Friday, December 7, 2012

சாதி ஒழியக் காதலிப்பீர்!

''இந்தியாவில் சாதி நிலைபெறுவதற்கு அடிப்படையான காரணம், அகமண முறை என்னும் ஒரே சாதிக்குள் நடைபெறும் திருமணம்தான்'' என்பார் பாபாசாகேப் அம்பேத்கர். காதலர் தினத்தை ஒட்டியும், சாதியை மாய்க்கவும் சமத்துவத்தைப் பேணவும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாராட்டும் விதமாக 'கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச் சங்கத்தினர்’ கடந்த வாரம் திருப்பூரில் பாராட்டு விழா நடத்தினர். இந்தச் சமூக நீதி விழாவுக்குச் சென்றபோது சாதி ஒழிப்பில் ஆர்வமுடையவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே சமூகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்தது.
 
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், ''30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற வடிவத்தில் தீண்டாமை இப்போது இல்லை என்றாலும் சாதி முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம், சாதிய ஒழிப்பு என, சாதி ஒழிப்பை மூன்று படிநிலைகளாகப் பிரிக்கலாம். சாதி மறுப்புத் திருமணங்களை நாம் நிச்சயம் வரவேற்கவும் பாராட்டவும் வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களால் சாதிகள் ஒழியும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது, எந்தச் சாதியையும் குறிப்பிடத் தேவை இல்லை. கட்டாயம் சாதிப் பெயரைக் குறிப்பிட தலைமை ஆசிரியர் வற்புறுத்தினால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம் என்று அரசு ஆணையே உண்டு. நான் சாதி மறுப்புத் திருமணம்தான் செய்துகொண்டேன். 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பதைப்போல, காதல் வயப்பட்டு செய்துகொண்ட திருமணம் அல்ல; சாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு செய்துகொண்ட திருமணம் அது. சாதிகளை விடுத்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்'' என்றார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ''கலப்பு மணம் புரிந்தோருக்கான நலச்சங்கத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டாக இந்தப் பாராட்டு விழாவை நடத்துகிறோம். காந்தியடிகள் சொன்ன தீண்டாமை ஒழிப்புக்கும் தந்தை பெரியார் சொன்ன சாதிய ஒழிப்புக்கும் வேறுபாடு உண்டு. தீண்டாமையை மட்டுமல்ல சாதியத்தையே வேரோடு அறுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். சாதி மறுப்புத் திருமணங்களாலும் சாதிகள் ஒழியும் வாய்ப்பு உள்ளது என்பதால்தான் சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறோம். காதல் வயப்பட்டு அதன் காரணமாக சாதி மாற்றுத் திருமணம் செய்தோர்களையும் இவ்விழாவில் இணைத்து அவர்களிடத்திலும் சாதிய மறுப்புக்கான நோக்கத்தை விளக்கி அவர்களையும் பெரியார்  வழியிலே வழி நடத்துவதுதான் எங்களுடைய நோக்கமே'' என்றார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட சாதி மறுப்புத் திருமணம் புரிந்த அருண்குமார்-தமிழ்மதி தம்பதியிடம் பேசியபோது தங்கள் திருமணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். 
''என் சொந்த ஊரு விருத்தாசலம்.  மனைவியோட ஊர் தேனி. எங்க ரெண்டு பேருடைய குடும்பமும் திருப்பூர் வந்து பல வருஷம் ஆச்சு. நான் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். நாங்க பண்ணிக்கிட்டது சாதி மறுப்பு, காதல் திருமணம். எங்க வீட்டுல ஏத்துக்கிட்டாங்க. ஆனா, என் மனைவி வீட்டுல ஏத்துக்கவே இல்லை. அப்புறம் கோர்ட் வரைக்கும் போய்தான் இவங்களை ஒப்படைச்சாங்க. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைப் பாராட்டுகிற நிகழ்வு வரவேற்கத்தக்கது. இனி, ஒவ்வொருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்வதையும் தங்கள் குழந்தைகளுக்குச் சாதிமறுப்புத் திருமணங்கள் செய்துவைக்கிறதையும் ஒரு கொள்கையா ஏத்துக்கணும்'' என்று சொல்லும்போது வார்த்தைகளில் அழுத்தம் பரவுகிறது!

கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்

No comments:

Post a Comment