Friday, September 26, 2014

வன்முறையும், வக்கிர சிந்தனை கொண்டவர்களும்தான் மாற வேண்டும்- வழக்கறிஞர் லூசி

‘‘பெண் என்பவள் ஆற்றல் மிக்கவள், அந்த ஆற்றலைக் கொண்டு எவ்வித வன்முறைகளையும் அச்சப்படாது எதிர்க்கும் மனவலிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியம்’’ என்கிறார் வழக்கறிஞரும், பெண்ணிய செயல்பாட்டாளருமான லூசி. விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் மீதான குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக களத்திலும், சட்ட ரீதியிலும் போராடி வருகிறார். வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே வழக்காடும் இவர் ‘‘பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான கூட்டமைப்பு’’ என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.     

சமூக செயல்பாட்டாளராய் உங்களது தொடக்கம் பற்றி...

எனக்கான சமூக அக்கறை சிறு வயதிலிருந்தே துளிர் விட்டதுதான். அந்த எண்ணம்தான் என்னை நர்ஸிங் படிக்க வைத்தது. நர்ஸிங் படித்து முடித்த பிறகு கன்னியாஸ்திரியாக இணைந்து கொண்டு பல கிராமங்களுக்கு சென்று மருத்துவ சேவை செய்து வந்தேன். ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புறங்களில் அடித்தட்டு மக்களிடத்தில் மருத்துவ சேவை செய்து வந்த போது அங்கு நிலவிய தீண்டாமைக் கொடுமைகளை கண் கூடாக பார்க்க நேர்ந்தது. தாழ்த்தப்பட்ட பெண்கள் பலரும் மேல்தட்டு ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுதலும் அதன் காரணமாய் அப்பெண்களின் தற்கொலைகளையும் பார்த்தேன். அதன் பிறகு மிகவும் பின் தங்கிய கிராமங்களுக்கு சென்று சேவகம் புரிவதையே விரும்பினேன். அதன் விளைவாக திருவண்ணாமலை மாவட்டம் திட்டுக்கோட்டையில் கத்தோலிக்க சபையால் நடத்தப்படும் மருத்துவமனைக்குச் சென்று பணி புரிந்தேன். அங்கும் கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக பல அநீதிகள் அரங்கேறுவதை காண முடிந்தது. 1990ம் ஆண்டு வந்தவாசியில் காவல் துறையினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அக்கலவரத்தில் காவல் துறையினரால் இரண்டு பெண்களுக்கு வெளியே சொல்ல முடியாத அளவிலான சித்திரவதைகள் நடந்தது. அதற்கு நீதி கேட்டு எழுந்த போராட்டத்தில்தான் நானும் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டேன். களத்தில் இறங்கிப் போராடுவதோடு மட்டுமில்லாமல் சட்ட ரீதியாகவும் போராடினால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்பதால் பி.எல் படித்து வழக்கறிஞர் ஆனேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மட்டுமே வாதாடுவதுதான் நான் வழக்கறிஞர் ஆனதற்கான நோக்கம்.

நீங்கள் சந்தித்த வழக்குகளிலேயே மிக முக்கியமான வழக்கு எது?

2001ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரி என்கிற பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலையும், அவளை செஞ்சி சிறைச்சாலையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்ட நான்கு காவலர்களையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான். அதன் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட ரீட்டாமேரிக்கு நிவாரணத்தொகையாக 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. விபச்சார கும்பல் மற்றும் காவலர்கள் உட்பட 9 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு பிற்பாடுதான் பெண் குற்றவாளிகளுக்கென தனி சிறைச்சாலைகளில்தான் பெண் கைதிகளை அடைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கு தொடரும்போது எதிர்தரப்பினரிடமிருந்து மிரட்டல்கள் வந்திருக்கிறதா?

மிரட்டல் மட்டுமல்ல சில தாக்குதல்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். சக வழக்கறிஞர்களே எனக்கு எதிராக இருக்கிறார்கள். வழக்கறிஞர் என்பதை நான் தொழிலாகப் பார்ப்பதில்லை அதனால் நான் எந்த ஆதாயமும் தேட விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்குத் தொடரும்போது எதிர்த் தரப்பில் குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் என்னை மிரட்டியிருக்கின்றனர். ஒரு சம்பவம், கோகிலா என்ற பெண் கார்த்தி என்னும் வேற்று சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அப்பெண்ணின் குடும்பத்தினரே அவளை கௌரவக் கொலை செய்தனர். அதை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்த போது அக்குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்திலேயே என்னைத் தாக்கினார். என் மீது அவதூறு பரப்பினார். எனது வழக்குகள் பலவையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் கைகோர்த்து என்னை பார்கவுன்சிலில் இருந்து நீக்கி விட்டனர். அதுகுறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை எந்த நோக்கத்திற்காக வந்தேனோ அதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்களது கூட்டமைப்பின் நோக்கம் குறித்து...

எந்த அச்சமுமின்றி பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறேன். இச்சமூகத்தில் நான் ஒரு வழக்கறிஞர் இருந்தும் ஒரு பெண்ணாக பல விதத்தில் நானே பாதிப்புக்குள்ளானேன். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த துர்கா தேவி ..எஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண்ணாக உள்ள ..எஸ் அதிகாரிக்கும், வழக்கறிஞருக்குமே இந்நிலைமை எனில் சாமானியப் பெண்களால் இந்த அடக்குமுறையை எப்படி எதிர்கொள்ள முடியும்? என்று யோசித்தேன். சென்னை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய ஊர்களில் கூட்டம் நடத்தி அதில் பல பெண்களை இணைத்துக்கொண்டு ‘‘பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கூட்டமைப்பு’’ துவக்கினோம். சட்ட ரீதியாக மட்டுமின்றி சமூகம், கலாச்சார ரீதியிலேயே பெண்கள் மீதான அடக்குமுறையை தகர்த்தெறிதலே தீர்வு என்பதுதான் எங்களது கூட்டமைப்பின் நோக்கம்.

பாலியல் குற்றங்களுக்கான சமூகக் காரணி எது

பெண்களை எப்படியேனும் தங்களது ஆசைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற ஆண்களின் ஆதிக்க மனப்பான்மைதான் இதற்கு முழு முதற்காரணம். பெண் என்பவள் ஒரு மோகப்பொருள் என்கிற கருத்தாக்கம் வேரூன்றி நிற்கிறது. அதுதான் உண்மை என்று நிருபிப்பதைப் போல சினிமாவிலும், மீடியாக்களிலும் பெண்கள் கவர்ச்சியாகக் காட்டப்படுகின்றனர். இணையதளத்தில் எவர் நினைத்தாலும் மிக எளிதாக ஆபாசப்படங்களை பார்த்து விடலாம். இப்படியாக ஆபாசப்படங்கள் பார்த்து பாலியல் தூண்டுதலுக்கு உள்ளாபவர்கள் மது அருந்தும்போது பாலியல் குற்றங்களில் இறங்கி விடுகின்றனர். பாலியல் குற்றம் என்பது தனி மனிதனின் குற்றம் மட்டுல்ல. அதற்கான சமூக காரணிகளையும் களைய வேண்டும்.

பெண்களின் ஆடைக்கலாச்சாரமே காரணம் என்கிற கருத்து குறித்து...

ஆடைதான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்பது சிறிதளவு கூட நியாயமே இல்லாத கருத்து. சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் கூட இந்த வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு என்ன சொல்வார்கள்? கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏறச்சொன்னது போல இதுவும் இச்சமூகம் பெண்களுக்கு கற்றுத்தரும் கற்பிதம். யாரிடம் வன்முறையும், வக்கிரமும் இருக்கிறதோ அவர்கள்தான் மாற வேண்டுமோ தவிர்த்து பாதிப்புக்குள்ளாகும் பெண்களிடத்தில் ஆடையை சரி செய்யச்சொல்லும் போக்கு நியாயமற்றது. இதை பெண்களுக்கான உரிமை மறுப்பு என்று கூட சொல்லலாம்.

பாலியல் வன்முறைகள் பெண்கள் மீதே குறி வைத்து நடத்தப்படுகிறதா?

பெண்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக திருநங்கைகள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அவையெல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. பெண்கள் மட்டுமல்ல உலக அளவில் 3 முதல் 11.5 சதவீதம், 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளும், 5முதல் 10 சதவீதம் ஆண் குழந்தைகளும் இந்த வன்முறைக்கு ஆளாகின்றனர். 35 சதவீத பெண்கள் உடல் மற்றும் மன ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் கொலைகளில் 38 சதவீதம் கொலைகள் கௌரவக் கொலைகளாக இருக்கிறது. இந்த புள்ளி விபரத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலின பாகுபாடின்றி எவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்காக போராட நாம் முன் வர வேண்டும்.  


பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணமும், நீதியும் கிடைக்கிறதா?

பாதிப்புக்குள்ளாகும் பெரும்பான்மையான பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. அப்பெண்களின் மறு வாழ்வுக்காக அவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம். அது மட்டுமின்றி இவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குற்றவாளிகளுக்கும் சில சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகிறது. அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு குற்றவாளிகள் சுலபமாக வழக்கிலிருந்து தப்பி விடுகின்றனர். நம் நாட்டில் வழக்காடு மன்றங்கள்தான் இருக்கிறதே தவிர நீதிமன்றங்கள் இல்லை

தண்டனை கடுமையாக்கினால் பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறதா?

தண்டனையை கடுமையாக்கும்போது அதன் மீதான பயத்தின் காரணமாய் இக்குற்றச் சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தும் அது மட்டுமே தீர்வாகி விடாது. ‘‘திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’’ என்பது போல் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் வக்கிர சிந்தனை மாற வேண்டும். பள்ளிக்கூடங்களில் பாலியல் குறித்தான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். ஆணுக்கு கீழானவள் பெண் என்கிற எண்ணத்தை தகர்த்து ஆணும் பெண்ணும் சமம் என்கிற கூற்றை குழந்தையிலிருந்தே புகட்ட வேண்டும்


                                          நேர்காணல்- கி..திலீபன், நன்றி: குங்குமம் தோழி 


No comments:

Post a Comment