Friday, September 21, 2012

வயிற்றுக்காக கயிற்றில் ஆடினோம்
‘‘வயித்துக்காக மனுஷன் இங்க கயித்துல ஆடுறான் பாரு
அவன் ஆடிமுடிச்சு இறங்கினா அப்புறந்தான்டா சோறு’’ தெருவோர கூத்து கலைஞர்களின் அவல நிலையை எடுத்துரைத்து எம்.ஜி.ஆர் பாடிய பாடல் இது. ஒவ்வொரு ஊர்களிலும், திருவிழாக்களிலும் இரண்டு மூங்கில் குச்சிகளை நட்டி அதில் கயிற்றைக்கட்டி விட்டு அதில் நடந்தும் மேலும் சில வித்தைகளை கயிற்றில் நின்ற படியே செய்து காட்டி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியும் பார்க்கிறவர்கள் மனம் உவந்து போடுகிற சில்லரைக் காசுகளைக் கொண்டு வயிற்றை நிரப்பும் தெருக்கூத்து கலைஞர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அதைப்போலத்தான் கயிற்றின் மேல் வித்தைகளை செய்து காட்டும்போது அவர்களின் உயிருக்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை. சினிமா, டி.வி சீரியல்களின் பால் ஈர்க்கப்பட்ட மக்கள் தெருவோரக் கூத்து, பாவணை ஆட்டம் பார்ப்பதெற்கெல்லாம் முன்வருவதில்லை முன்பிருந்த அளவுக்கு இந்த கூத்தில் வருமானம் இல்லாத காரணத்தினாலும் நாடோடி வாழ்வைத் தவிர்த்து தம் குழந்தைகளைப் படிக்க வைத்து நிலையான வாழ்வு வாழ வேண்டும் என்கிற ஆசையோடும் இந்தக்கலைஞர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கங்கையம்மன் நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன் நகர் என மூன்று குடியிருப்புகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடன் நாம் கழித்த ஒரு நாள் பொழுது மிகவும் ஸ்வாரஸ்யமானது.
   நிலையாகத் தங்கி வாழ்கிற போதும் இவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்த பாடில்லை. அன்றாட சோற்றுக்கு மாறடிக்கும் அன்றாடங்காய்ச்சிகளாய்த்தான் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள், அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாத குடியிருப்புகள்தான் இவைகள். பெரும்பாலும் ஓலைக்குடிசை வீடுகள்தான், ஏதோ சில வீடுகள் மட்டும் ஹாலோ பிளாக் கற்களைத் தாங்கி நிற்கிறது. கூத்துக்குத் தேவையானவற்றைக் கொண்டு செல்வதற்கு இவர்கள் பயன்படுத்திய வண்டிகள் துருப்பேறியபடி நின்று கொண்டிருந்தது. ஒவ்வொருவர் வீட்டிலும் டிவியும், டி.டி.ஹெச்சும் தவறவில்லை. இப்படியான புறச்சூழலோடு வாழும் இம்மக்களின் காலைப் பொழுது பரபரப்பாகக் காணப்பட்டது. தென்னை மட்டைகளால் வெந்நீர் காய வைக்கும் பெண்கள், பள்ளி செல்ல ஆயத்தமாகும் மாணவப் பிஞ்சுகள், கூலி வேலைக்குப் புறப்படுபவர்களுமாக இருந்த கலைக்கூத்து நகரில் பழைய இரும்பு சாமான்களை வைத்து எலிப் பொறி செய்து கொண்டிருந்த ராஜூவிடம் நாம் பேசியபோது: ‘‘நாடோடி வாழ்க்கையில என்ன சுகத்தைக்கண்டோம். தலைமுறை தலைமுறையா எங்க குலத்தொழில்னு நாங்களும் தெருக்கூத்து நடத்திக்கிட்டு இருந்தோம் முன்ன மாதிரி இதப்பாக்கவும் ஆளில்லை பாக்கிறவங்களுக்கு வாரி வழங்குற மனசும் இல்லை. கயித்து மேல நடக்கிறது, ரிம் மேல கால் வெச்சு நடக்குறது குதிக்குறதுன்னு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாம பண்ணிக்கிட்டிருந்தோம் கொஞ்சம் அசந்தாக்கூட அவ்வளவுதானுங்க, அப்படி பண்ணாலும் வயிறு நம்பின பாடில்லை. நாங்கதான் படிக்காம போயிட்டோம் இனி எங்க குழந்தைகளாச்சும் படிக்கட்டுமேன்னு நினைச்சுத்தான் நிலையா வாழலாம்னு வந்தோம், நாடோடி வாழ்க்கையை விட இந்த வாழ்க்கை நல்லா இருக்கு முன்ன விட நாங்கெல்லாம் இப்பத்தான் நல்லா இருக்கோம் என்று புன்னகை ததும்ப சொன்ன ராஜு மேற்கொண்டு பேசினார்: எந்த ஒரு தொழிலுக்கும் முதலீடு தேவை ஆனா தெருக்கூத்தைப் பொறுத்த வரை எங்க திறமையும், பயிற்சியும்தான் முதலீடு. உசுரைப் பணயம் வச்சுப் பண்ணினாலும் அங்க கூடியிருக்கிற மக்களோட கைதட்டல்களும், உற்சாகமும்தான் எங்களை மேலும் மேலும் பண்ண வெச்சது. என்னதான் இருந்தாலும் அது எங்க குலத்தொழில் அதை விட்டுட்டு வந்ததை நினைச்சு சில சமயங்கள்ல ரொம்ப கஷ்டமா இருக்கும், ஆனா என்ன பண்றதுன்னு மனசைத் தேத்திக்குவோம். இங்க உள்ள மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குத்தான் போறாங்க, அது போக கீற்று பின்னுறது, பழைய இரும்பு வியாபாரம், மீன் வியாபாரம்னு செஞ்சுகிட்டிருக்கோம். கீற்று 3அடி 2ரூபாய்க்கும், 6அடி 4ரூபாய்க்கும் விக்குது. கட்டட வேலைகளுக்குப் போற ஆண்களுக்கு 200ரூபாயும், பெண்களுக்கு 100ரூபாயும் கூலி தர்றாங்க, குறைவான கூலியாய் இருந்தாலும் போய்த்தான ஆகணும். எங்க குழந்தைங்க இப்ப மானாமதுரையில இருக்கிற சி.எஸ்.ஐ ஸ்கூல்ல படிக்கிறாங்க, அவ்வளவுதான்’’ என்றார்.
இருபது ஆண்டுகளாக இந்தக் குடியிருப்புகளில் கூத்துக் கலைஞர்கள் வசித்து வருகின்றனர். மானாமதுரையில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது அங்குள்ள வீடியோகான் தொழிற்சாலைக்கு இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூலிக்குச் செல்கின்றனர். மேலும் பஞ்சு மில்களுக்கும் தினம் 150ரூபாய் கூலிக்குச் செல்கின்றனர். இங்குள்ள மக்களுக்கென உள்ள ஒரு அங்கீகாரம் என்றால் இவர்களுக்கு ரேஷன் கார்டு இருக்கிறது. இப்பகுதிக்கு அருகாமையில் உள்ள ஒடகலத்தில்தான் ரேஷன் கடை. ஏதோ ரேஷன் பொருட்கள் தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்து வருவதாய் ஆறுதலடைகின்றனர். இந்த மக்களைப் பொறுத்த வரை இவர்களுக்கென பெரிய எதிர்பார்ப்புகளோ, ஆசைகளோ இல்லை. அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்து கொண்டாலே போதும் என்பதுதான் இவர்களின் மனநிலை.
மாரியம்மன் நகரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் ராஜ்குமார்: ‘‘இங்குள்ளவங்கள்ல இன்னும் சிலர் மட்டும் இதே தெருக்கூத்துக்கு இப்பவும் போய்க்கிட்டிருக்காங்க. அவங்களால இன்னும் அந்தத் தொழிலை விட முடியலை ஆனா நாங்க விட்டுட்டோம் ஆனா இங்க இருக்கிற நிலைமையைப் பார்த்தா மீண்டும் தெருக்கூத்துக்கே போயிடலாமோன்னு தோணுதுங்க. வேறென்ன பண்ணுறது. எந்த வேலையும் நிரந்தரமாக் கிடைக்க மாட்டிங்குது கிடைக்கிற வேலைக்கும் கூலி நியாயமா கிடைக்கிறதில்லை. வாழுற பகுதியில அடிப்படை வசதிகள் வேண்டி நடையா நடக்க வேண்டியிருக்கு. கூத்துக்கு போய்க்கிட்டிருக்கவங்க எல்லாரும் திரும்ப வந்துருங்கன்னு எங்களைக் கூப்பிடுறாங்க’’ என்று தம் குறைகளை தடாலடியாய்க் கொட்டித்தீர்த்து விட்டு மேற்கொண்டு விரிவாகப் பேசினார். ‘‘தலைமுறை தலைமுறையா இந்தத் தொழிலைத்தான் செஞ்சுட்டு வந்ததால எங்க யாருக்கும் படிப்பறிவு கிடையாது. ஊர் உலகத்துல அத்தனை சமூகமும் படிக்குது எங்க சமூகம் மட்டும் ஏன் படிச்சு அரசாங்க வேலைக்குப் போகக்கூடாது? இந்த ஆதங்கத்தோடதான் கூத்தையே தலை முழுகிட்டு இங்கிருக்கோம் ஆனா எங்க குழந்தைங்கள பத்தாவதுக்கும் மேல படிக்க வைக்க முடியலை. பதினொன்னாவது சேர்த்தனும்னா சாதிச்சான்றிதழ் வேணும்ங்கிறாங்க. ஒரு உண்மைய சொல்லப்போனா நாங்க என்ன ஜாதின்னு எங்களுக்கேத் தெரியாது பின்ன எப்படி சாதிச்சான்றிதழ் வாங்குறது. மானாமதுரை தாசில்தார் ஆபிஸ் போய் சாதிச்சான்று கேட்டா கூத்தாடிகள் என்ன சாதியோ அந்த சாதின்னு சொன்னாலும் ஏத்துக்க மாட்டிங்குறாங்க, வேற எப்படித்தான் சாதி சான்றிதழ் வாங்குறது. இதனால பத்தாம் வகுப்புல 400க்கும் மேல மார்க் வாங்கின குழந்தைங்க கூட பதினொன்னாம் வகுப்பு போகாம இருக்காங்க இதுக்கு ஒரு தீர்வே இல்லையா? இங்க இருந்து மானாமதுரை போறதுக்கான மண்சாலையெல்லாம் குண்டும் குழியுமா இருக்கும் மழைக்காலங்கள்ல தண்ணி தேங்கி நின்னுச்சுன்னா சேறு சகதிகள்ல புரண்டு போக வேண்டியதுதான்’’ என்று தன் ஆதங்கத்தை கொட்டிய ராஜ்குமார் மேலும் இங்குள்ள கூத்தாடிகளின் வாழ்வியலைப் பற்றிப் பேசத்துவங்கினார்: ‘‘இங்க இருக்கிற மாரியம்மன் கோவில்ல ஆண்டுக்கொருமுறை சித்திரை மாசம் திருவிழா நடக்கும் இந்தத் திருவிழா எங்க சமூக மக்களுக்குள் வெகு பிரசித்தம். கூத்தாடப் போனவங்க எங்க போயிருந்தாலும் சித்திரை மாசம் கரெக்டா திருவிழாவுக்கு வந்துடுவாங்க. அந்த சமயங்கள்ல மூன்று குடியிருப்புகளும் விழாக்கோலம் பூண்டிருக்கும். வேற மாவட்டங்கள்ல இருக்கிற எங்க உறவுக்காரங்க கூட வந்துடுவாங்க. அந்த நோம்பிக்காகத்தான் வருஷா வருஷம் காத்துக்கிடப்போம் ஏன்னா எங்களுக்குன்னு இருக்கிற கொண்டாட்டம் அது ஒன்னுதான்.
நிலையாகத் தங்கி வாழ்ந்து விடுகிற முடிவெடுத்த பின் இவர்கள் கூத்துப் போடப் பயன்படும் உபகரணங்களான இவர்களது வாகனம், சவுண்ட் சிஸ்டம் என பலவற்றையும் கிடைத்த விலைக்கு விற்று விட்டனர் இதனால் இவர்களால் நினைத்தாலும் கூட திரும்ப தெருக்கூத்துக்கு போக முடியாத அவலம். வறுமையின் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் இம்மக்கள் நிலையாகத் தங்கி வாழ்ந்து வந்தாலும் இவர்களது வாழ்க்கையோ நிலை கொள்ளாமல் தத்தளிப்பதை நம்மால் உணர முடிந்தது. நாடோடிகளாகவே வாழ்ந்து பழகிப்போன இந்த கூத்தாடிகளால் இயல்பான மனித வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டதில் முன்பை விட வாழ்வியல் சூழ்நிலையில் மாற்றம் தெரிகிறதோ தவிர இவர்களது வாழ்க்கைத்தரம்தான் உயரவில்லை.
                                                                     - கி.ச.திலீபன் நன்றி: கல்கி

No comments:

Post a Comment