Tuesday, May 22, 2012

காலம் மறந்த நாடகக்கலை!


காலம் மறந்த கலை
மேடை நாடகங்கள் கலைகட்டியிருந்த காலகட்டங்களில் கொங்கு மண்டலத்தில் தடதடத்த ஒரு நாடக இயக்குனர் பருவாச்சி துரை சண்முகம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பருவாச்சியைச் சேர்ந்த இவர்தான் முதன்முறையாக நாடகங்களில் வட்டாரச் சொற்களை வசனமாக்கியவர். நாடகம் என்பது சொல்ல வேண்டிய கருத்தை ரசனையோடு சொல்ல வைப்பது இந்த நாடகக் கலையில் இவர் சில சீர்திருத்தங்களையும் மேற்கொண்டிருக்கிறார்.
பருவாச்சி துரை சண்முகம்
‘‘எல்லாக் கலைகளை விடவும் நாடகம்ங்கிறது தனிப்பட்ட வரவேற்பைப் பெற்ற ஒன்னு. இந்தக் கலையில் மட்டும்தான் மனிதனோட வாழ்க்கையையும் அதன் இன்ப துன்பங்களையும் வெளிக்காட்ட முடியும். அந்தக் காலத்துல ஊர்ல திருவிழா வந்துட்டா போதும் கூத்து, நாடகம் விடிய விடிய நடக்கும், அந்த அளவு மக்கள் ரசிக்கிற கலையா இருந்த நாடகக் கலையில் பல சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. அன்னைக்கு வந்த நாடகங்களில் எல்லாம் உரைநடைத் தமிழில்தான் வசனம் இருக்கும் அதனால அந்த நாடகத்தில் ஒரு யதார்த்தம் இருக்காது. அந்த ஒரு சூழலில்தான் அந்தியூர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராய் இருந்த நான் 1968&ம் ஆண்டு ‘‘வேளிர் உல வேந்தன்’’ங்கிற தலைப்பில் முதன்முறையா நாடகம் நடத்தினேன். அந்த நாடகத்துல முழுக்க முழுக்க இங்க வட்டார வழக்குல இருக்க கொங்குத்தமிழ்தான் வசனம் எழுதி இருந்தேன். நாடகத்தைப் பார்த்தவங்க எல்லாம் மற்ற நாடகங்களை விட இந்த நாடகங்கள் யதார்த்தமா இருக்குன்னு பாராட்டினாங்க. என்னுடைய இந்த நாடகத்திற்குப் பிறகு எங்க பகுதி மக்கள் எல்லோருக்கும் யதார்த்தமான நாடகங்கள் மேல ஈர்ப்பு வந்தது. அப்பதான் உரைநடையா வசனம் எழுதிக்கிட்டிருந்த மற்ற நாடக இயக்குனர்களும் தங்களுடைய நடையை மாத்திக்கிட்டாங்க. நான் நாடகம் இயக்க ஆரம்பிச்சதிலிருந்து சினிமாவே பார்க்க மாட்டேன் ஏன்னா என் நாடகங்களில் சினிமா வாசனை வந்துடக் கூடாதுன்னுதான். நாடகம்ங்கிறது சாதாரணமான விஷயமில்லை அந்த மேடைக்குள்ள நாம குடிசை வீட்டையும் காட்டணும் மாடி வீட்டையும் காட்டணும். வயல்வரப்புகளையும் ஆறுகளையும் காட்டணும். அன்றைக்கு வந்த நாடகங்களில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு நகர்வதற்கு சில நிமிடங்களாகும் அதனால் பார்வையாளர்கள் பொறுமையிழந்து போயிடுவாங்க. அதனாலதான் என் நாடகத்தைப் பொறுத்த வரை ஒரு காட்சி முடிந்த சில வினாடிகளிலேயே அடுத்த காட்சி ஆரம்பாகி விடும் எப்படின்னா அதற்கானபடியா கதையை வடிவமைப்பேன். நாடக மேடையில் என் விரலசைவுக்கு எல்லோரும் கட்டுப்படணும்னு சொல்லிடுவேன் அப்பத்தான் ஒரு வெற்றிகரமான நாடகத்தைக் கொடுக்க முடியும். அன்று வந்த நாடகங்களில் சூழ்நிலைக்கேற்று திரைப்படப் பாடல்கள் இடம்பெறும் ஆனால் என் நாடகங்களில் சினிமாப் பாடல்களே இருக்கக் கூடாதுங்கிறதுதான் என் குறிக்கோள் அதுக்காக நானே சொந்தமா பாட்டு எழுதிடுவேன். என்னுடைய நாடகங்களைப் பொறுத்த வரை நான் தத்ரூபத்தை ரொம்பவும் எதிர்பார்ப்பேன் எந்த ஒரு காட்சியாய் இருந்தாலும் சரி அது தத்ரூபமா இல்லைன்னா என மனசு கேட்காது. என் நாடகங்களுக்கு கலை வடிவமைப்பும் நான்தான் வயல்வெளிக்காட்சியாகட்டும் நந்தவனக் காட்சியாகட்டும் அதற்கேற்றபடி செட் போட்டுக் கொள்வோம். இயக்குனர் ராஜகுமாரன் தன்னோட இள வயதில் என்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். ‘‘நீரலைகள்’’ங்கிற நாடகத்தில் ராஜகுமாரனுக்கு வாய்ப்புக் கொடுத்தேன். ஆனால் எனக்கு மிகப்பெரிய கவலை என்னனா இந்த சந்ததியினருக்கு நாடகம்னா டி.வியில வர்ற் மெகா சீரியல்தான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. உண்மையான நாடக வடிவம் என்னனு இவங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை ஏன்னா நாடகம், கூத்து எல்லாம் அழிஞ்சே போயிடுச்சு. தலைமுறைக்கேற்ப கலைகளை பயன்படுத்தும் யுக்தி பலருக்குத் தெரிவதில்லை. அப்படித்தெரிந்திருந்தால் இன்னைக்கு கூத்து, நாடகம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகள் அழிந்திருக்காது. போனது போகட்டும் இனியாவது கலைகளைப் போற்றக் கற்றுக்கொள்வோம்’’
                                                     செய்தி: கி.ச.திலீபன்
                                          நன்றி: ஆனந்த விகடன் (என் விகடன்)
No comments:

Post a Comment