Tuesday, May 22, 2012

தலை நிமிர வைத்த தமிழனின் சாதனை


மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற போது!
தலைநிமிர வைத்த தமிழனின் சாதனை!
2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றதுமே கிரிகெட் ரசிகர்களின் துள்ளல்களுக்கும் இந்திய மக்களின் உற்சாகத்துக்கும் அளவே இல்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு கிரிகெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ஊக்கப்பரிசு வழங்கி தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடியது இந்தியா. ஆனால் உலகசிலம்பச் சங்கம் நடத்திய இரண்டாவது உலகச்சிலம்பப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஐந்து தங்கப் பதக்கங்களும் இரண்டு வெள்ளிப்பதக்கங்களும் வென்று கோப்பையை தட்டி வந்துள்ளான். தமிழர்களின் வீரக்கலைகளில் முக்கியமான இந்தக்கலையில் உலக அளவில் ஒரு தமிழன் வென்ற இந்த வெற்றியை கொண்டாட மட்டும் ஏனோ எவரும் இல்லை என்பதுதான் வேதனை.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த மெக்கானிகல் இன்ஜினியரிங் மாணவர் பொன்.லோகேஷ். சிலம்பக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் லோகேஷுக்கு அத்துப்படி. கருங்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற்று வரும் இவர் மலேசியாவில் நடைபெற்ற இரண்டாம் உலகச் சிலம்பப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இது பற்றி அவரிடம் பேசினோம்.
‘‘அந்தக் காலத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களெல்லாம் அவர் சுத்தின சிலம்பத்துக்கும் ரசிகர்களா இருந்திருக்காங்க. சிலம்பம்ங்கிறது வெறும் கம்புச்சண்டை மட்டுமில்ல நம் தமிழினம் இந்த உலகத்துக்கு கொடுத்துட்டுப் போயிருக்கிற அரிய பொக்கிஷம். எனக்கு 6 வயசிலிருந்தே சிலம்பத்து மேல அளவுக்கதிகமான் ஆர்வம் இருந்தது. அன்னைக்குக் கத்துக்கத் தொடங்கினதுதான் எனக்கு இப்ப 21வயசாகுது இன்னைக்கு வரைக்கும் பயிற்சி செஞ்சுக்கிட்டே இருக்கேன். கருங்கல்பாளையத்துல 18 ஆண்டுகளாய் இலவச சிலம்பப்பயிற்சி கொடுத்துக்கிட்டிருக்கிற கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப் பள்ளியில பயிற்சி பெற்றுக்கிட்டிருக்கிற நான், பிற மாணவர்களுக்கு கத்துக்கொடுத்துக்கிட்டும் இருக்கேன். முதல் உலக சிலம்பப் போட்டி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடந்தது அதையடுத்து இரண்டாம் உலக சிலம்பப் போட்டி மலேசியாவில் கோலாலம்பூரில் நிலாய் இண்டோர் ஸ்டேடியத்தில் சமீபத்தில்தான் நடந்து முடிஞ்சுது. உலகெங்கிலும் 14 நாடுகள் கலந்துக்கிட்ட இந்தப் போட்டி ரொம்பவே கோலாகலமாய் இருந்தது. மலேசியா போட்டிக்கு நான் தேர்வான போதிலும் மலேசியா போய் வர ரொம்பவே பொருளாதார நெருக்கடி இருந்தது. நாங்க சாதாரண ஏழைக்குடும்பம்தான் எங்க அம்மா ஈரோடு மார்க்கெட்டுல காய் கறி விக்குறாங்க அதனால குடும்பத்துக்கு பெரிய அளவிலான வருமானம் இல்லை. மலேசியா போக வேறு வழியில்லாம எங்க அம்மாவுடைய நகையை அடமானம் வெக்க வேண்டியதாயிடுச்சு. நான் படிக்குற கல்லூரி நிரவாகம் எனக்கு 15ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினாங்க.
மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து நிலாய் இண்டோர் ஸ்டேடியத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் ஆயிற்று பிரம்மாண்டமாய் இருந்தது. உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் கிலாப் சிலம்பம் நிலாய் இணைந்து உலகத்தரத்தோட நடத்திய போட்டி இது. ரப்பர் மேட் போட்டிருந்தாங்க. கணினி மயமான போட்டி. சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் சூப்பர் சீனியர். குத்துமுறை, ஒத்தக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு, தொடுமுறை, குழுப்போட்டின்னு மொத்தம் 7வகையான் போட்டிகள் நடந்தது.
நம்மகிட்ட இருந்து நடுவர்கள் எதிர்பார்க்கிறது. கால் வரிசை, வேகம், அழகு, வீரம் தக்க நேரத்தில் முடிக்கணும் கரெக்டா இருக்கணும், குத்து முறை கம்பில்லாம வெறும் கைகளிலேயே போர் புரியுறதுதான். மலேசியா, சீனா, நேபாள், சிங்கப்பூர், ஈராக், ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, பூடான், பங்களாதேஷ், நைஜீரியா, இலங்கை, உஷ்பகிஸ்தான், பெருனி தருசலம்னு 14நாடுகள் கலந்துக்கிட்ட இந்தப் போட்டியில் நான் 5தங்கமும் 2வெள்ளியும் வாங்கி கோப்பையை வென்றேன். கடும் போட்டியாளர்களுக்கும் மத்தியில் நம் தமிழ்க்கலைகளைத் தமிழர்கள் இன்னும் போற்றிப் பாதுக்காக்குறோம்னு நிருபிக்குற முயற்சிதான் என்னை வெற்றியாளனாக்கியதுன்னு சொல்லணும்’’ என்று சொன்ன பொன் லோகேஷின் முகத்தில் புன்னகை.
இது தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய வெற்றி!
                                                          கட்டுரை மற்றும் படங்கள்: கி.ச.திலீபன்
                                                                  நன்றி: கல்கி


No comments:

Post a Comment