Thursday, March 7, 2013

ஊன் உண்ணிக் கழுகள் அழிவு! பல்லுயிர்ச் சூழலின் சிதைவு!


மனித இனம் இயற்கைக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நம் பல உயிரினங்களின் அழிவை சாட்சியாக வைத்து சொல்ல முடியும். பன்னாட்டு நிறுவனங்களின் பேராசைப் பசிக்கு இறையானது என்னவோ நம் சூழலியல்தான். தற்போது நிலவும் புவி வெப்பமடைதல், பருவ நிலை மாற்றம் போன்ற சூழலியல் சீர்கேடுகளுக்கு அடிப்படையான காரண கர்த்தாக்கள் மனிதர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் வீட்டுத் தாழ்வாரங்களிலும், மரக்கிளைகளிலும் கீச்சிட்டுக் கொண்டிருந்த சிட்டுக்குருவியை பேரிரைச்சலுக்கும், செல்போன் கதிர் வீச்சுக்கும் பலி கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. சிட்டுக்குருவி இனம் மட்டும் அழியவில்லை நமக்கே தெரியாத எத்தனையோ உயிரினங்களை நம் செயல்பாடுகளில் நாமே அழித்து விட்டோம், அழித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் விலங்காக கருதப்படும் வரையாடு தற்போது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. இவற்றில் சூழலியல் சுத்திகரிப்பாளனாய் விளங்கும் பிணந்தின்னிக்கழுகள் என்று அழைக்கப்படும் ஊண் உண்ணி கழுகுகளின் அழிவு முக்கியமானது. கடந்த 2008 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் உள்ள ஊன் உண்ணிக் கழுகுகள்  95சதவீதம் அழிந்து விட்டதாக தெரிய வந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதமுள்ள 5 சதவீதம் கழுகுகள் வாழ்வதற்கான உத்திரவாதங்களும் இல்லாமல் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இறந்ததைத் தின்று இருப்பதைக் காக்கும் இந்த சூழலியல் சுத்திகரிப்பாளர்களின் அழிவினால் பல்லுயிர்ச் சூழலுக்கே பேராபத்து நேரிட உள்ளது. இது குறித்து பறவைகள் ஆராய்ச்சியாளரான கோவை சதாசிவத்திடம் பேசினோம்:
பறவைகளின் எச்சத்தின் மூலமாகத்தான் மரங்களே துளிர்க்கின்றன. ஒரு பறவையை இழக்கிற தேசம் அது சார்ந்த மரத்தையும் இழக்கும் என்பது சில ஆண்டுகளுக்கு முன் வெட்ட வெளிச்சமானது. மொரிசஸ் தீவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த ஒரு பறவை இனம் டோடோ. போர்ச்சுக்கீசிய மொழியில் டோடோ என்ற சொல்லுக்கு பறக்கத் தெரியாத முட்டாள் என்று அர்த்தம். அந்த டோடோ பறவைக்கு பறத்தல் திறன் கிடையாது. போர்ச்சுக்கீசிய மக்கள் மொரிசஸ் தீவைக் கைப்பற்றினர். அப்போது அம்மக்கள் பறக்கத் தெரியாத டோடோ பறவைகளை அழித்து தங்களது இரையாக்கிக் கொண்டனர். அம்மக்களின் வளர்ப்புப் பிராணியான நாய்களும், பூனைகளும் டோடோ பறவைகளின் கூட்டினை அழித்துச் சிதைத்தன. இதனால் டோடோ பறவை இனம் முற்றிலுமாய் அழிந்தது. போர்ச்சுக்கீசிய மக்கள் கல்வாரி மேஜர் என்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய மரத்தை தங்களது கடவுளுக்கும் மேலாக வழிபட்டு வந்தனர். டோடோ பறவை இனம் அழிந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வாரி மேஜர் மரம் எங்கும் துளிர்க்கவில்லை. இதை உணர்ந்த அம்மக்கள் கல்வாரி மேஜரின் விதைகளை நட்டியும் பயனில்லை. கல்வாரி மேஜரின் பழத்தை உண்டு அதன் விதையை டோடோ பறவை எச்சமாக எங்கு கழிக்கிறதோ அங்குதான் அம்மரம் துளிர்க்கும் என்று அப்போதுதான் அவர்கள் புரிந்து கொண்டனர். 

ஊன் உண்ணிக் கழுகுகளின் அழிவு இதை விட பெரிய பாதிப்பினை நம்மிடத்தே ஏற்படுத்த உள்ளன. இந்தியாவில் மொத்தமுள்ள ஒன்பது பிணந்தின்னிக் கழுகு வகைகளில் வெண்முதுகுக் கழுகு, செந்தலைக் கழுகு, கோடாங்கிக் கழுகு ஆகிய மூன்று வகைகளும் 99 % அழிந்துவிட்டன. சிவப்பு பிணந்தின்னிக் கழுகு சமீப காலத்தில் அதிவேகமாக அழிந்துவிட்டது. இவற்றுள் நான்கு வகையான கழுகுகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தக் கழுகுகள் சங்க கால இலக்கியங்களில் பாறு என்று அழைக்கப்பட்டது. இன்றும் பழங்குடி மக்கள் இக்கழுகுகளை பாறு என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் மாயாறு, மசினகுடி, முதுமலை, ஆனைகட்டி, சீகூர் ஆகிய இடங்களில்தான் தற்போது 5சதவீதம் ஊன் உண்ணிக் கழுகுகள் வாழ்ந்து வருகின்றன. 5 டன் எடையுள்ள ஒரு யானை வனத்துக்குள் இறந்து விட்டால் அதன் உடல் அழுகி துர்நாற்றம் எடுத்து சூழலியலையே சீர்குலைத்து விடும். அவ்வுடலிலிருந்து வெளியேரும் கிருமிகள் வனத்திலிருந்து வரக்கூடிய நதிகளில் கலந்து அந்த நீரை உட்கொள்கிற நம்மிடத்திலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதற்கு இத்தனை காலமும் தீர்வாய் அமைந்ததுதான் இந்தக் கழுகுகள். நூறு ஊன் உண்ணிக்கழுகுகள் ஒன்று சேர்ந்து 5 டன் யானையின் பிணத்தை உண்ணத் தொடங்கினால் மூன்றே நாட்களில் யானையின் உடல் சுத்திகரிக்கப்பட்டு விடும். இப்படியாக இயற்கையின் துப்புரவாளனாய் விளங்கிய கழுகுகளை அழித்தது நாம்தான். கால்நடைகளுக்கு வலிக்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப்படும் டைக்ளோ ஃபீனாக் என்னும் மருந்து ஏற்படுத்திய சிறுநீரக செயலிழப்பே இதன் அழிவுக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு டைக்ளோ ஃபீனாக் போடப்பட்டால் அது ரத்தத்திலேயே தங்கி விடுகிறது. இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து அதை உண்ணும், இந்த கழுகுகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. இவற்றின் ரத்தத்தில் டைகிளோஃபெனாக் அளவு அதிகரித்த நிலையில் கழுத்து சரிவது, கீல்வாதம் போன்ற நோய்கள் அதிகரித்து கடைசியில் கழுகுகள் கூட்டங்கூட்டமாக அழிந்து போயின. ஆறு ஆண்டுகளாகவே டைக்ளோ ஃபீனாக் மருந்து தடை செய்யப்பட்டு அதற்கு மாற்றாக மொலாக்சின் என்கிற மருந்து பரிந்துரைக்கப்பட்டது. தடையை மீறியும் பல கால்நடை மருத்துவர்கள் டைக்ளோ ஃபீனாக்கை பயன்படுத்தியதால் வந்த வினைதான் இது. பார்சி இன மக்கள் தங்களின் பண்பாட்டின் படி இறந்தவர்களின் உடலை ஊன் உண்ணிக் கழுகுகளுக்கு இரையாக்க அமைதி கோபுரம் என்று சொல்லக்கூடிய கோபுரத்தின் உச்சியில் வைத்து விடுவர். தற்போது இக்கழுகுகளின் அழிவு காரணமாக அம்மக்களின் பண்பாட்டு அடையாளங்களும் சிதைவடைந்து விட்டன. சிட்டுக்குருவியோ ஊன் உண்ணிக் கழுகோ இனி வரும் தலைமுறைகள் புகைப்படத்தில் மட்டுமே பார்க்கும் சூழல் உருவாகி விட்டது” என்றார் உருக்கத்துடன்.
இன்னும் இன்னும் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நின்று தவித்துக் கொண்டிருக்கின்றன. அது வெறும் உயிரினங்கள் இழப்பு மட்டுமல்ல அந்த இழப்பு பல்லுயிர்ச் சூழலை திசை மாற்ற்றி விடும் என்பது மட்டும் உறுதி.
                                          -கி.ச.திலீபன் நன்றி: கல்கி

No comments:

Post a Comment