Tuesday, December 4, 2012

சாராயம் குடிச்சா சண்டைதான் மிச்சம்!


துக் கடைகள் இல்லாத ஊரையே பார்க்க முடியாது என்று ஆகிவிட்டது. ஆனால், சாமிக்கும் ஊர்க் கட்டுப்பாட்டுக்கும் பயந்து மதுவே அருந்தாமல் இருக்கிறது ஒரு கிராமம். ஈரோடு மாவட்டம், பவானி அருகே இருக்கும் கரட்டூர்தான் அந்தக் கிராமம்.
 இரைச்சல் கூச்சல் எதுவும் இல்லாமல் அமைதியாக வரவேற்றது கிராமம். பெரியாண்டவர் கோயிலில் இளைப்பாறிக்கொண்டு இருந்த செங்கோடன் நம்மிடம்... ''கரட்டூர் கிராமத்தில் பல நூறு குடும்பங்கள் உண்டு. விவசாயமும் கிணறு வெட்டுறதும்தான் முக்கியத் தொழில். வெளியூர், வெளி மாநிலங்களுக்கு எல்லாம் போய் கிணறு வெட்டுவோம்.
உலகத்தில் எங்கே சுத்தினாலும் பங்குனி மாசம் கோயில் திருவிழாவுக்கு, எல்லோரும் ஊருக்கு வந்துடுவோம். கோயில் பண்டிகை களைகட்டும். எல்லா ஊர்லயும் கோயில் திருவிழான்னா... தண்ணி அடிப்பாங்க. தகராறு நடக்கும். ஆனா, எங்க ஊரில் மட்டும் அந்த வேலை கிடையாது. தண்ணி அடிச்சுட்டு வர்ற யாரையும் எங்க கிராமத்துக்குள்ள நுழையவிட மாட்டோம். கிடா வெட்டி, சொந்த பந்தத்தோட சாப்பிட்டு சந்தோஷமா இருப்போம். ஆனா, சரக்கு மட்டும் அடிக்கக் கூடாது. ஏன்னா, அது சாமிக் குத்தம்.
அதுக்குப் பயந்தே எங்களுக்கு அந்த நெனைப்பு வராது. இப்படி திருவிழா நேரத்தில் மட்டும் இல்லை. எப்பவுமே எங்க கிராமத்துக்குள் மது குடிக்கக் கூடாது. . மூணு தலைமுறையா இந்தக் கட்டுப்பாடுதான். எங்க முப்பாட்டன் காலத்திலேயே சாராயம் குடிச்சா சண்டைதான் மிச்சம்னு தெரிஞ்சு, ஊர்க் கூடி எடுத்த முடிவு இது'' என்கிறார் பெருமிதமாக!
  ஆட்டுக்குக் கீரை பறித்துப் போட்டுக் கொண்டு இருந்த ராசம்மாள், தன் பங்குக்கு ஒரு கதை சொன்னார்... ''எல்லாப் பிரச்னையும் இந்த சாராயக் கடையாலதான் வருது. அதுவும் இப்ப கவர்மென்ட்டே சாராயம் விக்குதாம். நாட்டுல குடிகாரங்க அதிகம் ஆகிட்டாங்கனு என் பேரன் பேப்பரைப் படிச்சுக் காட்டுறான். இப்படி இருந்தா, நாடு எப்படி உருப்படும்? கூலி வேலைக்குப் போய் காலையில் இருந்து சாயங்காலமுட்டும் வேலை செஞ்சாத்தான், அம்பதோ நூறோ கிடைக்குது. அதையும் சாராயக் கடைக்கே கொடுத்துட்டு, எத்தனையோ பேரு நடுத் தெருவுல நிக்கறாங்க. நல்லவேளை எங்க ஊருல அந்தப் பாழாப்போன பழக்கம் இல்லை. பொம்பளை ஆளுங்களுக்கும் வேலை மிச்சம்!''

காந்தியடிகள் சொன்ன மது விலக்கை, குக்கிராமத்தில் படிக்காத பாமர மக்கள்கூட பின்பற்றுகின்றனர். ஆனால், இன்று படித்தவர்கள் மத்தியில் சரக்கடிப்பதே ஒரு ஃபேஷன் ஆகிவிட்டதை என்னவென்று சொல்ல?
- கி.ச.திலீபன், படங்கள்:க.தனசேகரன் நன்றி: ஆனந்த விகடன்

No comments:

Post a Comment