Friday, December 7, 2012

காடுகளில் ஒரு கனவுப் பயணம்!

மாயாறு மற்றும் பவானி ஆற்றின் கரைஓரம் செழித்து அடர்ந்துகிடக்கிறது சத்தியமங்கலம் காடு. இலையுதிர்க் காடுகள், மிஞ்சிக் குழிக் காடுகள், அடுக்குக் காடுகள், சோலைக் காடுகள் என இங்கு இயற்கை வழங்கிய கொடைகள் ஏராளம். இந்தக் காட்டுக்குள் பள்ளி மாணவர்‑ களை அவ்வப்போது இயற்கை சுற்றுலா அழைத்துச் செல்கிறது, 'சுடர்’ அமைப்பு. அப்படி ஒரு பயணத்தில் நானும் உடன் சென்றேன்.

காட்டுக்குள் நடந்தபடியே பேசினார், 'சுடர்’ அமைப்பின் இயக்குநர் நடராஜ். ''மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம். தமிழகத்தின் 'பசுமை நுரையீரல்’ என்று சத்தியமங்கலம் காடுகளைச் சொல்வார்கள். உலக அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய இனங்களான யானை, புலி, நீர் நாய், வெளிமான், நான்கு கொம்பு மான், கழுகு என சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் பரிந்துரைத்து உள்ள ஆறு உயிரினங்கள் இந்தக் காடுகளில் இருக்கின்றன. அரிய வகை வெண் முதுகுக் கழுகு, செந்தலைக் கழுகு, கோடாங்கிக் கழுகு, நீண்ட அலகு கழுகுகளும் இங்கேதான் வசிக்கின்றன. ஆனால், சமீப ஆண்டுகளாக ஆக்ரமிப்புகளால் காடுகளின் பரப்பு குறைந்துகொண்டே வருகிறது'' என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது, திம்பம் வழியாக மாவநத்தம் கானகத்துக்கு வந்திருந்தோம். அங்கு அரைநாள் தங்கி, மாவநத்தம் அழகை ரசித்த பிறகு பெஜலட்டி வரை காடுகளுக்கு இடையே அழைத்துச் சென்றார் நடராஜ். அரசு உண்டு-உறைவிடப் பள்ளியில் தங்கல், கேம்ப் ஃபயரில் குளிர்காய்ந்துகொண்டே ஆடல், பாடல் எனக் கொட்டும் பனியிலும் களை கட்டியது அந்த இரவு. மறுநாள் நகரத்துக்குத் திரும்பிய பிறகும் கண்களுக்குள் நிறைந்து இருந்தது கானகம்!
கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்

No comments:

Post a Comment