Saturday, April 20, 2013

புலியா? பழங்குடியா?கல்வி வெளிச்சத்துக்கு ஏங்கும் பழங்குடி குழந்தைகள்


பசுமை தரித்த மலைகள்

புலியின் உறுமல் சத்தத்தை விட புலிகள் காப்பகம் என்கிற சொல்தான் பழங்குடி மக்களைத் தற்போது பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை தற்போது உலக அளவில் குறைந்து வருகிறது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் ஒரு லட்சம் புலிகள் இருந்ததாகவும் தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் 3,500 புலிகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் 1,400 புலிகள் இந்தியாவில்தான் வாழ்கின்றன. 1990ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3,500ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 60 விழுக்காடு குறைந்துள்ளது.
அஜய் துபே என்றவர் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் அடிப்படையில் 24.7.2012ம் ஆண்டு ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரா, அருணாச்சலபிரதேஷ், உத்திர பிரதேஷ், பீகார், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் நடைபெற்று வந்த சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது.
மனிதனும் விலங்குகளும் சேர்ந்து வாழ முடியாது என்கிற கொள்கையின் அடிப்படையில் புலிகள் வாழும் முக்கியப் பகுதிகளை புலிகள் சரணாலயங்களாக அறிவித்து அதன் வாழிடத்திலும், மேய்ச்சலிடத்திலும் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கே உலை வைக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபமாக இந்த புலிகள் சரணாலயத்திட்டத்திற்கு ஆளாக்கப்பட்டு தலை மேல் கத்தி என எந்நேரமும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர் சத்தியமங்கலம் வனப் பழங்குடியினர்.
புலிகளைக் காக்க சரணாலயங்களை அமைப்பதை ஆதரிக்கிறோம் ஆனால் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதை மட்டும் எக்காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என அங்குள்ள பொது நல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தன் பலத்த எதிர்க் குரலை எழுப்பி வருகின்றனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன்குமாரிடம் பேசினோம்: “சத்தியமங்கலம் வன உயிரின சரணாலயம் தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக 15.3.2013ல் அறிவிக்கப்பட்டு விட்டது. சத்தியமங்கலம் வனக்கோட்டம்தான் தமிழகத்திலேயே பெரியது. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இவ்வனப்பகுதியில்தான் சந்தித்துக்கொள்கின்றன. மூன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதியை இங்கு வாழும் 13 புலிகளுக்காக ஒப்படைக்கும் திட்டம்தான் இந்த புலிகள் காப்பகம்.
சத்தியமங்கலம் வனத்தில் எடுக்கப்பட்ட படம்
புலிகள் வாழ வேண்டும் என்றால் அங்கு மனிதர்கள் வாழக்கூடாது. பழங்குடி மக்கள் புலிகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என்று முன்மொழிகிறார்கள் சூழலியலாளர்கள் என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் என்.ஜி.ஓக்கள். 120 கோடி பேர் வாழும் நம் நாட்டில் 1400 புலிகளுக்காக 5 சதவீத பகுதியை ஒதுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கூற்றாக உள்ளது. பல்லுயிர்ச்சூழலில் புலிகள் உள்ள காடு என்பது செழிப்பு மிக்க காடாகத்தான் இருக்க வேண்டும் ஏனெனில் புலிகளுக்கு உணவாக மானும் மானுக்கு உணவாக செழிப்பான புல் வகைகளும் அங்கு நிறையவே இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையில் 8 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹடாவில் 2 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வசித்து வருவதாக வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். நாகராஜ் குறிப்பிடுகிறார். பழங்குடி மக்கள் புலிகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என்றால் இந்த வனத்தில் எப்படி இத்தனை காலம் வன விலங்குகள் உயிருடன் வாழ்ந்திருக்கின்றன. புலிகள் எப்படி உருவாகியிருக்க முடியும்? என்கிற அடிப்படையான அறிவு கூட இல்லாதவர்களா நாம்.
வனத்தையும் வன விலங்குகளையும் தங்களது கடவுளாய் பார்ப்பவர்கள்தான் பழங்குடி மக்கள் அவர்களால் இதுவரையிலும் சூழலியலுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை என ஆதாரத்தோடு கூற முடியும். வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையினர் ஏற்படுத்திய அழிவு கொஞ்ச நஞ்சமில்லை. வெள்ளையர்கள் பலரும் தங்களது வீரத்தை நிருபிப்பதற்காக புலியை வேட்டையாடிக் கொன்றனர். பெருநிலக்கிழார்கள் அரசு உரிமம் பெற்று வேட்டையாடி பல்லாயிரம் புலிகளை கொன்று தீர்த்தனர். பழியெல்லாம் பழங்குடி மக்கள் மீதா?
2006ஆம் ஆண்டு இந்திய நாடாளமன்றத்தில் வன உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை இந்திய ஆதிவாசிகளுக்கு இழைத்த அநீதிகளை எல்லாம் இச்சட்டம் சரி செய்யும் எனக் கூறப்பட்டது. இச்சட்டம் வனத்தின் மீது வனத்துறையினரின் ஆதிக்கத்தை தடை செய்கிறது. பழங்குடியினரின் வன வாழ்வை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. இச்சட்டம் அமலாவதற்கு முன் காட்டை காப்பகமாக்கி மக்களை வெளியேற்றி விட வேண்டும் என்பதுதான் வனத்துறையின் ஒரே குறிக்கோள்.
இன்று உலகை உலுக்கி வரும் சூழலியல் பிரச்சனைகளில் மிக முக்கியமானது புவி வெப்பமயமாதல். வளர்ந்த நாடுகளில் தொழிற்புரட்சியின் விளைவால் வெளியேறும் கார்பன் பூமியை சூடாக்கி விட்டது. கார்பன் அளவைக் குறைக்க வேண்டுமெனில் உற்பத்தியை குறைக்க வேண்டும் என 1997ஆம் ஆண்டு கியாட்டோ மாநாட்டில் கூறப்பட்டது. உற்பத்தி குறைந்தால் லாபம் குறையும் என்று எண்ணிய முதலாளிகள் கொண்டு வந்த திட்டம்தான் இந்த புலிகள் காப்பகத் திட்டம்.
தமிழகக் காடுகளில் உள்ள மரங்கள் மூலம் கார்பன் கட்டுப்படுத்தப்படவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யுனஸ்கோ சார்பில் இதற்கென பல கோடி ரூபாய்கள் இந்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது. புலிகள் சரணாலயம் அமைப்பதற்கு அங்குள்ள பழங்குடிகள் மற்றும் வனம் சார்ந்து வாழும் மக்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற முக்கிய நிபந்தனை கூட இங்கு பின்ப்ற்றப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது. ஈரோடு, கோவை மாவட்டத்தில் கெய்ல் நிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட பிரச்சனை எழுந்த போது “திட்டத்திற்காக மக்களா?” “மக்களுக்காக திட்டமா?” என்றால் மக்களுக்காகத்தான் திட்டங்கள்” என்று வழிகாட்டிய தமிழக முதல்வர் அவர்கள் இப்பிரச்சனைக்கும் ஒரு தீர்வு காண வேண்டும்” என்றார்.
2008ம் ஆண்டு சத்தியமங்கலம் வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்ட போதே இங்குள்ள பழங்குடி மக்கள் பேரிடருக்கு ஆளாகினர். தங்களது முக்கியத்தொழில்களில் ஒன்றான ஆடு, மாடு மேய்ச்சலுக்குத் தடை விதித்தது வனத்துறை. எத்தனையோ கிராமங்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல் போராடினர். புலிகள் சரணாலயத்துக்கான் முன்மொழிவு அனுப்பப்பட்டதிலிருந்தே வனப்பொருள் சேகாரத்துக்கும் வனத்துறை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. களக்காடு- முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலத்திற்கு அடுத்தபடியாக மேகமலையை புலிகள் காப்பகமாக்குவதற்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
 இச்சூழலில் முதுமலை புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட இணை செயலாளர் டி.பாலக்கிருஷ்ணன்: “முதுமலை புலிகள் காப்பகத்தின் புலிகள் வாழ்விடத்தை 321 சதுர கிலோ மீட்டராகவும், புலிகளின் மேய்ச்சலிடத்தை 367.59 ச.கி.மீஆகவும் விரிவுபடுத்துவதற்கான திட்டம் போடப்பட்டிருந்தது. புலியின் மேய்ச்சல் நிலத்துக்குள் கூடலூர் என்னும் ஒரு தாலுக்காவே வருகிறது. இதை எதிர்த்து கூடலூர் மற்றும் பந்தலூர்வாசிகள் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனித சங்கிலிப் போரட்டம் நடத்திய பின் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதுமலை காப்பகத்துக்குள் வசிப்பவர்கள் வெளியேறினால் அவர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் தருவதாக வனத்துறை அறிவித்திருக்கிறது. புலிகள் காப்பகம் என்கிற பெயரில் பழங்குடி மக்களை வெளியேற்றும் நிகழ்வு மனிதத்திற்கு எதிரானது. பழங்குடி மக்களை நேரடியாக வெளியேற்றாமல் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து தானாகவே வெளியேறும் சூழலை வனத்துறையினர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பந்திப்பூரை உயிர் சூழல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதையடுத்து முதுமலையையும் உயிர்ச்சூழல் மண்டலம்( eco sensitive area) ஆக அறிவிக்க உள்ளது. இதனால் தேயிலை பறிக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர். தமிழக முதல்வர் அவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்து வருகிறது. இத்திட்டம் நிறைவேறும் நிலையில் இங்கு மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்” என்றார்.
வனத்தைப் பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அரசின் எண்ணம் வரவேற்கத்தக்கதுதான். அதற்காக பழங்குடி மக்களை வெளியேற்றும் நிகழ்வு கண்டிக்கத் தக்கது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 'கூட்டு வள மேலாண்மை' என்கிற பெயரில் பழங்குடி மக்கள் ஒத்துழைப்போடு வனத்தைப் பாதுகாத்தல் என்ற திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. வனத்தை பாதுகாக்க பழங்குடி மக்கள் தேவை என்பதை அரசு அன்றே உணர்ந்திருந்த போதிலும் ஏன் இந்த அதிரடி..? என்பதே இவர்களின் கேள்வியாக உள்ளது!

பாக்ஸ்
“புலிகள் காப்பகம் என்பது புலிகளை மட்டுமல்ல காடுகளையும் காப்பதற்கான திட்டம். வனத்துறைக்கு மாநில அரசின் மூலம் மட்டுமே நிதி உதவி கிடைத்து வந்தது. புலிகள் காப்பகங்கள் மூலம் ப்ராஜக்ட் டைகர் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்தும் நிதி உதவி கிடைக்கப்பெறும். இந்த நிதி மூலம் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். எகோ டூரிஸம், இதர பணிகள் என பற்பல வேலை வாய்ப்புகள் பழங்குடி மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் பழங்குடி மக்களின் அடிப்படைத் தேவைகள் பலவும் பூர்த்தி செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது. பழங்குடி மக்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளே கிடையாது. காடுகளில் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. ப்ராஜக்ட் டைகர் திட்டத்தோடு பழங்குடி மக்களும் இணைந்து பங்காற்றினால் பொருளாதார அளவில் முன்னேற முடியும். பரம்பிக்குளம், களக்காடு- முண்டந்துறை ஆகிய புலிகள் காப்பகங்களில் உள்ள பழங்குடி மக்கள் இதன் மூலம் நிறைய பலன்களை அடைந்து வருகின்றனர்”
 -பூமிநாதன், நீலகிரி சதுப்பு நில ஒருங்கிணைப்பாளர், டபிள்யூ. டபிள்யூ. எஃப்.
         - கி.ச.திலீபன், நன்றி: கல்கி2 comments:

  1. pulikagal pathi poolli vivaram nalla cleara thanthu irukinga thoza.. thanks evlonal intha padikama irunthathuku sorry thoza..

    ReplyDelete
  2. பாதி உண்மை பாதி பொய்.

    ReplyDelete