Tuesday, May 22, 2012

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்


குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!
இன்னும் முற்றுப் பெறாத குழந்தைத் திருமணங்கள்!
முதுகில் புத்தகப் பை சுமக்க வேண்டிய குழந்தைகள் வயிற்றில் சிசுவைச் சுமந்தால்...? பால்யக் குறும்புகளோடும்  பள்ளிக் கனவுகளோடும் துள்ளித்திரியும் குழந்தைகள் குடும்ப பாரத்தைச் சுமந்தால்...? நிலை என்னவாகும்? இந்த நிலைதான் இன்று எத்தனையோ குழந்தைகளுக்கு....! அனைவருக்கும் கல்வி, சமச்சீர்க் கல்வி என்று அரசு கல்விப் பாதையில் மக்களை முன் நடத்திச் சென்றாலும் கூட இன்னும் கல்வி வெளிச்சம் படாத மலைக் கிராமப் பழங்குடி மக்களிடம்  குழந்தைத் திருமணங்கள் பாரம்பர்யமாகவே நடந்து வருகின்றன. பன்னிரெண்டு வயது தொடங்கிய  பெண் குழந்தைகளுக்கெல்லாம் நடத்தப்படுகிற திருமணத்தை இழைக்கப்படுகிற கொடுமை என்றுதான் சொல்லத் தோணுகிறது.
எந்த ஒரு மருத்துவராகட்டும் மனோத்தத்துவ நிபுணராகட்டும் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதில்லை. குழந்தைத் திருமணத்தினால் உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் மனோ ரீதியான பல பிரச்சனைகளும் உருவெடுக்கின்றது. இதனால் குழந்தை தன் குழந்தைப் பருவத்தை இழக்கிறது.  இதைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்க ஆளில்லை. குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006& என்று அரசு ஒரு சட்டமே இயற்றியிருக்கும் போதிலும்  இந்தப் பழங்குடி மக்களுக்கும், அருந்ததிய மக்களுக்கும் அரசுக்கும் இடையே நீண்டதொரு இடைவெளி. தங்களின் வாழ்வாதாரத்துக்கு தங்களை மட்டுமே நம்புகின்றவர்கள் இம்மக்கள். இவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தவோ அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவோ இதுவரை அரசு முன்வந்ததில்லை அதனால் இவர்கள் அரசை விட்டு சற்று தூர விலகி நிற்கின்றனர்.
பாரதியாரே குழந்தைத் திருமணம்தான் செய்து கொண்டார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடைமுறையில் இருந்த குழந்தைத் திருமண முறை நாகரிகம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் மறைந்து போனது. ஆனால் பழங்குடி மக்களின் மரபும் வாழ்வியலும் இன்னும் மாற்றம் காணவில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்தக் குழந்தைத் திருமணங்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று முன்னேற்றப் பாதையில் சுறுறுப்பாய் உலகம் பயணித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் இந்தப் பழங்குடி மக்கள் ஆடைகள் அணிந்த ஆதிவாசிகளாகவே உள்ளனர். அருந்ததிய சமூக மக்கள் குழந்தைத் திருமணத்தைக் கலாச்சாரமாகவே வைத்துள்ளனர். இவர்களின் பின்னடைவுக்கு முக்கியக் காணம் கல்லாமை. தற்போது பல மலைக்கிராமங்களில் பள்ளிக்கூடங்களே கிடையாது பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துக்கு போகலாம் என நினைத்தாலும் கூட  பஸ் வசதி கிடையாது. யானைக்காட்டுக்குள் பொடிநடையாக குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பெற்றோர்கள் யோசிக்கவே செய்கின்றனர். உதாரணத்திற்கு சத்தியமங்கலம் வனப்பகுதிக்குட்பட்ட விளாங்கோம்பை எனும் வனக்கிராமத்திலுள்ள குழந்தைகள் பள்ளி செல்ல நினைத்தால் யானைக்காட்டுக்குள் அதுவும் பத்து கிலோ மீட்டர் தொலைவு வந்தால்தான் தொடக்க கல்வியே கற்க முடியும் இங்கு பஸ் வசதி கிடையாது இதனாலேயே பல தலைமுறைகள் படிப்பின் வாசம் உணரவே இல்லை. இப்பொழுதுதான் முதல் தலைமுறையாக குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்தனர். இவர்கள் போகும் வழியில் இருந்த நான்கு பாலங்களையும் காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்று விடவே இவர்கள் பள்ளிக்குப் போகவும் வழியில்லாமல் போனது. இந்த கிராமம் உதாரணம்தான் இது மட்டுமில்லாமல் பல பழங்குடி கிராமங்களின் நிலையும் இதுதான். பழங்குடி மக்களின் கல்லாமைக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும் காரணமாகவே அமைகின்றன. அருந்ததிய மக்களிடத்திலும் கல்வி குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லை.
குழந்தைத் திருமணத்துக்கு கல்வியை மட்டும் காரணம் காட்ட முடியாது பொருளாதாரமும் ஒரு வகையில் காரணமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அருந்ததியர் மற்றும் பழங்குடி மக்களுக்கு உரித்தானது ஏழ்மை. கழுத்தை நெறிக்கும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் இம்மக்களுக்கு பெண் குழந்தைகளைக் கரையேற்றுவது சுமையாகவே இருக்கிறது.
பெண் குழந்தை பூப்படைந்த மறுகனமே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதிலும் கொடுமை என்னவென்றால் பூப்படையாத பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. கல்வியறிவின்மை, பொருளாதார வலுவின்மை, அறியாமை என்று எத்தனையோ காரணங்களால் சின்னஞ்சிறு குழந்தைகள் சிதைக்கப்படுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப் பகுதிகளில் வசிக்கும் ஊராளி இனப் பழங்குடி மக்களிடையே குழந்தைத் திருமணங்கள் பெரிதளவில் காணப்படுகிறது. வேரோடு கிள்ளி எறியப்பட வேண்டிய இத்திருமணங்கள் இன்னும் வேரூன்றி நிற்கின்றன. பர்கூர் மலைப் பகுதிகளில் கொங்காடை, அக்கினிபாவி, தம்புவெட்டி, தாளகரை, பொன்னகரை என்று பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உச்சகட்டமாய் அரங்கேறி வருகின்றன இந்த குழந்தைத் திருமணங்கள்.  இங்கு கணக்கிட்டுப் பார்த்தால் பதினான்கு வயதைத் தாண்டி எவரும் படிப்பதில்லை. பள்ளிக் கூடம் போய்க் கொண்டிருக்கும் பெண்குழந்தைகளின் படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.  இம்மக்களுக்கு கால மாற்றமோ சமுதாய வளர்ச்சியோ கணக்கில்லை அவர்கள் வழிவழியாய் தொட்டுத் தொடர்ந்து வந்த அதே பழக்க வழக்கத்திலிருந்து இவர்கள் விடுபட மறுக்கின்றனர். இவ்வாறாக குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்குழந்தைகளை சந்தித்தோம்.
முதலில் பதிமூன்று வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட ரத்னாவிடம் பேசிய போது என்னோட சொந்த ஊரு அக்கினிபாவிங்க. என்.சி.எல்.பி ஸ்கூல்லதான் ஏழாங்கிளாஸ் படிச்சிட்டுருந்தேன் அப்பத்தான் எங்க தாத்தா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னார். பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். படிச்சு என்னத்த ஆவப்போகுதுன்னு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க வீட்டுக்கார்ரு காட்டுல கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருக்கார். நான் கல்யாணம் பண்ணினது ஒண்ணும் புதுசில்லை இங்க இருக்குற எல்லாத்துக்குமே பதினாலு வயசுக்குள்ளயே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க இது வந்து அந்தக் காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் பண்ணிக்கிட்டிருக்கிற சமாச்சாரம்தான் ஆனா என் கூடப் படிச்ச புள்ளைகளையெல்லாம் பாக்கவே முடியுறதில்லை அதான் கவலையா இருக்கு.
அடுத்ததாய் பதினாறு வயதிலேயே கைக்குழந்தையைச் சுமக்கும் மணி நம்மிடம் சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிறது இங்க சகஜம்தான் அதனால நான் பண்ணிக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து ஆடு மேய்ச்சுட்டு இருந்தேன் பள்ளிக்கூடமெல்லாம் போகலை படிச்சு மட்டும் என்னாகப் போகுதுன்னு வீட்டில அனுப்பலை அதுவும் பள்ளிக்கூடம் போகணும்னா பல மைல் தூரம் நடக்கணும்ங்கிறதால நானும் போகலை. பதினாலு வயசானதும் கல்யாணம் பண்ணி வைக்கிறன்னு சொன்னாங்க நானும் சரின்னேன். கல்யாணம் பண்ணி இப்ப ரெண்டு வருஷம் ஆகுது  ஒண்ணும் பிரச்சினையில்லை வீட்டுக்காரர் கூலி வேலைக்குப் போறாருங்க. ஒரு குழந்தை இருக்கு குழந்தைக்கு ஒரு வயசு ஆகுது இப்ப குழந்தையைப் பாத்துட்டு வீட்டுல இருக்கேன் என்றார்.
அருந்ததிய சமூக மக்களைப் பொறுத்த வரை ஒரு பெண் குழந்தை பூப்படைந்து விட்டால் அவள் மனைவியாகலாம் ஒரு ஆண் குழந்தைக்கு மீசை அரும்பு விட்டால் அவன் கணவனாகலாம் வயது ஒரு கணக்கே இல்லை.
இது பற்றி மாற்று முறை மருத்துவர் பரமேஸ்வரன்:
குழந்தைத் திருமணம் என்பது தடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஐ.நா.சபை அறிவிப்பின்படி பதினெட்டு வயது பூர்த்தியடையாதவர்கள் குழந்தைகளே. குழந்தைத் திருமணங்கள் உடல் மற்றும் மனோ ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவ்வாறான குழந்தைத் திருமணங்களால் முதலில் குழந்தைகளுக்கு பெற்றோருடன் வாழக்கூடிய காலங்கள் குறைவு இதனால் பெற்றோரது முழுமையான அன்பு கிடைக்காமற்க் கூடப் போகலாம். குழந்தைகள் தங்களது குழந்தைத் தனத்தை இழக்கின்றனர் இவர்களது விளையாட்டு குறும்பு என எல்லாம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது.  குழந்தையை சுமக்க கர்ப்பப் பை தயாராகும் நிகழ்வுதான் பூப்படைதல் இப்படியாக பெண்கள் பூப்படைந்ததுமே குழந்தையச் சுமக்கத் தகுதியுடையவர்கள் என்றாகி விடாது. கர்ப்பப் பை விரிவடையாத போது கருவைச் சுமக்கையில் அது சில சமயங்களில் உயிருக்கே உலை வைக்கலாம். குழந்தைகளுக்கு குடும்ப சூழலையும் கஷ்ட நஷ்டங்களையும் புரிந்து கொண்டு நடக்குமளவான பக்குவம் இருக்காது இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். குடும்பத்தலைவி என்றாகிவிட்டாலும் கூட ஆசைப்பட்டதை அடைவதற்காய் அடம்பிடிக்கும் குழந்தைத் தனம் மாறவே மாறாது. தாம்பத்ய வாழ்க்கையில் குழந்தை பிறக்கும் பட்சத்தில் இந்தக் குழந்தைக்குப் பிறக்கப் போகிற குழந்தையை முறையாகப் பராமரிக்கத் தெரியாது இது போன்ற குழந்தைத் திருமணங்களால் குழந்தைகளுக்கு இழப்புகள் ஏராளம் என்றார்.
புத்தகப் பை சுமக்கும் குழந்தைகள் சிசுவைச் சுமக்கும் நிலை என்றுதான் மாறும்?  
                             கி.ச.திலீபன்
                            நன்றி: ஆனந்த விகடன்( என் விகடன்)

No comments:

Post a Comment