''ஈரோடு மாவட்டத்தில் நத்தக்காடையூர் - முத்தூருக்கு இடையில் இருக்கிற ஊர்தான் புதுவெங்கரையாம்பாளையம். நொய்யல் ஆற்றின் கரையில் இருக்கும் ஊர். இன்றுவரை பெரிய அளவில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமம். எங்க ஊரைப் பற்றி சுருக்கமா சொல்லணும்னா... அது வாழ்ந்து கெட்ட ஊர்!


நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஜெயகாந்தனுடைய கதைகளை படிக்க ஆரம்பிச்சேன். அந்தத் தாக்கம்தான் என்னை ஓர் எழுத்தாளனாக உருவாக்கி இருக்கு. என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளன் அவனுடைய வாழ்க்கையில் பார்த்த, உணர்ந்த, யதார்த்த நிகழ்வுகளை கதை ஆக்கினாலே வாழ்நாள் முழுதும் எழுதிக்கிட்டே இருக்கலாம். என் கதைகளும் அப்படித்தான். நான் கண்ட வாழ்க்கையைத்தான் எழுத்தாக்கி வருகிறேன்.
எங்க ஊரில் தேவநாத்தா கோயிலும் பொட்டுச்சாமி கோயிலும் ரொம்பப் பிரசித்தம். ரெண்டு கோயிலும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்குது. அந்தக் கோயில் திருவிழா எப்படா வரும்னு காத்து இருப்போம். விழா வந்துட்டா கிடா வெட்டி ஊரே ஆத்தங்கரையில் உட்கார்ந்து சாப்பிடும். அப்ப உடுக்கை அடிப் பாட்டுக்காரர்கள் வருவாங்க. அந்த 10 நாட்களும் நல்லதங்காள், பொன்னர் - சங்கர் கதைகளை உடுக்கை அடிச்சுக்கிட்டே பாடுவாங்க. அதைக் கேட்கக் கேட்க மனக் கண்ணில் காட்சிகள் விரியும். கற்பனை பெருகும். எங்கோ வேறு ஓர் உலகத்துக்குப் போனது மாதிரி இருக்கும்.
இப்படி நொய்யலைச் சுத்திதான் எங்க வாழ்க்கை இருந்தது. ஆனா, இன்னிக்கு எங்க நொய்யல் செத்துப் போச்சு. எங்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த நொய்யலை இன்னிக்கு வெறுத்து ஒதுக்க வேண்டிய சூழல். பக்கத்தில் போனாலே துர்நாற்றம் அடிக்குது. நான் நொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு. விவசாய பூமி எல்லாம் பொட்டல் காடா மாறிடுச்சு. அதனால்தான் சொன்னேன், எங்க ஊர் வாழ்ந்து கெட்ட ஊர்னு!
- சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன் நன்றி:ஆனந்த விகடன்
No comments:
Post a Comment