Tuesday, May 22, 2012

ஹைதர் காலம் இது ஓர் இசைப் பொக்கிஷம்தியாகராஜ பாகவதரில் துவங்கி இன்று நம் தமிழ் சினிமா உச்சபட்ச நிலைக்குப் போயிருந்தாலும் கூட இன்னும் அந்தப் பழமை சொல்லும் பாடல்களைக் கேட்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கவே செய்கிறது. இப்படியாக பழமையை விரும்பும் இசைப் பிரியர்களுக்காகவே இருக்கவே இருக்கிறது ஹைதர் காலம் இசையகம்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஹைதர்காலம் இசையகத்தை ஓர் தமிழ் மொழியின் இசைப் பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். லாங் ப்ளே தட்டுக்களில் ஒலித்த பாடல்கள் தொடங்கி பெரும்பாலான பழைய திரைப்படப் பாடல்கள், வரலாற்றுத் தலைவர்களின் சொற்பொழிவுகள், தெருக்கூத்துக் கதைகள், ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகள் என தமிழ் மொழியின் முக்கிய ஒலிப் பதிவுகளைத் தன்னகத்தே கொண்டு நிற்கும் இந்த இசையகத்துக்குப் புறப்பட்டேன்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈரோடு நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த இசையத்தின் முகப்பில் கரும்பலகையில் தினம் ஒரு சிந்தனை என்னும் தலைப்பில் ‘‘பேச்சு என்பது எப்படி இருக்க வேண்டும்? தேவையான இடத்தில் மணிக்கணக்கா பேசணும், தேவையில்லாத இடத்தில் மணிரத்னம் கணக்கா பேசணும்!’’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த இசையகத்தின் நிறுவனர் குணசேகரன் இப்படியாக ஒவ்வொரு நாளும் இது போன்ற ஒவ்வொரு சிந்தனைகளைப் பதிவு செய்வாராம்.
பெயரிலேயே பழமையைக் குறிக்கும் ஹைதர்காலம் இசையகத்தைப் பற்றி 1981&ல் இதனைத் துவக்கிய குணசேகரனிடம் கேட்டேன்: ‘‘திரைப்படப் பாடலோ, மேடைப்பேச்சோ, இலக்கியச் சொற்பொழிவோ தமிழக மக்களின் மனதில் நல்ல கருத்தை விதைக்கிற எந்த ஒரு ஒலித் தொகுப்பாய் இருந்தாலும் அதைப் போற்றிப் பாதுகாத்து பிற்காலங்களில் வர்ற சந்ததியினருக்குக் கொடுக்கணும்ங்கிற நோக்கத்தில 1981ம் ஆண்டு இந்த இசையகத்தைத் துவக்கினேன். பொதுவாய் பேச்சு வழக்குல ‘‘நான் ஹைதர் காலத்து ஆளு’’ன்னு பெரியவங்க சொல்லிக் கேட்டிருப்போம். ஹைதர் காலம்னா பழமையைக் குறிக்குற சொல்லா இருக்கிறதால அந்தப் பேர்லயே இந்த இசையகத்தைத் துவக்கினேன். பெயருக்கு ஏத்த மாதிரி இங்க பழமை நிறைஞ்சு கிடக்கு. பேசும் படங்களுக்கு பிற்பட்ட காலகட்டத்திலிருந்து அத்தனை பாடல்களும் எங்ககிட்ட இருக்கு. அது மட்டுமில்லை காந்தி, நேரு, ஹிட்லர், பாரதிதாசன், ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடுனு அரசியல் தலைவர்களோட குரல்களும் மேடைப்பேச்சுக்களும் எங்ககிட்ட இருக்கு. வாய் வழியாய் சொல்லப்பட்ட கிராமியக் கதைகள், புராணக்கதைகள்னு இன்றியமையாத ஒலிப்பதிவுகளையெல்லாம் வெச்சிருக்கோம். கே.ஆர்.விஜயா, சில்க் ஸ்மிதா, செல்வராகவன், சுந்தர் சி, நெப்போலியன், பாண்டுன்னு பல திரைப் பிரபலங்களும் எங்க கடைக்கு வந்து பழைய பாட்டுக்களை ரெக்கார்டு பண்ணிட்டுப் போயிருக்காங்க. அது மட்டுமில்லாமல் கடை முன்னாடி இருக்கிற கரும்பலகையில தினமும் ஒரு சிந்தனையை எழுதிடுவோம் கடைக்கு வர்றவங்களும் ரோட்டுல போறவங்களும் பார்த்தா கட்டாயம் நின்னு படிச்சுட்டுத்தான் போவாங்க. நான் நிறையத் தேடி கிடைக்காத ஒலிப்பதிவுகளும் இருக்கு அதையெல்லாம் எப்படியும் வாங்கிடணும்ங்கிற முயற்சியில இருக்கேன்’’ என்றார்.
அடுத்ததாய் தற்போது இந்த இசையகத்தை நிர்வகித்து வரும் இவரது மகன் தியாகுவிடம் பேசினேன்: ‘‘புதுப் படப் பாடல்களெல்லாம் இணையதளத்திலேயே வெளியாகிடுது அது மட்டுமில்லாம் எங்க திரும்பினாலும் கிடைக்குது அதனால நாங்க கவனம் செலுத்துறது முழுக்க இந்தப் பழைய பாடல்கள் மேலதான். எங்ககிட்ட இந்த கலெக்ஷனெல்லாம் இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டவங்க வெளி மாநிலத்துல இருந்து வந்து கூட பாடல்களை ரெக்கார்ட் பண்ணிட்டுப் போறாங்க. இப்ப என்னதான் புதுப்பாட்டுக்கள் வந்தாலும் பழைய பாடல்களை விரும்புறவங்க நிறைய பேர் இருக்காங்க அதனால எங்க தொழில் நல்ல முறையில போய்க்கிட்டிருக்கு’’ என்றார்.
இசையகத்திலிருந்து வெளியேறும்போது நமக்குள்ளும் பழமையின் மீதான பரவசம் தோன்றிவிடுகிறது.
                                                          கட்டுரை மற்றும் படங்கள்: கி.ச.திலீபன்
                                                         நன்றி: கல்கி


No comments:

Post a Comment