Sunday, June 10, 2012


ஒரு புகைப்படம் ஓராயிரம் அர்த்தம் தரும்!
மனிதர்களின் இயல்பான வாழ்வியலையும் அவர்களின் எதார்த்தங்களையும் புதிய கோணத்தில் தன் காமிராவில் கிளிக் செய்து வருகிறார் சுரேஷ் பாபு. ஈரோடு அருகே நல்லியம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் பாபு ஈரோட்டில் புத்தகக் கடை நடத்தி வருகிறார். கடையில் இருக்கும் நேரம் தவிர்த்து பிற நேரங்களிலெல்லாம் புதிய கோணத்தில் மக்களின் வாழ்வியலை படம் பிடிக்க காமிராவும் கையுமாக  சுற்றுவாராம். அப்படியாக இவர் கிளிக்கிட்ட புகைப்படங்கள் முந்நூறுக்கும் மேற்பட்டவை. அவற்றில் பல படங்கள் இவருக்குப் பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்திருக்கின்றன. அது மட்டுமல்ல சுரேஷ் பாபுவும் அவரது நண்பர்களும் இணைந்து தமிழில் புகைப்படக்கலை என்று ஒரு வலைப்பூ தொடங்கி இருக்கின்றனர் இதில் புகைப்படக்கலை சம்மந்தப்பட்ட அனைத்துத் தகவல்களும் தமிழில் கிடைக்கிறது. தமிழில் புகைப்படம் சம்மந்தப்பட்டு வெளிவரும் ஒரே வலைப்பூ இதுதானாம்.

இது பற்றி சுரேஷ் பாபு நம்மிடம்:   ஒரு  புகைப்படத்துக்குள்ள ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிஞ்சிருக்கு. நாம எடுக்குற புகைப்படங்கள் ஒவ்வொரு கோணத்துலயும் ஒவ்வொரு விதமா நமக்குப்படும் எனக்குப் புகைப்படத் துறையில ஆர்வம் வந்ததற்குக் காரணமே இதுதான். முதல்ல ரிலாக்ஸ்க்காக விதவிதமா படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். எனக்கு பட்டாம் பூச்சிகள் மேல் ரொம்பவே இஷ்டம் அதனால காட்டுப் பகுதிகளுக்குப் போய் பட்டாம் பூச்சிகளை படம் பிடிக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்ல எனக்கு மனிதர்களின் வாழ்வியலை படம் பிடிக்கணும்கிற ஆர்வம் துளிர் விட்டது. ஒவ்வொரு மனிதர்கள்கிட்ட இருந்தும் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சது. ஒரு முறை கொட்டுற மழையில நனைஞ்சுக்கிட்டுப் வண்டியில போயிட்டிருந்தேன் அப்ப ஒரு பெரியவர் மழைன்னு கூடப் பார்க்காம வயக்காட்டுக்குள்ள நின்னு களை எடுத்துகிட்டிருந்தார். வயசானாலும் கூட அவரோட உழைப்பும் சுறுசுறுப்பும் குறையவே இல்லை அப்படியொரு உழைப்பாளிய என் காமிராவில் படம் பிடிச்சேன். அடுத்ததா குழாயிலிருந்து சொட்டுற தண்ணியை ஒரு சிறுவன் அப்படியே வாயைத்திறந்து குடிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்தேன் அந்தப் படம் எனக்குப் பல பாராட்டுக்களை வாங்கித் தந்தது. வித்தியாசமா எது என் கண்ணுக்குப் பட்டாலும் உடனே க்ளிக் பண்ணிடுவேன். பெரும்பாலும் யாரைப் படம் எடுக்கிறனோ அவங்களுக்குத் தெரியாமதான் எடுப்பேன் அப்பத்தான் எதார்த்தமான படங்கள் கிடைக்கும். இப்படியா நிறைய படங்கள் எடுத்தாலும் அதில் சில படங்கள்தான் ரசிக்கிற அளவில் இருக்கும். நல்ல ஒரு படம் கிடைக்க ஒரு மாசம் கூட ஆகும். 
2010ம் ஆண்டு அறுபத்து நாலாயிரம் போட்டோக்கள் கலந்து கொண்ட பெட்டெர் போட்டோகிராபி போட்டியில் ரன்னரானேன். எட்சன் போட்டோகிராபி ப்ரிண்டர் கம்பனி நடத்திய மாதாந்திரப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கேன். வருமானத்துக்காக நான் இதைப் பண்ணலை என் ஆத்ம திருப்திக்காக பண்றேன். என் படங்களை வளைதளங்கள், பேஸ் புக், ட்விட்டரில் பதிவு பண்றேன். ஆயிரக்கணக்கான நண்பர்கள் என்னோட படங்களை ரசிச்சு கமெண்ட் கொடுக்கிறாங்க நாங்க நடத்துற ப்ளாக்கில் நிறைய பேர் அவங்களோட சந்தேகங்களைக் கேட்குறாங்க நாங்கள் விளக்கம் கொடுக்கிறோம் இது போதுமே!
புகைப்படம்ங்கிறது ஒரு கலை நாங்களும் கலைஞர்கள்தான்! அந்த விதத்துல பெருமைப்படுறோம்!

செய்தி: கி.ச.திலீபன்
நன்றி: ஆனந்த விகடன்(என் விகடன்)

No comments:

Post a Comment