Friday, September 26, 2014

என் நடிப்புக்கான களம் கிடைக்கலை - வினோதினி


கடந்த ஆண்டில் அதிரடி வெற்றி பெற்ற திரைப்படமான ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’’ படத்தில் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் வினோதினி. குடும்பப் பாங்கான முகத்தோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் தலை காட்டும் இவருக்கு நாடகக் கலைஞர் மற்றும் நடிப்பு பயிற்சியாளர் என்கிற பின்புலமும் இருக்கிறது. பரபரப்பான காலை வேளையில் மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். நடிப்பு மீதான ஆர்வம் குறித்தும் நாடகத்துறைக்குள் பிரவேசித்தது குறித்தும் கேட்டபோது,
‘‘வழக்கமா எல்லோரும் சொல்ற பதில்தான், பள்ளி, கல்லூரிகள்ல நடந்த கலாச்சார விழாக்கள்ல நாடகம், நடனம்னு என்னோட பங்களிப்புதான் என்னை ஒரு நாடக நடிகையா உருவாக்கியது. படிப்பு, படிச்ச படிப்புக்குண்டான வேலைன்னு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் தனிப்பட்ட ஆர்வம்னு ஒன்னு இருக்கும் அப்படித்தான் எனக்கு நடிப்பும். எத்திராஜ் கல்லூரியில நான் படிச்சிக்கிட்டிருந்த  கால கட்டத்துல வீதி நாடகத்துக்குன்னு தனியா ஒரு போட்டி இருக்கும். அந்தப் போட்டிக்கு எங்களை தயார்படுத்துறதுக்காக தமிழ்த்துறையோட இணைந்து பத்திரிக்கையாளர் ஞாநி வீதி நாடகப்பயிற்சி கொடுத்தார். அந்தப் பயிற்சியில்தான் நாடகம்னா வெறும் வசனம் பேசுறது மட்டுமில்லைங்கிற உண்மையை புரிஞ்சுக்கிட்டேன். 2003ல ஒரு நிறுவனத்துல மனிதவள மேம்பாட்டாளாரா இருந்தேன். அந்த பீரியட்ல கூத்துப்பட்டறை முத்துசாமி சார் இயக்கின ‘‘சந்திரஹரி’’ நாடகத்தை பார்க்கப் போனப்பதான்  கூத்துப்பட்டறையோட அறிமுகம் கிடைச்சுது.
 வேலை செஞ்சுகிட்டே நாடகத்துறையில் பங்களிக்கலாம்னு நெனைச்சேன். மேஜிக் லேண்டன், தியேட்டர் நிஷா, மூன்றாம் அரங்கு, நாடக வெளி போன்ற நாடகக் குழுக்கள்ல பகுதி நேரமா நிறைய நாடகங்கள் பண்ணினேன். நாடகத்துல அடுத்த கட்டத்துக்கு வளரணும்னு நெனைச்சேன். 2006ல என் வேலையை விட்டுட்டு கூத்துப்பட்டறையில் முழு நேரமா என்னை இணைச்சுக்கிட்டேன். நடிப்புங்கிறது பிறந்ததிலிருந்து நம்ம கூட வர்றதில்லை நல்ல பயிற்சி மூலமாத்தான் வரும். கூத்துப்பட்டறையில் தேவராட்டம், ஜென் க்ளினிங், யோகா, சிலம்பம், தாய்ச்சி, கராத்தே போன்ற பயிற்சிகள் கொடுத்தாங்க. வெளிநாட்டு நாடகக் கலைஞர்கள் இங்க வந்து பயிலரங்குகள் நடத்தி பயிற்சி கொடுத்தாங்க. ஒரு பயிலரங்கில் ‘‘வாய்ஸ் எக்’’க்குங்கிற ஜெர்மன் நாடகத்தை நானும் பாபுங்கிறவரும் சேர்ந்து மொழிபெயர்த்து அரங்கேற்றம் பண்ணோம். காலையிலிருந்து நாடகத்துக்கான கதை விவாதம் நடக்கும். சாயங்காலத்திலிருந்து ஒத்திகை ஆரம்பிச்சிடும். இப்படியா மூன்றரை ஆண்டு கூத்துப்பட்டறையில் இருந்து நிறைய கத்துக்கிட்டேன். 2009ல் வெளியே கூத்துப்பட்டறையை விட்டு வெளியே வந்து வந்தேன். மெட்ராஸ் ப்ளேயர்ஸ்ங்கிற ஆங்கில நாடகக்குழு, மங்கையுடைய குழுவில் இணைஞ்சு நாடகங்கள் பண்ணேன்’’ என்றவரிடம் பாலு மகேந்திரா சினிமா பட்டறையில் நடிப்பு ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டோம் 
‘‘2010ல தியேட்டர் நிஷா நாடகக்குழுவின் நிர்வாகி பாலகிருஷ்ணன், பாலுமகேந்திரா சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். சார் ஏற்கனவே என்னோட நாடகத்தை பார்த்திருக்கிறார்ங்கிறதால சினிமா பட்டறையில் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கச் சொன்னார். 2012ம் ஆண்டு வரைக்கும் நடிப்பு பயிற்சி கொடுத்துட்டிருந்தேன். சன் கல்ஃப்ங்கிற ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கும் நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கேன். நடிப்பு பயிற்சி கொடுத்தது என்னை மேம்படுத்திக்குறதுக்கும் உதவிகரமா இருந்தது. என் மாணவர்கள்கிட்ட நான் சொல்ற விஷயம் இதுதான் மூனு மாதம் பயிற்சி எடுத்துக்கிட்டா மட்டும் போதும்னு நினைக்கக் கூடாது. தொடர் பயிற்சி மூலமாத்தான் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடியும்’’ என்றவர் தனது திரைத்துறை பிரவேசம் பற்றி பேசத்துவங்கினார்.
‘‘ப்ரியதர்ஷனின் ‘‘காஞ்சிவரம்’’ விருதுக்காக எடுக்கப்பட்ட படம்ங்கிறதால அதில் பல நாடகக் கலைஞர்களை நடிக்க வெச்சாங்க, அதில் நானும் நடிச்சிருந்தேன். என்னை பரவலா கொண்டு சேர்த்த படம்னா ‘‘எங்கேயும் எப்போதும்’’ படம்தான். எழுத்தாளர் பாமாவுடைய சாமியாட்டம் சிறுகதையை மையமா வெச்சு தனி நபர் நாடகம் பண்ணேன். அதைப் பார்க்க வந்த இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும்ல நடிக்கக் கூப்பிட்டார். ரொம்ப காலமாகவே நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வர்றவங்க ரொம்ப மிகையா நடிப்பாங்கன்னு ஒரு விமர்சனம் இருந்தது. ஆனா இப்ப விமல், விஜய் சேதுபதின்னு இந்தத் தலைமுறை அந்த விமர்சனத்தை உடைச்சிடுச்சு. சினிமாவுல நடிக்க பயிற்சி தேவை இல்லைன்னு பலரும் நினைக்குறாங்க. சினிமாவுல என் நடிப்பை பார்த்துட்டு ‘‘நீங்க வித்தியாசமா பண்றீங்க’’ன்னு பலரும் பாராட்டியிருக்காங்க. நாடகத்துல நான் எடுத்துக்கிட்ட நடிப்புப் பயிற்சிதான் இந்த நல்ல பேரை வாங்கிக் கொடுத்திருக்கு. சினிமாவுக்கும் நாடகத்துக்கும் பல வேறுபாடுகள் இருக்கு. நாடகத்தில் ஒரே நபர் நாலஞ்சு கதாப்பாத்திரம் பண்ணுவாங்க ஏன் பன்னிரெண்டு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறவங்களும் இருக்காங்க. நாடகத்தைப் பொறுத்த வரைக்கும் ரொம்ப துல்லியமா நடிக்கணும் கொஞ்சம் பிசகினாலும் இன்னொரு டேக்கெல்லாம் இதுல போக முடியாது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர் பண்ணியிருந்தேன். பல வசனங்கள் ஸ்பாட்லதான் முடிவு பண்ணி பேசினேன். சினிமாவுல டைமிங் ரொம்பவும் முக்கியம். ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ படத்தில் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏத்தி வெச்சுக்கிட்டு மிஷ்கின் கதை சொல்வார். ஒரே டேக்ல ஒட்டுமொத்த உணர்ச்சியையும் பிரதிபலிக்கிற மாதிரி வசனம் பேசியிருப்பார். அந்த மாதிரி சவாலான வசனங்கள் எனக்குக் கிடைக்காதா?ன்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். இப்ப நான் நடிச்சிக்கிட்டிருக்கிற ‘‘அழகு குட்டி செல்லம்’’ ‘‘ஓம் சாந்தி ஓம்’’ படங்கள்ல என் நடிப்புக்கு நல்ல ஒரு ஸ்கோப் இருக்கு. பெண்களை மையப்படுத்திய படங்கள் ரொம்பவும் குறைவு. என் முழுமையான நடிப்புத் திறமையை வெளிப்படுத்துற மாதிரியான கதைக்களம் எனக்கு இதுவரைக்கும் கிடைக்கலை’’ என்றவரிடம் நவீன நாடகங்களுக்கு பெருவாரியான பரவலாக்கம் இல்லாதது ஏன்? என்ற கேள்வியை முன் வைத்தோம் 
‘‘முன்னாடியெல்லாம் சென்னை மாதிரியான பெருநகரங்களில் நாடகம்னா எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நடத்துறது மாதிரியான சபா நாடகங்கள்தான் தெரியுமே தவிர நவீன நாடகங்கள் பத்தின பெரிய அறிமுகம் இல்லை. இப்ப அந்த நிலைமை மாறிக்கிட்டிருக்கு, முன்னாடியெல்லாம் நாடகம் நடத்தினா போஸ்டர் போட்டு வீதி வீதியா ஒட்டுவோம். இப்பவெல்லாம் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பத்து பைசா செலவில்லாம விளம்பரப்படுத்த முடியுது. அந்த பதிவை பார்த்துட்டு நிறைய பேர் நாடகத்துக்கு வர்றாங்க. நவீன நாடகங்கள் புரியாதுங்கிற கருத்து பரவலா இருக்கு வெளி பத்திரிக்கை நேர்காணலில் இதே கேள்வியை கூத்துப்பட்டறை முத்துச்சாமி சார்கிட்ட கேட்டப்ப ‘‘நீங்கதான் உங்க ரசனையை உயர்த்திக்கணுமே தவிர உங்க ரசனைக்கு இறங்கி வந்து எங்களால நாடகம் பண்ண முடியாது’’ன்னு சொன்னார். எல்லாமே பரிமாண வளர்ச்சி அடைஞ்சுக்கிட்டேதான் இருக்கும் அப்படித்தான் நாடகத்தின் அடுத்த கட்டம் நவீன நாடகம். நவீன நாடகங்களின் சாராம்சமே வசனங்களைக் காட்டிலும் காட்சி மொழியிலேயே கதை சொல்லணும்ங்கிறது. நடிப்புக்கான சாரம் எதுன்னு கேட்டா அது நம்ம வாழ்க்கைதான். நம்மளோட ஒவ்வொரு நடவடிக்கையுமே நடிப்போட அடிப்படையில் வரும். நாடகத்தை மட்டுமே முழு நேரமா வெச்சு யாராலும் இங்க இயங்க முடியாது ஏன்னா வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்யுற அளவுக்கான பொருளாதாரம் அவங்களுக்கு கிடைக்கிறதில்லை. இதனாலேயே நாடகத்துறைக்குள்ள வர பலரும் தயங்குறாங்க’’ என்று தனது ஆதங்கத்தை முன் வைத்தவரிடம் அடுத்ததாக பெற்ற விருதுகள் மறக்க முடியாத பாராட்டுகள் குறித்து கேட்டதற்கு. 
‘‘எழுத்தாளர் இமையத்தின் ‘‘நிஜமும் பொய்யும்’’ சிறுகதையை களமா வெச்சு நடத்தின நாடகத்தில் 60 வயதான கதாப்பாத்திரத்தில் நடிச்சிருந்தேன். கூத்துப்பட்டறை முத்துச்சாமி சார் யாரையும் அவ்ளோ சீக்கிரத்துல பாராட்ட மாட்டார் ஆனா அந்த நாடகத்தைப் பார்த்துட்டு என்னை மனசார பாராட்டினார். தலைமுறைகள் படத்தில் நடிச்சிருந்தேன், பாலு மகேந்திரா சார் எடிட்டிங் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் என்னோட ஓப்பனிங் சீனை போட்டு காட்டி எப்படி நடிச்சிருக்க பார்னு சொல்லி பாராட்டினார் இது ரெண்டும் என் வாழ்க்கையிலயே மறக்க முடியாத பாராட்டு. 2008ல் வளர்ந்து வரும் நாடகக் கலைஞர்கள் விருதை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா கையால வாங்கினேன். கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட ‘‘ஒரு கோப்பைத் தேநீர்’’ குறும்படத்தில் நடிச்சப்ப சிறந்த நடிப்புக்கான விருது கிடைச்சுது’’ என்றபடியே அந்த விருதுகளை காட்டினார். அவரது எதிர்காலத்திட்டம் குறித்து கேட்ட போது ‘‘எந்தத் திட்டத்தையும் வகுத்துக்கிட்டெல்லாம் வேலை செய்யலை. நாடகமோ, சினிமாவோ எதுவா இருந்தாலும் என்னுடைய பங்களிப்பு சிறப்பா இருக்கணும்ங்கிறதுக்காக உழைக்குறேன் அவ்ளோதான்’’ என்கிறார் புன்னகையோடு.
                                    -கி.ச.திலீபன்  நன்றி: குங்குமம் தோழி 

No comments:

Post a Comment