Tuesday, December 4, 2012

நவீன நாடகங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லைநவீன நாடகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்திருக்கும் கலைஞர் நந்தக்குமார். மதுபானக்கடை படத்தில் பேசப்பட்ட கதாப்பாத்திரமான நாராயண மூர்த்தியாக நடித்தவருமான இவருடன் நாம் மேற்கொண்ட நேர்காணல்
நவீன நாடகத்து மேல உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி?
   சினிமா மேல எனக்கு அளவில்லாத காதல், சினிமாவுல நடிகனாகனும்ங்கிறதுதான் என்னோட ஆசையா இருந்தது.  சினிமாவுல நடிக்கனும்னா நான் இன்னும் கொஞ்சம் நடிப்புல முன்னேறனும்னு தோணுச்சு அப்பத்தான் முருகபூபதி ஐயாவோட ‘‘மணல் மகுடி’’ நாடகக்குழுவில் இணைஞ்சு நவீன நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். நடிப்புங்கிறது உணர்வுப்பூர்வமானதுன்னு அவர்கிட்டத்தான் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் நடிப்புல  பல பரிமாணங்கள் இருக்கிறதை தெரிஞ்சுகிட்டேன். மூன்றாண்டுகளாய் டெல்லி, சென்னை, பெங்களூருன்னு இந்தியாவின் முக்கிய நகரங்களில் மணல் மகுடி நாடகக்குழு நடத்தின நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.
வழக்கமான நாடகங்களிலிருந்து நவீன நாடகங்கள் எப்படி வேறுபட்டிருக்கிறது?
   எந்தத் துறையா இருந்தாலும் காலத்திற்கேற்ப பரிணாம வளர்ச்சி அடையும் அப்படி நாடகக் கலையோட அடுத்த கட்ட வளர்ச்சிதான் இந்த நவீன நாடகம். பொதுவான நாடகங்களில் வசனங்கள் மூலமா சொல்ற விஷயத்தை நவீன நாடகங்கள்ல காட்சிகள் மூலமாவே பார்வையாளர்களை உணர வைக்கிறோம். நவீன நாடகங்கள் என்பது உணர்வு சார்ந்தது, போலீஸ்காரரா நடிக்க காக்கிச்சட்டை தேவையில்லை டாக்டரா நடிக்க ஸ்டெத்தஸ்கோப் தேவையில்லை இது உணர்வின் வெளிப்பாடு. இலக்கிய வாசிப்பு இருக்கிறவங்களால மட்டும்தான் இதைப் புரிஞ்சுக்க முடியும்.
கூத்து, நாடகம் போன்றவற்றின் தொய்வுக்கு சினிமா தந்த தாக்கம்தான் காரணமா?
   கூத்து, நாடகம், சினிமா இந்த மூன்றும் வெவ்வேறு களம். இருந்தும் காலகட்ட வளர்ச்சிதான் ஒவ்வொன்றின் தொய்வுக்கும் காரணமா இருக்கு. தெருக்கூத்து பல புராணக்கதைகளையும் நம் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாய் இருந்தது அது பின்தொட்டு வந்த நாடகத்தின் தாக்கத்தில் கூத்து அழிஞ்சுது, நாடகமும் மக்களின் அன்றைய காலகட்ட வாழ்க்கையை அழுத்தமாய் பதிவு செய்தது ஆனால் அதன் பின் வந்த சினிமாவின் தாக்கத்தில் நாடகம் பார்க்க மக்கள் முன்வரவில்லை.
நவீன நாடகங்கள் வெகுஜன மக்களை சென்றடையலையே?
   நான் முன்ன சொன்ன மாதிரிதான். நவீன நாடகங்களைப் புரிஞ்சுக்க வாசிப்பு பழக்கம் உள்ளவங்களால மட்டும்தான் முடியும். இன்றைக்கு சினிமாவையும், டி.வி மெகாசீரியலை மட்டும் பார்க்குற வெகுஜன மக்களால நவீன நாடகங்களைப் புரிஞ்சுக்க முடியாது. வெகுஜன மக்களுக்கு புரியும்படி அரங்கேற்றனும்னா அது நவீன நாடகமா இருக்காது.
நவீன நாடகக்கலைஞர்களோட வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கு?
   எங்களோட வாழ்க்கைத்தரம் சரிஞ்சுதான் இருக்கு. ஏன்னா நவீன நாடகங்களைப் பார்க்குற ஆட்கள் ரொம்பவும் குறைவு அதனால வருமானம்னு சொல்லிக்க ஒன்னுமில்லை. நாங்கெல்லாம் நடிப்பு மேல் உள்ள ஈடுபாட்டில்தான் நவீன நாடகங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கோமே தவிர இதுல பொருளாதாரத் தேவையை பூர்த்தி செஞ்சுக்க முடியாது. ஒரு உண்மை சொல்லப்போனா நவீன நாடகங்களுக்கு இந்தியாவின் மற்ற சில முக்கிய நகரங்களில் கிடைக்கிற வரவேற்பை விட தமிழ்நாட்டில் வரவேற்பு குறைவுதான்.
நாடகக் கலைஞரா உங்களை மெய்சிலிர்க்க வைத்த அனுபவம் ஏதாவது?
   ‘‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’’ டெல்லியில் இருக்கிற மத்திய கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அகாடமி இது. இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் பல குழுக்கள் வந்து நாடகங்களை அரங்கேற்றுவாங்க. அங்க எங்களோட மணல் மகுடி நாடகக்குழுவும் போய் கலந்துகிட்டு நாடகத்தை அரங்கேற்றினது என்னை மெய்சிலிர்க்க வைத்த அனுபவம். நாடகத்துக்கு இவ்வளவு மரியாதை இருக்குன்னு நான் அங்க போன பின்னாடிதான் தெரிஞ்சுகிட்டேன்.
நவீன நாடகக் கலைஞரான நீங்க மதுப்பானக்கடை சினிமாவில் நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?
   ரெண்டுமே வெவ்வேற அனுபவம் நாடக மேடையில் நின்னு நடிக்கும்போது நேரடியா பார்வையாளர் எங்களை பல பரிமாணங்கள்ல பார்ப்பாங்க ஆனா அதிலிருந்து சினிமா முற்றிலும் மாறுபட்டது. மேடையில் மட்டுமே நடிச்சிட்டிருந்த நான் களத்துல இறங்கி நடிச்சன்னா அது சினிமாவிலதான் சாத்தியமாச்சு. சினிமாவுல நடிக்கும்போது தப்பு பண்ணினா ரீடேக் போலாம் ஆனா நாடகத்துல நடிக்கும்போது அது வாய்ப்பே இல்லை சினிமாவை விட நாடகத்துல ரொம்ப கவனமா நடிக்க வேண்டியிருக்கும்.
                                       செய்தி: கி.ச.திலீபன் நன்றி: கல்கி

No comments:

Post a Comment