ஒரு பெண்ணாக முன் நின்று போராடியாதால் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கேட்டோம்

‘‘வாகனம் ஓட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பத்து அல்லது பதினைந்து பேர் என்னுடன் வருவார்கள். எதிர் தரப்பினர் பணம் கொடுத்து என்னை சரிக்கட்ட முடியுமாஎன்கிற முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக சி.பி.ஐ என்னிடம் பல விசாரணைகள் மேற்கொண்டது. போராடுகிற நீங்கள் யார்உங்களது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்போராட்டத்துக்கான பணம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறதுஎன்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டார்கள். மற்றபடி எனது செயல்பாடுகளுக்கு பலரது ஆதரவும் இருந்ததால் தனிப்பட்ட முறையில் பெரிய ஆபத்துகளைச் சந்திக்கவில்லை’’ என்றார்.

விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது தமிழக சூழலியல் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல். விஸ்கோஸ் மூடப்பட்டதோடு பிரச்னை முடிந்து விடவில்லை. மனித குலத்தில் பேராசை நிலைத்திருக்கும் வரையிலும் பிரச்னைகளும்போராட்டங்களும் நிலைத்திருக்கும். பவானிசாகர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. பவானி ஆறு பாழாவதில் இக்காகித ஆலைகளின் பங்கு அதிகம் சத்தியசுந்தரியின் தற்போதைய போராட்டக் களம் இதுதான்

‘‘பழைய காகிதத்தை மறுசுழற்சி செய்து புதிய காகிதமாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அவை. மறுசுழற்சிக்காக பல விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சூழலியல் சீர்கெட்டு விடும் என்பதால் இந்த மறுசுழற்சி முறைக்கு பல நாடுகளும் தடை விதித்துள்ளன. நமது நாட்டில் மட்டும்தான் இதற்கு எவ்விதமான தடைகளுமில்லை. ஒவ்வொரு காகித ஆலையும் சில ஏக்கர் நிலத்தில் சவுக்கு மற்றும் சணல் மரங்களை நட்டு அதனுள் இக்கழிவுநீரை பாய்ச்சுகின்றன. கழிவுநீர் நிலத்தடியில் இறங்கி நிலத்தடி நீரோடு கலப்பதால் சுற்றுப்பகுதியிலுள்ள கிணறுகளெல்லாம் நிறம் மாறிக்காணப்படுகின்றன. அந்த நீரைப்பாய்ச்சி விவசாயம் புரியும்போது பயிர்கள் மாண்டு போய் நிலங்கள் சுண்ணாம்பு போலக் காட்சியளிக்கின்றன. சத்தியமங்கலம் மல்லிகை உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்கு விளையும் மல்லி கோவை விமான நிலையம் வழியாக இந்தியாவின் பல நகரங்களுக்கும் மலேசியா,சிங்கப்பூர்துபாய் போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இக்காகித ஆலைகள் மல்லிகை விளைச்சலையும் மற்ற தோட்டப்பயிர் விளைச்சலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. பவானி நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இதற்கென எதிர்க்குரல் எழுப்பி வருகிறோம். கோபிச்செட்டிப்பாளையம்சத்தியமங்கலம்பவானிசாகரில் இதுவரை எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இக்காகித ஆலைகளில் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றனஎன்பது குறித்தான தேடுதலில் தற்போது இருக்கிறேன். காகித ஆலைகளை மூடும் வரையிலும் எங்களது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பவானிஈரோட்டைச் சுற்றிலும் பல தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவை வெளியேற்றும் கழிவுகள் காலிங்கராயன் வாய்க்கால்பவானிகாவிரி ஆறுகளை சீர்குலைக்கிறது. பவானி கூடுதுறையில் ஆற்றை நிரப்பியபடி ஆகாயதாமரைகள் பெருகி நிற்கின்றன. ஆகாயத்தாமரைகளின் வளர்ச்சி அதிகளவில் இருக்கிறதென்றால் அங்கு நைட்ரஜன் அதிகளவில் இருப்பதாகப் பொருள் கொள்ளலாம். கழிவுநீர் கலப்பதனால்தான் நீர்நிலைகளில் நைட்ரஜன் அதிகளவில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்துக்குள் எடுத்துக் கொண்டாலே களைந்தெறியப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. முன்பிருந்ததைக் காட்டிலும் மக்களிடம் இப்போது போராட்ட உணர்வு குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. நதிநீர் பாழ்படுவது விவசாயிகளின் பிரச்னை என்று மட்டுமே பார்க்கின்றனரோ தவிர நம் எல்லோரது பிரச்னையும் கூட என்பதை உணர்வதில்லை. ஒரு கிராமப்புறத்தில் தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் 50 பேரது ஒப்புதல் கையெழுத்து வேண்டும். பல ஊர்களில் பணத்தைக் கொடுத்து கையெழுத்து வாங்கி விடுகின்றனர். அக்கிராமத்தை மண்ணோடு மண்ணாக்கி விடுவார்கள் என்கிற அபாயத்தை அறியாத மக்கள் பணத்துக்காக கண்மூடித்தனமாக கையெழுத்திடுகின்றனர். முதலில் நம்மிடையே விழிப்புணர்வு வேண்டும். ஆடம்பரம் என்கிற போலியான பிம்பத்துக்காக நிஜ உலகை நாம் இழந்து விடக்கூடாது என்பதில் பலருக்கும் தெளிவு வேண்டும்’’ தெளிவுறப் பேசுகிறார் சத்தியசுந்தரி.

                  -கி.ச.திலீபன், நன்றி: குங்குமம் தோழி  

No comments:

Post a Comment