Monday, September 24, 2012

பணியர்களுடன் ஒரு நாள்


‘‘பழங்குடிகளிலேயே பண்டையப் பழங்குடிகள்னு ஒரு பிரிவு இருக்கு இந்த பண்டையப் பழங்குடிகள் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து இந்தியாவுலதான் அதிகமா இருக்காங்க. இந்தியாவில் மொத்தம் 75வகையான பண்டையப் பழங்குடிகள் இருக்காங்க. தமிழகத்தில் தோடர், குறும்பர், இருளர், கோத்தர், காட்டுநாயக்கர், பணியர்னு மொத்தம் ஆறு வகையான பண்டையப் பழங்குடிகள் இருக்காங்க. இந்தப் பண்டையப் பழங்குடிகளில் பணியர் இன மக்கள் இந்தியாவிலேயே கூடலூர், வயநாடு பகுதிகளில்தான் காணப்படுறாங்க’’ என்கிறார் இப்பகுதியில் பழங்குடி மக்களுக்கான சேவைகளைப் பல ஆண்டுகளாக செய்து வரும் சி.டி.ஆர்.டி அறக்கட்டளையின் தலைவர் ரங்கநாதன்.
 நாகரிக வளர்ச்சி தலைத்தோங்கி விட்ட இக்காலத்திலும் மிகவும் பின் தங்கிக் காணப்படும் பணியர் இன மக்களுடன் ஒரு நாள் கழித்து அவர்களது வாழ்க்கையைப் பதியலாம் என்கிற எண்ணத்தில் நாம் இவரைத் தொடர்பு கொண்ட போது பணியர்கள் குறித்து இவர் சொன்ன தகவல் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது.
‘‘பணியர்களின் முகபாவணையும் கலாச்சாரமும் ஆப்பிரிக்க பழங்குடிகளைப் போலவே இருப்பதால் இவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகளின் வழித்தோன்றல் எனக் கருதப்படுகிறது ஆனால் இது ஆதாரப்பூர்வமாய் நிருபிக்கப்படவில்லை. நாகரிகத்தில் பெரிதளவில் முன்னேற்றம் காணாதவர்களாய் இருக்கும் இந்தப் பணியர் இன மக்களின் வாழ்க்கைத்தரம் சரிந்தே காணப்படுகிறது’’ என்றவர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காவுக்குட்பட்ட கொட்டாடு கிராமத்தில் வசிக்கும் பணியர் மக்களின் குடியிருப்புக்கு நம்மை கூட்டிச்சென்றார்.
கூடலூரிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பின் நாம் கொலப்பள்ளியை வந்தடைந்தோம். கொலப்பள்ளியிலிர்ந்து கொட்டாடு செல்ல பேருந்து கிடையாது ஒரு மணி நேரத்திற்கொரு முறை பாட்ட வயல் போய் வரும் ஜீப்பில்தான் பயணித்து பாட்ட வயல் வந்தடைந்தோம். பாட்ட வயலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்தே கொட்டாடு சென்றோம். கொட்டாடு தமிழக&கேரள எல்லைப்பகுதி என்பதால் நாயர் சாயக்கடைகளையும், சேட்டன், சேச்சிகளையும் அதிகம் காண நேர்ந்தது. இந்த பணியர் குடியிருப்பின் நுழைவில் நாம் நுழைந்தோம். மூன்று சக்கர வண்டியில் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் நம்மைக்கண்டதும் நாலாப்புறம் தெறித்து ஓடினார்கள். பணியர் இன மக்கள் வெளி மனிதர்களைக் கண்டால் நெருங்கிப் பழக மாட்டார்கள் பயம் கலந்த கூச்சத்தோடுதான் நம்மிடம் பேசுவார்களாம். இந்தக் குடியிருப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மொத்தம் 25வீடுகள் இருந்தன. இவர்களின் வீடுகள் செம்மண்னால் கட்டப்பட்டு, மேற்கூரை மூங்கில்களிலும், கோரப்புற்களிலும் வேயப்பட்டிருந்தது. இந்த கூரை வீடுகள் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவாறு மாறிக்கொள்வபவை. வெயில் கொளுத்தும் காலத்தில் இந்த கூரை வீடு குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும், என்பது அறிவியல் விநோதம். இந்த மக்களின் முக்கியத்தொழில் கூலித்தொழில்தான் தேயிலை, வாழை, இஞ்சி, காபி, பாக்குத் தோட்டங்களுக்கு தினக்கூலிக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் கூலி 250&350வரையிலும் கிடைக்கிறது ஆனால் இந்த வேலை இவர்களுக்கு நிரந்தரமல்ல தோட்டத்து உரிமையாளர்கள் ஆட்கள் பற்றாக்குறையிருக்கும் போது மட்டும் இவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதால் பல நாட்கள் வேலை இல்லாமல்தான் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிர்காலம் குறித்தான எந்தவித பயமும் இல்லை. இவர்களைப் பொறுத்த வரை இன்றைக்கு என்பதுதான் நிஜம் நாளை என்பதைப் பற்றிய சிந்தனையே கிடையாது.
   பணியர் மக்கள் என்பவர்கள் முன்பு மவுண்டாடன் செட்டி என்ற பிரிவு மக்களிடம் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர். நாள் முழுக்க தோட்டத்தில் வேலை வாங்கிக் கொண்டு கூலி ஏதும் தராமல் கூலியாய் நெல்லைத் தருவார்களாம் அந்த நெல்லை உடைத்து அரிசியாக்கி கஞ்சி வைத்துக் குடிப்பார்களாம். இப்படியாக பணியர் இனம் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டிருந்ததாம் தற்போதுதான் இந்த மக்கள் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் வாழ்கின்றனர். இவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது ரேஷன் அரிசிதான். ரேஷன் அரிசியில் சோறு கடைந்து விடுகிறார்கள், இதற்கு சீனி மிளகாய் என்று சொல்லக்கூடிய சிறிய வகை பச்சை மிளகாயை உப்புடன் சேர்த்து அரைத்து சாப்பிடுகிறார்கள்.
இப்பகுதியில் வசிக்கும் குருக்கன்: ‘‘நாங்க வாழுறது தமிழ்நாடா இருந்தாலும் எங்க கலாச்சாரம் கேரளக் கலாச்சாரத்தை ஒத்திருக்கும். சித்திரைக்கனியை கேரள மக்கள் விசுங்கற பண்டிகையா கொண்டாடுறாங்க. கேரள மக்கள் கொண்டாடுற விசு, ஓணம் பண்டிகைகள்தான் எங்களுடைய பண்டிகையும் இந்தப் பண்டிகையப்ப புதுத்துணி போட்டுக்குவோம் வெளியூர்லருந்து உறவுக்காரங்க நிறைய பேர் வருவாங்க ஊரே விழாக்கோலமாய் இருக்கும். எங்க குல தெய்வம் பகவதிதான் சித்திரை மாசம் நடக்குற பகவதி அம்மன் கோவில் திருவிழா ரொம்ப சிறப்பா இருக்கும்’’ என்றார்.
   இந்த மக்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கும், மருத்துவமனைக்கும் போனதே இல்லை. வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்கிறார்கள் எல்லாமே சுகப்பிரசவம். இப்போதுதான் முதல் தலைமுறையாக இவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். கொட்டாடு கிராமத்தை அடுத்துள்ள பந்தக்காப்பு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் இங்குள்ள இருபது குழந்தைகள் பயில்கிறார்கள். தங்களது பெற்றோர்களுக்கு கையெழுத்துப் போடக் கற்றுக் கொடுப்பவர்களும் இவர்களே.
   இந்த மக்களின் ஆடைக்கலாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இவர்கள் வெள்ளை வேட்டியை மார்பளவு கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு கறுப்புத் துண்டை கட்டிக் கொள்கின்றனர். இவர்களின் அணிகலன்கள் ஆடம்பரமில்லாதது. கைதா புல் என்றழைக்கப்படும் ஒரு வகை புல்லை சுருளாய் சுருட்டி தங்களது காதுகளின் பெருந்த்த ஓட்டைக்குள் செருகிக் கொள்கின்றனர். ஏதாவது விசேஷங்களுக்கு செல்லும்போது காதில் உள்ள சுருள்களில் சிவப்பு பாசிக்கற்களை பதித்து விட்டுப் போட்டுச் செல்கிறார்கள். காசுமாலையை தங்களது கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். இப்படியாக இவர்கள் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
வெளியூர் விசேஷத்திற்கு சென்று விட்டு வந்திருந்த மூதாட்டி செல்லி நம்மிடம்: ‘‘எங்க மக்களைப் பொறுத்த வரைக்கும் ஒரு பொண்ணும் பையனும் காதலிச்சாங்கன்னா மறுப்பே சொல்லாம சேர்த்து வெச்சிடுவோம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு வீட்டுக்கு போய் நிச்சயம் பண்ணுவோம். கல்யாணத்தை பொண்ணு வீட்டுலதான் நடத்துவோம் வெத்தலை வடிவிலான தங்கத்துல தாலி செய்வோம் இல்லைன்னா காசு மாலையையே தாலியாக் கட்டிக்குவோம் ஒவ்வொருத்தங்க வசதியைப் பொறுத்தது. எங்க மக்கள் யாருமே விவாகரத்து பண்ணிக்கிட்டதில்லை ஏன்னா கணவன் மனைவிக்குள்ள அத்தனை அன்னோன்யம் இருக்கும்’’ இருக்கும்.
   இந்த மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது வெற்றிலை பாக்கு. வெற்றிலை பாக்கு போட்டு மெல்வது இம்மக்களின் வாடிக்கை இதை இவர்களது குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து விடுகின்றனர். இதனாலேயே இவர்களது பற்கள் கரை படிந்து காணப்படுகிறது.
இம்மக்களோடு நாம் கழித்த ஒரு நாள் பொழுது நமக்கு பல அனுபவத்தைக் கொடுத்தது. நாகரிக, விஞ்ஞான வளர்ச்சியில் பல படிகள் முன்னேறி விட்ட மனித இனத்தில் இப்படியும் ஒரு மக்களை பார்க்கும் போது நமக்கு வருத்தம் கலந்த வியப்பு ஏற்பட்டது. எழில் கொஞ்சும் இந்தக் குளிர்ப் பிரதேசத்தை விட்டு பிரிய மனமின்றி பிரிந்து வந்தோம்.
                                                                   செய்தி, படங்கள்: கி.ச.திலீபன்  நன்றி: கல்கி

No comments:

Post a Comment