Wednesday, May 23, 2012

நூலக ஊழியரின் செக்ஸ் டார்ச்சர்

செக்ஸ் ஆசாமி கோபாலக்கிருஷ்ணன்
நூலக ஊழியரின் செக்ஸ் டார்ச்சர்
ஈரோடு மாவட்ட நூலக அலுவலகத்தில் பணி புரியும் அமெச்சுப் பணியாளர் ஒருவரால் பெண் நூலகர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப்படுகிறது என்று தடதடக்கும் புகார்களால் படபடத்துப் போயிருக்கின்றது ஈரோடு மாவட்ட நூலக அலுவலகம்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் முதல்வர் தனிப்பிரிவுக்கு கண்ணீர்க் கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் காரணமாய்  சில தினங்களுக்கு முன் பொது நூலகத்துறை இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் பகிரங்கமான உண்மைகள் பலவும் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன.
இது பற்றி நூலகர்கள் வட்டத்தில் விசாரித்தோம் அப்போது செக்ஸ் டார்ச்சருக்குள்ளான ஒரு பெண் நூலகர் பெயர் வெளியிடக்கூடாது என்கிற நிபந்தனையோடு நம்மிடம் பேசினார் 
‘‘கேட்க யாரும் இல்லைங்கிறதுக்காக இப்படியும் ஆட்டம் போடலாமா? இவருக்கு மனசாட்சி உறுத்தவே உறுத்தாதா? இவரும் அக்கா, தங்கச்சிகளோடதான பிறந்திருப்பாரு என்று எமோஷனலாய்ச் சீறியவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மேற்கொண்டு நம்மிடம் பேசினார் ஈரோடு மாவட்ட நூலக அலுவலகத்துல கிள்ர்க்கா வேலை செய்யுற கோபாலக் கிருஷ்ணனுடைய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லைங்க. அவருடைய இச்சைக்கு நாம இணங்கலைன்னா எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொல்லை கொடுத்து அவர் ஆசைப்பட்டதை அடையணும்னு நினைப்பாரு. சாதாரண ஒரு கிளர்க்கா இருந்தாலும் கண்காணிப்பளரை கைக்குள்ளப் போட்டுக்கிட்டு இவர் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லைங்க. சொல்லவே ரொம்பக் கூச்சமா இருக்கு நூலகப் பணிக்காக அடிக்கடி நான் நூலக அலுவலகம் போவேன் அப்ப இவரு என்னை ஒரு டைப்பாப் பாப்பாரு. அப்பவே அவரு கேரக்டரைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன் அன்னையிலிருந்து நூலக அலுவலகம் போகறத்துக்கே பயப்பட்டு சக நூலகர்களின் துணையோடதான் போக ஆரம்பிச்சேன். ஒரு தடவை என் செல் நம்பருக்குக் கூப்பிட்டாரு ‘‘நான் பார்க்குற பார்வைக்கு அர்த்தமே புரியலையா? இல்லை எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி காட்டிக்கிறியா? நான்தான் அடுத்த கண்காணிப்பாளரா வரப்போறேன் எனக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிப் போய்ட்டீன்னா நீ நூலகமே திறக்க வேண்டாம் எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்’’&னு சொன்னார். இதைக் கேட்டதும் என் கொலையே நடுங்கிடுச்சு இந்த மாதிரி பேசாதீங்கன்னு போனைக் கட் பண்ணிட்டேன். அடுத்த நிமிஷமே மறுபடியும் கூப்பிட்டார் ‘‘என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டீன்னா உனக்குத்தான் இந்த வருஷம் நல் நூலகர் விருது. நீ விரும்புற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கித்தர்றேன். உனக்காக எதையும் செய்யுறேன் எனக்காக கொஞ்சம் அனுசரிச்சுப் போயேன்’’&னு மறுபடியும் டார்ச்சர் பண்ணாரு நான் போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன். அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஆபீஸ் நம்பர்ல இருந்து கூப்பிட்டு ‘‘என்ன நீ சரியா லைப்ரரிக்கு வர்றதில்லையாம் உன் மேல பெட்டிஷன் வந்திருக்கு’’ன்னு ஒரு குண்டைப் போட்டாரு. யார் அனுப்பியிருக்காங்கன்னு கேட்டதுக்கு யாரா இருந்தா உனக்கென்ன இன்னும் இது மாதிரி ஏதாவது பெட்டிஷன் வந்தா உன் வேலைக்கே உலை வெச்சிருவேன்னு மிரட்டிட்டு போனை வெச்சுட்டார். அவரு விருப்பத்துக்கு சம்மதிக்கலைங்கிறதுக்காக வேணுமின்னே அவரே ஒரு பெட்டிஷன் போட்டிருக்கார். இப்படியா எனக்கு பயங்கரமாத் தொல்லை கொடுக்க ஆரம்பிச்சதும் என்னோட கணவர்கிட்ட சொன்னேன் என்னை சமாதானப் படுத்தி தைரியம் கொடுத்தார். எனக்குத்தான் டார்ச்சர் கொடுக்கிறார்னு நினைச்சா ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் நூலகர்கிட்டயும் தன்னோட கை வரிசையைக் காட்டியிருக்காரு. பயணப்படி வாங்கப்போன அந்தப் பொண்ணுகிட்ட ‘‘என் விருப்பப்படி நடந்தீன்னா நீ படியேறி வந்து பயணப்படி வாங்கணும்ங்கிற அவசியமே இல்லை எல்லாம் உன் வீடு தேடி வரும்’’&னு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டு அந்தப் பொண்ணு அரண்டு போயிடுச்சு. எத்தனை பேர்கிட்ட இவருடைய லீலைகளை அரங்கேற்றியிருப்பார்னு தெரியலை பலர் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு மௌனமா இருந்துடுறாங்க ஆனா என்னால இந்தக் கொடுமையை சகிச்சிக்க முடியலை இவருடைய கொட்டத்தை அடக்கியே ஆகணும்’’ என்று கொந்தளித்தார்.                             
மேலும் இது பற்றி அலசுகையில் நூலகர் ஒருவர் நம்மிடம் ‘‘இவரு லேடீஸ் விஷயத்துல வீக்குங்க பெண் நூலகர்கள்ல ஒரளவு அழகா இருக்கிறவங்களை விடவே மாட்டார். யாரோ அழகா கண்ணுக்குப் பட்டிட்டா போச்சு. அப்படித்தான் ஒரு பொண்ணுக்கு போன் பண்ணி ‘‘செம ஸ்ட்ரெக்சரா இருக்க நீ சூப்பர் பீஸ்’’னு சொல்லியிருக்கார் அதைக் கேட்ட அந்தப் பொண்ணுக்கு எப்படி இருந்திருக்கும். பெண் நூலகர்களுக்கு செக்ஸ் டார்ச்சரும் ஆண் நூலகர்களுக்கு மெண்டல் டார்ச்சரும் கொடுக்கிறதுதான் இவரோட வேலையே. பணி மாறுதல், ஊதிய உயர்வு நிலுவை, கடன் சமாச்சாரம்னு எதுவானாலும் இவருக்கு லஞ்சம் கொடுக்காம எதுவுமே நடக்காது. மாவட்ட நூலக அதிகாரி ஒரு பெண்ங்கிறதால அவங்களையே பயமுறுத்தி வெச்சிருக்காங்க. முக்கியமான ஒன்னு நூலகர்களை மதிக்கிறதே இல்லை. நூலகப் பணிக்காக நாங்க அலுவலகம் போனா எங்களை உட்கார வைக்கிறது கூட இல்லை. கேட்டா உட்கார வெச்சு குடும்ப நியாயமா பேசப்போறோம்ங்கிறார் கண்காணிப்பாளர். இதிலும் கொடுமை என்னன்னா ஒரு மாற்றுத் திறனாளி நூலகரைக்கூட உட்கார வைக்கிறதில்லை. ஒரு கிளர்க் இந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறார் கேட்டா எனக்கு சாதகமா பல உயர் அதிகாரிங்க இருக்காங்க என்னை ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறார். அவருக்கு வளைஞ்சு கொடுக்கலைங்கிறதுக்காக ஒரு நூலகரை டிரான்ஸ்பர் பண்ணுற முயற்சியில் கூட இறங்கிட்டார். ‘‘மாவட்ட நூலக அதிகாரி இன்னைக்கு வருவாங்க நாளைக்குப் போவாங்க ஆனா நான் கடைசி வரைக்கும் இங்கேதான் இருக்கப்போறேன் என்னை பகைச்சுக்கிட்டா அவ்வளவுதான்’’னு மிரட்டுவார். இவரைப் பகைச்சுக்கிட்டா காரியம் ஆகாதுன்னு நிறைய பேர் பொறுத்துக்கிட்டிருக்காங்க ஆனா எல்லாருக்கும்  இவர் மேல அதிருப்திதான். யாரோ ஒரு உயர் அதிகாரி சப்போர்ட்லதான் ஆடுறார் அது யாருன்னு கண்டு பிடிக்கணும். நூலகர்களெல்லாம் இவருக்குக் கூளைக்கும்பிடு போடணும்னு நினைக்கிறார் ஆனா அது மட்டும் நடக்காது.
அடுத்ததாய் கோபாலக்கிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது
எல்லாமே சுத்தப்பொய்ங்க. நூலகர்களுக்கு வேலை செய்யத்தான் நாங்க இருக்கோம். நாங்க எதுக்கு நூலகர்களை தரக்குறைவா நடத்தப்போறோம். யாரோ வேணுமின்னே கிளப்பி விட்ட வதந்திதான் இது. நான் இது வரை எந்தப் பெண் நூலகர்கிட்டேயும் அலுவலக சமாச்சாரத்தைத் தவிர்த்த் வேற எதுவும் பேசினதில்லை யாரோ என்னை வேணும்னே வம்புல மாட்டி விடுறாங்க. அதையெல்லாம் நம்பாதீங்க என்றார். 
                                                                          செய்தி: கி.ச.திலீபன்     
                                                                 நன்றி: ஜூனியர் விகடன்
No comments:

Post a Comment