Friday, June 15, 2012


இருளர் சமுதாயத்தவரின் இருளாத கனவு!
இரு விழிகளை இழந்து தனது வாழ்க்கை இருண்டு போன போதிலும் கூட இன்னமும் கல்வி வெளிச்சம் படாமல் கொத்தடிமைகளாகவும், தினக்கூலிகளாகவும் வாழ்ந்து வாடும் இருளர் சமுதாய மக்களின் வாழ்வில் ஒளியேற்றப் போராடுகிறார் அன்பு. இவரின் இந்த சமூகப் பயணத்துக்கு உறுதுணையாகவும் பார்வையிழந்த இவருக்கு பார்வையாகவும்  விளங்குகிறார் இவரது மனைவி மீனா.
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரை அடுத்த சட்டமங்கலத்தைச் சேர்ந்த இந்த அன்பு&மீனா தம்பதிகள்தான் இப்பகுதியைச் சேர்ந்த இருளர் சமுதாய மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொட்டு அத்தனைக்கும் அரசு அலுவலகங்களின் படியேறுகிறவர்கள். சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கத்தில் மாநில அமைப்பாளராய் இருக்கிறார் அன்பு. ‘‘இருளர் சமுதாய மக்கள் கல்வி வாசனை அறியாதவர்கள் இதுதான் என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது’’ என்று தன் மன ஆதங்கத்தை நம்மிடம் பதிவு செய்த அன்புவும் கல்வி வாசனை அறியாதவர்தான் இருந்த்தும் கூட இந்தத் தலைமுறையாவது நிச்சயம் படிக்க வேண்டும் இருண்டு கிடக்கும் இருளர் சமுதாயம் தலைத்தோங்க வேண்டும் என்பதுதான் இவரது கனவாம்.
கோடை வெயிலின் உஷ்ணம் தணிக்க இளநீரோடு நம்மை வரவேற்ற அன்பு&மீனா தம்பதிகளிடம் பேசினோம். முதலில் பேசிய அன்பு: ‘‘பொறப்பிலேயே பார்வை இல்லாதவனாய்த்தான் பொறந்தேன். யாரக் குற்றம் சொல்ல முடியும் நம்ம விதி இவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு வளர்ந்தேன். எனக்கு எங்க மக்கள்படுற கஷ்டத்தைப் பார்க்க முடியலைன்னாலும் காதாரக் கேட்க முடிஞ்சது. இங்க படிச்சவங்க எத்தனை பேர்னு விரல் விட்டு எண்ணிடலாம் ஏன்னா இருளர் சமுதாய மக்கள் இன்னும் பள்ளிக்கூடம் பக்கமே நெருங்கலை. காட்டுல எலி, பாம்பு பிடிக்கிறதுதான் இருளர் மக்களோட வம்சாவழித் தொழில் ஆனா அது நாளடைவில் மாறி மக்கள் வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. கல்வியறிவில்லாத அறியாமையினால தோட்டங்காடுகளுக்கும் செங்கற்சூளைக்கும் வேலைக்குப் போன இருளர் மக்களை முன்பணம் கொடுத்து கொத்தடிமையாக்கிட்டாங்க. இப்படி மேல இருக்கிறவங்க எங்க உழைப்பைச் சுரண்டிக்கிட்டே இருக்காங்க. எங்களுக்கு கல்வி வேணும் நாங்களும் வளரணும்’’ என்று தன் சமுதாய மக்களின் குரலாய் அவர்தம் முக்கியக் கோரிக்கையை நம்மிடம் முன் வைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார். ‘‘அப்பா நான் பொறந்து கொஞ்ச காலத்துலயே இறந்துட்டார் அம்மாதான் என்னை வளர்த்தாங்க. எனக்கு பார்வை இல்லாம போனாலும் என்னோட 15 வயசுல எங்க சமூகத்து மேல ஒரு பார்வை வந்தது. அப்பத்தான் இவங்களுக்காக ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. அந்த அக்கறைதான் இன்னைக்கும் என்னை முழுநேரமாய் இருளர் மக்களுக்காக வேலை செய்யத்தூண்டிருக்கு’’ என்று சொன்ன அன்பு சொல்வீரர் மட்டுமல்ல செயல் வீரரும்கூட. 2004ம் ஆண்டிலிருந்து ஸர்ப்பம் இருளர் தொழிலாளர் நலச்சங்கத்தில் இருக்கும் அன்பு அவர் வசிக்கும் பகுதியில் உள்ள 23 வீடுகளுக்கு நடையாய் நடந்து பட்டா வாங்கிக்கொடுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அரிசி ஆலைகளிலும், செங்கற்சூளைகளிலும் கொத்தடிமைகளாக  மாட்டிக்கொண்டிருந்த பலரையும் சட்டத்தின் வாயிலாக மீட்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது. அது மட்டுமில்லாமல் மக்களின் அடிப்படைத் தேவையான குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவற்றை வாங்கித் தருவதுதான் இவரது முக்கிய வேலை ஏதோ இவரால் முடிந்தது.
இதில் மிக முக்கியமான ஒன்று பெற்றோர்களது எதிர்ப்புகளையும் மீறி பார்வையற்றவராய் இருந்தாலும் அன்புவின் சேவை மனப்பான்மைக்காக இவரைக் காதலித்து திருமணம் செய்திருக்கிறார் மீனா. இப்போது இவர்களுக்கு பரமேஸ்வரி, சந்திரா என இரண்டு பெண்பிள்ளைகள். இது பற்றி நாம் மீனாவிடம் பேசினோம். ‘‘நம்ம மக்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்காங்கன்னுதான் அடிக்கடி சொல்வார் மக்கள் மேல காட்டுற இந்த அக்கறையைப் பார்த்துதான் நான் இவரைக் காதலிச்சேன். இதுக்கு எங்க வீட்டுல பயங்கரமான எதிர்ப்பு. பார்வையில்லாம போனாலும் இவருகிட்ட நல்ல மனசு இருக்கு நான் இவரை விட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டேன். எங்களுக்கு கல்யாணம் ஆகி 12வருஷமாச்சு இருந்தும் கூட எங்க வீட்டுல இன்னும் என்னை ஏத்துக்கலை. இவரைத் தவிர எனக்கு யாரும் தேவையில்லைனு முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கு மக்கள் பிரச்சனைக்காக இவர் எங்க போனாலும் நான்தான் இவரைக்கூட்டிட்டுப் போவேன். எனக்கும் இந்த மாதிரி சேவை செய்யுறது பிடிச்சிருக்கு. நாங்க தினமும் இப்படி மக்கள் பிரச்சனைக்காக வெளிய கிளம்பிடுறதால குழந்தைகளை கவனிக்க முடியாம போயிடும்ங்கிறதுக்காக அவங்களை ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வெச்சுக்கிட்டிருக்கோம். உண்மையிலும் மன நிறைவோடு வாழ்ந்துகிட்டிருக்கோம் இது போதும்’’ என்றார்.
பார்வையற்ற இந்த அன்புவுக்குத்தான் இருளர் சமுதாய மக்கள் மீது எவ்வளவு அன்பு!
 
செய்தி: கி.ச.திலீபன்

No comments:

Post a Comment