Thursday, March 7, 2013

சினிமா ஆர்வலர்களுக்கான ஒரு நூலகம்

திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் தொடக்க காலந்தொட்டு கிராமபோன், ஸ்டேண்டர்டு ப்ளே, எக்ஸ்டண்டட் ப்ளே, லாங்ப்ளேக்களில் ஒலித்திட்ட, காலத்திலும் மறவாது என்றும் நினைத்தாலே இனிக்கும் க்ளாசிக் படங்களின் இன்னிசைப் பாடல்களைக்கேட்கும் வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கப் பெறாத வரம். அக்காலப் பாடல்களை கேட்கத் துடிக்கும் இசைப் பிரியர்கள் இன்னும் பலர் இருக்கவே செய்கிறார்கள். 1931ம் ஆண்டு வெளிவந்த காளிதாஸ் திரைப்படம்தான் தமிழின் முதல் பேசும்படம். அன்று தொட்டுத்தொடர்ந்த தமிழ் சினிமாவின் ஒவ்வொரு கட்டத்தையும் அதிசயிக்கும் விதத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த சந்தானக்கிருஷ்ணன். தமிழக தலைமைச்செயலகத்தின் இணைச்செயலாளராய் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இசை மீது அலாதிப்பிரியம். தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தொடங்கி வெஸ்டர்ன் இசை வரை நீண்டு கிடக்கிறது இவரது இசைச்சேகரிப்புகள். ஒரு மதிய வேளையில் இவரது அறுபது ஆண்டுகால சேகரிப்புகளால் நிறைந்து கிடக்கும் இவரது வீட்டில் சந்தித்தேன்.இசைத்தட்டுகளாலும், சினிமா புத்தகங்களாலும் சூழ்ந்து கிடக்கும் இவரது அறையில் என்னை அமர வைத்துப் பேசினார்.
‘‘1931ம் ஆண்டிலிருந்து 37ம் ஆண்டு வரை தமிழ்சினிமாவின் இருண்ட கால கட்டம்னு சொல்லுவாங்க. ஏன்னா அந்தக்காலத்தில் வந்த திரைப்படங்களுக்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. 1931ம் ஆண்டில் வந்த காளிதாஸ் படம்தான் தமிழின் முதல் பேசும்படம். ஆனால் அதே படம்தான் தெலுங்குக்கும் முதல் பேசும் படம். ஏன்னா அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு தெலுங்கு தெரியும் கதாநாயகிக்கு தமிழ் தெரியும் இதனால இரண்டு மொழியையும் கலந்து எடுப்போம் என்கிற நோக்கில் எடுக்கப்பட்டது. 1950ம் ஆண்டிலிருந்து 65ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை இந்திய சினிமாவின் மிகச் சுவையான காலகட்டம்னு சொல்லலாம் ஏன்னா அன்றைக்கு வந்த படங்களும் பாடல்களும் ஒரு தனிச்சிறப்போட இருந்துச்சு. என்னோட 9வது வயசிலிருந்தே சினிமா, இசை சம்மந்தப்பட்டவைகளை சேகரிக்கத் தொடங்கிட்டேன். ஒரு ரூபாய்க்கு எட்டு படி அரிசி வித்த அந்தக் காலத்துல ஒரு ரிக்கார்டின் விலை 2.50ரூபாய். சாதாரணமானவங்கள்லாம் அதை வாங்க முடியாது அப்படியிருந்த சூழ்நிலையில பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரிக்கார்டு வாங்கினேன். படிப்பை முடிச்சுட்டு 1964ம் ஆண்டு தலைமைச்செயலகத்தில் இளநிலை உதவியாளராய் 85ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன் அப்ப வீட்டு வாடகை 4ரூபாய் வீட்டுச் செலவு 30ரூபாய் போக மீதம் 51ரூபாய்க்கும் ரிக்கார்டாவே வாங்கிக் குவிச்சேன். யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை எனக்கு இசைத்தட்டுகளையும் சினிமா சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் சேகரிக்கிறது ரொம்பவே மனசுக்கு நிறைவா இருந்தது இந்த சேகரிப்புக்காகவே என்னோட சம்பளத்துல ஒரு பகுதியை ஒதுக்கிடுவேன். இதுக்காக நான் செலவு செஞ்சது பல லட்சங்களைத்தொடும். இப்படியொரு சேகரிப்புக்காக பல கோடிகளை செலவு செஞ்சிருந்தாலும் நான் அதப்பத்தி கவலைப்பட்டிருக்க மாட்டேன். கனடாவிலிருந்து ஒலிபரப்பப்படும் ‘‘தமிழ் ஓசை’’ வானொலியிலிருந்து ஒரு கணிசமான தொகைக்கு என்னுடைய இந்த சேகரிப்புகளைக் கேட்டாங்க. எனக்கு இதைக் கொடுக்க மனசில்லை. பணம் எனக்குப் பெரிசில்லை என்னோட சேகரிப்பு மக்களுக்குப் பயன்படனும்ங்கிறதுதான் என் நோக்கமே’’ என்றவர் அடுத்த படியாக தன் சேகரிப்புகளை ஆர்வமாய் நம்மிடம் காட்டினார்.
இவரது வீடு முழுவதுமே ரிக்கார்டுகளாய் நிரம்பி வழிகிறது. அதில் ஒரு ஷெல்ப் முழுக்க 1950களில் வெளியான வெஸ்டர்ன் இசைத்தட்டுகள். ராமநாதன், சுப்பராமன், வெங்கட்ராமன், சுப்பய்ய நாயுடு, விஸ்வநாதன்& ராமமூர்த்தி, இளையராஜா என தமிழ் சினிமாவின் முக்கிய இசை வல்லுநர்களின் பாடல்களும் இவரது அலமாரிகளில் அணி சேர்ந்து நிற்கின்றன இந்தத் தட்டுகள் இன்னமும் அதே பளபளப்புடன் ஜொலிக்கிறது என்பதுதான் அதன் முக்கியச் சிறப்பே. இவரிடம் இருக்கும் தட்டுகளை தனிப்பட்டியல் போட்டுத்தான் சொல்ல முடியும். பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் ரிக்கார்டுகளில் எந்தப் பாடல் வேண்டுமென்று கேட்டாலும் எடுத்து கிராமபோனில் பாட வைத்துக்காட்டுகிறார். ஒவ்வொரு ரிக்கார்டுகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இவர் கண்களில் பெருமிதம் நிரம்பி வழிகிறது.
அடுத்ததாய் சில ஆல்பங்களை என்னிடம் காட்டினார். எங்கு தேடினாலும் கிடைக்காத பேசாப்படங்கள் தொட்டு தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா மட்டுமில்லாமல் இவர்களுக்கும் முற்பட்ட சினிமாக்களின் காட்சிகளின் ஃபோட்டோக்கள் நிரம்பி வழியும் இந்த ஆல்பத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சிதனைத் தொட்டேன்.
‘‘பேசும்படம் ‘‘காளிதாஸ்’’ தினசரி 3 காட்சிகள், கினிமா சென்ட்ரல் மதராஸ் என்ற அறிவிப்பைச் சுமந்து நிற்கும் அந்தக்கால விளம்பரத்தை காண்பித்து இன்றைய ஸ்ரீ முருகன் தியேட்டர்தான் அன்றைய கினிமா சென்ட்ரல் என்றார். அன்றைய கால சினிமாக்களின் மினி போஸ்டர்களை என்னிடம் அவர் காட்னார் அவர் காட்டிய படங்கள் நான் கேள்விப்பட்டிராத அளவுக்கு மிகப்பழமையானவை.
படத்தின் பெயர், பாடலாசிரியர், பாடியவர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் வரிகளை மட்டும் அச்சேற்றி வெளிவரும் இன்றைய பாட்டுப் புத்தகங்களோடு ஒப்பிட்டால் அன்றைய காலப் பாட்டுப் புத்தகங்களுக்கு ஒரு முக்கியச் சிறப்பு இருக்கிறது ஒவ்வொரு பாடல்களின் ராகம், தாளம், பல்லவி போன்றவற்றை குறிப்பிட்டு வெளி வந்திருக்கும் அக்காலப் பாடல்கள் மேலும் பல பாடகர்களை உருவாக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அன்றைய காலங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சினிமா பத்திரிக்கைகள் வெளி வந்திருக்கின்றன. அவற்றுள் 52 பத்திரிக்கைகளின் பிரதிகள் இவரிடம் உள்ளது. பேசும்படம், குண்டூசி போன்ற சினிமா பத்திரிக்கைகளை பைண்டிங்க் செய்து பாதுகாத்து வருகிறார். இவரது சேகரிப்புகள் முழுவதையும் பார்க்க ஒரு நாள் போதுமானதாக இருக்காது அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல மேலும் மேலும் பார்த்துக்கொண்ட்ருக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன் இவரது சேகரிப்புகள்.
இசை, சினிமா சேகரிப்புகள் மட்டுமில்லாமல் இவர் 2001&04 வரை ‘‘நெஞ்சம் மறப்பதில்லை’’ ‘‘சினிமா நேரம்’’ ஆகிய நிகழ்ச்சிகளை ஆல் இந்தியா ரேடியோவில் நடத்தியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘‘வாலி 1000’’ புத்தகத்தை தொகுத்ததில் முக்கியப் பங்கு இவருக்குண்டு. இந்த சினிமா சேகரிப்புகளின் மூலம் சிவக்குமார், கமல், வைரமுத்து, வாலி, சௌந்தர்ராஜன், ஏ.வி.எம் சரவணன், சுசீலா, மனோரமா, ஜிக்கி ஆகியோரது நட்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லும் இவரது முகத்தில் புன்னகை கலந்த பெருமிதம்.

சந்தான கிருஷ்ணன் சேகரிப்புகள்
கிராமபோன் ரிக்கார்டர் = 23,000
ஸ்டேண்டர்டு ப்ளே ரிக்கார்டர்= 7,000
எக்ஸ்டண்டண்ட் ப்ளே ரிக்கார்டர்= 12,000
லாங் ப்ளே ரிக்கார்டர்= 15,000
சி.டி (ஆடியோ)= 15,000
சி.டி (வீடியோ)= 10,000
                                   கி.ச.திலீபன் நன்றி: கல்கி

No comments:

Post a Comment