Wednesday, December 5, 2012

கழுதை ரயில் ஓடிய ஊர்!ண் சார்ந்த விஷயங்களைத் தன் படைப்புகளில் பதிவுசெய்பவர், எழுத்தாளர் என்.ஸ்ரீராம். இவருடைய படைப்புகளில் கொங்கு மணம் வீசும். விஜய் டி.வி-யின் 'ரோஜாக் கூட்டம்’, 'யாமிருக்க பயமேன்’ தொடர்களின் செயல்முறை தயாரிப்பாளராகப் பணிபுரிந்த இவர், தன்னுடைய சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், நல்லிமடம் குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
''தாராபுரம் அருகில் இருக்கும் குக்கிராமம் நல்லிமடம். நல்லிமடம் என்ற பெயருக்கு ஒரு புராணக் காரணம் உண்டு. இன்றைய தாராபுரம்தான், மகாபாரதக் காலத்தில் விராடபுரம். இங்கு பஞ்ச பாண்டவர்கள் தலைமறைவாக வாழ்ந்தார்கள். விராடபுரத்தில் இருந்து வடக்கு நோக்கிச் செல்ல, இந்த ஊர் வழியாகத்தான் செல்லவேண்டும். அப்போது நல்லி என்பவர் இங்கு ஒரு மடத்தைக் கட்டினார். அதுதான் நல்லிமடம் ஆனதாம். நல்லிமடம் அருகில் சாமேடு என்ற இடத்தில் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேய அரசாங்கம் தரைப்படையைத் தங்கவைத்தது. ஆரம்ப காலத்தில் இங்கு விவசாயிகளும் நெசவாளர்களும் அதிகமாக இருந்தனர். என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு தெருவிலும் தறிச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். இப்போது நல்லிமடத்தில் உயர் நிலைப் பள்ளியாக இருக்கும் பள்ளி, நான் படிக்கும்போது நடுநிலைப் பள்ளியாக இருந்தது. அங்குதான் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின்பு தாராபுரம் அரசுப் பள்ளியில் படித்தேன். அப்போது எனக்கு கணிதம் என்றால் கசப்பு. ஆனால், 10-ம் வகுப்பில் கணிதப் பாடத்தில் நான் 100-க்கு 100 வாங்கினேன். காரணம், கணித ஆசிரியர் சேஷன். கணிதப் பாடத்தையே ஒரு சுவாரஸ்யமான விளையாட்டுப் போல நடத்தியவர் அவர்!
எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் ஒரு கிணறு உள்ளது. அதை அம்மன் கிணறு என்பார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் ஓர் ஆங்கிலேய அதிகாரி, கிணற்றை மக்கள் வழிபடுவதைக் கேலிசெய்து, கிணற்றை மூடும்படி உத்தரவிட்டாராம். அன்றைய தினம் இரவே அவருடைய கனவில் மாரியம்மன் தோன்றி, அவர் பார்வை பறிபோனதாம். அவர் மாரியம்மன் கோயில் வந்து அம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வேண்டிய பிறகே அவருக்குப் பார்வை கிடைத்ததாக ஒரு கதை உண்டு.
எங்கள் ஊரின் முக்கிய மரபு அடையாளம், அண்ணமார் கூத்து. கொங்கு மண்ணின் பிரபலமான பிரத்யேக வரலாற்றுக் கூத்து இது. தங்கை அருக்காணித் தங்கத்தைக் காப்பாற்ற பொன்னர் - சங்கர் அண்ணமார்கள் தலையூர் காளி என்கிற வேடுவ சிற்றரசனுடன் போரிட்டு உயிர்த் துறக்கும் வீர வர லாற்றைக் கூத்தாக நிகழ்த்துவார்கள். இந்தக் கதையை நுணுக்கமாக ஆராய்ந்த பிரெண்டா பெக் என்ற ஆங்கிலேயர், இதை ராமாயணம், மகாபாரதத்துடன் ஒப்பிட்டு, மிக அருமையான 'எதிர் அழகியல் கதை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மாதேஸ்வரன் மலையில் இருந்து விருப்பாச்சி மலைக்குப் பொதி சுமந்தபடி நூற்றுக்கணக்கான கோவேறுக் கழுதைகள் எங்கள் ஊர் வழியாகச் செல்லும். ரயில் பெட்டிகளைப்போல வரிசையாகச் செல்லும் கழுதைகளை வேடிக்கை பார்ப்பது எங்கள் பொழுதுபோக்கு. இன்று ஊரே தலை கீழாக மாறிவிட்டது. கைத்தறி காணாமல் போய்விட்டது. நெசவாளர்கள் பிழைப்புத் தேடி சென்னிமலை, கரூர் பக்கம் சென்றுவிட்டார்கள். தென்னையும் பனையும் உயர்ந்து இருந்த விவசாய நிலங்களில், இன்று இயந்திர மரங்களாக அச்சுறுத்துகின்றன காற்றாலைகள். சமீபத்தில் ஊருக்குப் போனேன். காற்றாலை வேலைக்காக வந்திருந்த பீகார், ஒடிசாக்காரர்களே ஊர் முழுக்க நிறைந்து இருந் தார்கள். ஆம், கொங்கு மண்தானே... வந்தாரை வாழ வைக்கும்!''
சந்திப்பு: கி.ச.திலீபன்,

No comments:

Post a Comment