Tuesday, August 7, 2012

இவர்களுடன் நாம்

விளாங்கோம்பை மக்களுடன் நான்வனத்தை நேசித்து வனத்தையும் வன விலங்குகளையும் கடவுளாய் வழிபட்டு இன்னமும் இயற்கையுடன் இயைந்து வாழும் மனிதர்கள் என்றால் அவர்கள்தான் பழங்குடி மக்கள். அடிப்படையான வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல் வனப்பாதுகாப்புச் சட்டங்களால் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு நிர்க்கதியாக்கப்படுபவர்கள். பழங்குடி மக்கள் பிரச்சனைகளுக்கென்றே தனியாக ஒரு முறை சட்ட சபை கூட்ட வேண்டும் என்கிற அளவுக்கான பல பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு நிற்கும் இம்மக்களின் வாழ்வுதனை பதிய வேண்டும் என நினைத்ததும் நான் தேர்ந்தெடுத்த ஊர் விளாங்கோம்பை. ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட வன செட்டில் மென்ட் கிராமம் இது. யானைகள் அதிகம் வாழும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே மலைகள் சூழ்ந்து அழகுறக் காட்சி தரும் இந்த ஊருக்கு செல்ல ஆயத்தமானேன். விளாங்கோம்பைக்குச் செல்லும் வழியில்தான் குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு உள்ளது. தினமும் காலையும் மாலையும் இந்த அணையில் தண்ணீர் குடிப்பதற்காக நாம் செல்லும் சாலையை யானைகள் கடப்பது வாடிக்கை என்பதால் காலை பத்து மணிக்கு மேல்தான் எனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டேன். அந்த வழி பார்ப்பவர்களை அச்சுறுத்தும், நாம் செல்கிற சாலையைத்தவிர சுற்றெங்கிலும் காட்டுப்பகுதி. ஒரு மனிதத் தலைகளைக்கூடப் பார்க்க முடியவில்லை. வழியெங்கும் யானை லத்திகள்(யானை சாணம்) ஈரப்பதமாய் இருந்தது. உண்மையில் மனம் திக்..திக் என்று அடித்துக்கொண்டது இருந்தும் மன்தை வலுவாக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன் விளாங்கோம்பைக்குப் போகிற வழியே நான்கு காட்டாறுகள் பாய்கின்றன. அந்தக் காட்டாறுகளை கடப்பதற்காக போடப்பட்டிருந்த பாலங்கள் கடந்த ஆண்டு வந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதாம். அந்த நான்கு காட்டாறுகளையும் சிரமப்பட்டுக் கடந்து ஒரு வழியாய் விளாங்கோம்பை வந்து சேர்ந்தேன். 47வீடுகளில் 200க்கும் குறைவான மக்கள்தான் வாழ்கிறார்கள். ஒவ்வொரு வீடுகளும் குனிந்து செல்ல வேண்டிய கட்டாயதில் குறுகிக் கிடக்கிறது. இரொண்டொரு வீடுகள்தான் ஆஸ்பொட்டாஷ் ஸீட் போட்ட வீடுகள் மீதியெங்கும் கூரை வீடுகள்தான். நான் வந்து சேர்ந்த நேரத்தில் ஊரே நிசப்தமாய் இருந்தது. பெரும்பாலானோர் ஆடு,மாடு மேய்க்க, கிலாக்காய் பொறுக்க, புளியங்காய் பொறுக்க, தேன் எடுக்கச் சென்றிருந்தனர். புது நபரின் வருகையைக் கண்டு ஆங்காங்கே நாய்கள் குழைத்தன. ஊரின் மத்தியில் உள்ள கோயிலில் படுத்திருந்த பெரியவர் என்னைக் கண்டதும் எழுந்து கொண்டு என்னைப்பற்றி விசாரித்தார் அவர் பெயர் சடையன். மேலும் அவரிடம் பேச்சுக்கொடுத்த போது அவர்தம் பிரச்சனைகளைக் கொட்டத் தொடங்கினார். ‘‘இந்த ஊரு இன்னைக்கு நேத்தைக்கு உண்டானதில்ல பாண்டியன் காலத்தில இருந்து இருக்குது. பல தலைக்கட்டா நாங்க இங்க வாழ்ந்துட்டு இருக்கோம் ஆனா சரணாலயம் அமைக்குறோம் அது இதுன்னு எங்களை வெளியேத்தப்பாக்குறாங்க. இத்தனை வருஷமா வாழ்ந்துட்டு இருக்கிற எங்களுக்கு பட்டா கூட கிடையாது. எத்தனை தரம்தா நாங்களும் கலெக்டரு ஆபிஸ் ஏறி மனு கொடுக்கிறது. நீங்க எழுதுறது அந்தம்மா கைக்குப் போய்ச்சேரணும் அந்தம்மாவா பார்த்து ஏதாவது பண்ணாத்தான் உண்டு. ஓட்டு வாங்க வர்றையில எல்லாத்தையும் பண்ணிக்கொடுக்கிறேன்னு சொல்றாங்க ஆனா ஜெயிச்சப்புறம் ஒருத்தங்கூட எட்டிப்பாக்கலை. 16கி.மீ நடந்து போய் ஓட்டுப்போட்டுட்டு வந்த எங்களுக்குதான வலி வேதனையெல்லாம்...’’ என்று மாளாத துயரை என் முன் வைத்துப் பேசிய அவரை சமாதானப்படுத்தினேன். பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு இன்னும் பட்டா கூடக் கிடைக்கப் பெறவில்லை. சத்தியமங்கலம் வனப்பகுதி இன்னும் கூடிய விரைவில் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவுள்ளது. அதற்காக வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விளாங்கோம்பை மக்களிடம் கல்வி குறித்த பெரிய விழிப்புணர்வு ஏதும் இல்லை. இவர்கள் எல்லோரும் கற்காதவர்கள்தான். அதனால் இன்று வரையும் கூட இவர்கள் விளைவிக்கும் அல்லது சேகரிக்கும் பொருட்களை உண்மையான விலை தெரியாமல் அடிமட்ட விலைக்கு வியாபாரிகளுக்கு கொடுத்து விட்டு வருகின்றனர். கல்வியறிவின்மையின் விளைவைப் புரிந்து கொண்ட மக்கள் இந்த தலைமுறைக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். முதல் தலைமுறையாக இந்த ஊர்க் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். எட்டாம் வகுப்பு வரை படிக்க இவர்கள் எட்டு கி.மீக்கு அப்பால் இருக்கும் வினோபாநகர் செல்கின்றனர். வனக்குழு சார்பில் இவர்கள் பள்ளி சென்று வர ஆம்னி வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் பள்ளி சென்று வருகின்றனர். சரியாக ஐந்து மணிக்கெல்லாம் ஆம்னி வேன் ஊருக்குள் வந்து விட்டது. பள்ளி முடிந்து வீடு திரும்பும் உற்சாகத்தில் ஆம்னியிலிருந்து குழந்தைகள் இறங்கி ஓடினர். இந்த ஆம்னியில் தினமும் குழந்தைகளை கொண்டு சென்று வருபவர் விஜயகுமார். கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த இவர் ஆம்னி ஓட்டுவதற்கென பணம் எதுவும் வாங்காமல் சேவை புரியும்ர் அவரிடத்தில் பேசினேன்.
‘‘விளாங்கோம்பை& வினோபா நகர் தினமும் குழந்தைகளைக் கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வந்து விடுவேன் முதல் தலைமுறையா இந்தக் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா இங்க வர்ற வழியில நாலு காட்டாறு பாயும் அதைக் கடந்து போக போட்டிருந்த பாலங்களும் போன வருஷம் வந்த வெள்ளத்துல அடிச்சிட்டுப் போயிட்டதால ரெண்டு மாசத்துக்கும் மேலா குழந்தைங்க பள்ளிக்கூடமே வர முடியாம போச்சு. கொஞ்சம் நாங்களே சீரமைச்ச பின்னாடி ஆம்னி வந்துட்டுப்போக முடியுது மலைப்பகுதிகள்ல மழை பெஞ்சுதுன்னா அவ்வளவுதான் மறுபடியும் வெள்ளம் ஓடும் அப்ப இந்தக் குழந்தைகளோட கல்வி பாதிக்கப்படும்.. தோட்டத்துல விவசாயம் பாத்துக்கிட்டிருக்கேன் என்ன வேலை இருந்தாலும் காலையிலயும் சாயங்காலமும் இதுக்காக நேரம் ஒதுக்குறேன் ஏதோ என்னால முடிஞ்சது இவ்வளதுதான்’’ என்றார்.
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம் அவர்களிடத்திலும் அப்பிக்கிடக்கிறது. பஸ் வசதியே இல்லாத இந்த ஊரில் பலரது வீடுகளில் டிஷ் டிவி இருக்கிறது. மேலும் சாதாரண்மாக இவர்களிடத்தில் செல்போனைக் காண முடிகிறது. மாலை வேளைகளில் வேலை முடிந்து திரும்பும் பெண்கள் தொடங்கி ஆண்கள் அனைவரது பொழுதுபோக்கும் இந்த டிவிதான் எல்லா இடங்களைப் போல இங்கும் பெண்களுக்கு சீரியல் மோகம் மாலை 6.30தொடங்கி ஆரம்பித்து விடுகிறது. வரிசையாக சீரியல் ஓட சீரியல் பார்த்துக்கொண்டே சமையலையும் முடித்து விடுகின்றனர். 8மணிக்குள்ளாகவே எல்லோரும் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட்டு விடுகின்றனர். இவர்கள் வாழ்விலும் தொலைக்காட்சி ஓர் முக்கிய அங்கம் வகிக்கிறது. சமீபத்தில் வெளியான பில்லா 2 பாடல்களை சைனா மொபைலில் ஒலிக்கச்செய்து கேட்டுக்கொண்டிருந்தான் 8ம் வகுப்பு படிக்கும் பெரியசாமி. புதிதாக வெளிவந்த அத்தனை படத்தின் பாடல்களும், வீடியோ நகைச்சுவைக் காட்சிகளும் அவனது மொபைலில் அடைபட்டுக் கிடந்தது.
பழங்குடி மக்களின் பாரம்பர்ய உணவு என்றால் அது ராய்க்களிதான் ராய்க்களி கிண்டி அதற்கு பசலைக்கீரையைக் கடைந்து வைப்பார்கள் ராய்க்களி,பசலைக்கீரைக் கூட்டணிக்கு அப்படி ஒரு சுவை இருக்கும் ஆனால் இன்றைக்கோ ராகி, கம்பு, சாமை, திணை போன்ற குறுதானியங்களின் உற்பத்தி மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது நாளடைவில் இந்த குறுந்தானியங்கள் காணாமலே போகக்கூடிய அவல நிலை. விளாங்கோம்பையில் ராய்க்களி சாப்பிட்ட காலம் மலையேறிப்போய் விட்டது எல்லோரது வீட்டிலும் குடி கொண்டு விட்டது ரேஷன் அரிசி.
அன்றிரவு அவ்வூரைச் சார்ந்த ராஜப்பா வீட்டில்தான் இரவு உணவு உட்கொண்டேன். சாப்பிட்டு முடித்த பின் இளைப்பாறிய படியே ராஜப்பாவிடம் பேசினேன் ‘‘எங்களோட முக்கியத்தொழிலே மானாவாரி விவசாயமும் வனப்பொருள் சேகாரமும்தான் காட்டுல மானாவாரியில ராகி, கம்பு, சோளம், சாமை, திணை, பீன்ஸ் பயிரிடுவோம். நிலத்துல விதையைத் தூவி விட்டுட்டோம்னா மழை பெஞ்சதும் துளிர்ச்சு வர்ற ஆரம்பிச்சுடும் இப்படியா மழைக்காலங்கள்ல மட்டும் விவசாயம் செஞ்சு வாழ்ந்துகிட்டிருக்கோம். என்னத்தப் போட்டாலும் யானைகள் வந்து அழிச்சாட்டியம் பண்ணிப்போடுது. அவரக்காய்னா யானைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் நாலஞ்சு யானைகள் கும்பலாய் வந்துச்சுன்னா போட்டதையெல்லாம் அழிச்சுடுது. அதுக்கு நஷ்ட ஈடு கேட்டாலும் ஃபாரஸ்ட்காரங்க தர்ற மாட்டறாங்க. விவசாயம் பண்ணவே யோசிக்க வேண்டியதாய் இருக்கு’’ என்றவர் வனப்பொருள் சேகாரத்தை பற்றிப் பேசினார். ‘‘ காட்டுல இருக்கிற புளி, தேன், சீமார்ப்புல், நெல்லிக்காய், புளியங்காய், கிலாக்காய் எல்லாத்தையும் சேகாரம் பண்ணக் கிளம்பிடுவோம். காட்டை ரொம்ப நேசிக்கிறவங்க நாங்க காட்டு விலங்குகளைக் கண்டா பயப்படுவோம் அதுகிட்ட இருந்து தப்பிக்கிற சூதானத்தைத் தெரிஞ்சு வெச்சிருப்போம் மத்த படி காட்டுக்கோ காட்டு விலங்குக்கோ எந்த ஒரு தீங்குகளையும் செய்ய மாட்டோம்’’ என்றார். பழங்குடி மக்களைப் பொறுத்த வரை காட்டு விலங்குகளை கடவுளாக மதிப்பவர்கள் இங்கு எங்கு இயற்கையாகவோ அல்லது வேறேதேனும் முறையிலோ யானை இறந்து கிடந்தால் இம்மக்கள் சூடம் கொளுத்தி யானையின் காலைத் தொட்டுக் கும்பிடுவது வழக்கம்.
விளாங்கோம்பையில் மாரியம்மன் கோவில் ஒன்றுள்ளது. இங்கு எல்லா இடங்களில் நடக்கும் வழிபாட்டு முறைதான் இங்கும். விளாங்கோம்பை மக்களின் திருமண முறையும் அப்படித்தான் எல்லா இடங்களிலும் நடப்பது போலத்தான் புதிதாகச் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் பழங்குடி மக்களின் திருமண முறை சில இடங்களில் வேறுபட்டுக் காணப்படுகிறது. சத்தியமங்கலம் அருகே பீக்கிரிபாளையம் என்னும் ஊரில் வசிக்கும் பழங்குடியினரின் திருமண முறை வேறுபட்டது. லிவிங் டு கெதர் என்று பெரு நகரங்களில் உலவி வரும் கலாச்சாரம் போலத்தான் இங்கும் ஆனால் கட்டுப்பாடுடையது. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடித்து விட்டால் சுற்றத்தார் ஊரார் யாரையும் கேட்கத் தேவையில்லை தனி ஒரு வீடு கட்டிக் குடித்தனம் நடத்தலாம் குழந்தையும் கூடப் பெற்றுக்கொள்ளலாம் பிறகு கூட ஊரறியத் தாலி கட்டிக்கொள்ளலாம். அப்பாவும் மகனும் ஒரே நேரத்தில் தாலி கட்டிக்கொண்ட கூத்தும் இருக்கிறது. தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொள்ள நினைத்தால் அவளோடு உடலுறவு கொண்டு அவளை கர்ப்பமாக்கி தன் ஆண்மையை நிருபித்தால் மட்டுமே திருமணம் இது போன்ற பகீர் திருமண முறைகளும் பழங்குடி மக்களிடத்தில் காணப்படுகிறது.
விளாங்கோம்பை மக்களின் திருமணங்களுக்காக கட்டப்பட்டிருக்கும் சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கி காலை எழுந்தேன். கிராம மக்கள் ஒவ்வொருவரும் நகரத்தைப் போலவே கூலி வேலைக்குப் போகிற அவசரத்தில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர். 8.30மணிக்கெல்லாம் பள்ளி வேன் வந்து விட குழந்தைகள் கிளம்பி விடுகின்றனர். எல்லாம் முடித்து சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கெல்லாம் கூலி வேலைக்குப் போகிறவர்கள், மாடு மேய்க்கிறவர்கள், கிலாக்காய் பொறுக்கப் போபவர்கள் என ஒவ்வொருவராய் போய்க்கொண்டிருந்தனர். வயது மூப்படைந்தவர்கள் மட்டும் கோவிலின் திண்ணையில் படுத்துக்கொண்டு ஊர் நியாயம் பேசிக்கொண்டிருந்தனர். பழங்குடி மக்களுடன் வாழ்ந்த இந்த ஒரு நாள் எனக்கு இன்னும் பலவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இயற்கையை நேசிக்கவும் இயற்கையைக் காக்கவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அது பழங்குடியின மக்கள்தான் என்பது நன்றாகப் புலப்பட்டது. சுற்றிலும் மலைகளும் காடுகளும் நிறைந்திருந்த அந்த பசுமைக்கூடாரத்திலிருந்து வெளிவர மனமின்றி அடுத்த நாள் காலை பத்து மணிக்கு ஊர் நோக்கிப் புறப்பட்டேன்.
   No comments:

Post a Comment