Tuesday, May 22, 2012


எழுச்சியைத் தூண்டும் நெகிழ்ச்சிப்பாட்டு!
‘‘ஒரு ”ஒருஅரசியல் கட்சித்தலைவருக்கோ, சினிமா நடிகருக்கோ கூடாத மக்கள் கூட்டம் ஒரு புரட்சிப் பாடகருக்குக் கூடுமேயானால் அவர் ஆந்திர மாநிலம் மக்கள் யுத்தக்குழுவின் பாடகர் கத்தாருக்காகத்தான் இருக்கும். புரட்சிக் கருத்துக்களை நெஞ்சில் விதைக்கும் அவரது பாடல்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஏன் நானும் கூட அவரது ரசிகன்தான். என் முன்மாதிரி அவர்தான்’’ என்கிறார் சமர்ப்பா குமரன்.
சமர்ப்பா என்னும் கலைக்குழுவைத் தொடங்கி அதன் மூலம் பல சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் எழுச்சியைத் தூண்டும் பாடல்களைப் பாடும் இவருக்கு விழும் கைத்தட்டுக்களும் பாராட்டுக்களும் ஏராளம். முறைப்படி சங்கீதம் பயிலவில்லை என்றாலும் இவரது குரல் வளமும் இவரது பாடல்களின் ஏற்ற இறக்கங்களையும் கேட்கும் போது ‘‘அட’’ போட வைக்கிறது.
‘என்னோட பேர் குமரேசன். 2003ல் சமர்ப்பாங்கிற கலைக்குழுவை ஆரம்பிச்சேன். சமர்பா=சமர்+பா, சமர்&போர் பா&பாடல். பாடல்களாலேயே ஒரு போர் புரிதல்ங்கிற அடிப்படையிலதான் இந்தப்பேரை வெச்சேன் அன்னைலர்ந்து என்னோட பேர் சமர்ப்பா குமரன்னு ஆயிடுச்சு.
இசைன்னா என்னன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது. புதுவை சித்தன்னு ஒரு பாடகர் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். என்னோட நண்பர் அவர்கிட்டப் பேசி எனக்கு ஒரு வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார். புதுவை சித்தன் என்னைக்கூப்பிட்டு ‘‘என்ன சுதியில பாடுவீங்க’’ன்னு கேட்டார் ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க’’ன்னு சொன்னேன். போய் பாடி முடிச்சதும் அவர் என்னைக் கூப்பிட்டு ‘‘நல்லா பாடுறீங்க’’ன்னார் அவர் சொல்லித்தான் நான் 7கட்டையில் பாடுறேன்னு தெரிஞ்சுகிட்டேன்.
நான் படிச்சது வெறும் மூணாவதுதான். என்னோட 12வயசிலிருந்து 32வயசு வரைக்கும் விசைத்தறித் தொழிலாளியா இருந்தேன். கம்யூனிஸ்ட் கொள்கை மேல பெரிய அளவு ஈடுபாடு வந்ததால கடுமையா உழைக்கணும்னு நினைச்சு மூட்டை தூக்கப்போனேன். மூட்டை தூக்கின காலங்கள்ல ‘‘பொன்னான மனசே...பூவான மனசே...’’ பாட்டை ரீமிக்ஸா ‘‘அட தொழிலாளத் தோழா எத்தனை நாளா பாழாய்ப்போன இந்த வாழ்க்கை’’ ன்னு பாடினேன் கூட மூட்டை தூக்கினவங்களெல்லாம் என்னோட பாட்டை வெகுவாப் பாராட்டினாங்க.
இந்த சமுதாயத்துக்கு நாம சொல்ல நினைக்கிறதை பாட்டு வழியில சொன்னாத்தான் எடுபடும்னு அன்னைக்குத்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் த.மு.எ.ச&வில் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கொள்கை ரீதியான பாடல்களைப் பாடினேன்.
இப்படியா ஆண்டாண்டு காலமாய் இருந்து வந்த பாடல்களை மட்டும் பாடினா பத்தாது நாமே சொந்தமா பாட்டு எழுதிப்பாடலாம்னு அப்ப ஒரு யோசனை. முழுசா மூனாம் வகுப்பையே முடிக்காதவனுக்கு எதுக்கு இந்த ஆசைன்னு தோணுச்சு அப்ப அந்நிய குளிர்பானங்களால உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையிழந்து நின்ன சமயம் அதை வெச்சு ஒரு பாட்டு எழுதினேன், அது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொடுத்தது அன்னையிலிருந்துதான் என் மேல எனக்கு ஒரு புது நம்பிக்கை வந்தது. பிற்காலங்கள்ல நானே சுயமா பல பாடல்களை எழுதினேன். சாதி மற்றும் தீண்டாமை குறித்தும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையினரால் வேட்டையாடப்பட்ட பழங்குடி மக்கள் பற்றியும் பல பாடல்களைப் பாடியிருக்கேன்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் நடத்தக்கூடிய கூட்டங்களுக்குப் போனேன் கொளத்தூர் மணி அவர்களுடைய பேச்சைக் கேட்டதிலிருந்து எனக்கு ஈழத்தமிழ் உணர்வு வந்தது. அன்னையிலிருந்து அவருடைய கூட்டங்களுக்குத் தவறாம போக ஆரம்பிச்சேன். உடனே என்னை மேடையேறிப் பாடச் சொல்லிட்டாங்க.
‘‘செவல மாடு கட்டியிருக்கிற சலங்கை ஒடையட்டும்
சிங்களவன் கொட்டமடிக்கிற இலங்க ஒடையட்டும்’’னு ஒரு பாட்டை பாடினதும் போதும் தமிழ் இன உணர்வாளர்களெல்லாம் எழுந்து நின்னு கை தட்டினாங்க.
அன்னையிலிருந்து ஒரு மக்கள் பாடகனா உருவெடுத்தேன் இன்னைக்கும் பல கூட்டங்களுக்கு போய் பாடுறேன் எல்லா இடங்களிலும் மக்கள் என்னை ஆதரிச்சு அரவணைக்கிறாங்க. என்னுடைய பாட்டுன்னு சொன்னதும் அவங்க முகத்துல புதுசாய் ஒரு சந்தோஷத்தைப் பார்க்க முடிஞ்சுது. என்கிட்டப் பல பேர் என்னுடைய குரல் வளத்துக்கு நான் சினிமாவுக்குப் போனா வாய்ப்புக் கிடைக்கும்னு சொன்னாங்க, ஆனா அதை நான் விரும்பலை மக்களோடு மக்களாய் மக்களுக்காக பாடுவதில் எனக்கும் மகிழ்ச்சி இந்த மக்களுக்கும் மகிழ்ச்சி’’ நெகிழ்கிறார் சமர்ப்பா குமரன்.
                                                                                       செய்தி: கி.ச.திலீபன்
                                                                                 நன்றி: ஆனந்த விகடன் (என் விகடன்)

No comments:

Post a Comment