Tuesday, December 4, 2012

பேசும் ஓவியங்கள்

''எனது பரப்பு வானளவு பரப்பில்லை. கையளவுப் பரப்பு. இதில் எத்தனை வண்ணம் தீட்ட முடியுமோ அத்தனை வண்ணம் தீட்டுகிறேன்'' என்ற ஓவியர் வான்காவின் கூற்று சீனிவாசனுக்குப் பொருந்தும். பிறவியில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி சீனிவாசனுக்கு ஓவியத்திறன், நடனத்திறன், விளையாட்டுத்திறன் என்று எத்தனையோ திறன்கள்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கோதபாளையத்தில் இயங்கி வருகிறது, திருப்பூர் காது கேளா தோர் பள்ளி. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களின் வாழ்வுக்குத் திறவுகோலாக உள்ள இந்தப் பள்ளியில் படித்துவரும் சீனிவாசனுக்கு ஓவியத் துறையில் அதீத ஆர்வம். காது கேளாதவர்களின் துயரங்கள், அவர்களின் வாழ்வியல் மற்றும் இயற்கை, சுற்றுச்சூழல் ஆகிய வற்றை சீனிவாசனின் ஓவியங்கள் பேசுகின்றன. சீனிவாசனைச் சந்தித்து பள்ளி ஆசிரியை சித்ரா என்பவர் மூலம் நமது நோக்கத்தைச் சொன்னோம். சீனிவாசன் சைகை மொழியில் பேச... அதை சித்ரா நம்மிடம் மொழிபெயர்த்தார்.
''இந்தக் காது கேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி தான் என்னைத் தத்தெடுத்து என்னுடைய அத்தனை முயற்சிகளுக் கும் ஆதரவு கொடுத்து அரவணைப்பார். இவருக்கும் என்னைப் போலவே காது கேளாது மற்றும் வாய் பேச இயலாது. என்னோட சொந்த ஊர் அனுப்பர்பாளையம். அப்பா பாத்திரத் தொழில் செய்றவர். அவருக்கும் காது கேட்காது. 1997-ல் இருந்து இந்தப் பள்ளியில படிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்குச் சின்ன வயசில் இருந்தே ஓவியம் வரையறதுல ஆர்வம். என்னோட ஓவியங்கள் ஒவ்வொண்ணுலயும் ஒவ்வொரு அர்த்தம் இருக் கும். குறிப்பா, எங்க உலகம் எப்படி இருக்கும்னு மத்தவங்க தெரிஞ்சுக்கணும்கிறதுக்காக எங்க வாழ்வியல் சார்ந்தவற்றை வரைவேன். என்னு டைய முயற்சியை முருகசாமி சார் ரொம்பவே ஆதரிப்பார். இதுவரைக்கும் நான் 5,000 ஓவியத்துக்கு மேல வரைஞ்சிருக்கேன். இன்னமும் புதுப் புது கற்பனைகளைக்கொண்டு பல ஓவியங்கள் வரைஞ்சுக்கிட்டு இருக்கேன்.

நான் மட்டும் ஓவியன் ஆனால் போதாது. என்னைப்போல இருக்கிற பல மாணவர்களும் ஓவியம் வரையணும்னு நினைச்சேன். அதுக்காகத் தினமும் நிறைய பேருக்கு ஓவியம் வரையறதுக்குப் பயிற்சி கொடுத்துக்கிட்டு  இருக்கேன். எனக்கு ஓவியம் மட்டும் இல்லாம நடனம், விளையாட்டு லயும் ரொம்பவே ஆர்வம். இந்தப் பள்ளியில ஒரு நடனக் குழு இருக்கு. அந்தக் குழுவுல நானும் ஒருத்தன். வாலிபால் போட்டியில தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கேன். எனக்கு அனிமேஷன் துறையில சாதிக்கணும்னு ரொம்பவே ஆசை.
என்ன செய்ய! அனிமேஷன் படிக்குற அளவு வசதி இல்லாததால, என்னோட கனவு முடங்கியேகிடக்கு. எப்படி இருந்தாலும் நான் ஒரு நாள் இல்ல, ஒரு நாள் அனிமேஷன் துறையில சாதிச்சுக் காட்டுவேன்கிற நம்பிக்கை இருக்கு!''- தன்னம்பிக்கை படர்கிறது சீனிவாச னின் வார்த்தைகளில்!
                                           கி.ச.திலீபன் நன்றி: ஆனந்தவிகடன்

No comments:

Post a Comment