Wednesday, December 5, 2012

வனப்பாதுகாப்புச் சட்டங்களால் வதைக்கப்படும் பழங்குடியின மக்கள்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மலையாளி, இருளர், குரும்பர், சோளகர், காட்டு நாய்க்கர், தோடர், கோதர், பளியர், மலசர், மகா மலசர், புலையர், காணிக்காரர் என பல இனங்களாக வாழும் பழங்குடி மக்கள் லட்சக்கணக்கானோர். வனத்தை விட்டொரு உலகத்தை அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். வனம் மற்றும் வனம் சார்ந்த வாழ்வோடு இயற்கை அன்னையின் அரவணைப்பில் இயற்கையின் ருசிகரத்தை உணர்ந்து வருபவர்களும் இவர்கள்தான்.
பல தலைமுறைகள் தொட்டு வனம் மற்றும் வனம் சார்ந்து வாழும் பூர்வகுடிகள் இவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று நேற்றல்ல ஆறாயிரம் ஆண்டுகளாய் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதிற்கான ஆதாரமாய் சில கல்வெட்டுக்கள் உள்ளன‌.
tiger_380உண்ண உணவையும், உடுத்த உடையையும், இருக்க இடத்தையுமேயன்றி பெரிதளவான ஆசைகளற்று வாழ்ந்து வரும் மனித ஜீவன்கள். இவர்கள் இயற்கையின் மதிப்பை உணர்ந்தவர்கள். தனக்கென வேண்டி இயற்கையை சீர்குழைக்க இவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. தனது தேவைக்காக மரம் வெட்ட நேர்ந்தால் கூட சில வகை மரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெட்டுவார்கள். அழியும் தருவாயில் இருக்கும் மரங்களைத் தொடவே மாட்டார்கள். இயற்கையின் மீது இவர்கள் காட்டும் கரிசனம் கொஞ்ச நஞ்சமல்ல!
வனப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்ல வந்த வெள்ளைக்கார கும்பலை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் போராளிகள் இவர்கள்தான். இயற்கையோடு இயைந்து இன்றும் வாழ்ந்து வருபவர்களும், வனத்தையும், வன விலங்குளையும் தங்களது கடவுளாய்ப் போற்றி வணங்குபவர்களும் இவர்கள்தான் என்பதற்கு சிறு உதாரணம் மின்சாரம் தாக்கியோ, நோய்வாய்ப்பட்டோ யானை இறந்து விட்டால் அந்த யானைக்கு சூடம் கொளுத்தி வணங்குபவர்கள் இவர்கள்தான். வனத்தைச் சார்ந்தே வாழ்ந்தும், வனப்பொருள் சேகரத்தின் மூலம் பசியாறியும் இன்றளவும் ஆதிக்க வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி தங்களது உழைப்பு முழுவதும் சுரண்டப்படுவதைக் கூட அறியாது வாழ்ந்து வருபவர்களும் இவர்கள்தான்.
அரசிற்கும் இந்தப் பழங்குடி மக்களுக்கும் நீண்டதொரு இடைவெளி. இதனாலேயோ என்னவோ இவர்களின் ஒடுங்கிய குரல் அரசின் செவிகளுக்கு எட்டுவதே இல்லை. இதற்கு உதாரணமாய் ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர் அருகே மல்லியம்மன் துர்க்கத்தில் சாலை, பஸ், மின்சாரம் என எந்த வசதிகளுமற்று இங்கு வசிக்கும் பழங்குடிகளின் அவலம் சொற்களில் அடங்காதது.
விளாங்கோம்பை வன செட்டில்மென்ட் கிராமத்தின் கதையும் அப்படித்தான். 8 கி.மீ தூரத்திற்கு பஸ் வசதியே கிடையாது. நான்கு காட்டாறுகளைக் கடந்துதான் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டும். காட்டாறுகளைக் கடக்கப் போடப்பட்ட பாலங்களும் போன முறை வந்த வெள்ளத்தில் தடம் தெரியாமல் போய் விட்டது. பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை, அக்கினிபாவி போன்ற கிராமங்களின் நிலை இன்னும் கர்ணகொடூரம். இந்த சாலைகள் தார் காணாத சாலைகள்தான். கல்லும் முள்ளும் நிறைந்து கரடு முரடாய்க் காட்சியளிக்கும். இதே போன்று பழங்குடி கிராமங்களின் கதைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். ஈரோடு மாவட்டத்தில் இப்படியும் சில கிராமங்கள் இருப்பது பலருக்கும் தெரியாது... இந்த மக்களின் அவலக்குரல் நம் நகரத்தின் பேரிரைச்சலால் நமக்குக் கேட்க வாய்ப்பில்லை.
தங்களுக்கான நிலங்களில் தானிய விதைகளைத் தூவி மழைக்காக காத்திருந்து மானாவரியாய் விவசாயம் புரிவது இம்மக்களின் முக்கியத் தொழிலாய் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் வனப்பகுதியில் உள்ள தேன், புளி, கிலாக்காய், நெல்லிக்காய், சீமார்புல் போன்ற வனப்பொருட்களை சேகரித்து விற்பது, ஆடு, மாடு மேய்ப்பது போன்ற தொழில்களின் மூலம் வயிற்றைக்கழுவி வரும் பழங்குடியினர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது.
வனத்துறையும் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இருக்கும் என்.ஜி.ஓ.க்களும் வன விலங்குகளின் அழிவுக்குக் காரணம் இந்தப் பழங்குடி மக்கள்தான் எனும் குற்றச்சாட்டினை முன் வைத்து வனப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்க்கத் தடை விதித்தனர். சூழலியளாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு உண்மையில் சூழலியல் போராளிகள் பழங்குடி மக்களே எனும் கூற்று தெரியாமல் போனது ஏனோ? வனத்தைப் பற்றிய தெளிந்த சிந்தனை கொண்டு வனத்தை தன் தாயாக வணங்கும் இவர்களால் வனம் அழிகிறது என்பது இட்டுக்கட்டிவிடப்பட்ட பொய்.
டபிள்யூ.டபிள்யூ.எஃப் போன்ற நிறுவனங்கள் இங்கு சுற்றுச்சூழல் சீர்கெட்டுள்ளது என்பதாக‌ சித்தரித்து வெளிநாடுகளிலிருந்து பணம் பெற வேண்டி பழங்குடி மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதி வற்றாத ஜீவ நதிகளான பவானியாறு, மோயாற்றின் நீரால் செழுமைமிக்க வனப்பகுதியாய் விளங்கி வன விலங்குகளின் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல் வேறு வனப்பகுதிகளில் கிடைக்காத அரிய வகை தாவர வகைகளின் புகலிடமாய் விளங்குகிறது. உணவுச் சுழற்சிப்படி புலிகள் வாழும் காட்டுப் பகுதி என்றால் அது செழிப்புடைய காட்டுப்பகுதி என்பது பொருள். செழிப்பு மிகுந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் எடுத்திட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான முன்மொழிவு தற்போது அனுப்பப்பட்டிருக்கிறது. இதன் காரணமாய் சத்தியமங்கலம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடி கிரமங்களில் இருந்து தற்போது புலிகள் சரணாலயம் அமைக்கப் போவதாய் பழங்குடி மக்களை வெளியேற்றும் படலமும் மும்மரமாய் நடந்து வருகிறது. சத்தியமங்கலம் பகுதி மட்டுமில்லாமல் கூடலூர் பகுதியிலும் இதே நிலைதான்.
காலங்காலமாய் வாழ்ந்து வரும் இந்தப் பூர்வகுடிகளுக்கு காடுகள்தான் உலகம் என்பதை விட இவர்களது உரிமை என்றே சொல்ல வேண்டும். காடுகளை விடுத்து வேறொன்றை இவர்களால் நினைத்தும் கூடப் பார்க்க முடியாது. காடுகளிலேயே தனது வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்ட மக்களை திடீரென்று வெளியேறச் சொன்னால்..?
combing_operation_380வனத்தைப் பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அரசின் எண்ணம் வரவேற்கத்தக்கதுதான். அதற்காக பழங்குடி மக்களை வெளியேற்றும் நிகழ்வு கண்டிக்கத் தக்கது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 'கூட்டு வள மேலாண்மை' என்கிற பெயரில் பழங்குடி மக்கள் ஒத்துழைப்போடு வனத்தைப் பாதுகாத்தல் என்ற திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. வனத்தை பாதுகாக்க பழங்குடி மக்கள் தேவை என்பதை அரசு அன்றே உணர்ந்திருந்த போதிலும் ஏன் இந்த அதிரடி..?
உலக மயமாக்கலின் விளைவுதான் இந்த அதிரடிக்கு காரணம். அந்நியக் கம்பெனிகளுக்கு வனத்தை அரசு தாரை வார்த்துக் கொடுக்கிறது. அதற்கு குறுக்கே நிற்கும் பழங்குடியின மக்களை வெளியேற்றுவதுதான் இதன் நோக்கம் என்பது தெள்ளத்தெளிவாய்த் தெரிகிறது. தற்போது புலிகள் சரணாலயம் அமைப்பதற்காக‌ மக்கள் வெளியேற்றப் படுவது போலத்தான் நர்மதா அணைக்கட்டுத்திட்டத்தில் அங்கிருந்த பழங்குடி மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பீகார், ஒரிஸா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் இருந்த பழங்குடி மக்கள் துரத்தப்பட்டு, அந்த வனப்பகுதிகள் அந்நிய நாட்டுக் நிறுவனங்க‌ளுக்குத் தாரை வார்க்கப்பட்டது. வனத்திலுள்ள கனிம வளங்களை அந்நியக் நிறுவனங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்த பழங்குடி மக்கள் இன்று மாவோயிஸ்டுகளுடன் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் வனப்பகுதி ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவுடையது. ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் 2008ம் ஆண்டு வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு விட்டது. வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட போதே மக்கள் பல இன்னல்களையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிட்டதை இங்கு குறிப்பிட்டே தீர வேண்டும். ஆடு, மாடு மேய்க்க, விறகு பொறுக்கச் செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சார இணைப்பு தர மின்வாரியம் முன் வந்தாலும் வனத்துறை குறுக்கே நிற்கிறது. அதே போலத்தான் சாலைகள் போட்டுத்தர நெடுஞ்சாலைத்துறை முன் வந்தபோதிலும் வனத்துறை அனுமதிக்கவில்லை. தற்போது புலிகள் சரணாலயமாக அறிவித்து விட்டால் பழங்குடி மக்கள் மீதான வன்முறை இன்னும் அதிகமாகும் என்பதே இப்பழங்குடி மக்களின் அச்சம்.
சூழலியளாளர்களே! வனத்துறையினரே! வனத்தின் மீதும் வன விலங்குகள் மீதும் நீங்கள் காட்டும் கரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது ஆனால் வனத்தில் அதையும் தாண்டி பேராசைப் பசிக்கு இரையாகாத மானுடர்கள் பசியோடு வாழ்கிறார்கள் என்பதை மட்டும் சற்றே கவனத்தில் கொள்ளுங்கள்!
வனப்பாதுகாப்புச் சட்டங்கள் என்கிற பெயரில் வனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஒடுக்கப்படுவதை அடியோடு கைவிடுங்கள். இல்லையேல் வாழ்வதற்காய் உங்களிடம் கையேந்தும் இவர்கள் நாளைக்கே போராளிகளாய் ஆயுதம் ஏந்தும் நிலை நிச்சயம் வரும்.
                       கட்டுரை-கி.ச.திலீபன் நன்றி: கீற்று வலைத்தளம்

2 comments:

  1. வனத்துறையில் ஆடு மேய்க்க உரிமை உள்ளதா. இல்லையா சொல்லுங்க,,,

    ReplyDelete
  2. வனத்துறையில் ஆடு மேய்க்க உரிமை உள்ளதா. இல்லையா சொல்லுங்க,,,

    ReplyDelete