Friday, December 7, 2012

கொட்டி முழங்கிய இசை செத்து மடியுது!

கொங்கு மண்டலத்தின் சிறப்புகளில் ஒன்று, கடவு மத்தாட்டம். மயிலாட்டம், ஒயிலாட்டம்போல இசை சார்ந்த கலை இது!     
 ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்து மக்களின் இசை இது. பார்க்க குண்டு உருளைகள்போலத் தெரிவதால், இதைக் 'குண்டு மத்தளம்’ என்றும் சொல்கிறார்கள். பெரும்பாலும் அண்ணமார் சாமி கோயில் திருவிழாக்களில் இந்தக் கடவு மத்தாட்டம் அடிக்கப்படுமாம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கடவு மத்தாட்டக் கலைஞர் ராமனிடம் பேசினோம். ''குண்டுச் சட்டியில் இருபுறமும் வெட்டி எடுத்து அதுல மாட்டுத் தோலைக் கட்டி அடிச்சா, சத்தம் காதைப் பொளக்கும். அடிக்கிற அடியில் யாரா இருந்தாலும் எழுந்திரிச்சு ஆடத் தோணும். அண்ணமார் சாமி கோயில் திருவிழா, பங்குனி மாசம் நடக்கும். திருவிழா நடக்குற 15 நாளும் நாங்க குண்டு மத்தளம் அடிப்போம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு களை கட்டிக்கெடக்கும்.
குண்டு மத்தளம் அடிக்கிறதை வெறுமனே காசுக்குப் பண்ற தொழிலாப் பாக்கலைங்க. குண்டு மத்தளத்தை இடுப்பில் கட்டிக்கிட்டு அடிக்கும்போது துள்ளிக் குதிச்சுக்கிட்டு சந்தோஷமா ஆடுற சனங்களைப் பார்த்தாலே, எங்க மனசு நெறைஞ்சுடும். இங்கே உள்ள சனங்க எல்லாம் வறுமையில் பிறந்து வறுமையிலேயே வாழ்ந்து சாகுறவங்க. ஏதோ இது மாதிரி 15 நாள் நடக்குற திருவிழாவில் கிடைக்குற மகிழ்ச்சியில்தான் மொத்த வருஷத்தையுமே ஓட்டுறோம்!'' என்கிறார் உணர்ச்சி மேலிட. ஆனால், காலப்போக்கில் இந்த இசை அழிந்து வருவது குருநாதனைப்போன்ற மத்தளைக் கலைஞர்களைக் கவலைகொள்ளவைத்து இருக்கிறது. ''இப்போ இந்த மத்தளத்தைப் பாக்குறதே அபூர்வமா இருக்கு. வருமானம் இல்லைங்கிறதால் இதை அடிச்சவங்க எல்லாம் கூலி வேலை பார்க்கப் போயிட்டாங்க. ஏழெட்டுப் பேர் கிளம்பி மத்தளம் அடிக்கப் போவோம். பதினைஞ்சு நாளைக்கு மத்தளம் அடிக்கணும். குண்டு மத்தளம் 30 கிலோவுக்கும் மேல பாரமா இருக்கும். அதை இடுப்பில் கட்டிக்கிட்டு அடிச்சா  இடுப்பு எலும்பு தெறிச்சுப் போயிடும். அம்புட்டு கஷ்டத்தைத் தாங்கிட்டு அடிச்சா, 50 ரூபா கூலி கிடைக்கும். இன்னைக்கு விலைவாசியில 50 ரூபாய வெச்சிட்டு என்ன பண்ண முடியும்? இந்தச் சிக்கல்லயே காலங்காலமா வளர்ந்து வந்த இந்தக் கலை, காணாமப்போயிடுமோனு கவலையா இருக்கு!'' என்கிறார் ஆதங்கத்துடன்!
- கி.ச.தீலீபன்

No comments:

Post a Comment