Monday, April 17, 2017

பழங்குடிகளே முதல் கம்யூனிஸ்டுகள் - நக்கீரன் நேர்காணல்

பன்முக அடையாளம் கொண்டவர் நக்கீரன். பணக்கண்ணோட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பெருநிறுவனஙக்ளின் இலாபநோக்கு மற்றும் அதீத நுகர்வு வேட்கையின்பால் நிகழ்த்தப்படும் காடழிப்பை ‘காடோடி‘ நாவல் மூலம் பதிவு செய்தவர். தாவரங்கள், காட்டுயிர்கள், பழங்குடிகள், சிற்றினங்கள் என எல்லாமும் ஆனதுதான் காடு என்பதை வாசகன் மனதில் ஆழமாய் பதித்த விதத்தில் காடோடி முக்கியத்துவம் பெறுகிறது. காடழிப்பு குறித்த இவரது கட்டுரையான ‘மழைக்காடுகளின் மரணம்’ virtual water எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்‘ ஆகிய கட்டுரைகள் சிறு நூல்களாக வெளிவந்து பரவலான கவனம் பெற்றவை. கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய தளங்களிலும் ‘பசுமை இலக்கியம்’ எனும் சூழலிய்ல எழுத்தைக் கொடுப்பவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ளது இவரது வீடு. ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் பறவைகளின் கீச்சிடல்களை அவ்வப்போது கேட்டவாறே அவருடன் உரையாடினேன்.
நக்கீரன் (ஓவியம்: நாகா)


போர்னியோ வனப்பகுதியில் தாங்கள் பணிபுரிந்த அனுபவங்களின் புனைவு வடிவம் காடோடி. இதனை எழுதுவதற்கான தேவை குறித்து நீங்கள் உணர்ந்தது எப்போது? 

போர்னியோ காட்டுக்குள் மரம் வெட்டும் நிறுவனத்தில் நான் புரிந்தேன். அந்தப் பணியில் இணைவதற்கு முன்பு எனக்கு சூழலியல் குறித்தான அறிவு மற்றும் காட்டின் மீதான புரிதலெல்லாம் இருக்கவில்லை. சாதாரணமான மனிதனாகத்தான் நான் காட்டுக்குள் நுழைந்தேன். பொதுவாக காடு என்றால் மரங்கள், விலங்குகள் மற்றும்  பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பு என்பதுதான் தெரியும். ஆனால் பலர் அறிந்தேயிராததுதான் காடு. அதன் களிகையில் மட்டும் 14 லட்சம் வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கக் கூடிய அற்புதமான உலகம் காடு. அசல் பழங்குடிகளுடன் பழகும்போதுதான் காட்டைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படும். அவர்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கும்போதே நமக்கு அது புரிய வரும். பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத விழுமியம் கொண்டவர்கள் அவர்கள். நாங்களோ ஆடம்பர நோக்கத்துக்காக காடுகளை அழிப்பதற்காகச் சென்றிருந்தோம். பணம் என்கிற அற்பமான ஒன்றுக்காக எத்தனையோ பெரு வளங்களை இழக்கிறோம் என்பதை அவர்களுடன் பழகிய போதுதான் என்னால் உணர முடிந்தது. அப்போது என்னுள் எழுந்த மன எழுச்சி காடு சார்ந்த உயிரினங்களை பணத்துக்காக அழிப்பதற்கு ஒப்பவில்லை. ஆகவேதான் அப்பணியிலிருந்து வெளியேறினேன். பணிக்காலத்தில் நான் கற்றுணர்ந்த காடும் அதனூடான அனுபவங்களையும் எனது  நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அதனைக் கேட்டவர்கள் எல்லோரும் அதனை எழுதும்படி சொன்னார்கள். போர்னியோ காட்டின் அழிவைக் களமாகக் கொண்டாலும் இங்குள்ள சூழலுக்கும் அது பொருந்திப் போகும் என்பதால் விழிப்புணர்வு நோக்கோடுதான் அதனை நாவலாக்கினேன். நான் எதிர்பார்த்துக்கும் மேலாக அந்நாவல் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.
காடோடி படித்து விட்டு 40ஏக்கர் சொந்த நிலத்தில் ஒருவரும், 22 ஏக்கர் காட்டுப்பகுதியில் ஒருவரும் மரம் நடும் பணியை துவங்கியிருப்பதாகக் கூறினார்கள். எழுத்து செய்ய வேண்டிய பணி இப்படியாகத்தான் இருக்க வேண்டும். நைஜீரியக் கவிஞர் கென் சரோ விவாவை எனது முன்னோடியாகப் பார்க்கிறேன். எழுத்தாளனின் பணி உடற்பிரச்னையை எக்ஸ்ரே எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல. அதனை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர். எழுதி முடித்து விட்டு கடமை முடிந்து விட்டதாக உட்கார்ந்து விடக்கூடாது. களத்தில் இறங்க வேண்டும். பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் களப்பணியிலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

காடோடியில் போர்னியோ பழங்குடிகளின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக்கூறுகளைப் பதிவு செய்திருக்கிறீர். பொதுவாகவே பழங்குடிகள் காட்டின் மீது கொண்டிருக்கும் புரிதல் எத்தகையது?

பழங்குடிகளின் புரிதல் என்பது நம்முடைய புரிதலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் நமது உடலை தனித்தனி உறுப்புகளாகப் பார்ப்பதில்லை. முழு உடலாகத்தான் பார்க்கிறோம். அது போலவே அவர்களும் காட்டை மரங்கள், ஓடைகள், விலங்குகள், பழங்குடிகள் என தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. காடாகத்தான் பார்க்கிறார்கள். காட்டில் வாழும் பல உயிரினங்களில் தாமும் ஓர் உயிரினம் என்கிற புரிதல் உடையவர்கள் அவர்கள். நமது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ‘திணைப்பொணம் எரித்தல்‘ எனும் காட்டழிப்பு வேளாண்மையை அவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களது உணவுக்குத் தேவைக்குத் தகுந்தாற்போல், வேளாண்மைக்குத் தேவையான பரப்புக்கு மரங்களை வெட்டி, எரித்து விடுவார்கள். எரித்த இடங்களில் புல் முளைக்கும். அதை மான்கள் சாப்பிட அனுமதிப்பார்கள். பிறகு அங்கு வேளாண்மை செய்யத் தொடங்குவார்கள். மூன்று ஆண்டுகள் மட்டும் வேளாண் செய்து விட்டு, காட்டை வளர அனுமதிக்கும் பொருட்டு இடம் பெயர்ந்து விடுவார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட சில மரங்களை வெட்டுவதில்லை. குறிப்பிட்ட சில வகையான உயிரினங்களை வேட்டையாடுவதில்லை. போர்னியோ பழங்குடிகள் பிலியன் மரத்தை வெட்டமாட்டார்கள். கடல் நீரால் அரிப்புக்கு ஆளாகாத தன்மை கொண்ட பிலியன் மரத்தை கடல் மேல் வீடுகட்டுவதற்கான அடித்தளத் தூண்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்தத் தன்மையின் காரணமாக பிலியன் மரம் இன்றைக்கு உலகில் மிகவும் விலை மதிப்புள்ளதாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் பழங்குடிகள் அம்மரத்தை வெட்டவில்லை. ‘கேளையாடு‘ எனும் மான் வகையை அப்பழங்குடிகள் வேட்டையாடுவர். அந்த மான்கள் எப்போதும் தன் இணையோடுதான் இருக்கும். இணையில் ஒன்றை வேட்டையாடி விட்டால், அதைத் தேடித்திரியும் மற்றொன்றை எளிதாக வேட்டையாடி விடலாம். ஒரு முறை அப்படியாக கேளையாட்டை வேட்டையாடிக் கொண்டு வந்திருந்தனர். அதைப் பார்த்த பழங்குடி ஒருவர் ’இதனை வேட்டையாடியிருக்கக் கூடாது’ என்றார். காரணம் அது கேளையாட்டிலேயே இன்னொரு வகையான மான். அந்த வகை மான்களை அவர்கள் வேட்டையாடுவதில்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள அரிய இனம் என்பதால் அதனை வேட்டையாடியதற்காக அவர் வருந்தினார். காட்டின் மீதான ஆழமான புரிதலைக் கொண்டவர்கள்தான் பழங்குடிகள்.

அப்பழங்குடிமக்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

மரம் வெட்டும் நிறுவனத்தின் பணியாளனாக சென்ற எனக்கு ஒவ்வொரு மரத்துக்குமான டாலர் மதிப்பு மட்டும்தான் தெரியும். மரம் என்பது நம்மைப் போன்ற உயிரினம் என்பதை அவர்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். காட்டை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற அறிவை அவர்களிடமிருந்துதான் பெற்றேன். ‘எல்லா மரத்தையும் வெட்டிட்டா இந்த ஒரு தலைமுறைதான் பணம் பார்க்கும். வெட்டாம விட்டா பல தலைமுறை பணம் பார்க்கலாம்’ என்று ஒரு பழங்குடிப் பெண் சொல்வது காடோடியில் இடம்பெற்றிருக்கிறது. நாகரிக மனிதர்களின் பணக்கண்ணோட்டத்தில் பார்த்தாலுமே கூட மரத்தை வெட்டுவது வருவாய் ரீதியிலும் இழப்புதான் என்கிற பழங்குடிப் பார்வை எவ்வளவு அறிவார்த்தமானது.

காடோடியில் போர்னியா காட்டின் தாவரங்கள், உயிரினங்கள் குறித்த பதிவும் அடக்கம். தாவரவியல், உயிரியல் சார்ந்த அறிவு வாழ்பனுபவத்தின் வாயிலாகக் கிடைத்ததா?

நாவல் எழுத எடுத்துக் கொண்ட ஐந்தாண்டு காலங்களில் இரண்டாண்டு காலம் பெயர்களையும், சம்பவங்களையும் மீட்டெடுப்பதற்காகவே செலவிட்டேன். சுற்றுலாப்பயணி போல் ஒரு காட்டுக்குள் ஒன்றிரண்டு நாட்கள் சுற்றி விட்டு வந்தால் தாவரங்கள், விலங்குகள், பறவைகளின் பெயர்களை முழுமையாக அறிவதற்கும், நினைவில் வைத்திருப்பதற்கும் வாய்ப்பில்லை. நான் பணியாற்றிய காலகட்டத்தில் ரேடியோவைத் தவிர பொழுதுபோக்கு எதுவுமில்லை. ரேடியோவே கூட செய்திகளை அறிந்து கொள்வதற்காக மட்டும்தான் பயன்பட்டு வந்தது. பொழுதுபோக்குக்கான வழிகள் ஏதும் இல்லாத சூழலில் காட்டை கவனிப்பதுதான் நேரத்தைக் கடத்தும் வழியாக இருந்தது. எல்லோருக்கும் தங்களது இளமைப்பருவ வாழ்க்கை நன்கு பதிந்து போயிருக்கும். என் இளமைப்பருவம் போர்னியோவில்தான் கழிந்தது என்பதால் அந்த நினைவுகள் ஆழமாகப் பதிந்திருந்தன. ஒவ்வொரு மரத்திலும் அதன் பட்டைகள் மற்றும் உள் அங்கங்கள் என்ன நிறத்தில் இருக்கும் என்பது வரை பலவற்றையும் அறிந்திருந்தேன். இரவு நேரத்தில் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டையாடப்படும் விலங்குகள் பற்றியான அறிதல், பகல் நேரத்தில் பார்க்கும் விலங்குகளின் பெயர் மற்றும் குணாதிசயங்கள் எல்லாம் பதிந்திருந்தன. இந்த நேரடியான அறிதலால்தான் ஒராங்குட்டான், பேய்க்குரங்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நுணுக்கமாக விவரிக்க முடிந்தது. எழுதப்பட்டதைக் காட்டிலும் நாவலில் விட்டுப்போனவைகள்தான் அதிகம். உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த ஆழ்ந்த விவரணைகளுக்குள் செல்லும்போது இது ஒரு வகையில் உயிரியல் விளக்க நூலாக  அமைந்து விடுமோ என்கிற பயமும் இருந்தது. காடு என்பது எல்லாம் சேர்ந்தது என்பதை உணர்த்துவதே எனது நோக்கமாக இருந்ததால் பலவற்றை தவிர்த்து விட்டேன். 8 வகை இருவாட்சிகளை போர்னியோவில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அது குறித்து முழுவதையும் காடோடியில் எழுதவில்லை. அபூர்வமான பறவைகள் மற்றும் யானைகள் பற்றியும் எழுதவில்லை.

பழங்குடிகளின் காடு சார்ந்த வாழ்வுரிமை குறித்துப் பேசும்போதெல்லாம் ‘’பழங்குடிகள் காட்டிலிருந்து வெளியேறி நாகரிக வாழ்க்கை வாழக்கூடாதா? என்கிற எதிர்க்கேள்வி எழுப்பப்படுகிறது. நாகரிகவாதத்தின் எதிராளிகளாக சூழலியளார்கள் பார்க்கப்படும் சூழலை எப்படி எதிர்கொள்வது?

இது போன்று பேசுபவர்களை முதலாளித்துவப் பார்வையுடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதாரம் மட்டும்தான் வாழ்க்கை என்று பார்க்கும் பொருள்மயப் பார்வை இது. பழங்குடிகள் குறித்த ஆழமான புரிதல் உடையவர்கள் இது போன்ற கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் காட்டைக் கைப்பற்றத் தடையாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்களுக்கு நகர நாகரிக சிந்தனைகளைப் புகுத்தி அவர்களை வெளியேற்றுவதன் மூலம் அந்நிறுவனங்கள் தனது இயற்கை வள வேட்டையை ஆரம்பித்து விடும். பழங்குடிகள் வெளியேற வேண்டும் என்பதற்குப் பின்னுள்ள சுரண்டல் அரசியலோடுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். ஒரு கருத்தரங்கில் “உலகிலேயே அதிக செல்வங்கள் கொண்ட பழங்குடி மக்கள்தான் மிகவும் ஏழ்மையில் உள்ளனர்” என்று ஒருவர் பேசினார். அவரது கருத்தை மறுத்தேன்.’பழங்குடிகள் ஏழைகள் என்பதை எந்த அளவீட்டில் சொல்கிறீர்கள்? பணம் உள்ளவன் பணக்காரன். இல்லாதவன் ஏழை என்கிற சமவெளி மனிதர்களின் பார்வையைத் தவிர்த்து விட்டுப் பழங்குடிகளைப் பாருங்கள்” என்றேன். காட்டுக்குள் வாழும் ஒரு மனிதனுக்கு பணத்துக்கான தேவை என்பது அறவே இல்லை. மற்ற உயிர்கள் போல் காட்டுக்குள்ளேயே வாழ்ந்து, அங்குள்ள உணவுகளை சேகரித்து உண்ணும் அவர்களுக்கு எதற்குப் பணம்? பணம் இல்லாத காரணத்தால் அவர்களை ஏழைகள் என்று சொல்லி விட முடியுமா? பசுமை வேட்டை நடந்த போது நேரடியாகக் களத்துக்குச் சென்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது  என்னவென்றால்
‘‘ஆயுதம் கொண்டு இவர்களை வெல்ல முடியாது. இம்மக்களிடம் பேராசை அறவே இல்லை. இவர்களை வெல்வதற்கு வீட்டுக்கு ஒரு  தொலைக்காட்சிப்பெட்டி கொடுத்தால் போதுமானது’’ என்றார். முதலாளித்துவம் கட்டமைத்திருக்கிற நாகரிகத்தை உள்ளே நுழைத்தாலே அவர்களை காட்டை விட்டு வெளியேற்றி விடலாம். இது போன்ற முதலாளித்துவ சிந்தனை உடையவர்கள்தான் பழங்குடிகள் காட்டை விட்டு வெளியேறி நாகரிகமாக வாழ வேண்டும் என்கிற குரலை எழுப்புகின்றனர்.
பழங்குடிகள் காட்டை விட்டு வெளியேறி வாழ்வதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாகரிக மனிதர்களின் நோய்க்கிருமிகளை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களது உடலில் இருக்காது.  ’துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு‘ என்கிற நூலில் இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மீது நோய்க்கிருமிகளைப் பரப்பிக் கொன்ற வரலாறு பதியப்பட்டுள்ளது. பழங்குடிகள் இல்லாத காடு என்கிற கொள்கையே பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்காகத்தான். பழங்குடிகளிடம் பொருள்மயச் சிந்தனை கிடையவே கிடையாது. தேவைகளுக்கும் மேல் சேர்த்து வைக்கும் ஆர்வமும் அவர்களுக்கு இல்லை. பழங்குடிகள் உணவு சேகரிக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தனியுடைமைச் சிந்தனை கிடையாது. வேட்டையாடிய இரையை எல்லோரும் பங்கிட்டுச் சாப்பிடும் அவர்கள்தான் உலகின் முதல் கம்யூனிஸ்டுகள். உணவு சேகரிப்பு சமூகத்துக்கும், உணவு உற்பத்தி சமூகத்துக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. உணவு சேகரிப்புச் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடிகளை உணவு உற்பத்திச் சமூகமாக மாற்றுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பழங்குடிகள் காடுகளிலிருந்து நகரங்களை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். காட்டுக்குள் பொதுவுடைமை வாழ்க்கை வாழ்ந்தவனால் நாட்டின் தனியுடைமைச் சிந்தனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாமும் எல்லோருக்கும் பொதுவானது என்பதைக் கற்று வளர்ந்தவன் பணத்தை மையப்படுத்திய சமூகத்தில் வாழ முடியுமா? பழங்குடிகள் காட்டை விட்டு வெளியேறி நாகரிக வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் எது நாகரிகம் என்கிற கேள்வி முன் நிற்கிறது. நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நாகரிகம் என்பது உண்மையான நாகரிகம் அல்ல. நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக இருக்கிறது நமது நாகரிகம். அப்படியிருக்கையில் நம்மைப் போன்றே பழங்குடி மக்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு  நுகர்வோராக்கும் சிந்தனைதான் இது.   

இந்த விமர்சனத்தை நீங்கள் நிச்சயம் கடந்துதான் வந்திருப்பீர்கள். காடோடி ஓர் ஆவணம் போன்ற தோற்றத்தை அளிப்பதாக எழும் விமர்சனத்துக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

காடோடியை ‘ஆவணநாவல்’ என்கிற வகைமைக்குள் பொருத்திக் கொள்ளலாம். மேலை நாட்டு இலக்கியங்களிலேயே Docu novel என்கிற பிரிவு இருக்கிறது. ஜோ.டி.க்ரூஸின் கொற்கை, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், பூமணியின் அஞ்ஞாடி, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், இரா.முருகவேளின் மிளிர்கல் மற்றும் முகிலினி ஆகியவற்றை நாம் ஆவண நாவல் என வகைப்படுத்தலாம். புனைவிலக்கியத்தை விடவும் ஆவண நாவலை எழுதுவதற்கு மிகப்பெரும் உழைப்பைக் கொடுக்க வேண்டும். தமிழில் வெளிவந்துள்ள ஆவண நாவல்கள் எல்லாமும் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. வரலாற்று நாவல்கள் போல் ஆவண நாவல்களும் ஒரு வகைமைதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆவண நாவல் என்பதற்காக தகவல்களை மட்டுமே தொகுத்த அபுனைவாக அல்லாமல்ம், தகவல்களினூடாக புனைவைச் சாத்தியப்படுத்துவது ஒரு கலை. சங்க இலக்கியத்திலிருந்தே இம்மரபு இருந்து வருகிறது. நாம் வாழக்கூடிய உலகத்தில் இருப்பவற்றை ஆவணமாகப் பதிவு செய்வதில் தவறொன்றுமில்லை. 

காடோடி நாவலின் மூலப்பிரதியிலிருந்து 460 பக்கங்கள் நீக்கப்பட்ட பிரதிதான் வெளியாகியிருக்கிறது. அந்த 460 பக்கங்களில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது? 

காடு என்பது மரம் மற்றும் விலங்குகளின் தொகுப்பு கிடையாது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்நாவலை எழுதினேன். 800 பக்கங்களுக்கு எழுதிய நாவலை 7 முறை திருத்தி 340 பக்கங்களாகச் சுருக்கினேன். இன்றைக்கு அதிக பக்கங்களை உடைய நூல்களை வாசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதால்தான் குறைவான பக்கங்களில் கொடுக்க நினைத்தேன். ஆனால் 800 பக்கங்களில் உணர்த்த வேண்டியதை 340 பக்கங்களுக்குள்ளேயே உணர்த்தி விட்டதுதான் காடோடியின் வெற்றி. பல்வேறு நாடுகளிலிருந்து பணிக்காக வந்து முகாமில் தங்கியிருந்தவர்களின் வாழ்க்கை சார்ந்த பதிவுகளைத்தான் நீக்கியிருந்தேன்.

வன அழிப்பு மற்றும் சுரண்டல்கள் இன்றைய இந்தியாவில் எந்தளவுக்கு இருக்கிறது?

உலகமயமாக்கலுக்கு முன்பே வன அழிப்பும், சுரண்டல்களும் நடந்தேறி விட்டன. நமது இலக்கியங்களில் காவிரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான குறிப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இன்றைக்குக் காவிரி வறண்டு போனதற்கான காரணம் அணைகள் கட்டப்பட்டதுதான் என்கிற தவறான கருத்து இங்குள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குடகு மலையை அழித்து காபித்தோட்டங்களை உருவாக்கினார்கள். மரங்கள் அழிப்புக்கான தொடக்கப்புள்ளி அதுதான். நீலகிரியில் சோலைக்காடுகளை அழித்து தேயிலைத் தோட்டத்தை உருவாக்கினார்கள். சோலைக்காடுகள் மழைநீரைத் தன் வசம் தக்க வைத்துக் கொள்பவை. மழை பெய்யாத காலங்களில் அவை தேக்கி வைத்திருக்கும் மழைநீரைக் கசிய விடும். இதனால்தான் கடும் கோடையிலும் நதிகள் வற்றாமல் இருந்தன. அப்படிப்பட்ட சோலைக்காடுகளை தேயிலை யூகலிப்டஸ் நட்டார்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஓடைகள் அப்போது அழிக்கப்பட்டன. காடுகளை அழித்ததன் காரணமாகத்தான் மழை அளவு குறைந்துள்ளது என்கிற விழிப்புணர்வை சூழலியலாளர்கள் ஏற்படுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை கடந்து வந்த சட்டமன்றத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் ஒரு சிறப்பம்சம் இருந்தது. அனைத்துக் கட்சியினரும் தங்களது தேர்தல் அறிக்கையில் சூழலியல் பிரச்னைகளைச் சேர்த்திருந்தார்கள். அது பசுமை இலக்கியத்தின் வெற்றி என்று சொல்லலாம்.

பசுமை இலக்கியம் என்கிற வகைமை உருவெடுப்பதற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்தவை எவை?

பசுமை இலக்கியம் என்கிற வகைப்பாடாகவெல்லாம் அது உருவெடுக்கவில்லை. 90க்குப் பிறகான உலகமயமாக்கலின் விளைவுகளாக சூழலியல் பாதிப்புகளைச் சந்திக்கிறோம். ஆரம்பத்தில் நாம் வளர்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தது போலியானது என்பதை 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர ஆரம்பிக்கிறோம். அதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிய போது எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகள் வாயிலாக அதனை முன் வைக்கின்றனர். இப்படியாக இயல்பாக, பரவலாக தொடங்கி எழுதப்பட்டதுதான் பசுமை இலக்கியம். பெண்ணியம், தலித்தியம் ஆகியவற்றை எழுதுவதற்கான நெருக்குதல் கால சூழலில் ஏற்பட்டது போல் சூழலியல் குறித்தான எழுத்தும் காலத்தால் தீர்மானிக்கப்பட்டதுதான். முதலில் அபுனைவில் தொடங்கி பின்னர் புனைவாக உருவெடுக்கிறது. காடு மற்றும் காட்டுயிர்கள் பாதிப்பில் தொடங்கிய இவ்வெழுச்சி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கு பிறகு வீரியமடைந்தது. கெயில், மீத்தேன், நியூட்ரினோ என சூழலுக்கு விரோதமானவற்றின் மீதான போராட்ட உணர்வைத் தூண்டுகிற எழுத்தாகவும் உருப்பெற்றது. சூழலியல் போராட்டத்தின் எழுத்து வடிவமே பசுமை இலக்கியம் என்கிற வகைப்பாடாக மாறியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அயல் மொழியில் வெளியான சூழலியல் சார் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்கான தேவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலம் தனக்கான தேவையை தானே நிவர்த்தி செய்து கொள்ளும் என்கிற விதியின் அடிப்படையில் பார்த்தோமென்றால் உலகமயத்தின் பிடியில் சிக்குண்டிருக்கும் இக்காலத்தின் தேவை பசுமை இலக்கியம் எனலாம்.  

தமிழ் இலக்கியத் தளத்தில் பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் ஆற்றி வரும் பங்கு எத்தகையது?

பசுமை இலக்கிய எழுத்தாளர்களுக்கு இரண்டு சவால்கள் இருக்கிறது. அரசு, அதிகாரம், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துதான் தங்கள் எழுத்தை முன் வைக்கிறார்கள். இலக்கிய எழுத்தாளர்கள் அது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டார்கள். நெருக்குதல் இருந்தாலும் சூழலியல் குறித்தான விழிப்புணர்வு மற்றும் இழந்து போன கலைச்சொற்களை மீட்டெடுக்கும் பணி எங்களது முதன்மையானதாக இருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகளின் வீச்சு எந்தளவுக்கு இருக்கிறது?

நவீன இலக்கியங்கள் மேற்கத்திய இசங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. முற்போக்கு இலக்கியம் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பசுமை இலக்கியம் என்பது நமது நிலம் மற்றும் பாரம்பர்ய வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இழந்த சொற்களை மட்டுமல்ல இழந்த வரலாற்றையும் மீட்டெடுத்தல் இதன் முக்கியப் பணியாக இருக்கிறது. ஐந்திணைப் பகுப்பு என்பது இன்றைக்கு பழங்குடிகளிடம் கொள்கை அளவில் மட்டுமே இருக்கிறது. அப்படியிருக்கும்போது அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டிய இனம் தமிழினம். குறிஞ்சியும் முல்லையும் கெட்டுப்போனால் அது பாலை ஆகும் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் மருதமும் நெய்தலும் கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது. பாலை என்பது தற்காலிக நிலம்தானோ தவிர தனித்த நிலம் கிடையாது. இன்றைய சூழலில் நாம் பாலையை தனித்த நிலமாக்குவதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்புவதற்கான உள் அசைவை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதால் பசுமை இலக்கியங்கள் வாசகர்கள் மனதுக்கு நெருக்கமானதாகிறது.

காடோடியின் களம் போர்னியோ வனப்பகுதியாக இருந்தாலும் அதை நமது மேற்குத்தொடர்ச்சி மலையின் காடுகள் அழிப்போடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தமிழ் பசுமை இலக்கியத்தைப் பொறுத்த வரை எங்கே சுற்றினாலும் அதன் வேர் தமிழக்த்தில்தான் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் சூழலியல் சார்புடைய புனைவு, அபுனைவுகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. எழுத்து என்பது செயல்பாடுகளை நோக்கித் தள்ளும் உந்து சக்தியாக இருக்க வேண்டும். இன்றைக்கு இளம் தலைமுறையினர் பலரும் ஆக்கப்பூர்வமான சூழலியல் செய்ல்பாடுகளை களத்தில் இறங்கி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழில் எந்த வகைமை இலக்கியமும் செய்யாத இச்சாதனையை பசுமை இலக்கியம் செய்திருக்கிறது என்பதை பெருமையாகவே சொல்லலாம். ஜோடி க்ரூஸ்-ன் ஆழி சூழ் உலகு ச.பாலமுருகனின் சோளகர்தொட்டி போன்ற பெயர் பெற்ற நூல்கள் எல்லாம் சூழல் சார்ந்த நூல்கள். இவர்கள் யாரும் பெரிய எழுத்தாளர்கள் கிடையாது. தன்னுள் உணர்ந்த பாதிப்பின் வெளிப்பாடு எழுத்தாக உருவாகுகிறது. மார்க்சிய நூல்களில் கூட சூழலியல் சார்ந்த மொழிபெயர்ப்புகள் வெளி வருகிறது. ஜே.சி.குமரப்பா உள்ளிட்ட பொருளியல் அறிஞர்கள் கவனம் பெறுகிறார்கள். பசுமை இலக்கியம் காலத்தின் தேவையாக இருப்பதுதான் இவற்றுக்குக் காரணம்.

பசுமை எழுத்தாளர்கள் தமிழ் கலைச்சொற்களை உருவாக்கவும் இழந்த சொற்களை மீட்டெடுக்கவும் செய்கின்றனர். ’காடோடி’ ‘கவிகை’ ‘மறைநீர்’ மாதிரியான கலைச்சொற்களை உங்களது எழுத்துகளின் வாயிலாக அறிய நேர்கிறது. கலைச்சொற்களின்  தேவையை நாம் எந்த நோக்கில் அணுக வேண்டும்?

பண்டிதர்கள் மற்றும் தமிழ் புலவர்கள் மொழியைத் தூக்கிப் பிடிப்பது போல் நாங்கள் நமது மொழி என்கிற காரணத்துக்காக மட்டும் அதனை முன் நிறுத்தவில்லை. மொழியை அகழாய்வு செய்து பார்த்தோமென்றால் மொழியின் வரலாறுக்குள் அதன் இனத்தின் வரலாறும் அடக்கம். சூழலுக்கும் மொழிக்குமான உறவு மிகவும் நெருக்கமானது,. பல்லுயிர்ப்பெருக்கம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் மொழி மற்றும் அதன் சொற்கள் வளமாக இருக்கும். வெப்பமண்டல நாடுகளில்தான் பல்லுயிர்ப்பெருக்கம் அதிகமாக இருக்கும். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில்தான் மொழிகள் அதிகம். ஆங்கிலம் என்பது பல்லுயிர்ப் பெருக்கம் இல்லாத மொழி. உதாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கு புலியை டைகர் என்றும் யானையை எலிஃபெண்ட் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம். தமிழில் யானையைக் குறிப்பதற்கு முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கிறது. புலியைக் குறிக்கு பனிரெண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கிறது. யானையையும் புலியையும் பார்த்தேயிராத நாட்டவனின் மொழியை நாம் பயன்படுத்தும்போது நமது மொழியில் உள்ள இத்தனைச் சொற்களையும் நாம் இழந்து விடுகிறோம். புலி என்கிற பெயர் புல்லுதல் (முன்னங்காலால் அறைதல்) என்பதனைக் குறிக்கும் காரணப்பெயராக இருக்கிறது.  டைகர் என்கிற சொல்லுக்கு என்ன காரணம் இருக்கிறது? ஐரோப்பிய மனிதன் மெசபடோமியாவில் உள்ள டைகரிஸ் நதிக்கரையில்தான் முதன் முதலாக புலியைப் பார்க்கிறேன். ஆகவே அதற்கு டைகர் எனப் பெயர் வைத்து விட்டான். நமது மொழியில் உள்ள ஒவ்வொரு பெயர்களும் அதனதன் பண்புகளின் அடிப்படையிலானது. புல்லுதல் என்பதுதான் புலி என்பது, தமிழ் இனத்தின் விலங்கு புலி என்பதற்கான ஆதாரம். புலி என்னும் ஒரு சொல்லை இழப்பதன் மூலம் பெரும் வரலாற்றையே இழக்கிறோம்.

நவீன காலத்தில் புதிதுபுதிதாக நிறைய பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு தமிழ் மொழியில் புதிய கலைச்சொற்களை உருவாக்குதல் என்பது நாம் நமது மொழிக்கு ஆற்ற வேண்டிய கடமை. ஆற்றல் உள்ள மொழியை செழுமைப்படுத்துவது எழுத்தாளர்களின் கடமை. தியடோர் பாஸ்கரன் அருமையாகச் சொல்வார் நாம் முதுகுக்குப் பின் ஒரு வங்கியையே வைத்துக் கொண்டு வேற்று மொழியிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று.

சூழலுக்கும் மொழிக்குமான தொடர்பை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு பப்புவாநியூகினியா நாட்டை முன்னுதாரனமாகச் சொல்லலாம். உலகிலேயே இந்நாட்டில்தான் அதிக மொழி புழங்குகிறது. இதற்குக் காரணம் அங்கு சூழல் அழியாமலும்  சிதையாமலும் இருப்பதுதான். பல்லுயிர்ப்பெருக்கம் உள்ள இடத்தில் மொழி வளம்பெறும். ஒரு பூ மொட்டிலிருந்து பூப்பதற்குள் அதன் நிலைகளைக் குறிக்க நனை, முகை, அரும்பு, மலர், அலர், வீ என இத்தனை பெயர்கள் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் ஃப்ளவர் எனும் ஒரு வார்த்தையில் இதனை நாம் சுருக்கி விடுகிறோம். சூழலுக்கு நெருக்கமாக வாழ்ந்ததால்தான் பூ மலர்வதற்கான நிலைகளை கவனித்து அதற்கான பெயர்களையும் சூட்ட முடிந்திருக்கிறது. மாட்டு வண்டி இன்றைக்கு வழக்கொழிந்து போய் விட்டது. மாட்டு வண்டிக்கென நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. மாட்டு வண்டியை இழக்கும்போது அந்த சொற்களையும் நாம் இழந்து விடுகிறோம். ஆனால் இங்கு மாறாக புலியை நாம் இழக்கவில்லை ஆனால் அதைக் குறிக்கும் சொற்களை மட்டும் இழந்து கொண்டிருக்கிறோம். நூற்றுக்கணக்கான சொற்களை பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள், உருவாக்கியிருக்கிறார்கள். இது காலத்தின் தேவை.

கலைச்சொற்களை பொதுமைப்படுத்துவதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் தேவை? எந்த வழிகளில் நாம் கலைச்சொற்களைப் பெறவும் உருவாக்கவும் முடியும்?

கலைச்சொற்களை மக்களின் புழங்கு மொழியில் உருவாக்கும்போதுதான் அது வெற்றியடையும். இதற்கு நாம் மலேசிய - சிங்கப்பூர் தமிழர்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம். மலேசியா மற்றும் சிங்கப்பூரின் அரசியல் கட்டமைப்பு அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் கலைச்சொற்களை அங்குள்ள ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து புழக்கத்துக்குக் கொண்டு வருகின்றன. கலைச்சொற்களை உருவாக்குவதிலும், தமிழின் வளர்ச்சியிலும் அவர்கள் காட்டும் முனைப்பு அபாரமானது. தமிழ் எழுத்துரு அங்குதான் கண்டறியப்பட்டது. வானொலி, தொலைக்காட்சி, இணையம் என இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் இது போன்ற பல கலைச்சொற்கள் மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் உருவாக்கப்பட்டதுதான். அவர்கள் கைப்பேசி, மின்மடல், செய்மதி (செயற்கைக்கோள்) அழைப்பாணை (சம்மன்) போன்ற நல்ல தமிழை இயன்றளவும் பயன்படுத்துகின்றனர். போர்னியோவில் மலேசியச் செய்திகள் கேட்பதின் வாயிலாக எனது மொழி அறிவு வளப்பட்டது.

மலேசியாவில் உருவாக்கப்படும் கலைச்சொற்களை அந்நாட்டுக் கலாச்சாரத்துறையும், கல்வித்துறையும் அங்கீகாரம் அளித்து அதனைப் பரவலாக்கம் அடைய வழிவகை செய்கின்றன. அது போல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். அதற்கடுத்த நிலையில் எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இதனை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியான பயன்பாடுகள் வாயிலாகத்தான் ஒரு சொல் புழக்கத்துக்கு வரும். ஊடகங்கள் மூலம்தான் புதிய சொற்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். பசுமை எழுத்தாளர்கள் கலைச்சொற்கள் உருவாக்கும் பணியை செயல்பாடாகவே முன்னெடுக்கிறோம். virtual water குறித்த கட்டுரை எழுதினேன். விர்ச்சுவல் என்பதற்கு மெய்நிகர் என்கிற நல்ல தமிழ்ச்சொல் இருந்தால் மெய்நிகர் நீர் என்பது பொருத்தமாக இருக்காது. அதனால்தான் அதனை  ‘மறைநீர்‘ என்று எழுதினேன். இது போன்று உருவாக்கப்படும் கலைச்சொற்கள் பரவலாக்கமடைந்து வருகின்றன. ஊடகத்துறையில் மொழி மீதான  அக்கறை கொண்டவர்கள் இதனை தீவிரமாகவே முன்னெடுக்கிறார்கள்.

புவியியல் அமைப்புப்படி புவிமையக்கோட்டின் கீழ் உள்ள வெப்ப மண்டல நாடுகளில்தான் இயற்கை மற்றும் உயிரிவளம் அதிகம். இருந்தும் வளம் செறிந்த வெப்பமண்டல நாடுகள் கடனாளிகளாக இருக்கும் முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது?

அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மூலதனங்கள் இங்குதான் கிடைக்கின்றன. இந்நாடுகள் இல்லையேல் அவர்கள் இல்லை. பீரங்கி, அணுகுண்டு போல்  பொருளாதாம் என்பது இங்கு ஓர் ஆயுதமாக முன்னெடுக்கப்படுகிறது. ஒரு நாட்டைக் கையகப்படுத்துவதற்கு அதன் பொருளாதாரச் சந்தையைக் கையகப்படுத்தி விட்டால் போதும். இதனடிப்படையில்தான் மரபணு மாற்றம் இங்கே காலூன்றுகிறது. கார்பன் டிரேடிங்கை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாடுகளும் வெளியேற்றும் கார்பன் அளவு காரணமாகத்தான் புவி வெப்பமடைகிறது. வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மரங்கள் வளர்க்கச்சொல்லி வளர்ந்த நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன. அவர்கள் வெளியேற்றும் கார்பனை கட்டுப்படுத்த இன்னொரு நாட்டில் மர வளர்ப்பை ஊக்குவிக்கிறார்கள் என்பது போலான தோற்றம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் இதற்குள் மறைமுகமானதொரு அரசியல் இருக்கிறது.

காட்டில் மரங்களை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் நிதி கொடுத்து காடு என்பது காடு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்கிற கருத்தை முன் வைக்கின்றனர். காலனியாதிக்க நாடுகள் தங்களுக்கு என்ன தேவையோ அந்தக் கருத்தை ஆணித்தரமாக நிறுவ முடிகிறது. காடுகள் எல்லோருக்கும் பொதுவானது என்று சொன்னால் பெட்ரோலும் பொதுவானதுதானே? என்று நாம் எதிர்க்கேள்வி கேட்க முடியும். ஆனால் நாம் அவர்களுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம். வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய சூழலியல் சீர்கேடுகளால், மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பிட்டால் அவர்கள் அளித்த கடனை விட மூன்று மடங்கு அதிகம். அப்படிப் பார்க்கும்போது அவர்கள்தான் நமக்குக் கடனாளிகள்.

உலகமயம் மோசமானதொரு கலாச்சாரத்தை நம் மீது திணிக்கிறது என்றாலும், மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளத்தானே செய்கிறார்கள்.

நமது வாழ்க்கை முறைக்குள் காலையில் எழுந்ததும் பல் துலக்குகிற டூத் பேஸ்ட் தொடங்கி இரவு உறங்கும்போது பயன்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரைக்கும் அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திதான். அந்நிறுவனங்களின் உற்பத்தி இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது என்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை மனிதர்களாக பார்ப்பதில்லை. நுகர்வோராக மட்டுமே பார்க்கின்றன. முந்தைய தலைமுறையில் ஆடம்பரமாகக் கருதப்பட்டவை பலவும் இன்றைக்கு அத்தியாவசியமானதாக மாறி விட்டது. காரணம் உட்சபட்ச நுகர்வுக்கலாச்சாரம்தான். மனிதர்கள் மீது மிகையான உற்பத்தியைத் திணிக்கிறார்கள். இதை நாம் புரிந்து கொண்டு இதிலிருந்து மீண்டெழ நமக்கு சூழலியல் அறிவு தேவைப்படுகிறது. பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்திருக்கும் இடத்தில் தற்சார்பு வாழ்க்கை இருக்கும். மனிதனின் தற்சார்பை அழித்தால்தான் அவனை நுகர்வோராக மாற்ற முடியும் என்கிற தெளிவோடுதான் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்லுயிர்த் தன்மையை அழிப்பதுதான் அதன் முக்கியக் குறிக்கோள். அதைத்தான் நாம் சூழலியல் அழிவு என்கிறோம். இந்தியாவின் நகர்மயமாக்கலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதனை நாம் திட்டமிடப்பட்ட சூழ்ச்சி என்றே சொல்லலாம். பசுமை இலக்கியத்தின் வாயிலாக இப்போதைக்கு இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் முக்கியப்பணியாக இருக்கிறது.

மறைநீர் virtual water குறித்த ஆய்வை தமிழில் கட்டுரையாக்கியவர் நீங்கள். நீர்மேலாண்மை, நீர் பங்கீடு குறித்த புரிதல்களை நம் அரசு கொண்டிருக்கிறதா?

உலகமயமாக்கலுக்கு முன்பும் சரி பின்பும் சரி விவசாய, மக்கள் நலனை விட பெரிய நிறுவனங்களின் இலாபநோக்குக்கு இசைவாகத்தான் அரசு செயல்பட்டு வருகிறது. உலக வங்கிகள் நிதி உதவி அளிக்கும்போது தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் அளிக்கிறது. இன்றைக்கு அணை கட்டுவது என்பது விவசாயிகளின் நலனுக்காக என்று நாம் நினைத்தால் அது நம் மடத்தனம். அணையின் கரையில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை உருவாக்குவதற்காகத்தான் அணை கட்டப்படுகிறது என்பதே உண்மை. 1970ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் மற்றும் 41127 குளங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு நாம் பல ஏரி, குளங்களை ஆக்கிரமித்து விட்டோம். இதற்காகவெல்லாம் கொஞ்சமேனும் கவலை கொள்ளாத அரசுக்கு எப்படி அக்கறை இருக்கும்? 

பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம் அடைந்த படிப்படியான வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் உலகமயமாக்கலுக்குப் பிறகான வளர்ச்சி அபரிதமானதாக இருக்கிறது. இதன் காரணமான நகர்மயமாதல், அதன் பொருட்டு விளைநிலங்கள் அழிப்பு என உலகமயத்தின் சீர்கேடுகளிலிருந்து நாம் எதிர்காலத்தை எப்படி மீட்பது?

இதற்கு முக்கியக்காரணம் நமது வாழ்வியல் மாறிப்போனதுதான். காலனியப்படுத்தப்படும் நாடு காலனியாதிக்க நாட்டின் பண்பாட்டை உயர்வாகப் பார்க்கிறது. அதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடைவிரிக்கின்றன. உயர்குடி, நடுத்தரம், அடித்தட்டு என மூன்று தரப்பு மக்களுக்குமான சந்தையை அவர்கள் கைக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் உயர்குடி மக்களுக்கானது என்று கருதப்பட்டவைகள் அனைத்தும் நடுத்தர மக்களை நோக்கிப் பாய்ந்ததுதான் உலகமயம். தற்சார்பை இழந்து நகரம் என்னும் ஒரு புள்ளியில் மக்கள் குவிந்து வாழும்போதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் எளிமையாக இருக்கும். ஒரு புறம் நகரங்களை நோக்கி மக்களைக் குவிப்பது, மறுபுறம் கிராமங்களுக்குள் ஊடுருவுவது என்கிற திட்டத்தோடு அவை இயங்கி வருகின்றன.

ஒரு காலத்தில் உயர்குடி மக்களுக்கான பானமாக இருந்த பெப்சி, கொக்ககோலா இன்றைக்கு அடித்தட்டு மக்களையும் சென்றடைந்து விட்டது. உயர்குடி மக்களுக்கான சந்தையை கே.எஃப்.சி போன்ற நிறுவனங்கள் கைக்கொண்டு விட்டன. நாளடைவில் பிட்சாவும், பர்க்கரும் கிராமங்களில் கூட விற்பனை செய்யபடலாம். அப்போது உயர்குடி மக்களுக்கு வேறொரு சந்தையை உருவாக்கியிருப்பர். உணவுக் கலாச்சாரத்தை மாற்றி தனது பொருளை சந்தைப்படுத்துவது, அதன் காரணமான உற்பத்தியாகும் நோய்களாலும் மருந்து சந்தையை உருவாக்கி இரட்டை லாபம் பெறுவதே பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். நம்முடைய பண்பாட்டை விட நுகர்வுப்பண்பாட்டை மேலாகக் கருதியதால் வந்த மாற்றம் இது. விழிப்புணர்வும், அதற்கு எதிரான குரலுமே மாற்றத்தைச் சாத்தியப்படுத்தவல்லது. எதிர்க்குரல்கள் மூலம்தான் இன்றைக்கு பலவையும் சாத்தியப்பட்டிருக்கிறது. குளிர்பான விளம்பரத்தில் நடித்த நடிகன் அதே குளிர்பானத்துக்கு எதிராக வசனம் பேசுவது கூட இந்த எழுச்சியால்தான்.

நீங்கள் இணைந்து முன்னெடுத்த ‘தண்ணீருக்கான பொதுமேடை’ என்கிற பிரச்சாரத்தில் எவற்றை முன்னிறுத்துகிறீர்கள்.

தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டதுதான் ‘தண்ணீருக்கான பொதுமேடை’. தமிழகத்திலுள்ள 20 அமைப்புகளை ஒன்றிணைத்து, இந்தியாவின் தண்ணீர் மனிதரான ராஜேந்தர் சிங்கை வரவழைத்துக் கூட்டம் நடத்தினோம். அரசுக்குச் சொந்தமான பொதுமக்கள் கூடும் இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வழக்கொழிந்து போனதை நினைவுபடுத்தும் விதமாக நடத்தப்பட்ட அக்கூட்டத்தின் வெற்றியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பொது இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது மட்டும் இப்பிரச்சாரத்தின் நோக்கமல்ல. தண்ணீரைத் தனியார்மயமாக்கலும், விலை வைத்தலும் கூடாது. ஒவ்வொரு மனிதனுக்கும் நாளொன்றுக்கு 135 லிட்டர் தண்ணீருக்கு உரிமை உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

சமீபத்தில் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். இதன் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி.

முன்பே சொன்னது போல எழுத்தாளர்களுக்கு சமூகப்பொறுப்பும் இருக்கிறது. எழுத்தைத் தாண்டியும் செயல்பாட்டளவில் அடுத்த கட்ட நகர்வுகளைத் துவக்க வேண்டும் என்பதே அக்கூடுகையின் நோக்கம். சூழலியலேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அந்தந்த பிரிவுகளில் தனித்தியங்கிக் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைக்கும்போது தத்தம் மற்ற துறைகள் சார்ந்த புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.   கலைச்சொற்களை உருவாக்குதல், சூழலியல் புரிதலை ஏற்படுத்தும்படியான பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல், காட்டுயிர் குறித்த சிந்தனைகளை எப்படி உருவாக்குவது? என்பது போன்று பலவும் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டன. பல துறைகளைச் சார்ந்தவர்களின் பரந்துபட்ட பார்வைகள் மூலம் அறிவை விசாலப்படுத்தியதே இச்சந்திப்பின் வெற்றி எனக்கூறலாம். கலந்து கொண்ட அனைவரது கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆண்டுதோறும் இது போன்ற சந்திப்பை நடத்த உள்ளோம். சந்திப்பு என்றால் எல்லோரும் ஒரு இடத்தில் கூடி, கலந்து பேசிவிட்டு கலைந்து செல்வதாக மட்டும் இருக்கக் கூடாது. அடுத்த சந்திப்பில் இந்த சந்திப்பில் பேசப்பட்டவைகள் செயல்வடிவம் பெற்றிருக்கின்றனவா? அவை எந்தளவுக்கு வீரியத்துடன் இருக்கின்றன? என்பது குறித்துப் பேசுவதாக அமையும்.

நேர்காணல்: கி.ச.திலீபன் , ஓலைச்சுவடி அக்-டிச 2016

Tuesday, February 21, 2017

இன்னும் மிச்சமிருக்கிறது - சிறுகதை

ஓவியம்: ஷாராஜ்

இதோ நீ என்னைப் பார்க்கிறாய் அது எப்படியாகப்பட்ட பார்வை என்றால் என்னை குற்ற உணர்வில் கூனிக் குறுக வைக்கிற பார்வை. மிகப்பெரும் தவறிழைத்து விட்டதாய் என்னை நானே சபித்துக் கொள்ள வைக்கிற வாஞ்சையான பார்வை. கண்ணை சிமிட்டிக் கொண்டிருக்கிறாய், மூச்சு வாங்கிக் கொண்டே இருக்கிறது உனக்கு. கூர்ந்து கவனித்தால் உனது அனத்தலை கேட்க முடிகிறது. அந்த அனத்தல் என்னை மேலும் மேலும் நோகடிக்கிறது. உனது சிறுமூக்கு உடைந்திருந்ததால் மூக்கின் வழியாக ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது அந்த ரத்தத்தை நீ துடைத்துக் கொள்கிறாய் இருந்தும் அது தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது உன்னை பீதியுறச் செய்திருக்கும். ரத்தமும், எச்சிலும் கலந்த கலவையை உமிழ்கிறாய் அது சில நொடிகளை தின்றுவிட்டு கீழே வழிகிறது. இருந்தும் உதட்டோரத்தில் சிறிது ரத்தம் இருக்கவேதான் செய்தது. சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாலும் கைகளை தாங்கலுக்கு வைத்திருக்கிறாய் அதில் சிறு நடுக்கத்தைப் பார்க்க முடிகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு படுத்தே விட்டாய். உட்கார்வதற்கான திராணி கூட உன்னிடத்தில் இல்லாமற் போயிற்றே. எவ்வித அசைவுகளுமின்றி படுத்துக் கிடக்கிறாய் உனது அனத்தல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது உனது பார்வை என்னை நோக்கியும் திரும்புகின்றன. நான் அதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் உணர்வற்ற நிலையில் உன்னைப் பார்க்கிறேன். நான்கு விரல்களை மடக்கி பெரு விரலை மட்டும் உயர்த்தியபடி சைகை காண்பிக்கிறாய். ஆம் அது தண்ணீர் வேண்டும் என்பதற்கான சைகை. நான் மேத்யூவைப் பார்த்தேன் அவன் எனது பார்வைக்காக காத்திருந்தவன் போல தலையசைத்தான்.
மேத்யூவின் கட்டளைக்கிணங்க நீர் நிரப்பிய டம்ளரோடு ரஞ்சித் உனக்கருகே வந்து அமர்கிறான். நீ முயல்கிறாய் எப்படியாயினும் எழ வேண்டுமென்று. உன்னால் அது முடியவில்லை, எம்பி எம்பி தோற்றுப் போகிறாய். அப்படியே நீ எழுந்தாலும் டம்ளரை வாங்கி தண்ணீரைக் குடிப்பாயா என்பது உறுதியல்ல ஏனென்றால் உனது கை நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ரஞ்சித் உனது வாய்க்கு டம்ளரைக் கொடுக்கிறான் குட்டையில் நீரருந்தும் பிராணி போல அதை நீ குடிக்கிறாய். குடித்து முடித்ததும் கண்களை மூடிக் கொண்டாய். இனி தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என தீர்க்கமாய் முடிவெடுத்து விட்டாய் போலும். சுவற்றில் படிந்திருக்கும் ரத்தக்கறையும், ஒரு மனிதனின் உயிருக்கான ஓலமும் எனக்கு புதிது என்பதை விட இவற்றை நான் சந்தித்திருக்கவே கூடாது எனத் தோன்றுகிறது.

ஏன் இப்படி நடக்க வேண்டும் பீட்டர்? புதிர்களை நிரப்பியது இந்த வாழ்க்கை என அப்பா சொல்வார் அப்படிப்பட்ட புதிர்தானா இது? நீ வலியால் துடிப்பதைப் பார்த்து ரசிக்கும் குரூரம் எனக்கு எப்படி வந்தது? எல்லாம் உன்னால்தான் பீட்டர். அன்று அந்த சாலையில் நீ அப்படி நடந்து கொண்டது உச்சம். பீட்டர் இது இன்றைக்கான கணக்கல்ல நீயும் நானும் சந்தித்துக்கொண்ட காலத்திலிருந்தே துவங்கியிருக்க வேண்டும். சமயம் பார்த்து வெளிப்படுத்தும் கோபத்தின் பெயர்தான் வஞ்சம். அந்த வஞ்சத்தின் விதையை நீதான் எனக்குள் தூவினாய் அது இன்று வேர்பரப்பி மரமாய் வளர்ந்து நிற்கிறது.
ராயபுரத்தின் தெருக்களில் சட்டையின் முதல் பொத்தானை கழட்டி விட்டு உள்ளே கோடாளி டாலர் சங்கிலி மாட்டிக் கொண்டு, பான் பராக் கரையப்பிய வாயில் நாழிகைக்கொரு தரம் ங்கோத்தாஎன்ற வார்த்தையை உச்சரிக்கும் உன் போன்றவர்களிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவன். ராயபுரத்தில் ஹுசைன் மேஸ்திரி தெருவில்தான் என் வீடு இருக்கிறது. பேனர் ஆர்டிஸ்டான அப்பாவுக்கு என் மீதொரு பெருங்கனவு இருந்தது. நான் நன்றாகப் படித்து பெரியாளாக வேண்டும் என்பதுதான் அது. எல்லா அப்பாக்களும் தன் குழந்தைகள் மீது கொள்ளும் வாடிக்கையான கனவுதான். ராயபுரம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பெயரை எழுதுவதற்கான பட்டியல் இருக்கிறது. அதில் அதிக பெயர்களை அப்பாதான் எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் என்னிடம் சொல்வார் உனது பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் காசே வாங்காமல் உன் பெயரை நான் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பார். அப்பா என் மீது கொண்டிருந்த கனவு என்னை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடவில்லை. பள்ளி, வீடு என எல்லாவற்றிலும் பாடப்புத்தகங்களே எனது உலகை நிரப்பியிருந்தது.

நீயும் நானும் எட்டாம் வகுப்பில் ஆ பிரிவில் படித்தோம். முதல் மதிப்பெண் பெறுகிற காரணத்தால் நாந்தான் வகுப்புத் தலைவன். பள்ளிகளைப் பொறுத்த வரையிலும் நன்றாகப் படிக்கிறவர்களே கதாநாயர்களாக சிருஷ்டிக்கப்படுவார்கள் அப்படியாக என் மீது பலருக்கும் கதாநாயக பிம்பம் இருந்தது. எனக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு அவ்வப்போது வெளிப்படும்போது வகுப்பறையே சிரிப்புமயமாய் இருக்கும். இதெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதல்லவா பீட்டர்? நீ வகுப்பின் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பாய், ஜன்னலோர இருக்கை அது. அந்த வயதிலேயே ஆசிரியர் இல்லாத நேரத்தில் பான்பாராக்கை மென்று துப்பிக் கொண்டிருப்பாய். வீட்டுப்பாடம் எழுதவில்லை, மதிப்பெண் குறைச்சல் என ஆசிரியர்களால் நீ அடிக்கடி வெளியே நிற்க வைக்கப்படுவாய். உனது நண்பர்களும் உன்னைப் போன்ற உதவாக்கரைகள்தான். அவர்களும் படிக்காதது பற்றியோ ஆசிரியரின் வசவுகள் பற்றியோ அலட்டிக்கொண்டதே இல்லை. அந்த கூட்டத்துக்கு நீதான் தலைவன் என்பதற்கு பின்னால் இருந்த உண்மை உன்னுடைய பலமும் ஆளுமையும். விளையாட்டு மைதானத்தில் நீ பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனைப் புரட்டி எடுத்த பிறகு பலரது பேச்சு உன்னைப் பற்றியதாக இருந்தது. நீ என்னை விட மூன்று வயது மூத்தவன் தேர்ச்சி பெறாத காரணத்தால் என்னுடன் படிக்க நேர்ந்தது. உனது கூட்டம் உன்னை அண்ணா என்றழைப்பதுண்டு, மற்றவர்களையும் நீ அண்ணன் எனச் சொல்ல நிர்பந்தித்தாய் ஆனால் நானும் எனது நண்பன் இப்ராகிமும் உன் நிர்பந்தத்தை ஏற்காமல் பீட்டர் என்றே அழைத்து வந்தோம். அதன் காரணமாய் இப்ராகிமை நீ அடித்தாய். அப்போது பிரச்னையை நான் வகுப்பாசிரிடம் கொண்டு சென்றேன் ‘’பெயிலான நாய்க்கு எதுக்குடா மரியாதைஎன்று வகுப்பில் எல்லோர் முன்னும் உன்னைக் கேட்டுவிட்டார். எனக்குத் தெரியும் நீ அந்த அவமானத்தால் எவ்வளவு புண்பட்டிருப்பாய் என. இருந்தும் நீ இப்ராகிமை அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பை அமைதி காக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது. யார் யார் பேசுகிறார்களோ அவர்களது பெயரை கரும்பலகையில் பதிக்க வேண்டும். ஆசிரியர் வந்ததும் அந்தப் பெயர்களைக் கொண்ட புண்ணியவான்களை அடி வெளுப்பார். அறிவியல் ஆசிரியர் கோதண்டம் முரட்டு ஆள். அவரைக் கண்டால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கூட பம்மிக்கொண்டு போவார்கள். அவரது பாடவேளைக்கு முன்னால்தான் நீ உன் கூட்டத்தினருடன் பேசிக்கொண்டிருந்தாய். நான் கரும்பலகையில் பீட்டர் என்கிற உனது பெயரை எழுதி வைத்தேன். பெயரை அழிக்கும்படி மிரட்டினாய். அதன் பிறகு பீட்டர் மோசம் என எழுதினேன், பின்னர் நீ என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டினாய், நான் பீட்டர் மிக மோசம் என எழுதினேன். பெஞ்சின் மீதேறிக் கொண்டு முன்னர் இருந்த மாணவிகளில் சிலரை வேண்டுமென்றே நக்கலடித்தாய். அவர்கள் சனியன் என்று சொல்லிக்கொண்டார்கள். பேர் எழுதி வைத்தால் மட்டும் ஒன்றும் புடுங்க முடியாது என்றாய். எனக்கு சுரீரென்று கோபம் வந்ததும் பீட்டர் மிக மிக மிக மோசம் என எழுதினேன்.

கோதண்டம் ஆசிரியர் வந்தார், அவரது கணக்குப்படி பெயர் மட்டுமிருந்தால் அதற்கு ஒரு அடி, மோசத்தில் எத்தனை மிக இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அடிக்க வேண்டும் என்பதை தனது வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கரும்பலகையைப் பார்த்தார் உனது பெயருக்குப் பின்னால் மூன்று மிகக்கள் இருந்தன. இது போதும் அவருக்கு, மூங்கில் பிரம்பால் அவர் உன்னை வெறிகொண்டு தாக்கியதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை பீட்டர், நீயும் அதை மறந்திருக்க மாட்டாய். அந்த அடிகளுக்கு காரணமானவன் நாந்தான் என்பதில் உனக்கு என் மீது பெருங்கோபம் ஏற்பட்டது. பள்ளி முடித்து வீடு திரும்புகையில் என் கன்னத்தில் நீ விட்ட பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அப்புகளில் புரிந்து கொள்ள முடிந்தது அந்த கோபத்தின் உக்கிரத்தை. அறைந்ததோடு மட்டுமல்லாமல் கையைப் பிடித்துத் திருகி முதுகில் வலுவாக இரண்டு குத்து குத்தினாய். என் வாழ்வில் நான் வாங்கியிராத அடி அது என்பதால் மூர்ச்சையாகிப் போனேன். பேசக்கூட முடியாமல் அப்படியே கீழே படுத்து விட்டேன். நாக்கைத் துருத்தி விரலை நீட்டி எச்சரிக்கை செய்துவிட்டு நீ கிளம்பி விட்டாய். என் வீட்டில் நீ அடித்தது குறித்து நான் தெரியப்படுத்தவில்லை அதாவது பள்ளிக்கூட விவகாரத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில் எனக்கு துளியும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. இருந்தும் என் இரவை அந்த நினைவுகள் தின்று தீர்த்தன. புரண்டு புரண்டு படுத்தாலும் உன்னைத் திருப்பியடிக்கவியலாத இயலாமை என்னைத் தூங்க விடுவேனா? என்றது. எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். நிலவொளியால் நிரம்பியிருந்த அந்த வெற்று வெளியில் எதிரே நீ இருப்பதாய் உருவகப்படுத்திக் கொண்டு எனது தாக்குதலைத் தொடங்கினேன். உன் கண்ணம், மூக்கு, வாய், வயிறு என என்று நான் விட்ட குத்துகள் வெட்ட வெளியில் காற்றைக் கிழித்துக் கொண்டு போனது. எதிர் தாக்குதலே இல்லாமல் எனது தாக்குதல் அரங்கேறிக்கொண்டிருந்தது. பல்லை வெறுவியபடி உன்னைக்குத்திக்கொண்டே இருந்தேன். சிறிது நேரத்துக்குப் பிற்பாடு ஏற்பட்ட கைவலியின் காரணமாய் எனது தாக்குதலை நிறுத்தி விட்டாலும் எனது மனப்போராட்டங்கள் யாவும் நான் காற்றில் விட்ட குத்துகள் வழியே முடிவுக்கு வந்து விட்டிருந்தது இதே குத்துகளை நான் நிஜத்தில் கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பவனாய் எண்ணிக் கொண்ட பிறகுதான் தூக்கமே வந்தது.
அடுத்த நாள் வகுப்பை நான் அமைதி காத்துக் கொண்டிருந்த நேரத்தில் உன் குரல் வகுப்பையே நிரைக்கும்படி பேசினாய். உன் பெயரை நான் எழுத மாட்டேன் என்றுதானே பீட்டர் நீ நினைத்திருந்தாய்? நான் பீட்டர் மிக மிக என்று எழுதியதும் உனது பேச்சு நின்றது. நீ என்னை முறைத்தாய் நான் பதிலுக்கு முறைத்தேன். அது உன் கோபத்தை இன்னும் கூட்டியிருக்க வேண்டும். அதனால்தான் நீ டெஸ்கை இழுத்துக் குத்தினாய் நான் பதிலுக்கு கைகளை மடக்கி உயர்த்திக் காட்டினேன். நமக்குள்ளான இந்த சம்பாஷனைகள் புரிந்தும் புரியாமலும் சக மாணவ,மாணவிகள் நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவாயினும் மாலை உன்னை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தேன். திரும்பவும் சொல்கிறேன் தோற்றாலும் உன்னை எதிர்த்து விட்டுத் தோற்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே என்னிடமிருந்தது

பள்ளி முடிந்ததும் விளையாட்டு மைதானத்தின் வேப்ப மரத்தின் கீழ் ஆஜரானோம். நமது சண்டையை வேடிக்கை பார்க்க சில மாணவர்கள் குழுமியிருந்தனர். உனது நண்பன் ரஞ்சித் ஒரு ரெஃப்ரீ போல் ஒன் டூ த்ரீ சொல்லி இச்சண்டையைத் துவங்கி வைத்தான். எனக்கு சண்டை குறித்தான எவ்விதத் தெளிவுகளும் இருக்கவில்லை எனது ஒரே நோக்கம் உன்னை அடிக்க வேண்டும் அவ்வளவே. நான் பாய்ந்து உன் மூக்கின் மீது ஒரு குத்து விட்டேன் அடுத்த கணமே உன் நெஞ்சின்மீது பலமான குத்து விட்டேன் இப்படியாக சில நொடிகள் வேகமாக நான் இயங்கிக் கொண்டிருக்கும்போது நீ என் நெஞ்சில் உதைத்துத் தள்ளினாய்... நான் தடுமாறி விழுந்தேன். உடனே தீவிரத்தோடு எழுந்து எனது தாக்குதலைத் தொடர்ந்தேன் அப்போது என் வயிற்றில் இழுத்து ஒரு குத்து விட்டாய் சப்த நாடிகளும் அடங்கிப்போய்விட்டதாக ஓர் உணர்வு, அப்படியே நின்று விட்டேன். உன்னை எதிர்ப்பது என்னால் இயலாத காரியம் என்பதை அந்தக் குத்து எனக்கு உணர்த்தி விட்டது. வலி தாங்க மாட்டாமல் புழுவாய்த் துடித்தேன். அடுத்த கணமே என் கன்னத்தில் நீ பளார்களை வழங்கினாய். அவை என்னை நிலைகுலையச் செய்தது. உனது நண்பர்கள் எல்லோரும் பீட்டர்பீட்டர்பீட்டர் என்று ஆர்ப்பரித்தனர். என் கண் முன்னாலேயே நான் தோற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்ததால் விவரிக்க முடியாத சோகம் என்னைச் சூழ்ந்திருந்தது. நீ முன்னேறிக்கொண்டே இருந்தாய், அறைவைதை நிறுத்தி விட்டு என் கையை முறுக்கினாய். தாங்க முடியாத வலியின் காரணமாய் நான் வெக்கத்தை விட்டு என்னை விட்டு விடச்சொல்லி உன்னிடம் வேண்டினேன் நீயோ தொடர்ந்து என்னை துவம்சம் செய்து கொண்டிருந்தாய். எவ்வித எதிர்தாக்குதல்களும் இல்லாமல் உனது குத்துகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டிருந்த கணத்தில்தான் வஞ்சம் எனும் விருட்சத்தின் விதை எனக்குள் விழுந்திருக்க வேண்டும்.

உன்னிடம் நான் அடிவாங்கியதை இப்பள்ளிக்கே பறைசாற்றும் பணியை உனது நண்பர்கள் செவ்வனவே செய்திருந்தார்கள். பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை, எனது இயலாமையைக் கண்டு உனது பலம் எக்காளமிட்டுச் சிரிப்பது போன்றான மாயையான சிந்தனைகளும் ஓடிக்கொண்டிருந்தது. யாருடைய முகத்தையும் எதிர்கொள்வதில் தயக்கம் இருந்தது. ஒவ்வொரு நொடியும் நான் அவமானத்துக்கு ஆளாகிவிடுவேனோ என்கிற அச்சம் என்னை பீடித்திருந்தது. வகுப்புத் தலைவனாக இருப்பதில் துளியும் நாட்டமில்லை. என் மீதிருந்த கதாநாயக பிம்பம் உடைந்து விட்டதென்பது மிகப்பெரும் ரணமாகியிருந்தது. ஒரு நாள் சம்மந்தமே இல்லாமல் வகுப்பில் அத்தனை மாணவர்கள் முன்னாலும் என்னை நீ அறைந்தாய். எதற்காக என்று உன் நண்பன் ராஜேஷ் கேட்டதற்கு பொழுதுபோக்கு என்றாய். பொத்துக்கொண்டு வந்தது கோபம், ஆனால் உன்னை எதுவும் செய்ய முடியவில்லை என்னால். விளையாட்டு மைதானத்தில் இருந்த கோல் போஸ்ட் கம்பி மீது எனது பலம் மொத்தத்தையும் திரட்டி கற்களை விட்டெறிந்தேன். முழு விசையோடு அது பட்டதும் எழுகிறடொய்ங்…” என்கிற சப்தம் எனது தாக்கின் வெற்றியாய் எதிரொலித்தது. அவை எல்லாம் உன்னைக் குறிவைத்து வீசப்பட்ட கற்கள்தான் பீட்டர்.
இந்த உலகின் விதி எனக்குப் பிடிக்கவில்லை, வழுத்ததுதான் வாழும் என்றால் எளியவர்கள் ஜனனித்திருக்கவே கூடாது. அது இயற்கையின் மிகப்பெரும் பிழை என்று அப்போது எனக்குத் தோன்றியது. உன்னிடம் ஒவ்வொரு முறை அடி வாங்கும்போதும்  “எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்என நான் நினைத்துக் கொண்டதுண்டு. அந்த சந்தர்ப்பம்தான் இப்போது வாய்த்திருக்கிறது பீட்டர்.

எட்டாம் வகுப்பு முடித்ததும் ஒன்பதாம் வகுப்புக்கு பழைய வண்ணாரப்பேட்டை மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதலாகிச் சென்று விட்டேன். அதன் பிறகு உன்னைப் பார்ப்பதென்பதே அரிதாகி விட்டது. எப்போதேனும் ஒரு முறை கல் மண்டபம் பேருந்து நிறுத்தத்தைக் கடக்கையில் உன் முகம் தட்டுப்படும். பன்னிரெண்டாம் வகுப்பு படித்த காலத்திலேயே நீ கல் மண்டபம் நிறுத்தத்துக்கு சற்று தள்ளி இருக்கும் பிஸ்மி டீ ஸ்டாலில் சிகரெட் இழுத்துக் கொண்டிருப்பாய். நீ என்னைப் பார்த்தாலும் பார்க்காதது போல் இருந்து விடுவாய் அதுவும் நல்லதுதான் எனப்பட்டது. பள்ளிக்கூடத்தில் வளர்ந்த பகை பள்ளிக்காலம் முடிந்ததுமே காலாவதியாகிவிடும் என்பதெல்லாம் பொய்தானே பீட்டர்? என்றைக்குமே நாம் எதிரிகள்தான், அது கண்மணி மீது நாம் இருவரும் கொண்டிருக்கும் காதலாலும் கூட.

கண்மணியை நான் ஓராண்டு காலமாக ஒரு தலையாகக், காதலித்து வருகிறேன். கண்மணி என்னும் அவள் பெயருக்காகவே அவளை இன்னுமொரு முறை காதலிக்க வேண்டும் போலிருக்கிறது. தேவதைகள் சுடிதார் அணிந்தபடியும் தரிசனம் தரவல்லது என்பதை அவளைப் பார்த்த அடுத்த கணமே உணர்ந்து கொண்டேன். அவள் ஃபாசிர் தெருவில்தான் வசிக்கிறாள். நார்த்விக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவள்வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நான் கட்டடப்பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அதே படிப்புக்கு முதலாமாண்டு வந்து சேர்ந்தாள். எங்கள் இருவருக்கும் ஒரே கல்லூரிப்பேருந்து ஆக பேருந்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த வாழ்க்கையிலும் அவளுடன் பயணிக்க ஆசைப்படுகிறேன் பீட்டர். இந்த வாழ்க்கையை நிரப்ப கண்மணி போதும் எனக்குஎன்ன இப்படிப்பேசுகிறேன் என்று பார்க்கிறாயா? காதல் வந்து விட்டால் சகலமும் மாறி விடுகிறது.

போன திங்கட்கிழமை எனது காதல் மட்டுமல்ல நானே உடைந்து போனேன் என்றால் அது உன்னால்தான் பீட்டர். கல் மண்டபம் பேருந்து நிறுத்தத்தில்தான் நானும் கண்மணியும் கல்லூரிப்பேருந்துக்காகக் காத்திருப்போம். அன்றைக்கென அவள் வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்ததால் சிறகுகளற்ற தேவதை போல இருந்தாள். ஓராண்டு கால மௌனத்தை தகர்த்து அன்றைக்குத்தான் கண்மணியிடம் வாயெடுத்துப் பேச ஆரம்பித்தேன். அது புதுமையாக இருந்தது என் எதிர்காலத்துடன் நான் பேசுவது போலாக உணர்ந்தேன். பேச்சினூடே என் எதிர்காலம் தெத்துப்பல் தெரிய சிரித்துக் கொண்டிருந்தது. ஆறு மாதங்களாக என்னை சைட் அடித்து வருவதாய் என் கண்மணி சொன்னாள். அவளது யதார்த்தம் இன்னும் என் காதலின் படிநிலையை அதிகப்படுத்தியது. தன்னடக்கத்தோடுநான் அவ்வளவு அழகாவா இருக்கேன்என்றேன். அதற்கு மீண்டும் அவள் சிரிப்பை பதிலாகக் கொடுத்த சமயம்தான் அது நிகழ்ந்தது.

பதுங்கியிருந்து இரையைக் கவ்வும் புலியின் சீற்றத்தோடு பாய்ந்து என் சட்டையை இருகப்பற்றியபடிஎங்க ஏரியாவ பத்தித் தப்பா பேசினியாடாஎப்படிடா பேசலாம்என்று சொல்லிவிட்டு என் கன்னத்தில் நீ வரிசையாக நாலைந்து அறைகள் விட்டாய். திடீரென நடந்த இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்த்திருக்காததால் என்ன செய்வது என்பது பற்றி கூட யோசித்து செயல்பட முடியாதவனாய் எட்டு ஆண்டுகள் கழிந்தும் உன்னிடம் தோற்றுக் கொண்டிருந்தேன். காலை வேளையின் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்த கல்மண்டபம் பேருந்து நிறுத்தமே இதை வேடிக்கை பார்த்தது. நமக்கு நேராதிருக்கும் வரையிலும் எல்லாமே வேடிக்கைதானே. கண்மணி ஒருவிதப் பரிதாபப்பார்வையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாலையில் அடிபட்டுச் செத்துப் போகிற நாயைக் கண்டால் ஒரு பரிதாபம் வருமே அப்படியொரு பரிதாபம்தான் அவளுக்கு இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். என்னை அறைந்து விட்டு நாக்கை வெறுவியபடி விரலை நீட்டி எச்சரித்து விட்டு நீ நகர்ந்து விட்டாய். நான் சுற்றிலும் முற்றிலும் பார்த்தேன் எனது தோல்விக்கான சாட்சியங்கள் மீண்டும் தன் இயல்புக்கு திரும்பி விட்டிருந்தன. இது இன்னும் கொஞ்ச நேரம் நீட்டித்திருக்க வேண்டும் என்று நிச்சயம் யாராவது எதிர்பார்த்திருப்பார்கள். கண்மணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவள் சங்கடப்பட்டிருக்கிறாள் என்பதை அவளது முகத்தின் உணர்ச்சிகள் வழியாக வெளிப்படுத்தியிருந்தாள். அவளைக் கண் கொண்டு பார்ப்பதற்கே கூச்சமாக இருந்தது. இத்தனைக்கும் நீ அறைந்த போது உன்னை இரண்டு அறையாவது நான் அறைந்து பதில் தாக்குதல் நடத்தியிருந்தேனென்றால் அது சண்டை எனப் பொருள் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் அன்று நடந்தது சண்டை அல்ல பீட்டராகிய நீ அதியனாகிய என்னை அடித்த சம்பவம். என்ன பேசுவது கண்மணியிடம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற கொள்கை என்னுடையது என்றா சொல்ல முடியும்?. என் பால்யத்தின் நினைவுகள் எனக்குள் தோன்றி மறைந்தன. அப்போது எங்களது வீட்டில் நாங்கள் வளர்த்து வந்த கிளியை, பூனை ஒன்று கவ்விக் கொண்டு சென்றது. அப்போது கிளியின் சிறகடிப்பும், கீச்சிடல்களும் பூனையின் ஆவேசமான கவ்வலிலிருந்து தப்புவதற்கான போராட்டமும் அன்றைக்கு என்னை ஆழமாய் பாதித்தது. கண்மணியின் கண்ணுக்கெதிரே வலிமை கொண்ட பூனையாய் நீ என்னைக் கவ்விய போது நான் கிளியாய்த் துடித்தேன்

 எட்டாண்டுகள் கழிந்தும் நமது கணக்கு இன்னும் தீரவில்லையோ என்றுதான் நினைத்திருந்தேன் பிற்பாடு இப்ராகிம் சொல்லித்தான் அந்த உண்மைகள் தெரிய வந்தன. நீயும் கண்மணியை ஒரு தலையாகக் காதலிக்கிறாய் அதனுள் நான் தலைப்பட்டு விட்ட காரணத்தால்தான் வேறு காரணம் சொல்லி என்னை அடித்திருக்கிறாய். ஆக நீ கண்மணி முன்னால் உன் ஹீரோயிசத்தைக் காட்ட முற்பட்டு அதே சமயம் என்னை பொக்கையாக்குவதற்காக உன் பலத்தைப் ப்ரயோகப்படுத்தியிருக்கிறாய். நான் பொக்கையல்ல பீட்டர், வன்மமும், வக்கிர எண்ணமும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? அந்த நிமிடம் அந்த நொடி எனக்குள் முடங்கிப்போயிருந்த வன்மம் மெல்லவே தலை தூக்க ஆரம்பித்தது. அது எப்படியாகப்பட்ட செயலையும் நிகழ்த்தி விடத் தயாராய் இருப்பதாய் என்னிடம் அறிவித்தது. நான் என் வன்மத்தை வாரி அணைத்து முத்தமிட்டேன். காரமாய் சமைத்துக் கொடுக்காத அம்மா மீது கொஞ்சம் கோபமும் வந்தது

2

குருட்டாம்போக்கில் உன்னைத் தாக்கி விடலாம் என்கிற முட்டாள்தனமான யோசனை என்னிடம் இருந்திருக்கவில்லை. திட்டமிட்டு தீர்க்க வேண்டும் நமது கணக்கை, வாழ்க்கையில் என்றைக்குமே மறந்து விட முடியாதபடியான வலியைக் கொடுக்க வேண்டும் உனக்கு. நினைக்கவே கூடாது என்கிறபடியான நினைவுகளை உனக்குள் பதிக்க வேண்டும் என்று தோன்றியது. உன்னை எதிர்க்கும் முன் முதலில் உன் பலம் என்ன என்பதனை தெரிந்து கொள்வது அவசியமாயிற்று. நீ சிறந்த கால்பந்தாட்டக்காரன், ராயபுரம் ராக்கர்ஸ் என்னும் கால்பந்து அணிக்கு நீதான் கேப்டன். மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உன் அணியினருடன் நீ கால்பந்தாடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். பல டோரமெண்டுகளில் கோப்பையத் தட்டிப்பறித்த அணி உன்னுடையது. உனது அணியினர் எல்லோரும் உனது ஏரியாவைச் சேர்ந்தவர்கள். டோரமெண்டில் வெற்றிபெற்றாலோ அல்லது விடுமுறை தினங்களிலோ நீங்கள் கூட்டாகச்சேர்ந்து ராயபுரம் வி.வி ஒயின்ஸில் மது அருந்துவீர்கள். உனக்காக ஒன்று சேர ஒரு கால்பந்து அணியே இருக்கிறது. அதுவும் போக ஏரியாவில் இன்னும் சில பையன்கள் இருக்கிறார்கள். எனக்கு யார் இருக்கிறார்கள்? எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சண்டையை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். பள்ளிக்காலத்திலிருந்தே நீ ஜிம்மிற்கு சென்று கொண்டிருப்பதால் என்னை விட உயரமாகவும் உடல் பெருத்தும் இருந்தாய். இறுக்கமான டி சர்ட் அணிவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாய். உன் கட்டுடலை இவ்வுலவுக்குக் காட்சிப்படுத்துவதற்காகத்தானே அப்படி அணிவாய் பீட்டர்? இப்படியாகப் பார்க்கையில் என்னை விட நீ பல மடங்கு பலம் பொருந்தியவன். உன்னை என்னால் நேருக்கு நேராக எதிர்கொள்ள இயலாது என்பது தெளிவானது. அதற்காக அப்படியேவும் விட்டு விட இயலாது. உன்னை மறைந்திருந்து அடிக்கலாமா? என்று யோசித்தேன். நான் ஒளிந்திருந்து ஒரு கல்லை எடுத்து உன் புடனியில் அடிப்பது, உண்டி வில்லில் குறிவைத்து உன் மர்மப்பகுதியைத் தாக்குவது போலான எண்ணங்கள் காட்சிகளாய் அப்போது விரிந்தன. ஒரே ஒரு நாளைக்கு மட்டும் எனக்கு யானை பலம் வர வேண்டும் அன்றைக்கு ராயபுரத்தின் சாலைகளில் நான் உன்னைத் துரத்தித் துரத்தி அடிக்க வேண்டும் இதற்காக நான் யாரைப்பிரார்த்திப்பது? என்றெல்லாம் யோசித்தேன் என்றால் அது நப்பாசை எனத் தெரியாமலில்லை.

எனக்கு அப்போது யாருடனாவது கலந்தாசிக்க வேண்டும் போலிருந்தது. இப்ராகிம்தான் அதற்கு சரியான ஆள் எனப்பட்டது. என்னளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு உன் மேல் அவனுக்கு வஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்ததை நான் அறிந்திருந்தேன். அவனிடம் இது பற்றிச் சொன்ன பிறகு அவன் மகிழ்ச்சியடைந்தாலும், இது எந்தளவு சாத்தியம்? என்கிற கேள்வி அவனுக்குள்ளும் இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிற்பாடு ஆள் வைத்து அடிக்கலாம் ஆனால் அதில் சிறுசிக்கல் இருப்பதாகச் சொன்னான். ஆள் வைத்து அடித்தால் எனது வஞ்சம் தீர்ந்து விடும் ஆனால் உனக்குள்ளான வஞ்சம் வளர்ந்து விடும். எனது வஞ்சமே இவ்வளவு காத்திரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறதென்றால் உனது வஞ்சம் எப்படி இருக்கும்? அந்த வஞ்சம் என்னை என்னவெல்லாம் செய்யும் என்பதைச் சொல்லி பீதியைக்கூட்டினான். அதற்காகவெல்லாம் நான் பின் வாங்கி விட முடியாதுகண்மணியை நான் விட்டு விலகும் வரையிலும் உனது கோரமான தாக்குதல் முற்றுப் பெறாது என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. கண்மணி எனக்கானவள் ஆக அவளை உன் காரணமாகவெல்லாம் விட்டு விட இயலாது. இரண்டில் ஒன்று பார்த்து விடத் தலைப்படுவதாய் இப்ராகிமிடத்தில் சொன்னேன். அவன் இதில் தான் நேரடியாகத் தலையிடாமல் முடிந்த மட்டிலும் எல்லா உதவிகளையும் செய்வதாகச் சொன்னான். அவன்தான் என்னை மேத்யூவிடம் கூட்டி வந்தது.

மேத்யூ, காசிமேடு, சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவன் எனச் சொல்வதை விட அப்பகுதியின் அடையாளமாக இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். சொந்தமாக இரண்டு படகுகளை வைத்திருக்கும் அவன் அரசியல் கட்சி ஒன்றின் பகுதிச் செயலாளர். அரசியல் விருப்பு வெறுப்புகள் அடிப்படையிலான சில கொலைகள் புரிந்தவன். செம்மரக்கடத்தல் அவனுக்கு சமீப காலமாக லட்சங்களை வாரித்தரும் தொழில். அரசியல் புள்ளிகள், காவல் துறை என சகலத்தையும் தன் கைகளுக்குள் வைத்துத் தொழில் புரிபவன். எப்படிப்பார்த்தாலும் மேத்யூவுக்கு முப்பைத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். அதற்குள் அவன் இந்த இடத்தை எட்டிப்பிடித்ததற்கு அவனது ஆளுமையே காரணம். தனது பதினெட்டாவது வயதிலேயே அன்றைக்கு உச்சத்தில் இருந்த ரவுடியான மாணிக்கத்திடம் அடியாளாய்ச் சேர்ந்திருக்கிறான். தனக்கானவர்களை உருவாக்கிக் கொள்கிற வித்தையில் அவன் கைதேர்ந்தவன். மாணிக்கத்திடம் அடியாளாய்ச் சேர்ந்த காலத்திலிருந்தே தனக்கானவர்களை உருவாக்கிக் கொண்டு தன் இருப்பை பலப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறான். அப்படியாக அவன் நிகழ்த்திய வித்தைகள்தான் சில ஆண்டுகளிலேயே மாணிக்கத்தின் வலது கரமாய் இருந்து செயலாற்றும் அளவு முன்னேற்றத்தை எட்டக் காரணமாயிருந்திருக்கிறது. தொழிற்போட்டியின் காரணமாய் மாணிக்கத்தை, வியாசர்பாடி ரவி போட்டுத் தள்ளியதற்கு பிற்பாடு மாணிக்கத்தின் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். மேத்யூவுக்கு மனிதர்களை மதிப்பிட்டு விடத்தெரியும், ஒருவனது பேச்சிலேயே அவனது உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ளுமளவு அவன் மனிதர்களை உள்வாங்கியிருந்தான். கொலை புரிந்து கல்லைக் கட்டி கடலில் வீசுவது, அடையாளமே தெரியாமல் சிதைத்து விடுவது போன்று இன்னும் அவனைப்பற்றி இப்ராகிம் விளிக்கையில் நான் வெடவெடத்துப் போனேன். ரவுடியிசம் குறித்து எனக்கு இம்மியளவு கூடத் தெரியாது ஏனென்றால் எனது உலகம் வேறானது என்று நான் முன்கூட்டியே உன்னிடம் சொன்னேனல்லவா. இப்படியிருக்கையில் ஒரு அடிதடி சமாச்சாரத்துக்காக கொலையை துச்சமெனப் புரிபவனின் உதவியைத் தேடிப்போவது பல சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும் என்று என் புத்திக்கு என் புத்தியே புத்திமதி சொன்னது. வீறுகொண்டு எழுந்த வன்மம் என்னவாயினும் பார்த்துக்கொள்ளலாம் என்று என்னைக் கொம்பு சீவிவிட்டது.

உனக்கு இப்போது 26 வயது இருக்குமல்லவா பீட்டர்? இப்ராகிமிடம் நான் கேட்டது இதைத்தான், மேத்யூ இருக்கும் நிலைக்கு உன்னை அடிப்பதற்காக அவனிடம் கோருவது நன்றாக இருக்குமா? என்றேன். ஏனென்றால் என்னளவில்தான் நீ பலசாலி, மேத்யூவோடு ஒப்பிடுகையில் நீ சும்மாதான். மேத்யூவின் அடியாள் ரஞ்சித், இப்ராகிமுக்கு பழக்கம் என்பதால் ரஞ்சித் மூலம் மேத்யூவை சந்திக்க நேரிட்டது. தயங்கித் தயங்கித்தான் நான் எல்லாவற்றையும் சொன்னேன். நிதானமாகக் கேட்டவன், கொலை செய்ய வேண்டுமா? என்றான். எனக்கு பக்கென்று இருந்தது. (அவன் என் மனநிலையை அறிந்து கொள்ளும் பொருட்டே அப்படியான கேள்வியைக் கேட்டான் என்பது எனக்குப் பிற்பாடுதான் தெரிய வந்தது) அந்தளவுக்கெல்லாம் போக வேண்டாம், என்னை அடித்ததற்காக நீ காலம் முழுமைக்கும் வருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற என் பழிவாங்கலின் சாரத்தைச் சொன்னேன். என்னைப் பார்த்தால் அவனுக்கு வேடிக்கையாக இருப்பதாகச் சொன்னான். இருக்கலாம் தவறில்லை, இருந்தும் காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் கண்ணுக்கெதிராக இன்னொரு ஆணிடம் அடி வாங்குவதென்பது காலம் முழுமைக்கும் முள்ளாய் நெஞ்சைத் தைத்துக் கொண்டிருக்கும் வலி என்பதை அவனுக்கு மேற்கோள் காட்டினேன். கிட்டத்தட்ட என் கதையும் அவனது கதை போலாகவே இருப்பதாகச் சொன்னான். அவனும் ஒருவனைப் பழிவாங்கும் பொருட்டுதான் மாணிக்கத்தை அணுகியதாகவும் அந்த பழி வாங்கலுக்குப் பிற்பாடு அவனுக்குக் கிடைத்த ஒரு கெத்துதான் அவனை இத்தொழிலுக்குள் தள்ளியதாகவும் கூறினான். அவன் இவ்வளவு நெருக்கமாகப் பேசுவான் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. பழிவாங்குவது போலான உச்சபட்ச மகிழ்ச்சி உலகில் வேறேதுமில்லை என்று சொன்னான். எனக்கும் அது நூறு சதவிகிதம் 
உண்மை எனப் பட்டதால் அதனை ஆமோதித்தேன்

இருந்தும் எனது கோரிக்கையை அவன் மறுத்தான், சாதாரண பிரச்னைக்கு இவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை என்றும் அந்த வக்கிரம் என் வருங்காலத்தைக் குழைத்து விடும் என்றும் அவன் அறிவுரை சொன்னான். கேட்காமலே கிடைக்கப்பெறுவது இங்கே அடியும், அறிவுரையும்தான். ரஞ்சித்திடம் உன்னைக்கண்டிக்க மட்டும் செய்யும்படி சொல்லி அனுப்பினான். அதன் பிற்பாடுதான் பிஸ்மி டீஸ்டாலுக்கு ரஞ்சித் உன்னைத் தேடி வந்தான். இன்றைக்கு உனக்கான இத்தனை துயரங்களுக்கும் அந்த டீஸ்டால் சந்திப்பே முக்கியக் காரணியாக இருக்கிறது பீட்டர்.

எவ்வளவோ தரவுகள் உன்னைப் பற்றி எடுத்திருந்தும் நீ ராயபுரம் ராக்கிக்கு நெருக்கமானவன் என்பது எனக்குத் தெரியாமற்போயிற்று பீட்டர். பிஸ்மி டீஸ்டாலில் நீ சொல்லியதன் பிற்பாடுதான் எனக்கு தெரிய வந்தது. மேத்யூ உன் மீது இந்தளவுக்கு கொதிப்படைந்தானென்றால் அன்று நீ ரஞ்சித்திடம் என்ன பேசினாய் என்று நினைத்துப்பார். ரஞ்சித் உன்னை அணுகியது ஆகச்சிறந்த நாகரிகமான முறையில். நமது பிரச்னையைப் பற்றி எடுத்துரைத்து இனி இது போன்று நடக்காமல் இருந்தால் நல்லது என்பதை மட்டும்தான் அவன் சொன்னான். அப்படியாக அவன் சமாதானம் பேசியது கூட எனக்குப் பிடிக்கவில்லைதான் இருந்தும் மேத்யூ என்பவனுக்காக நான் உடனிருந்தேன். ரஞ்சித் உன்னிடம் அவ்வளவு நியாயமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நீ எடுத்தவுடனே என்ன சொன்னாய்? உங்களது மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்றாய். அதற்கு அடுத்த அதிரடியாக மேத்யூ ஒன்றும் ராக்கியைவிட பெரிய கொம்பு அல்ல என்றாய். இதோ இந்த இடத்தில்தான் துவங்கியது உனக்கும் மேத்யூவுக்குமான கணக்கு.
மேத்யூவை முழுமையாக உள்வாங்கியவன் ரஞ்சித். ஆகவேதான் அவனது நம்பிக்கைக்குரியவனாய் இருக்கிறான். ரஞ்சித் முடிவுகளை எடுக்கும்போது அவன் தன்னை மேத்யூவாகவே பாவித்துக் கொள்கிறானோ என்னவோ, அவன் எடுக்கும் முடிவுகள் மேத்யூவின் முடிவினை ஒத்தே இருக்கும். அன்றைக்கு ரஞ்சித் மேத்யூவாக தன்னை பாவித்துக் கொண்டு யோசித்திருக்க வேண்டும். ராக்கிக்கும் மேத்யூவுக்கும் தொழிற்போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. என்றைக்குமே மேத்யூ தன்னை எவரையும் தாழ்வாக மதிப்பிட்டு விடுவதை விரும்பவே மாட்டான். சமயம் பார்த்து ராக்கியையே தீர்த்துக் கட்டுவதற்கு முழுமூச்சாக இறங்கியிருக்கும் இச்சூழலில் உன்னைப் போன்ற எறும்புகள் ராக்கியின் ஆள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை மேத்யூ ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அது ரஞ்சித்துக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ரஞ்சித்துக்குள் அப்படி ஒரு மூர்க்கன் இருப்பதை அப்போதுதான் பார்த்தேன். முனி வந்து இறங்கி அவனை ஆட்டுவிப்பது போல உன்னை எட்டி ஒரே உதை, நீ நாற்காலியிலிருந்து அப்படியே மல்லாக்க விழுந்தாய். சப்தம் கேட்டு ஆம்னியில் இருந்த மேத்யூவின் மூன்று ஆட்களும் உள்ளே ஓடிவந்தனர். ரஞ்சித் சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு அண்டாவை மூடியிருந்த தட்டத்தை எடுத்து உன் தலையில் பலமாய் மூன்று அடிகள் கொடுத்தான். நீ அலறிக்கொண்டே அடியைத் தடுக்கும் பொருட்டு தலைமீது உனது இரண்டு கைகளையும் அரணாகத் தடுத்தபடி படுத்து விட்டாய். மூன்று அடியாட்களும் உன்னை அப்படியே தூக்கிக்கொண்டு ஆம்னிக்குச் சென்றனர்.

ரஞ்சித் என்னைப் பார்த்து ‘’நீ எதிர்பார்த்ததுதான் நடக்கப்போகிறதுஎன்றான். காலம் முழுமைக்கும் நீ மறக்கமுடியாதபடியான நினைவுகளை உனக்குள் பதிக்க வேண்டும் என்பதுவே எனது எதிர்பார்ப்பு. அது நிகழ்ந்தேறப்போகிறது என ரஞ்சித் சொன்னதும் எனது வஞ்சம் பலமாக கைதட்டிக்கொண்டது. எனது பள்ளிக்காலக் கெஞ்சல்களை நீ மேத்யூவிடம் கெஞ்ச வேண்டும் அதைக் கேட்க எப்படி இருக்கும் எனக்கு? பழிவாங்கலின் சுவையை ருசிக்கவிருக்கிற ஆவல் பொங்கங்கோத்தா சாவுடாஎன்று உளமாறச் சொல்லிக்கொண்டு நானும் ஆம்னியில் ஏறிக்கொண்டேன். ஆம்னி புறப்பட்டது, யுத்தக்களத்தில் யானை மீதமர்ந்து போர் புரியும் வேந்தனுக்கு இருக்கும் மிடுக்கும் கம்பீரமும் எனக்குள் புகுந்து விட்டதைப் போலாக உணர்ந்தபடி பக்கவாட்டுக் கண்ணாடியில் என் முகம் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். இனி நடந்தேறப்போகும் துகிலுரித்தலும், வதையும் உன்னை ஆட்கொள்ளவிருக்கிற பெருந்துயரையும் ரசித்து விட்டுத்தான் சாவேன் என உறுதி பூண்டது எனது வஞ்சம்.

காசிமேடு மீன் மார்கெட்டில் மேத்யூவுக்கென சொந்தமாக ஒரு குடோன் இருக்கிறது. அங்குதான் ஆம்னி நுழைந்தது, ஆம்னி வந்த பிற்பாடு ஷர்ட்டர் மூடப்பட்ட போது எழுந்த க்ரீச் சப்தம் அப்படியே எனக்கு சினிமாவை நினைவூட்டியது. மேத்யூ ப்ளாஸ்டிக் ஸ்டூலில் முழங்காலின் மீது கைகளை தாங்கலுக்குக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான். உன்னை இழுத்து வெளியே போட்ட போது கூட அதே நிலையில்தான் இருந்தான் என்றால் இப்படி நடக்கும் என அவன் முன்னரே யூகித்திருக்கக் கூடும். இருக்கலாம் அதனால்தானே அவனால் இந்த இடத்துக்கு வர முடிந்திருக்கிறது. நான் ஆம்னியிலிருந்து இறங்கி ஒர் ஓரமாக நின்றேன் ஏனென்றால் மேத்யூவிடம் பேசுவதற்கான வார்த்தைகள் என்னிடம் இருந்திருக்கவில்லை. தட்டித் தூக்கிக் கொண்டுவந்ததற்கான காரணத்தை ரஞ்சித்தான் மேத்யூவிடம் விளக்கினான்.

மேத்யூ என்னைப்பார்த்தான், என்ன என்பது போலான வினாவை எழுப்பும்படியாக நானும் அவனைப்பார்த்தேன். நீ துடிதுடிப்பதை பார்க்க வேண்டுமா? எனக்கேட்டான். அடுத்த கணமே ஆமாம் என வேகமாகத் தலையசைத்தேன், நீ விட்டுவிடச் சொல்லிக்கெஞ்சினாலும் விடாமல் உன்னை இம்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை அணுஅணுவாய் ரசிக்கக் காத்திருக்கிற எனது குரூரத்தை அவனிடத்தே சொன்னேன். அவன் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

குடோனுக்குள் நீ, நான், மேத்யூ தவிர்த்து ஐந்து பேர் இருந்தார்கள். உன்னைத் தின்று ருசி பார்க்க அவர்கள் மேத்யூவின் கட்டளைக்காகக் காத்துக் கிடந்தார்கள். இந்த நிழல் உலகம் தனக்கென சில வரைமுறைகளை வகுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. என்னைப் போன்ற சாமான்யன்களெல்லாம் அதை மிரட்சியோடு பார்க்க மட்டுமே இயலும். துன்புறுத்தி துடிக்கச் துடிக்கச் சாவடிப்பது, மூர்க்கத்தனமாக பல கத்தி வெட்டுகளில் கொடூரமாகக் கொலை புரிவது, இதற்குச் செத்திருக்கலாம் என யோசிக்கும்படி காலம் முழுமைக்கும் வலியைக் கொடுப்பது என தத்தம் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் அது தீர்மானிக்கப்படுகிறது. உனக்குள் ஒரு தெளிவு இருக்கிறது பீட்டர் அதனால்தான் உன்னை ஆம்னியில் ஏற்றியதிலிருந்து அந்த கணம் வரைக்கும் ஏதும் பேசாமல் அமைதி காத்தாய். என்ன செய்யக்காத்திருக்கிறார்களோ என்கிற பதைபதைப்பு உன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. மேத்யூ ரஞ்சித்தைப் பார்த்தான், இவர்களெல்லாம் பார்வைக்குள்ளாகவே பேசிக்கொள்வார்களோ? ஆளுகைக்குட்பட்டவனின் பார்வையையே கட்டளையாக ஏற்று நடப்பதுவே விசுவாசத்தின் மதிப்பீடாக அளவிடப்படுமோ என்னவோ. எனக்கு இது பற்றியான எவ்வித தெளிவும் இல்லாத காரணத்தால் அமைதியின் வடிவாய் நின்றிருந்தேன்.

ரஞ்சித் உன்னை நோக்கி வந்தான்நீ பின் நகர்ந்து கொண்டே சென்றாய்எவ்வளவு தூரத்துக்குச் சென்று விட இயலும்? சுவர் உன்னைத் தடுத்து நிறுத்தியது. ரஞ்சித்தின் நெருங்கல் உனக்குள் பெருத்த அச்சத்தினை விளைவித்ததால் உன் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டியது. உக்கிரமான ஒரு தாக்குதலை பார்க்கவிருக்கிற ஆர்வம் என்னுள் கூடிக்கொண்டது. உன்னை நெருங்கிய அவன் உனைப்பார்த்தபடியே சில நொடிகள் அப்படியே அமைதி காத்து நின்றிருந்தான். உன்னை அவன் அவதானிப்பதற்காக அந்த நொடிகள் செலவிடப்பட்டிருக்கலாம். நீ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாய்ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று தீர்மானிக்கப்பட்ட கடைசிப் பந்து வீச்சை பார்க்கிற அதே ஆவலில் நானிருக்க  மின்னற்பொழுதில் உன் சட்டைக்காலரைப் பிடித்து அப்படியே உன்னைத்தூக்கியவன் சுவரில் சாய்த்து நிறுத்தி உன் முகத்தில் பலமாக குத்துக்களை விட்டான். தொடர் தாக்காக இருந்ததால் தடுப்பதற்குக் கூட உன்னால் இயலவில்லை. இறுதியாக அவன் விட்ட பலமான குத்துதான் உன் சிறுமூக்கை நொறுக்கியிருக்க வேண்டும். மூக்கிலிருந்து அப்போதுதான் ரத்தம் வழியத்துவங்கியது. இவ்வளவு குத்துகளை உனக்குள் வாங்கிக்கொண்ட நிலையிலும் கூட நீ அலறவில்லை என்பது என்னுள் பெருத்த ஆச்சர்யத்தை விளைவித்தது. ராக்கியின் ஆள் என்று அடவாடி செய்த நீ அந்த கெத்தை முடிந்த மட்டிலும் காப்பாற்றிக்கொள்ளவே முனைந்தாய்.

குத்துகளை வாங்கிக் கொண்டு நீ சலனமற்று நின்றிருப்பது ரஞ்சித்தை இன்னமும் காத்திரமுறச் செய்திருக்கலாம். சுவற்றோடு சாய்த்து கழுத்தை நெறித்தபடி உன்னைத்தூக்கிப்பிடித்தான். நீ அவனது கைகளை விடுவிக்கப் போராடினாயே அது உனது உயிருக்கான போராட்டம். சில நொடிகளில் அவனது பிடியைத் தளர்த்தியதன் பிற்பாடு கழுத்தைப் பிடித்தபடி இருமத்தொடங்கினாய். நான் ரஞ்சித்திடம் உனது கையை முறுக்கும்படி சைகை காட்டினேன். மேத்யூ அதனைப் பார்த்திருந்தும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். நீ இருமி முடித்ததும் உனது இடது கையை முறுக்கியபடி அப்படியே உன்னைக்குனிய வைத்தான். நீ கண்களை மூடிக்கொண்டு பல்லை வெறுவினாய். உனது முக்கச்சுறுக்கல்கள் நீ அனுபவிக்கும் வலியை எனக்கு அப்பட்டமாய்க் காட்டிக் கொடுத்தது. அதைப்பார்த்து பார்த்து என் குரூரம் கொண்டாடித் தீர்த்தது. முதுகில் நங்கென குத்த வேண்டும் என நினைத்தேன். ரஞ்சித் குத்தத் துவங்கினான். தொடர்ந்து வலுவாக நான்கைந்து குத்துகள் விட்ட பின் உனை விடுவித்தான். நீ முதுகைப் பிடித்தபடி அப்படியே உட்கார்ந்து விட்டாய்.
மேத்யூவின் அடியாள் தியாகுவும், ரஞ்சித்தும் உனது நீல நிற கோடுபோட்ட சட்டையையும், ஜீன்ஸ் பேண்டையும் உருவி வீசினர். நீ ஜாக்கி ஜட்டியுடன் அப்படியே கிடந்தாய். தியாகு ஒரு வாளி நிறைய தண்ணீர் கொண்டு வந்து உன் மேல் ஊற்றினான். உன் உடலை முழுவதுமாய் நனைத்து விட்டு அது தரையில் வழிந்தோடியது. தண்ணீர் படும்போது தோல் இலகுவாகும், அப்போது அடித்தால் வலி நன்கு பிடிக்கும் என ரஞ்சித் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தான். தியாகு மூங்கில் பிரம்பு முழுமைக்கும் துணியைச் சுற்றி விட்டு தண்ணீருக்குள் ஊறவைத்தான். இனி நீ துடிதுடிக்கப் போகிறாய் என மேத்யூ சொன்னான். இன்னும் நீ வதைபடப்போகிற தருணம் என் வாழ்வின் மகிழ்ச்சி நிறைந்த தருணமாக இருக்கப்போகிறது எனத் தோன்றியது.

தியாகு இன்னொரு வாளியைக் கொண்டு வந்து வைத்தான். அதனுள் போர்வை ஒன்று ஊறிக்கொண்டிருந்தது வெளியே எடுத்து மடக்கிப் பிழிந்தான். எவ்வளவு இயலுமோ அவ்வளவு பிழிந்ததன் பிற்பாடு ஈரப்பதத்துடன் அந்தப் போர்வை கட்டை மாதிரியாகிருந்தது. அது தியாகுவின் சுற்று, அவன் போர்வையை கையிலேந்தியபடி உன்னை நோக்கி வந்தான். ஈரப்போர்வையில் அடிக்கும்போது காயம் வெளியே தெரியவே தெரியாது எல்லாமே உள்காயம்தான். நாளடைவில் அந்தக் காயம் கந்திப் போய் உன்னை பாடாவதியாக்கி விடும் என்று ரஞ்சித்திடமிருந்து விளக்கம் வந்தது. ரஞ்சித் இந்த விளக்கங்களை எனக்கு ஏன் கொடுக்க வேண்டும்? என்கிற கேள்வி கூட எனக்கு அப்போது இருந்தது.

தியாகு திறமைசாலிதான், உன்னை சில அடிகளிலேயே கதற வைத்து விட்டான். நீ வேண்டாம் வேண்டாம் என கையெடுத்து வேண்டியதன் பிறகே அவன் அடியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். உனது கண்களில் நீர் கோர்த்து நின்றது. நீ எப்போது வெடித்து அழப்போகிறாய் என்றபடி உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். தியாகுவின் மூர்க்கத்தனமான தாக்குதல் உன்னை அழவைத்து விட்டது. திரண்டிருந்த கண்ணீர் கொட்டியே விட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல அதற்கு மேல் அடிக்காமல் தியாகு வந்து விட்டான்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் அழுது தீர்த்து விட்டிருந்தாலும் விசும்பல் உன்னுள் எழுந்து கொண்டே இருந்தது. அது அடங்குவதற்கு நேரமானது. உனது அழுகையையும் விசும்பலையும் எனது வஞ்சம் பார்த்துப் பார்த்துச் சிரித்தது. மேத்யூ உன்னிடம் ஏதாவது பேசுவான் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அவன் ஏதும் பேசாதது இன்றைய வியப்புகளில் ஒன்றுதான்.

அடுத்த சுற்று சுந்தரத்துடையது என்பதால் தலையைச் சிலுப்பி, மார்புகளை எம்பி, புஜங்களை அசைத்து தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். ஊறிக்கொண்டிருந்த பிரம்பை எடுத்தவன் உன்னை நோக்கி வந்தான். நீ அவனை மிரட்சியோடு பார்த்தாய், அந்தப் பிரம்பு உன்னை பீதியுறச்செய்திருக்கும். உன் நினைவலைகளில் அது தருகிற வலியும் உனது துடிப்பும் வந்து போயிருக்கும். நீ கைகளை முன் நீட்டி வேண்டாம் என பாவனை செய்தாய். வேண்டாததைத்தான் வேண்டுமென்றே கொடுக்கிற கூட்டம் இதுவல்லாவா? உனது கெஞ்சல்கள் சுந்தரத்துக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்க வேண்டும். சப்பணமிட்டு அமர்ந்து கொண்டிருந்த. உனது இடது கையில் வரிசையாக பிரம்படிகள் விழுந்தது. நீ வலி தாங்க மாட்டாது துடித்தாய். நீ எதிர்பாரத இடத்திலெல்லாம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டாய். அவனது தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் பொருட்டு கதறிக்கொண்டே கைகளை நீட்டித் தடுக்க முற்பட்டுக் கொண்டிருந்தாய். வெறிகொண்ட மிருகம் போல அவன் தொடர்ந்து உன்னை அடித்துக் கொண்டிருப்பதும் நீ தடுக்க முற்படுவதையும் பார்த்த போது நீ அந்தக் கிளியாக மாறிவிட்டிருப்பதாய் தோன்றியது. கைகளைக் கொண்டு அடிகளை தடுக்க நீ முற்படுவது கவ்வலிலிருந்து தப்பிக்க எத்தனித்த கிளியின் சிறகடிப்பைப் போலவே இருந்தது எனக்கு. கிளியைப் பூனையாக்கவும், பூனையைக் கிளியாக்கவும் சூழ்நிலையால் முடிகிறது. பூனை முன்னால் நீ கிளியாகி விட்டாய், கிளியைக் கண்டால் நீ பூனையாகி விடுவாய். வலிமையே இந்த மாற்றத்தின் காரண சக்தியாய் விளங்குகிறது பீட்டர்.
மேத்யூவின் பூனைக்கூட்டத்திடம் அகப்பட்டுக்கொண்ட கிளி நீயாகயிருக்கையில் நான் எதுவாகவுமன்றி நானாகவே இருந்தேன். அவனது ஒவ்வொரு பிரம்பு விளாசல்களின் போதும் நான் பதைபதைத்தேன். பூனையின் கூர்பற்கள் கிளியின் கழுத்தை அழுத்திக் கவ்வியதை காண நேர்ந்த வலி மீண்டும் எனக்குள். சுந்தரம் வலது கையில் பிரம்பை வைத்திருந்தான் ஆகவே உனது இடப்புறம் அவனுக்கு ஏதுவாக இருக்கப்போக அவனது அடிகள் எல்லாம் இடப்புறமே விழுந்தன. அவனது வெறிகொண்ட பிரம்பு விளாசலில் உனது இடது கையிலும் தொடைகளிலும் தோல் கிழிந்து ரத்தம் வரத்துவங்கியது. அதுகாறும் இருந்த வன்மமும் குரூரமும் இதைப் பார்த்தனவா? ரசித்தனவா? இல்லை அது என்னுள் இருக்கிறதா? என்கிற கேள்வியும் வந்தது. நான் மேத்யூவைப் பார்த்தேன். அவன் ஆரம்பத்திலிருந்து ஒரே நிலையில்தான் இருந்தான். எப்படி இவர்களால் மட்டும் இந்த வதையை ரசிக்க முடிகிறது? என்பது எனக்கு புரிபடாத கேள்வியாக இருந்தது.
உனது அலறல்கள் என்னை சலனப்படுத்தியது. அதைக் கேட்கக் கூட திராணியற்றவனாய் இருந்தேன். காதுகள் இரண்டையும் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருந்தது. எங்கேயடா போயிற்று எனது வஞ்சமும், குரூரமும்? ஓர் உயிர் வதைக்கப்படுவதை கண்டு ரசிக்கிற ஈனத்தனமான எண்ணத்தை எந்த விதத்தில் நியாயப்படுத்திக் கொள்வது? உன்னைக் கண் கொண்டு பார்க்கக் கூட முடியவில்லை. பெருமழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது, சுந்தரம் உன்னை அடித்து முடித்ததும். நான் உன் பக்கம் பார்வையைத் திருப்பினேன். பிரம்படி உடலின் பெரும்பகுதியில் சிவப்பு வரிகளாகியிருந்தது. தோல் கிழிந்த இடங்களிலெல்லாம் உன் குருதி வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. நீ எதுவும் இயலாதவனாய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாய். உனது வலிகளத்தனையும் அனத்தலினூடே வெளிப்பட்டது. ஏன் இப்படி நடக்க வேண்டும் பீட்டர்?

கத்தி தயாராக இருக்கிறதா? என்று ரஞ்சித், தியாகுவிடம் வினவுகிறான். அவனும் தயாராக இருப்பதாக பதிலளிக்கிறான். சுந்தரம் என்னை நோக்கி வருகிறான். இதோ பிரம்பை என்னிடம் நீட்டி எனது பழியைத் தீர்த்துக் கொள்ளச் சொல்கிறான். நான் பிரம்பை எனது வலது கையில் வாங்கி விட்டேன். இப்போது நான் என்ன செய்யட்டும் பீட்டர்?
நீ கசக்கி வீசப்பட்ட காகிதமாய் இருக்கிறாய் உன்னை மேலும் எப்படிக் கசக்குவது? வன்மத்துக்கு வன்மம் பதில் சொல்லிக் கணக்கை நேர் செய்து கொண்டாயிற்று. இனி என்ன இருக்கிறது உனக்கும் எனக்கும்? உன்னை ஒரு அடியேனும் அடித்து விட வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு உந்துதல் வரவே எழுந்து விட்டேன். இதோ உன்னை நோக்கி வருகிறேன். நான் அடிக்கவிருக்கிற இந்த ஒரு அடியும் கூட என் பகையுணர்ச்சியை முடிவுக்குள் இட்டுச் செல்வதற்கான வழியாகத்தான் பார்க்கிறேன். உன்னை நெருங்கி விட்டேன். கண்களைத் திறந்து என்னைப் பார்க்கிறாய். எழ முற்படுகிறாய் உன்னால் இயலவில்லையெனினும் திரும்பத் திரும்ப முயற்சித்து எழுந்து அமர்ந்து விட்டாய். உன் உடலெங்கிலும் நடுக்கத்தை கிட்டத்தில் பார்க்க முடிகிறது. உடைந்து போன உனது குரலில் ஏதோ என்னிடம் பேச முற்படுகிறாய். நான் செவிகூர்ந்து அதைக் கேட்க விளைகிறேன். பிரம்பு விளாசல்களினால் கந்திப்போயிருக்கும் இடது கையினைக் காண்பிக்கிறாய். மரணவலி வலிவலிப்பதாகவும் கையை அசைக்கவே முடியவில்லை என்றும் சொல்கிறாய். அந்தக் கையில் அடிபடாதவாறு எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொள் என்கிறாய். நான் பிரம்பை அப்படியே கீழே போட்டு விட்டேன். இது மேற்கொண்டும் நான் உன்னை எப்படி அடிக்க முடியும் பீட்டர்?

நான் அப்படியே சுவரோரமாய் சலனமற்று உட்கார்ந்து விட்டேன். மேத்யூ கத்தியை எடுத்து விட்டான். ஈரமணலுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்து துருவேற்றப்பட்ட கத்தி அது. உன்னைக் குத்தி விட்டு சில நொடிகள் தாமதித்து உருவினால் அதன் துரு உன் ரத்தத்தில் கலந்து விடும். அந்த ஆக்சிஜனேற்றம் உன்னை ஒவ்வொரு நாளும் கொல்லும் என்பதுதான் அவர்களது கணக்கு. அவர்களுக்குள் அவர்கள் என்னன்னவோ பேசிக்கொள்கிறார்கள். எதையும் கூர்ந்து கவனிக்கும் நிலையில் நானில்லை. மேத்யூ உன்னை நோக்கி வருகிறான். இன்னும் சில நொடிகளில் எல்லாமே நடந்தேறவிருக்கிறது. இப்போது நான் என்ன செய்வது? கண்களை இறுக மூடிக்கொள்வதா? இல்லை இதுகாலமும் என்னை ஜெயித்துக் கொண்டே இருந்த நீ தோற்கப்போவதை கண் கொண்டு பார்த்துச் சிலிர்ப்பதா? எல்லாமும் எனக்குப் பொய் எனப்படுகிறது பீட்டர். இதுவரையிலான எனது முன்னெடுப்புகள் யாவையும் பேரபத்தமாகத் தோன்றுகிறது எனக்கு.
விடுக்கென எழுந்து மேத்யூவைத் தடுத்தேன். இருகைகளையும் கூப்பி வேண்டி விட்டு வேண்டாம் எனத் தலையசைக்கிறேன். என்னவாயிற்று? என்று அவன் கேள்வியெழுப்புகிறான். எனக்குள் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது என்கிறேன்மேத்யூ தன்னுடைய கதையிலிருந்து இது கொஞ்சம் மாறுபட்டிருகிறது என்கிறான். நான் இப்போது இருக்கும் இதே சூழலில் மேத்யூ இருந்த போது, மாணிக்கம் அவனது எதிராளியைக் கத்தியால் குத்துவதை பார்த்துக் கொண்டாடித் திளைத்ததாகச் சொல்கிறான். ஏனோ என்னால் அது முடியவில்லை என்கிறேன். அது முடிந்திருந்தால் நான் இன்னொரு மேத்யூவாகியிருப்பேன் என்கிறான்.

நான் உனைப் பார்க்கிறேன், நீயும் என்னைப் பார்க்கிறாய் இக்கணத்தில் உன் எண்ண அலைவரிசைகளில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? ஒன்று இனி நீயோ நானோ நேருக்கு நேர் சந்திக்கவே கூடாது என்று நினைக்கலாம். இல்லையெனில் நீ ஆளாகியிருக்கும் இதே கதிக்கு என்னை ஆளாக்க வேண்டும் என்று வஞ்சம் கொள்ளலாம். இவ்விரண்டைத் தாண்டி வேறெதையும் யோசிக்குமளவுக்கு யாரும் இங்கே வளர்ச்சி காணவில்லை பீட்டர்.

- கி.ச.திலீபன், நன்றி: உயிர் எழுத்து, பிப்ரவரி 2017

Thursday, August 18, 2016

பதில் தேடும் பயணங்கள் - கரசூர் பத்மாபாரதி

பத்மாபாரதி
நிலையான இருப்பின்றி அடிப்படை வாழ்வாதாரச் சிக்கலோடு நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர் இனத்தையும், மூன்றாம் பாலினமாய் சமூகத்தின் அத்தனை புறக்கணிப்புகளுக்கும் ஆளாகினாலும் தங்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருநங்கையர் சமூகத்தையும் மிக ஆழமாய் ஆராய்ந்து பதிவு செய்திருப்பவர் கரசூர் பத்மாபாரதி. இவரது ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ ஆகிய ஆய்வு நூல்கள் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதோடு முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது. புதுச்சேரி மாநிலம் கரசூரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் ஆய்வு நூல்கள் மட்டுமின்றி கவிதைகள் மற்றும் சிறுகதைகள் என இலக்கியத் தளத்திலும் இயங்கி வருகிறார்.

‘‘புதுச்சேரி பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் துறையில் படித்தேன். முதுகலைத் தமிழ் இறுதித் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய குறு ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புதான் ‘நரிக்குறவர் சடங்குகள் ஓர் ஆய்வு’. நரிக்குறவர் இன மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பின்பற்றும் சடங்குகளைப் பற்றி மட்டும் ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் அறிவுநம்பி அவர்கள்தான் இந்த ஆய்வுக்கான தலைப்பை வழங்கி வழிகாட்டவும் செய்தார். குறு ஆய்வு என்பதால் எடுத்துக் கொண்ட தலைப்பைத் தாண்டி வேறு பரிமாணத்திலெல்லாம் ஆய்வை கொண்டு செல்லவில்லை. முதுகலை தமிழ் முடித்த பின் இளமுனைவர் பட்ட ஆய்வுக்காக ‘சிறுபத்திரிக்கை வரலாற்றில் கசடதபறவின் பங்களிப்பு’ எனும் தலைப்பை எடுத்துக்கொண்டேன். தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறிது காலமே வெளிவந்திருந்தாலும் அழுத்தமான தடத்தைப் பதித்துச் சென்ற கசடதபற இதழிலிருந்து பத்து சிறுகதைகள் மற்றும் பத்து கவிதைகளை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய ஆய்வை சமர்பித்துதான் இளமுனைவர் பட்டம் பெற்றேன்’’ என்று தனது ஆராய்ச்சிகளின் தொடக்கம் பற்றி பேசுகிறார் பத்மாபாரதி.

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானுடவியல் டிப்ளமோ படித்தபோது பத்மாபாரதிக்கு நெறியாளராய் இருந்தவர் பக்தவச்சலபாரதி. தமிழகத்தின் மிக முக்கியமான மானுடவியல் ஆய்வாளரான இவரது வழிகாட்டுதல் இல்லாமல் தனது இரண்டு புத்தகங்களும் சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் பத்மாபாரதி.

‘‘நரிக்குறவர் சடங்குகள் பற்றிய குறு ஆய்வை புத்தகமாக்க வேண்டும் என பத்வச்சலபாரதி ஐயாவிடம் சொன்ன போது ஒரு முழுமையான நூலாவதற்கு இந்த தகவல்கள் மட்டும் போதாது மேலும் பல தகவல்களை ஆராய்ந்து எழுத வேண்டும் என்றார். சொன்னவர் கள ஆய்வுக்கான நெறிமுறைகளையும் கற்றுத்தந்தார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் இனப்பெண்கள் பொதுவெளியிலேயெ குழந்தைக்கு பால் கொடுத்த வண்ணமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பார்கள். ஏன் அவர்கள் இப்படியாக வாழ்கிறார்கள்? உலகம் பெரிய வளர்ச்சி கண்டுவிட்டாலும் கூட ஏன் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள்? என்று எழுந்த கேள்விகள்தான் இந்த ஆராய்ச்சிக்கான பாதையை எனக்கு அமைத்துத் தந்தது. அதற்கு பதில் தேடும் பயணமாகவே இந்த ஆராய்ச்சி இருந்தது’’ என்கிறார்.

ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்து களத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்வதில் பல சவால்கள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்து இந்த ஆராய்ச்சியை முடித்திருக்கிறார்.

‘‘புதுச்சேரி நகரம் மற்றும் பெத்திசெட்டிப்பேட்டை, வில்லியனூர், உத்தரவாகினிப்பேட்டை, சண்முகாபுரம், மதகடிப்பட்டு, விழுப்புரம் அருகே கூட்ரோடு ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு காலையில் நேரமே எழுந்து சென்று விடுவேன். நாம் நினைக்கிறபடி கேட்டவுடனே எல்லாவற்றையும் சொல்லி விட மாட்டார்கள். சில பேர் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். அவர்களுக்கு சன்மானமாக வயதானவர்களாக இருந்தால் வெற்றிலை பாக்கு, குழந்தைகளாக இருந்தால் சாக்லேட், நடுத்தர வயதினருக்கு காசு கொடுத்தால்தான் பேசக்கூட செய்வார்கள். அப்படியே அவர்கள் பேசினாலும் நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது. எதை எதையோ பேசுவார்கள். எல்லாவற்றையும் கேட்கக்கூடிய பொறுமை இருந்தால் மட்டுமே ஆராய்ச்சியை முடிக்க முடியும். நான் எனக்கான தகவல்கள் எல்லாம் கிடைக்கும் வரையிலும் ஓயாமல் கள ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தேன்.

நரிக்குறவர் இன மக்கள் வாக்கிரி போலி எனும் மொழியைப் பேசுகின்றனர். வாக்கிரி என்றால் குருவி ஆக அதனை குருவிக்கார மொழி என்கிறார்கள். இந்த மொழிக்கு பேச்சு வடிவம் மட்டும்தான் இருக்கிறது எழுத்து வடிவம் இல்லை. 1972ம் ஆண்டு சீனாவாச சர்மா என்பவர் இம்மொழியைப் பற்றி ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த மொழி ஆரியம், திராவிடம் என இரண்டு வகையறைக்குள்ளும் அடங்காமல் இருக்கிறது என்கிறார். உருது, மராத்தி என இரண்டு மொழிகளையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் மராத்தி, உருது தெரிந்தவர்களால் இவர்களது வாக்கிரிபோலி மொழியைப் புரிந்து கொள்ள முடியாது. வாக்கிரிபோலி மொழியோடு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக என் ஆராய்ச்சிக்காக பணம் சேர்த்து வாங்கிய வாக்மேனை எடுத்துக் கொண்டு போவேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு வாக்மேன் என்பதே புதிதாக இருந்ததால் அதைக் கொண்டு போனாலே சில பேர் பேச மாட்டார்கள். இயல்பாகப் பேசும்போதுதான் அவர்களோடு கலந்து பல தகவல்களைப் பெற முடியும்.

இவர்கள் குழுக்குழுவாகப் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் ஒருவர் இருப்பார். அவரிடம்தான் சாமி மூட்டை எனும் அவர்களது கடவுள் சிலையை கொண்டிருக்கும் மூட்டை இருக்கும். அந்த மூட்டையைப் பிரித்துப் பார்க்கவோ, தொடவோ பெண்களுக்கு அனுமதியில்லை. பெண்கள் தொட்டால் தீட்டு என ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களது இனப்பெண்களுக்கே அனுமதியில்லை எனும்போது நான் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. ஒரு நாள் அந்தத் தலைவரின் மகள் என்னை அழைத்து ஒருவரைக் கொண்டு சாமி மூட்டையைத் திறந்து காண்பிக்கச் செய்தார். அதனுள் வெள்ளியினாலான காளி சிலையை பதப்படுத்திய ஆட்டுத்தோல் கொண்டு மூடி வைத்திருந்தனர். நரிக்குறவர்களிலேயே பல பிரிவிவினர் இருக்கிறார்கள். சிலர் வெள்ளாட்டை பலியிடுவார்கள், சிலர் எருமையை பலியிடுவார்கள். பலியிட்ட பின் அதன் தோலை பதப்படுத்தி வைத்திருந்தனர். மேலும் பலியிடுவதற்கும் பூஜைக்கும் தேவையான கத்தி, தாம்பூலத்தட்டு, சலங்கை, பூஜை சாமான்கள் என பலவும் அந்த மூட்டைக்குள் இருந்தது.

விழுப்புரத்தில் வேறொரு பிரிவைச் சேர்ந்த நரிக்குறவர் திருவிழா நடந்தபோது நான் சென்றிருந்தேன். எருமையைக் கட்டி வைத்து அதன் காதோரத்தில் போகும் நரம்பை அறுத்து பலி கொடுத்தார்கள். அப்போது திபுதிபுவென வெளியேறிய ரத்தத்தைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். சாமி ஆடுபவரிடம் குறி கேட்பார்கள் அதனையெல்லாம் அவர்களது மொழியிலேயே பதிவு செய்தேன். இந்த ஆராய்ச்சியில் இறங்கியதிலிருந்து பல பகுதிகளிலும் யாரேனும் இறந்தால் தகவல் சொல்லும்படி சொல்லி வைத்திருந்தேன். பெத்திசெட்டிப்பேட்டையில் ஒருவர் இறந்து அடக்கமும் செய்து விட்டனர். கருமாதியின் போது எனக்குத் தகவல் கிடைக்கவே நேரடியாகச் சென்றேன். அவர்களது சடங்குகள் பெரும்பாலும் நீர் நிலைகள், மர நிழல் இருக்கும் பகுதிகளில்தான் நடக்கின்றது. நரிக்குறவர் வாழ்வியலில் மெச்சக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களுக்குள் மறுமணம் என்பது மிகவும் இயல்பானது’’ என்று நரிக்குறவர் இன வரைவியல் நூலுக்கான களப்பணி குறித்துப் பேசுகிறார் பத்மாபாரதி. ஐந்து ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர் 2004ம் ஆண்டு அந்த ஆய்வை எழுதி முடித்து தமிழின் பதிப்பக வெளியீடாக ‘நரிக்குறவர் இன வரைவியல்’ நூலைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழக அரசின் 2004ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான விருதையும், சுடராய்வுப் பரிசையும் அந்நூல் பெற்றிருக்கிறது.

பத்மாபாரதி முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘‘புதுவை ஒன்றியத்தில் அடித்தள மக்களின் மரபுவழி இனப்பெருக்க மருத்துவம்’ என்கிற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அட்டவணை சாதிகளில் ஒன்றான பறையர் சமூக மக்களின் இனப்பெருக்க மருத்துவம் பற்றி முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார்.

‘‘இனப்பெருக்கம் தொடர்பான கை வைத்தியங்களை ஆய்வு செய்தேன். குழந்தை பிறப்பதற்கு முன்/பின் செய்யப்படும் சடங்குகள், குழந்தை பிறந்ததும் என்ன மாதிரியான உணவுகள் வழங்குகிறார்கள். உடல் பற்றிய நுண்ணிய வகைப்பாடுகள் என பல தலைப்புகளின் கீழ் ஆய்வைத் தொகுத்தேன். குழந்தைப் பேறுக்காக மாதவிடாயின் 3வது நாளில் புள்ளப்பூச்சி எனும் பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சூரியன் உதிப்பதற்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள். கெட்ட ரத்ததத்தை வெளியேற்ற பெருங்காய உருண்டை சாப்பிடக் கொடுக்கிறார்கள். பூப்பெய்தாமல் இருக்கும் பெண்களை கோவிலில் தங்க வைக்கின்றனர். கருப்பையில் பிரச்னை இருந்தால் வேப்பிலை அரைத்து கொடுக்கின்றனர். இப்படியாக இவர்களின் வைத்திய முறைகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்தேன். இது மருத்துவம் மற்றும் அறிவியல் பூர்வமாக சரியானதா? என்பதை ஆய்வுக்குட்படுத்தவில்லை’’ என்பவர் நாட்டு மருத்துவர்கள், கோவில் பூசாரிகள், பிரசவம் பார்க்கும் பெண்களிடம் நேர்காணல் புரிந்து 2010ம் ஆண்டு இந்த ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
படம்: புதுவை இளவேனில்
‘‘டிப்ளமோ மானுடவியல் படித்த போது அதற்காக நடத்தப்பட்ட குறு ஆய்வுதான் திருநங்கையர் சமூக வரைவியல். நரிக்குறவர் ஆய்வு போலவே இதையும் விரிவாக செய்ய வேண்டும் என்று தோன்றியதுமே களத்தில் இறங்கி விட்டேன். ஆரம்பத்தில் திருநங்கைகளை அணுகுவதில் கொஞ்சம் பயம் இருந்தது. விழுப்புரத்தில் ஒரு வீட்டில் திருநங்கையர்கள் வசித்து வந்தனர். அங்கு அடிக்கடி சென்று அவர்களிடம் பேட்டி கண்டேன். பிள்ளையார்குப்பத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு சென்று அவர்களின் வழிபாட்டு முறையை பதிவு செய்தேன். திருநங்கையரும் குழுக்குழுவாக வசிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவி இருப்பார்கள். நான் அணுகிய குழுவின் தலைவியான ராதா அம்மா மிகவும் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுவார். கிராமத்தில் வளர்ந்த பெண் என்பதால் பல தகவல்கள் எனக்கு புதிதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தன. ஆரம்பத்தில் இருந்த பயம் அவர்களுடன் கலந்து பேசப் பேச அகன்றது. நம் எல்லோரையும் போலவே அன்புக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் இவர்களும் ஏங்குகிறார்கள். இன்றைக்கு மூன்றாம் பாலினம் என்கிற பார்வையாவது அவர்கள் மீது இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போதிருப்பதை விட சமூகப் புறக்கணிப்பு அதிகம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் பேசும்போதும் அந்த வலியை உணர முடியும். அந்த வலியின் பிரதிபலிப்புதான் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ நூல்.

2000ம் ஆண்டு இவர் எழுதிய ‘இளமை நதியில் முதுமை ஓடங்கள் என்னும் கவிதைத் தொகுப்பு புதுவை இலக்கிய ஆய்வு மன்றத்தின் சார்பாக சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக உயிர்ப்பு எனும்  சிறுகதைத் தொகுப்பு, ஈசல் கனவுகள் எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் உயிர்ச்சொல் எனும் ஹைக்கூ தொகுப்பையும் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். கூடுதலாக இவர் குழந்தைகள் நல குழுமத்தில் புதுச்சேரியின் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த குழந்தைகள் உதவி மையத்தில் பதியப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

‘‘வெளிப்படையான பார்வையை வைத்து எந்த ஒரு சமூகத்தையும் தீர்மானித்து விட முடியாது. இறங்கி ஆய்வு செய்யும்போதுதான் உண்மை நிலையை அறிய முடியும். இன்னும் ஆய்வு செய்வதற்கு எத்தனையோ இருக்கிறது. என்னால் இயன்ற வரையிலும் பங்காற்றுவேன்’’ என்கிறார் பத்மாபாரதி.

-கி.ச.திலீபன், படங்கள்: மொபாரக்